US & Canada

Roe Vs Wade | அமெரிக்காவைப் பிளக்கும் கருக்கொலை விவகாரம்

அமெரிக்கப் பெண்களின் கருக்கொலை உரிமையை நேற்று (ஜூன் 24) அமெரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துத் தீர்ப்பளித்திருக்கிறது. தாய்மையுற்றிருக்கும் ஒரு பெண்ணுக்கு, தனக்கு முக்கியமானதெனக் கருதும் ஒரு காரணத்துக்காகத் தனது வயிற்றில் அரும்பும் கருவை அழிக்கும் உரிமை உண்டு என்னும் சட்டம் ஜனவரி 12, 1973 முதல் அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கிறது. Roe vs Wade (410 US 113) என்றழைக்கப்படும் இச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நேற்று பாவனையற்றதாக்கி விட்டது. இது அமெரிக்க மக்கள் பலரை வீதிக்கு இறங்கிப் போராட வைத்திருக்கிறது.

பின்னணி

உயிருக்கு ஆபத்தான நிலைமைகளில் தவிர, அமெரிக்கப் பெண்களுக்குக் கருக்கொலை செய்யும் உரிமையை அந் நாட்டின் பல மாநிலங்களும் மறுத்து வந்திருக்கின்றன. 1969 ஆம் ஆண்டு, நோமா மக்கோர்வே என்ற 25 வயதுடைய இளம் பெண் (1947-2017)- நீதிமன்றக் கோப்புகளில் இவரது பெயர் அனாமதேயமாக இருப்பதற்காக ‘Jane Roe’ எனப் பதியப்பட்டிருக்கிறது – தான் வாழ்ந்த ரெக்ஸாஸ் மாநில நீதிமன்றத்தில் இச் சட்டத்துக்கு எதிராக வழக்குப் பதிந்திருந்தார். இதில் மத்திய கூட்டரசின் (Federal) பங்கும் இருப்பதாகக்கூறி ரெக்ஸாஸ் மாநில நீதிமன்றத்தின் டல்லாஸ் கவுண்டி மாவட்டத்தில் வழக்குப் பதியப்பட்டிருந்ததால் அந்தக் கவுண்டிக்கான சட்டமா அதிபரே (District Attorney) இவ்வழக்கை எதிர் கொண்டிருந்தார். அவரது பெயர் Henry Wade. அதனால் இவ்வழக்கின் மூலம் உருவான சட்டம் Roe vs Wade என அழைக்கப்பட்டது. இவ் வழக்கில் மக்கோர்வேயிற்கு சாதகமாக நீதிபதி தீர்ப்பை வழங்கியிருந்ததாலும், வழக்கு அமெரிக்கா முழுவதுக்கும் சார்பாகப் பதியப்பட்டிருந்ததாலும் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் கருக்கொலை செய்யும் உரிமை 1973 முதல் நடைமுறைக்கு வந்தது.

மக்கோர்வே ஒரு பெண் தலைமைத்துவக் குடும்பத்தை நடத்துபவர் (single woman). அவருக்கு ஏற்கெனவே இரண்டு பிள்ளைகள் இருந்தாலும் மூன்றாவது குழந்தை தான் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதால் உருவாகியது என்பதற்காக அக் கருவை அழிக்கவேண்டுமென அவர் மாநில நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தார். ஆனாலும் மாநில நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்காமையால் அவரது மூன்றாவது குழந்தை நலமாகப் பிறக்கவேண்டி ஏற்பட்டது.

1973இல் மக்கோர்வே சார்பில் ஒரு மேன்முறையீடும் அதே வேளை 20 வயதுடைய ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த சாண்ட்றா பென்ஸிங்க் என்ற இன்னுமொரு பெண்ணின் சார்பில் புதிய வழக்கொன்றும் அமெரிக்க மத்திய உச்ச நீதிமன்றத்தி பதியப்பட்டன. பெண்ணின் சுதந்திரத்தையும் பிரத்தியேகத்தையும் மாநில சட்டங்கள் பாதிக்கின்றன என இவ்வழக்குகள் முன்னெடுக்கப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் ஆதரவாக அளித்த தீர்ப்பின் பிரகாரம் அமெரிக்கப் பெண்ணிற்கான கருவழிப்பு உரிமை 1973 இல் அமெரிக்க சாசனத்தில் இடம்பெற்றது.

