Science & Technologyமாயமான்

Tik-Tok தடை: ஏன் இந்த வஞ்சகம்?

மாயமான்

‘Tik-Tok’ காணொளிகளைப் பார்த்திராத வாசகர்கள் இருக்கமாட்டீர்கள். அவற்றைப் பார்த்து சிரித்து, ரசித்து, மனமுருகி, மனம் கசந்து, அழுது கொட்டாதவர்களும் இருக்க முடியாது. இப்படியான ஒரு நண்பனை / நண்பியைத் திடீரென இழக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆனாலும் உலக நாடுகள் பல அதை வெறுத்து தமது மக்களுக்கு அந்த அனுபவ பாக்கியத்தைத் தர மறுப்பதென முடிவெடுத்து விட்டன. காரணம் என்ன?

‘ரிக்-ரொக்’ என்பது ஒரு சமூக ஊடக செயலி (Social Media App). அதாவது உங்கள் ஸ்மார்ட் ஃபோன்களில் / கணனிகளில் நிரந்தரமாகக் குந்திக்கொண்டிருக்கும் சமூக ஊடகங்களின் மேடைகளில் நடனமாட அங்கீகாரம் பெற்ற ஒரு நாட்டியப் பேரொளி என இப்போதைக்கு வைத்துக்கொள்ளுங்கள். இந்த செயலியைப் பாவனையாளர் ஒருவர் தரவிறக்கி வைத்திருந்தால், அதே வேளை அவர் கொஞ்சம் கெட்டிக்காரராக இருந்தால் , தான் பார்க்கும், ரசிக்கும், முக்கியமென நினைக்கும் (சீமான்) காட்சிகளைப் படமெடுத்து 15-60 செக்கண்டுகள் காணொளியாக நண்பர்கள் மத்தியில் உலவ விட்டுப் படம் காட்டலாம். இன்னும் கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்தவராக இருந்தால் இக் காணொளியில் மேலும் பல ஜில்மால்களை அவர் சேர்த்துக் கொள்ளலாம்.

‘ரிக்-ரொக்’ செப்டம்பர் 2016 இல் ஒரு சீன Start-up நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று அது உலகின் முதலாவது இடத்தில் இருக்கும் சமூக ஊடக செயலி. 18-24 வயது சிறிசுகளில் 46% மானோரும் அவர்களில் பெண்கள் 56% மானோரும் பாவிக்கிறார்கள் என்கிறது புள்ளி விபரம். இச் செயலி ஏறத்தாழ 3.5 பில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அந்தளவுக்கு இது ஒரு பிரபலமான செயலி.

இப்படியான அற்புதமானதொரு செயலியைத் தனது அரசாங்க அலுவலகக் கணனிகளிலும், அலுவலகத்துக்கென ஒதுக்கப்பட்ட ஃபோன்களிலும் பாவிக்கக்கூடாது என பெப்ரவரி 28, 2023 முதல் கனடிய அரசு தடை செய்திருக்கிறது. அதே வேளை அமெரிக்காவின் பல மாநிலங்களும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியனவும் தடைசெய்துள்ளன. இந்தியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்றவை தமது தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டியும், இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தமது மதம், கலாச்சாரம் போன்றன சீரழிக்கப்படுகிறது என்ற காரணத்திற்காகவும் இச் செயலியைத் தடை செய்திருந்தன. கனடா இப்போது ‘நானும் வருகிறேன்’ என இணைந்திருக்கிறது.

