RFK Junior: தடுப்பு மருந்தைத் தடுக்க விரும்பும் அமெரிக்கர்
சிவதாசன்
ஜனவரி 2025 இல் அமெரிக்காவின் புதிய ஆட்சியில் சுகாதாரத் துறையைக் கையேற்கத் தயாராகும் RFK Jr என அழைக்கப்படும் இளைய றொபேர்ட் எஃப். கென்னடி உலகத்திற்கு நன்கு பரிச்சயமானவர். அமெரிக்க அரசியலில் ஆளுமை செலுத்திய, ஏறத்தாழ ஒரு அரச குடும்பத்தின் கெளரவத்தைப் பெற்ற, கென்னடி குடும்பத்தின் வாரிசு. இவரது தந்தையார் றொபேர்ட் எஃப். கென்னடி, அவரது மூத்த சகோதரர் ஜோன் எஃப். கென்னடியின் அரசாங்கத்தில் சட்டமா அதிபராக இருந்தவர். ஜோன் எஃப். கென்னடியின் மறைவிற்குப் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகும்போது மர்மக் கரங்களால் கொல்லப்பட்டவர். இதைத் தொடர்ந்து எந்தவொரு கென்னடி குடும்பத்தவரையும் அரசியலில் குதிக்க இந்த மர்ம விசைகள் அனுமதிக்கவில்லை.
கென்னடி குடும்பம் வழமையாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் RFK Jr குடியரசுக்கட்சியின் மொள்கைகளைப் பின்பற்றியது மட்டுமல்லாது இம்முறை சுயேச்சை அங்கத்தவராக ஜனாதிபதி தேர்தலிலும் பங்குபற்றித் தோல்வி கண்டிருந்தார். RFK Jr ஒரு சூழல் செயற்பாட்டாளர். சுற்றுச்சூழல் சம்பந்தமான வழக்குகளை வென்று கொடுக்கும் சிறந்த வழக்கறிஞர். மொன்சான்ரோ (Monsanto) மற்றும் டுபொண்ட் (DuPont) போன்ற, சுற்றுச்சூழல் போன்ற விடயங்களில் மிக மோசமான வரலாறுகளைக் கொண்ட, நிறுவனங்களுக்கெதிரான பொதுமக்களின் வழக்குகளில் அவர் ஆஜராகுபவர். ஆனால் கடந்த 20 வருடங்களாக அவரது கவனம் தடுப்பு மருந்துகள் மூலம் ஏற்படும் மனித அழிவுகள், அவற்றைப்பற்றி மருந்து நிறுவனங்கள் பரப்பும் பொய்யான பரப்புரைகள் ஆகியவற்றின் மீது குவிந்திருக்கிறது. இப்போது அவருக்கு ட்றம்ப் நிர்வாகத்தில் சுகாதாரத் துறையை நிர்வகிக்கும் ஒரு முக்கிய பதவி வழங்கப்படவுள்ளமை என் சந்தேகத்தின் புள்ளிகளை இணைக்கிறது.
ஒரு மிதவாத சிந்தனையுள்ள கென்னடி எப்படி ட்றம்ப் நிர்வாகத்தில் இடம்பெற முடியும் என நான் பல தடவைகள் வியந்ததுண்டு. ட்றம்ப் வெற்றியின் உக்கிரம் ஓரளவு அதற்கான பதிலைத் தந்திருந்தாலும் இன்று X சமூக வலைத்தளத்தில் RFK Jr இன் பதிவொன்றை வாசித்த பின்னர் அவர் மீதான எனது மதிப்பு உயர்ந்திருக்கிறது.