தற்போதைய விவகாரம்

Roe vs Wade சட்டத்தைப் பயனற்றதாக்கப் பல மாநிலங்களிலும் பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை பலனளிக்கவில்லை. ஆனால் 2018 இல் மிசிசிப்பி மாநிலத்தில் 15 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை அழிக்க முடியாது என ஒரு மாநிலச்சட்டத்தை அம் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டுவந்தார்கள். இது மத்திய சட்டத்தை மீறியதாயினும் மத்திய உச்ச நீதிமன்றத்துக்கு இவ் வழக்கைக் கொண்டு போவதே அவர்களது தேவையாக இருந்தது. காரணம் மத்திய உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் 9 நீதிபதிகளில் 6 பேர் குடியரசுக் கட்சி ஜனாதிபதிகளால் நியமிக்கப்பட்டவர்கள். எனவே உச்ச நீதிமன்றத்தில் Roe vs Wade சட்டத்துக்கு எதிராகக் கொண்டுவரப்படும் வழக்கில் தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவான தீர்ப்புக் கிடைக்குமென அவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி வலதுசாரி நீதிபதிகள் இச் சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டனர். இதன் காரணமாக 22 மாநிலங்களில் நேற்றிலிருந்து கருவழிப்பு சட்டவிரோதமாக்கப்பட்டிருக்கிறது. மீதி மாநிலங்களில் இச் சட்டம் முற்றாக இல்லாமலாக்கப்பட்டோ அல்லது சில சில கட்டுப்பாடுகளுடனோ நடைமுறைக்கு வரலாம்.

பெண்ணின் உரிமைக்கான அச்சுறுத்தல்

உச்சநீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த கடந்த சில நாட்களில் நீதிமன்றத்துக்கு வெளியில் கருவழிப்புக்கு எதிரான அணியினரும் (Pro-Life) கருவழிப்பு பெண்ணுக்கான தேர்வு எனக் கருதும் (Pro-Choice) அணியினரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அநேகமான எல்லாவகையான போராட்டங்களிம் போலவே இப் போராட்டமும் அரசியல்மயப் படுத்தப்பட்டிருந்தது. குடியரசுக் கட்சி, மத ஸ்தாபனங்கள், வலதுசாரி அமைப்புகள் ஆகியன Pro-Life முகாமுக்கு ஆதரவாகவும், ஜனநாயகக் கட்சி, இடது சாரிகள், பெண்கள் அமைப்புகள், முற்போக்கு அணியினர் Pro-Choice முகாமுக்கு ஆதரவாகவும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். ஆனாலும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அரசியல்மயப்படுத்தப்பட்டுவிட்டதால் அங்கு 6 நீதிபதிகள் குடியரசுக்கட்சியால் நியமிக்கப்பட்டதால் தீர்ப்பு Pro-Life முகாமுக்குச் சார்பாக அமைந்திருந்தது. இத் தீர்ப்பின் விளைவு பலரது முகம்களில் அப்பட்டாகத் தெரிந்தது. அரசியல் மயப்படுத்தப்ப்ட்டிருந்தமைக்கு அப்பால் இரண்டு தர்ப்பிலும், குறிப்பாகப் பெண்கள் தர்ப்பில் அளவுகடந்த உணர்வு வெளிப்பாடுகளை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இச் சட்டத்தின் விளைவாகப் பல மாநிலங்களும் பெண்ணின் கருக்காலத்தின் முதல் மும்மாதத்தினுள் (first trimester) கருவை அழைப்பதற்கான உரிமைகளை வழங்கலாம். இரண்டாம் மும்மாத காலத்தில் (second trimester) கருவழிப்பதற்குக் கட்டுப்பாடுகளை வழங்கும் அதே வேளை, மூன்றாம் மும்மாதத்தில் (third trimester) மருத்துவர்களின் அபிப்பிராயத்துக்கு இணங்கக் கருவழிக்கும் உரிமைகளையும் வழங்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.