• Post category:BOOK REVIEW
  • Post published:November 17, 2020
Spread the love

'Sadness of Geography' | நூல் விமர்சனம் 1
லோகதாசன் தர்மதுரை

சென்ற வருடம் இந்நூல் எதேச்சையாக என் கையில் கிடைத்தது. அதுவரை இந் நூலைப் பற்றியோ, இந் நூலின் ஆசிரியர் லோகதாசன் (தாஸ்) தர்மதுரையைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

ஈழத் தமிழ் எழுத்தாளர்களது பிரசுரங்களையும், ஈழ அரசியல், போராட்டம், வரலாறு பற்றிய நூல்களையும் வாசிப்பதில் எனக்கு மிக ஆர்வமுண்டு. போர் வாழ்வை அனுபவிக்காமலேயே அதைப்பற்றிய மூன்றாம் பார்வைகளை அறிவதில் விருப்பம். அதிலும், தங்கள் சுய வாழ்க்கையைப் பரப்பி வைப்பதன் மூலம் கால, இட, சமூக தரிசனங்களை snap shots ஆக முன்வைக்கும் memoirs பாணி இன்னும் பிடிக்கும். இது லோகதாசனின் வாழ்க்கை வரலாறு.

'Sadness of Geography' | நூல் விமர்சனம் 2

முன்னட்டை, பின்னட்டை, முகவுரை, உள்ளுரை எல்லாவற்றையும் அள்ளி உள்ளே போட்டால், இதுவும் வழக்கம்போல ‘ஈழப் போராட்டத்தை’ விபரிக்கப் போகிறது என்ற முற்சாய்வுடன் வாசிக்கத் தொடங்கினேன்.

Memoirs என்ற பாணியில் ஈழத் தமிழர்களின் படைப்பாக நான் முதலில் வாசித்தது மறைந்த, எஸ்.பொ. வின் நனவிடை தோய்தல். 1940 களின் யாழ்ப்பாணத்தையும், அப்போது உலவிய – இலக்கிய, சமூக சிந்தனைகளைச் சுமந்து திரிந்த- மாந்தர்களையும் வைத்துத் தன் கதையைப் பின்னியிருந்தார். அதில் அவர் எழுப்பியிருந்த யாழ்ப்பாணம் எனக்கு அந்நியமானது. அதில் அவர் தன்னைச் சுற்றாமால் யாழ்ப்பாணத்தையே அதிகம் சுற்றியிருந்ததாக எனது ஞாபகம்.அடுத்ததாக, நண்பர் சி.புஷ்பராஜா எழுதிய ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம். ஈழவிடுதலைப் போராட்டம் அரும்பிய காலத்திலிருந்து தொடங்கி முள்ளிவாய்க்காலைப் பார்க்காமலேயே முடிந்துவிட்ட கதை. இதிலும் புஷ்பராஜாவின் குறி போராட்டம் பற்றியதாகவே இருந்தது. இதற்குப் பின் வேறு பல ‘சுய சரிதைகள்’, போராட்டத்தையும் தாம் சார்ந்த இயக்கங்கள் பற்றியும் எழுதப்பட்டவற்றையும் வாசித்திருந்தேன்.

லோகதாசனின் Sadness of Geography இவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசம். கதை அவரை மிகவும் உறுதியாகப் பற்றிப் படர்ந்துகொண்டிருந்தது. வெளியே ஓடிக்கொண்டிருந்த சம்பவங்களை அவர் ஒப்புவிப்பது ஒரு சார்புநிலைக்காக (reference) மட்டுமே எனவே எனக்குப் பட்டது.

தன் வீடு, அப்பா, அம்மா, சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஊர், சமூகம், நகரம் என, அவரை மையம் கொண்டு நடைபெறும் சம்பவங்கள் மட்டும்தான் அவரை நகர்த்துகின்றன. இது ஒருவகையில் தற்சார் வெளிப்பாடு. ‘பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவதாக’ அவர் பாசாங்கு செய்யவில்லை. தான், தனது குடும்பம் என்ற இயற்கையான, சுயநல இருப்பின் பால் உருவான உந்துதலே அவரது துடுப்பு. தானும் தனது குடும்பமும் நன்றாக வாழவேண்டுமன்பதற்காக அவர் கடந்த பாதைகளையும், அடைந்த இன்னல்களையும், அதை அடைவதற்காக அவர் கடந்த பல நிலங்களையும் அதன் மக்களையும் பற்றித் தூவிச் செல்லும் பாண் துகள்கள் (bread crums) கதையாக ஓடுகிறது. அந்த வகையில் நான் வாசித்த பல சுயசரிதைகளை விட இது வேறுபடுகிறது.

