HealthScience & Technology

SARS-CoV-2 வைரஸைக் கண்டுபிடிக்கும் ‘லிற்மஸ்’ பரிசோதனை! – மேரிலாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அமெரிக்காவிலுள்ள மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி (University of Maryland School of Medicine (UMSOM)) விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றியளிக்குமானால், SARS-CoV-2 வைரஸ் தொற்றுள்ளவர்களை நீங்கள் 10 நிமிடங்களில் ஒரு சிறிய ‘லிற்மஸ்’ பரிசோதனை மூலம் அறிந்துவிடலாம். இதற்கு மைக்கிறோஸ்கோப் என்று எதுவும் தேவையில்லை. வெறும் கண்களாலேயே கண்டுபிடித்துவிடலாம்.

இந்த வைரஸுக்கே விசேடமான மரபணு வரிசையைக் கொண்ட புரதத்தை அடையாளம் காணக்கூடிய தங்க நனோதுணிக்கைகளின் மீது இணைப்பை ஏற்படுத்தும் விசேட மூலக்கூறு ஒன்றின் பாவனை பற்றியே இந்த விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். ACS Nano என்ற சஞ்சிகையில் இந்த விபரம் வெளிவந்திருக்கிறது.இது எப்படி செயற்படுகிறது?

ஒரு நோயாளியின் மூக்கிபிருந்து அல்லது எச்சிலிலிருந்து எடுக்கப்படும் மாதிரி (sample) ஆய்வுகூடத்தில், ஒரு திரவத்துடன் கலக்கப்படுகிறது. இத் திரவத்தில் தங்க நனோத் துணிக்கைகள் ஏற்கெனவே கலக்கப்பட்டிருக்கும். நோயாளியின் மாதிரியில் SARS-CoV-2 வைரஸ் இருந்தால், இந்த திரவத்திலுள்ள விசேட மூலக்கூறு வைரஸ் மீது ஒட்டிக்கொள்கிறது. அப்போது இத்திரவத்தின் நிறம் ஆழ்ந்த நீல நிறத்துக்கு மாறிவிடுகிறது. மாதிரியில் வைரஸ் இல்லையெனின் அது ஊதா நிறத்தில் (நிறம் மாறாது) இருக்கும். ஏறத்தாள அமிலம் / காரம் என்பவற்றை அறியும் ‘லிற்மஸ்’ பரிசோதனை போலத்தான்.

பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், இவாராய்ச்சிக் குழுவின் தலைவரான பேராசிரியர் டீபன்ஜன் பான், PhD, கூறுவதன்படி, ” SARS-CoV-2 வைரஸின் உடலினுள் இருக்கும் RNA ஐ யை இப்பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியுமென எமது ஆரம்ப பரிசோதனைகள் நிரூபிக்கின்றன. இதன் மூலம் நோயாளியில் நோய் தொற்றிய முதலாவது நாளே நாம் அதைக் கண்டுபிடித்து விடலாம். இருப்பினும் மேலதிக பரிசோதனைகள் தேவைப்படுகின்றன” எனத் தெரியவருகிறது.

ஏற்கெனவே பாவனையிலிருக்கும் கோவிட்-19 பரிசோதனைகளுக்கும் இதற்குமுள்ள வித்தியாசம் என்ன?

வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்கத் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பரிசோதனையை RT-PCR என்கிறோம். இது ஒரு DNA பகுப்பாய்வு முறை. இப் பரிசோதனையின்போது வைரசிலுள்ள RNA முதலில் DNA யாக மாற்றப்படுகிறது. இதை reverse transcription (RT) என்கிறோம். பின்னர் இந்த DNA யின் பல நகல்கள் எடுக்கப்பட்டு பெரிதாக்கப்படுகிறது (amplified). இதை ஆராய்வதன் மூலமே அங்கு வைரசின் RNA இருக்கிறதா எனத் தீர்மானிக்கப்படுகிறது.

இச் செயல்முறைக்கு குறைந்தது 9 மணித்தியாலங்களுக்கு மேல் எடுக்கலாம். நோயாளியிலிருந்து மாதிகள் எடுக்கப்பட்டு ஆவுகூடத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் தெரியவர 24 மணித்தியாலங்களுக்கு மேல் எடுக்கலாம். PCR பரிசோதனைகள் இரண்டு கட்டமாக நடைபெறுவது வழக்கம். முதலில் மாதிரி யைப் பரிசோதித்து வைரஸ் என்ன குடும்பத்தைச் சேர்ந்தது எனத் தீர்மானிக்கப்படும். அது SARS-CoV-2 எனத் தீர்மானிக்கப்பட்டால் மட்டுமே இரண்டாவது கட்டப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.பிறபொருளெதிரி பரிசோதனை (Antibody Test)

RT-PCR பரிசோதனைகளுக்குப் பதிலாக குறைந்த நேரத்தில் நோய்த்தொற்றை அறியக்கூடிய Rapid Tests என்ற முறையைச் சிலநாடுகள் பின்பற்றுகின்றன. ஒருவரின் உடலில் நோயெதிர்ப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனவா என்பதை அறிவதன் மூலம் SARS-CoV-2 வைரஸ் தொற்றை அறிவதுதான் இப் பரிசோதனை.

தொற்றும் ஒவ்வொரு கிருமிக்கும் தனித்தனியே அதை மட்டும் அடையாளம் கண்டு தாக்கியழிக்கும் பிறபொருளெதிரியை உடல் தயாரிக்கிறது. இப் பரிசோதனையின் மூலம் SARS-CoV-2 இற்கான பிறபொருளெதிரி ஒருவரது உடலில் கண்டுபிடிக்கப்பட்டால் அதன் மூலம் நோய்த்தொற்றை உறுதி செய்யலாம். serological tests அல்லது rapid tests எனப்படும் இப்பரிசோதனை நோயாளியிந் இரத்தப்பரிசோதனை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு 30 நிமிடங்கள் வரை எடுக்கலாம். ஆனால் ஒருவரது உடல், நோய் தொற்றியவுடன் பிறபொருளெதிரியை உருவாக்கிவிடுமென்று எதிர்பார்க்க முடியாது. அது அவரவரது உடலைப் பொறுத்தது. சிலரில் பிறபொருளெதிரி உருவாவதுகூட இல்லை.

எனவே PCR பரிசோதனையோடு ஒப்பிடுகையில், Serological Tests விரைவானதெனினும், நோய் தொற்றிப் பலநாட்களுக்குப் பின்னரே இது பிரயோசனப்படுகிறது. PCR பரிசோதனை நோய் தொற்றியவுடன் அதைக் கண்டுபிடிக்க முடிகிறது.

அத்தோடு, RT-PCR, Serological பரிசோதனைகள் இரண்டுமே பிழையான முடிவுகளைக் காட்ட (false negative) வல்லன. அதாவது நோய்த் தொற்றுள்ளவர்கள்ளுக்கு தொற்று இல்லை என முடிவு செய்துவிடுவது.

மேரிலாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் இத ‘லிற்மஸ்’ பரிசோதனைகளை மேற்கொள்ள விசேடமான ஆய்வுகூடக் கருவிகளோ, பயிற்றப்பட்ட பணியாளர்களோ தேவையில்லை. இதற்கான செலவும் பாரதூரமானது அல்ல.

இப்பரிசோதனை மக்கள் பாவனைக்கு வருவதற்கு முன்னர் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தனது ஒப்புதலை அளிக்கவேண்டும்.