The Family Man -2 | தடைசெய்யுமாறு தமிழ்நாடு அரசு கோரிக்கை! திரையிடலை நிறுத்தாவிட்டால் அமசோன் சேவைகளை அனைத்தும் புறக்கணிக்கப்படும் – சீமான்

Family Man – Season 2 திரையிடலுக்கான எதிர்ப்பு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே வலுத்து வருகிறது.

தமிழ்நாடு அரசாங்கமும், இப் படத்தின் திரையிடலைத் தடைசெய்யுமாறு கேட்டு, மே 24 அன்று மத்திய அரசுக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளது. “இத் தொடர் ஈழத் தமிழர்களை மிகவும் தரக்குறைவாகச் சித்தரிக்கிறது எனவும் இதன் திரையிடலை அனுமதித்தால் தமிழ்நாடு மாநிலத்தில் அமைதியைப் பேணுவதில் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டி ஏற்படலாம்” என தமிழ்நாடு தகவற் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், மத்திய, தகவற் தொழில்நுட்ப, ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவேத்காருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Family Man – Season 2 திரையிடுவதை நிறுத்தாவிட்டால், அமசோன் சேவைகளையே புறக்கணிக்கும்படி கோரி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி வரும் என நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எச்சரித்துள்ளார். அதே வேளை, தமிழ்நாடு அரசு தலையிட்டு இக்குறிப்பிட்ட இணையத் தொடரைத் தடைசெய்யவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமசோன் பிறைம் வீடியோவின் இந்தியாவுக்கான பொறுப்பாளர் அபர்ணா புரோஹித் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் “Family Man -2 தமிழரைப் பற்றித் தவறான கருத்துக்களைக் கூறுவதோடு, ஈழத் தமிழரின் பல்வேறு விடுதலைப் போராட்டங்களைப் பற்றி மிகவும் இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கிறது என்பதால் அதைத் திரையிடுவதை நிறுத்தும்படியும், எமது உணர்வுகளை மதிக்காது அதைத் திரையிட அனுமதித்தால் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர் அமசோன் வீடியோ உட்பட்ட, அமசோனின் அனைத்து சேவைகளையும் புறக்கணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.

“தமிழ் ஈழப் போராட்டத்தையும் அதன் களமாடிய வீரர்களையும் மிகவும் இழிவாகக் கொச்சைப் படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். திட்டமிட்டு, தமிழர்களைப் பற்றிய மோசமான பிம்பத்தை ஏற்படுத்துவதே அதன் நோக்கம். இது ஏறத்தாள சிங்கள அரசாங்கத்தின் குரலாகவே தெரிகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜ், டி.கே.ஆகிய இருவரால் தயாரிக்கப்பட்ட Family Man – 2, தொடரில் மனோஜ் பாஜ்பாயி, ஷரட் கெல்கார், பிரியாமணி, ஷரிப் ஹாஷ்மி, சாமந்தா அக்கினேனி ஆக்யோர் நடிக்கிறார்கள். மைம் கோபி, ரவீந்திரா விஜய், தேவதர்ஷினி ஷேதன், ஆனந்தசாமி, அழகம்பெருமாள் ஆகிய தமிழ் நடிகர்களும் இப் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.