ஈழ விடுதலைப் போராட்டம், நல்ல வசதியாக வாழ்ந்த ஒரு 18 வயது வாலிபனின் இயல்பு வாழ்வைத் தடம் புரட்டுகிறது. ரயிலில் சிங்கள இராணுவத்தினால் பாலியல் கொடுமைக்குள்ளாகியாதால் ஏற்பட்ட மன வடு, வீட்டில் பொறுப்பற்ற அப்பாவினால் தலையில் சுமத்தப்பட்ட சுமை என எல்லாவற்றுக்கும் புள்ளி வைக்க ஒரே வழி வெளிநாடு செல்வதுதான் எனத் தீர்மானிக்கும் கதை நாயகன். நண்பர்களின் உதவியுடன் அவன் பல தேசங்களைக் கடந்து அவனுக்கெனக் குறியிடப்பட்ட அந்த ஆசீர்வதிக்கப்பட்ட மண்ணில் கால் பதிக்கும்போது “Welcome to Canada” என்று சொன்ன அந்த அதிகாரியின் வார்த்தைகள் அந்த ஆற்றமுடியாத வடுக்களுக்கான அற்புத மருந்தாகின. 30 வருடங்களுக்குப் பிறகும் அதிர்ந்துகொண்டிருக்கும் அந்த வார்த்தைகளால் உந்தப்பட்டதன விளைவே Sadness of Geography.இக் கதை சொல்லியில் எனக்குப் பிடித்தது முற்றான மனந்திறந்த தன்னிலை வெளிப்பாடு. குறிப்பாக குடும்பம், குடும்ப கெளரவம், பிள்ளைகளின் எதிர்காலம் எனக்கூறிக் கோடிக்குள் ஒளித்துவைக்கும் நமது கலாச்சாரப் பண்புகளைத் தகர்த்தெறிந்து பாத்திரங்களின் இயல்புகளை இயல்பெனக் காட்டும் பாங்கு.

இலக்கை நோக்கிய அவரது பயணத்தில் அவர் எதிர்கொண்ட தடங்கல்கள், சோர்வுகள் என்பன இவரைப் போன்ற எண்ணற்ற இளைஞர்களால் எதிர்கொள்ளப்பட்டவை பற்றி அவ்வப்போ செவிவழியாக வந்தவைகளைப் பதிவுகளாக இப்போதுதான் நான் முதல் தடவையாகப் பார்க்கிறேன். சில வேளைகளில் வலைப் பதிவுகளிலும் சிற்றிலக்கியப் பத்திரிகைகளிலும் பதியப்பட்டிருக்கலாம். நூல் வடிவில் நான் பார்ப்பது இதுவே முதல் தடவை. இவரைப் போன்று பல்லாயிரக்கணக்கானவர்களின் தற்கொடை முயற்சிகளின் அறுவடைகளாக இருக்கும் முதலாம், இரண்டாம், மூன்றாம் சந்ததிகளுக்கு இப் பதிவுகள் உறுத்தல்களாக இருக்கவேண்டுமென்பது எனது அவா.

இப் புத்தகத்தை ஏன் ஆங்கிலத்தில் எழுதினார் என எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஒரு நேர்காணலின்போது கேட்டிருந்தார். தமிழில் இன்னும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கலாம், உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்தியிருக்கலாம் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் புலம்பெயர்ந்த தமிழரின் அடுத்த சந்ததிகளுக்கும், தமிழரல்லாத வாசகர்களுக்கும் இந்த நாயகன் புலம்பெயர் பாதைகளில் எதிர்கொண்ட தடங்கல்கள் அனுபவிக்காத அனுபவங்களாக இருக்கும். அதைத் தர ஆங்கிலத்தினாலேயே முடியும்.

சில வருடங்களுக்கு முன் கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்திற்குச் சுற்றுலாச் சென்றிருந்தபோது ஐரோப்பிய பட்டினியைத் தவிர்க்கவெனக் கப்பலேறி அட்லாந்திக்கைக் கடந்து வந்து Pier21 என்ற துறையில் வந்திறங்கிய மக்களின் அக்கால நிலைமைகளை அருங்காட்சியகத்தில் பார்த்தபோது புலம் பெயர் துன்பம் ஒரு இனத்துக்கு மட்டும் உரியதல்ல என்பதைப் புரிந்துகொண்டேன்.Sadness of Geography பல கண்டங்களையும், நாடுகளையும், நகரங்களையும், கிராமங்களையும், மலைகளையும், நீரையும் கடந்து வந்த ஒருவரின் அனுபவங்கள். இப் பாதையில் அவர் சந்தித்த மக்கள் – இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் – தமது நெருக்கடியான வாழ்விலும் சக தமிழனுக்கு உதவும் அந்தப் பெருந்தன்மை, எப்போதுமே ஊரையும், உறவுகளையும் மனதில் வைத்து தம்மை வருத்தி, கிடைத்ததை உண்டு, உடுத்தி தமது சந்ததிகளின் ஆடம்பரமான வாழ்வுக்கு அடித்தளமிட்ட வரலாறு இன் நூலின் மூலம் பதியப்பட்டிருப்பது பற்றி எனக்கு மிக்க மகிழ்ச்சி.