தடுப்பு மருந்துகள் தொடர்பாக உலகம் பூராவும் மக்களிடையே வெவ்வேறு அபிப்பிராயங்கள் இருந்து வருகின்றன. MMR போன்ற சில தடுப்பு மருந்துகள் நீண்ட காலத்திற்குப் பழுதடையாமல் பாதுகாப்பதற்காக அதற்கு திமெறோசல் என்ற பெயரில் ஈதைல் மேர்க்குரி, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களால் கலக்கப்பட்டது. 1990 களின் ஆரம்பத்தில் இதன் அளவு அதிகரிக்கப்பட்டதெனவும் அதைத் தொடர்ந்து 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் ஆட்டிசம் வியாதி அதிகரித்ததென்றும் ஒரு செய்தி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவியது. இதனால் பல பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு தடுப்பு மருந்து கொடுப்பதை நிறுத்தியிருந்தார்கள். ஆனாலும் இத் தடுப்பு மருந்தினால் வேறு பல வியாதிகளிலிருந்து பல குழந்தைகள் காப்பாற்றப்படுகிறார்கள் என்ற கோதாவில் இத்தடுப்பு மருந்து தொடர்ந்தும் பாவிக்கப்பட்டு வருகிறது.
எப்படியானாலும் தடுப்பு மருந்து பாவனை விடயத்தில் உலக அபிப்பிராயம் பிளவுபட்டு நிற்கிறது. 2019 இல் உலகை வருத்திய கோவிட்-19 இற்கு எதிரான தடுப்பு மருந்துக்கும் இதே நிலைமை தான். இவ்விடயத்தில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தமது இலாபத்தை முன்வைத்து உண்மைகளை மறைக்கின்றன எனவும் இதற்கு அமெரிக்க அரசாங்கம், FDA, CDC ஆகிய மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகங்களும், ஊடகங்களும், ஆராய்ச்சி நிலையங்களும் துணைபோகின்றன எனவும் பலத்த சர்ச்சைகள் மிக நீண்டகாலமாக உலகை வலம் வருகின்றன. இந்த தடுப்பு மருந்து எதிர்ப்புச் செயற்பாட்டாளர்களை conspiracy theorists எனப் பெயரிட்டு அவர்களைப் பலம் குன்றச் செய்யும் முயற்சிகளில் அரசுகளும் மருந்து நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன என்ற குற்றச்சாட்டுமுண்டு. இதனால் தடுப்பு மருந்துகளை எடுக்கும்படி அரசுகள் மக்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்ற ஒரு தரப்பு மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. ட்றம்ப் போன்ற தீவிர வலதுசாரிகள் இத்தரப்புக்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள். RFK Jr ட்றம்ப் தரப்பை ஆதரிப்பதற்கு இதுவே தான் காரணம்.
இவ்விடயம் பற்றி RFK Jr மிகவும் இறுக்கமான நம்பிக்கையைக் கொண்டவர். சமீபத்தில் அவர் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் ” நான் ஒரு உதாரணத்தை மட்டும் கூறுகிறேன். உலகின் மிகவும் பிரபலமான தடுப்பு மருந்து DTP (diphtheria, tetanus, and pertussis). இம்மருந்து 300 குழந்தைகளில் ஒருவர் வீதம் தீவிர மூளை வியாதி அல்லது மரணத்திற்குக் காரணமாகவிருக்கிறது என்பதால் எம் நாட்டில் அதைத் தடைசெய்துவிட்டோம். 80 களில் பாவனைக்கு வந்த இம்மருந்தின் கொடிய விளைவுகளுக்காக பல மருந்து நிறுவனங்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு நட்டஈடுகளும் அபராதங்களும் விதிக்கப்பட்டன. ஆனாலும் அரசாங்கம் Vaccine Act என்றொரு சட்டத்தைக் கொண்டுவந்து இந்நிறுவனங்களைக் காப்பாற்றி விட்டது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இம்மருந்து இப்போது பாவனையில் இல்லை. ஆனால் வருடமொன்றுக்கு 161 மில்லியன் ஆபிரிக்க குழந்தைகளுக்கு நாங்கள் இம்மருந்தைத் தொடர்ந்தும் வழங்கி வருகிறோம்.