இது சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட செயலி என்பதும், இச் செயலியைப் பாவிப்பவர்கள் பற்றிய பிரத்தியேக தகவல்களை இச்செயலி உருவி தனது அரசியல் எசமான்களுக்குக் கொடுக்கிறது என்பதுமே இச் செயலியின் தடைக்கு முக்கிய காரணம். இங்கு பிரத்தியேக தகவல்களை உருவுவது பற்றி எவருக்கும் அக்கறை இல்லை. உண்மையில் அது அவர்களது நட்பு நிறுவனங்களுக்கு இலாபம் சம்பாதிக்கும் ஒரு விடயம். ஆனால் இத் தகவல்கள் சீன அரசுக்குப் போகிறது என்பதுவே இங்குள்ள பிரச்சினை. சீனாவைத் தளமாகக்கொண்ட அனைத்து நிறுவனங்களும் சீன அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்குபவை. எசமான் கேட்டவற்றை அவை கொடுத்தே ஆகவேண்டும். இதர சீன நிறுவனங்களான We-Chat, Ali Pay போன்ற்வையும் இதையேதான் செய்கின்றன. எனவே அதுவல்ல இங்கு பிரச்சினை.

இந்த தகவல் உருவும் விடயத்தை நீண்ட காலமாக, மிகவும் திறம்படச் செய்து வருவது அமெரிக்கா தான். முன்னொரு காலத்தில் மனிதர்கள் ஒற்றர்களாக இருந்து செய்ததை இப்போது தொழில்நுட்பம் இலகுவாக்கியிருக்கிறது. ஃபோன்களில் இருக்கும் ‘காலநிலை அறிவிப்பு’ செயலி முதல் “ஃபோன் தொலைந்து போனால் கண்டுபிடிக்கும்’ செயலிவரை உங்களின் நடமாட்டங்களை அவதானிக்கும் ஒற்றர்கள் எனவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஃபோன்களில் இலவசமாக நீங்கள் தரவிறக்கும் செயலிகள் உங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டும் சேவைகளை அவற்றின் எசமான்களுக்காகச் செய்கின்றன. ஒருவரது ஆசா பாசங்கள், பலம், பலவீனம் சுய போகம் போன்றவற்றை இச் செயலிகள் உருவி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விற்றுப் பிழைக்கின்றன என்பதனால் அவற்றைக் கட்டுப்படுத்தும்படி பல சமூக செயற்பாட்டாளர்கள் மிக நீண்ட காலமாகப் புலம்பி வருகின்றனர். ஆனால் உடைக்க முடியாத கண்ணாடியைச் செய்தால் கண்ணாடி விற்பனை இருக்காது என்பதுபோல் கன்னம் வைக்க முடியாவிட்டால் திருடனால் திருட முடியாது. அரசாங்கங்களே மிகப்பெரிய திருடர்களாக இருக்கும்போது அவர்கள் எப்படி திருட்டை நிறுத்த முன்வருவார்கள். எனவே இப்படியான செயலிகள் இருக்கவே வேண்டும் ஆனால் அவை எதிரி நாட்டவருடையாக இருக்கக்கூடாது என்பதுவே தற்போதைய தடைக்கான காரணம்.