'Sadness of Geography' | நூல் விமர்சனம் 3

கதையில் இரண்டொரு சந்தர்ப்பங்களில் கதைசொல்லலிலிருந்து நழுவி கற்பனைப் புனைவிற்குள் உலாவி வந்ததைப் போன்ற அனுபவம் ஏற்பட்டது. கதை நாயகன் வெளிநாடு செல்வதற்கான கனவுப் பொதியுடனும், கடன்வாங்கிய சிறு தொகையுடனும் யாழ்ப்பாணத்திலிருந்து ரயில் மூலம் கொழும்பு வரும்போது வண்டியில் தற்செயலாகச் சந்திக்கும் தேவி; கொழும்பில் பயண முகவரால் ஏமாற்றப்பட்டு (தொலைபேசி இலக்கம் பிழையாகக் கொடுக்கப்பட்டிருந்தது) நான்கு நாட்கள் சாப்பிடாமல் தெருவில் அலைந்தபோது மீண்டும் தற்செயலாக இடறுப்படுதல், அவள் மூலம் ஏமாற்றிய பயண முகவரைக் கண்டுபிடித்து கடவுச் சீட்டை மீட்டல் ஆகிய சம்பவங்கள் memoirs உலகத்திலிருந்து வாசகரை fiction உலகத்துக்குள் கொண்டு செல்வதான உணர்வைக் கொடுத்தது. உண்மையே அதுவாக இருந்தாலும் கொஞ்சம் சம்பவ முடிச்சுக்கள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தேவியிடம் பயண முகவரின் ‘வேலை செய்யாத’ தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்தவுடன் அவர் மறுநாள் வாகனமொன்றில் சில கருப்புச் சேட்டு மல்லர்களுடன் வந்து நாயகனையும் ஏற்றிக்கொண்டு நேரே பயண முகவர் தங்கும் லொட்ஜுக்குச் சென்று கடவுச் சீட்டை மீளப்பெற்றுக்கொள்வது துப்பறியும் நாவலுக்கான பரபரப்பைக் கொடுக்கிறது. இந் நூலில் தேவியின் பாத்திரம் ஒரு அவதாரமாக வந்து நாயகனை ஆட்கொண்டருளிய ஒரு அற்புத சம்பவமாக இருந்திருக்காவிட்டால் தொங்கல் இல்லாமல் இருந்திருக்கும் என்பது எனது அவதானிப்பு.இந் நூலில் இரண்டு விடயங்கள் எனது மனதைத் தொட்டிருந்தன.

ஒன்று, எத்தனை இடர்கள் வந்தும் கதாநாயகன் லோகதாசனின் இயல்பான ‘shooting to the star’ attitude ஆரம்பம் முதல் இறுதிவரை சலிப்படையவில்லை. ஜேர்மனி, பிரான்ஸ், லண்டன், அயர்லாந்து, நெதெர்லாந்து என்று பல நாடுகளைக் கடந்தபோதும், தனக்கு எதுவுமே பிடிக்காமையால் தன் முயற்சியில் சற்றும் தளராமல் கனடா வந்தடைந்து தான் நாட்டைவிட்டுப் புறப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவது படிப்பினையைத் தருவது.

கதையில் வரும் பாத்திரங்களை, அவர்களில் பெரும்பாலோர் அவரது குடும்பத்தவர்கள், பூசி மெழுகி அழகூட்டாமல் அவர்களது இயல்புகளை அப்படியே ஒப்புவிக்கும் தன்மை. எவருமே தமது பிறப்பையோ அல்லது குணாதிசயங்களையோ முன்கூட்டியே தீர்மானிப்பதில்லை, அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்பதை அப்பாவின் மரணத்திற்குப் பின்னர் உணர்ந்து அவரவர்களை அவரவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற துணிபிற்கு, வகுப்பெடுக்காமல் வாசகர்களை இட்டுச் செல்லும் பாங்கு பிடித்திருக்கிறது.

போரைப் பற்றி நூலில் அதிக விபரணை இல்லை ஆனால் அதற்கான முன்னோடிகளை ஆசிரியர் விபரணையின்றி – வாசகர்களுக்கு அலுப்புக் கொடுக்காமல் – தொட்டுச் செல்கிறார். ரயில் வண்டியில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் அவரைத் தொடர்ந்துவரும் வேதனை. அது கொஞ்சம் விபரிக்கப்படுகிறது.

Fiction ஐ விட memoirs வரவரப் பிடித்துப் போகிறது. After all மரபணுக் குறியீடுகள் தானே ஒருவரது தலையெழுத்து.

Sadness of Geography கனடா, ரொறோண்டோவிலுள்ள Dundurn பதிப்பகத்தால் 2019 இல் வெளியிடப்பட்டது. அமசோனில் கிடைக்கிறது. விலை Cdn$ 19.53 (paperback). எம்.ரிஷான் ஷெரீஃப் இனால் மொழிபெயர்க்கப்பட்ட இதன் தமிழ் பதிப்பு இந்தியாவில் வெளியிடப்பட்டது. தமிழ்ப் பதிப்பை நான் வாசிக்கவில்லை.

மாயமான்

Print Friendly, PDF & Email