“அது மட்டுமல்ல அதிர்ச்சி தரும் செய்தி இதுதான். இம்மருந்து 30 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியிருப்பதாகச் சொல்லி இத் தடுப்பு மருந்துத் திட்டத்தை ஆதரிக்கும்படி மைக்கிறோசொஃப்ட் அதிபர் பில் கேட்ஸ் டென்மார்க் அரசாங்கத்தைக் கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் அதற்கான ஆதாரத்தைக் காட்டும்படி கேட்டபோது பில் கேட்ஸினால் எவ்வித தரவுகளையும் முன்வைக்க முடியவில்லை. இறுதியில் டென்பார்க் அரசாங்கமே முன்வந்து கடந்த 30 வருட DTP தரவுகளை ஆராய்ந்தபோது அதன் பெறுபேறுகள் அவர்களை அதிச்சிக்குள்ளாக்கியது. இத்தடுப்பு மருந்து பெண் குழந்தைகளையே அதிகம் பாதித்தது. தடுப்பு மருந்து எடுக்காதவர்களை விட எடுத்தவர்களின் மரணம் 10 மடங்கு அதிகமாகவிருந்தது. ஆனால் இறந்தவர்கள் DTP நோய்களால் இறக்கவில்லை. மாறாக மலேரியா, சுவாச நோய்கள், நிமோனியா, இரத்த சோகை போன்ற வெவ்வேறு வியாதிகள் காரணமாகவே இறந்தார்கள். ஆனால் இந்த 30 வருடங்களிலும் தடுப்பு மருந்து எடுத்தவர்கள் மட்டுமே இந்நோய்களினால் இறக்கிறார்கள் என்பதை யாருமே ஆராயவில்லை.
“இக்குழந்தைகளின் மரணத்திற்கான காரணம் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டபோது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட DTP தடுப்பு மருந்து அவர்களின் நோய்த்தடுப்பு சக்தியை (நிர்ப்பீடன ஆற்றல்) (immunosuppression) வெகுவாகக் குறைத்தமையால் தான் இதர நோய்கள் அவர்களை இலகுவாகப் பீடிக்க முடிந்தது. இக்குழந்தைளை DTP நோய்களிலிருந்து இத்தடுப்பு மருந்து பாதுகாத்திருந்தமை உண்மையேயானாலும் அதன் இதர விளைவுகள் மேலும் மோசமாக இருந்தன.
“எனவே இப்பதவி எனக்கு வழங்கப்படுமானால் நான் தடுப்பு மருந்துகளைத் தடுக்க முற்படமாட்டேன். ஆனால் தடுப்பு மருந்துகளை எடுக்க மறுப்பவர்களுக்கு அதற்கான சுதந்திரம் வழங்கப்படுவதை நான் உறுதி செய்வேன். இம்மருந்துகள் பாதுகாப்பானவை என உறுதிப்படுத்துவதில் அரசின் அதிகாரம் மிகவும் இறுக்கமாகப் பயன்படுத்தப்படும்” என்றார் RFK Jr.
கோவிட்-19 தடுப்பு மருந்து விடயத்தில் இதே போன்று conspiracy theories இன்னும் வேகமாக சுழன்று வருகின்றன. சார்ஸ் வைரஸினால் கொல்லப்பட்டவர்களை விட தடுப்பு மருந்துகளினால் கொல்லப்பட்டவர்கள் அதிகம் என்று ஒரு தரப்பு இன்னும் வாதாடி வருகிறது. ட்றம்பின் நிலைப்பாடும் இதுதான். உண்மை ஆடி ஆடி அம்பலத்துக்கு வருவதற்கு முன் பேரழிவு தனது பங்கை முடித்துவிடும்.
JFK Jr மீது நான் வைத்திருந்த அவநம்பிக்கையும் வெறுப்பும் இப்போது மதிப்பாக மாறியிருக்கிறது. மன்னிக்க தலைவரே. (Image credit: FB)