இதுவரை காலமும், அப்பிள், ரெஸ்லா போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தமது சுய இலாபங்களுக்காகத் தயாரிப்புத் தளங்களை சீனாவுக்கு மாற்றியிருந்தார்கள். அதற்குக் காரணம் சீனா ஒரு பெரிய சந்தை என்பதும் தயாரிப்புச் செலவு அங்கு குறைவு என்பதுமே. இத்தயாரிப்புத் தளங்கள் மூலம் பல தொழில்நுட்ப இரகசியங்களைச் சீனா உருவிக்கொள்வது பற்றி இந்நிறுவனங்களுக்கு அதிக அக்கறையில்லை. இலாபமே அவற்றின் குறிக்கோள். ஆனால் இப்போது நிலைமை வேறு. பூகோள உலக அரசியலில் சீன-ரஸ்ய-இந்திய கூட்டு பலச் சமநிலையைத் தெற்குலகத்தின் பகக்த்திற்குச் சரிக்கும் நிலையைக் கொண்டுவந்திருக்கிறது. சீன, ரஸ்ய அரசுகள் மேற்கத்தைய நாடுகளின் அரசியலில் புகுந்து விளையாடி அங்கு தமக்குச் சாதகமான அரசியல் மாற்றங்களைக் கொண்டுவருவதில் வெற்றி கண்டுள்ளன. கனடாவில் கன்சர்வேட்டிவ் கட்சியைத் தோற்கடித்து ட்றூடோ அரசை ‘நிறுவுவதில்’ சீனா பின்னணியில் இருந்தது என்றும் இது பற்றிப் பொது விசாரணை ஒன்றை ட்றூடோ அரசு செய்யவேண்டுமெனவும் குரல்கள் ஓங்கியெழுப்பபட்டு வருகின்றன. அமெரிக்காவிலும் ட்றம்பை ஆட்சியில் அமர்த்தியது ரஸ்யா என்றொரு குற்றச்சாட்டும் இருந்தது. இதற்கெல்லாம் காரணமாக சில அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்களை வெற்றிகரமாகப் பாவித்திருந்தன எனப் பல ஊடகங்களும் கூறிவந்தன. ஆனாலும் சீனா போன்ற உலக பொருளாதார இயந்திரத்தை நிறுத்துவதால் ஏற்படும் விளைவுகளை முன்வைத்து மேற்குநாடுகள் மெளனத்தைக் கடைப்பிடித்தன. சீன அரசின் திட்டங்களுக்கு அமைய கனடிய ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் சீன அரசின் ஈடுபாடுகள் அதிகரித்துள்ளன என தேசிய பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்திருந்தன. இருப்பினும் அரசியம், சமூக காரணங்களுக்காக அரசுகள் மென்போக்கைக் கடைப்பிடித்தன. யூக்கிரய்னில் மையம் கொண்டிருக்கும் பூகோள அரசியல் இப்போது சங்கூதி இம்மெளனத்தைக் கலைத்திருக்கிறது.

பாவம் ‘ரிக்-ரொக்’. இவ்விடயத்தில் அது ஒரு அப்பாவி. அரசுகளை விட அதன் எதிரிகள் மேற்கத்தைய தொழில்நுட்ப நிறுவனங்கள் தான். ட்றம்ப் நிர்வாகத்தில் ‘ரிக்-ரொக்’ கைத் தடைசெய்யப்போவதாக ட்றம்ப் வெருட்டிப் பார்த்தார். ‘Byte Dance’ என்ற ‘ரிக்-ரொக்’ உரிமையாளரைச் சீனாவிலிருந்து நகர்த்தி வெளியே கொண்டுவர முயற்சித்துப்பார்த்தார்கள். முடியாது போகவே ‘Tik-Tok Global’ என்றொரு நிறுவனத்தை நிறுவி அதன் 15% உரிமத்தை ட்றம்பின் நண்பர் CEO ஆக இருக்கும் Oracle நிறுவனத்துக்கும் Walmart நிறுவனத்துக்கு 7.5% உரிமத்தையும் விற்பதற்கும் முயற்சித்தார்கள். இவை எதுவுமே கைகூடவில்லை. வேறு வழியில்லாது இப்போது ‘தடை’ என்ற பிரம்பை எடுத்திருக்கிறார்கள்.

இரு துருவ ஒழுங்காக்கம் மிகவும் துரித கதியில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. ரஸ்யாவுக்கு எதிராக மேற்குலகம் கொண்டுவந்த பொருளாதாரத் தடை பிசுபிசுத்துப் போய்விட்டது. தெற்குலகம் இப்போரைக் கண்டுகொள்ளவில்லை. அது பெரும்பாலும் ரஸ்யா பக்கமே நிற்கிறது. யூக்கிரெய்ன் போரில் சீனா ரஸ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால் அதனால் வரும் உலகப் போர் அமெரிக்க சாம்ராஜ்யத்தின் முடிவாக மாற வாய்ப்புண்டு. இப்போர் விளையாட்டுக்களில் பாவம், ‘ரிக்-ரொக்’ துரும்பாகச் சிக்கித் தவிக்கிறது. அவ்வளவுதான். (Photo by Alexander Shatov on Unsplash)