Satire | கடி-காரம்Sri Lanka

Ranjan Leaks | அதிரப் போகும் தென்னிலங்கை?

மாயமான்

ஜனவரி 21, 2020


பா.உ. ரஞ்சன் ராமநாயக்கா

அடுத்த சில நாட்கள், வாரங்கள், மாதங்களுக்குத் தென்னிலங்கையில் துணி துவைப்பவர்கள் படு பிசியாக இருக்கப்போகிறார்கள். அந்தளவுக்கு பல நூற்றுக்கணக்கானவர்களது வேட்டிகள் பயத்தினால் ஈரமாகப் போகின்றன. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா தகவல்களை ‘லீக்’ பண்ண அவர்கள் வேறொன்றை ‘லீக்’ பண்ணப் போகிறார்கள்.

கடந்த சில நாட்களாகத் தென்னிலங்கைக் காமெடி அரசியற்களத்தில் ஆடிவரும் ஒரு பாத்திரம் ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா. அவரை ஒரு bafoon ஆகக் காட்டிக் காமெடி பண்னுகிறாரென்று காட்டப்போய் தற்போது காமெடி பீசுகள் தாமே என நிருபித்து வருகிறார்கள் ஆளுங்கட்சியினர்.

ஒரு காலைச் சிறையுள்ளும் மறுகாலைப் பாராளுமன்றத்திலும் வைத்திருக்கும் ரஞ்சன், இன்று பாராளுமன்றத்தில் தனது ‘ரஞ்சன் லீக்ஸ்’ சீ.டி. க்களைச் சமர்ப்பித்திருக்கிறார். பல தலைவர்களுட்படப் பலரோடு அவர் உரையாடி இரகசியமாகப் பதிவு செய்த தகவல்களைக் கொண்ட இந்த சீ.டி. க்கள் தென்னிலங்கையை அதிரவைக்கப்போகின்றன என ஊகிக்கப்படுகிறது.

இந்த சீ.டி.க்களில் பல கட்சிகளையும் சார்ந்த அரசியல்வாதிகளுடனும், விலைமாதுகளுடனும், கலைஞர்களுடனும், நாட்டின் தலைவர்களுடனும் அவர் மேர்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

இருப்பினும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுடன் உரையாடியதாக எந்தவித தகவல்களும் அவற்றில் இல்லை என அவர் கூறியிருக்கிறார். அது அச்சத்தின் காரணமாகவா அல்லது அந்த வெள்ளை நரி இவரிடம் அகப்படாமற் போய்விட்டதா என்பது தெரியாது. சிலவேளைகளில் Ranjan Leaks 2.0 வில் அவை வரவும் கூடும்?

அவரது teaser மூலம் அறியப்படுவதாவது: நிரற்படுத்தப்பட்ட அவ்வுரையாடல்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, Perpetual Treasuries தலைவர் அர்ஜுன் அலோய்சியஸ், பா.உ. காஞ்சனா விஜேசேகரா உள்ளிட்ட பலரது உரையாடல்கள் அச் சீ.டி.க்களில் உள்ளன என்பது.

“உச்சித் தளத்தில் அப்பார்ட்மென்ற் ஒன்றை யார், எப்படி வாங்கினார்கள் என்ற ஊழல் பற்றித் நானும், திரு விஜேசேகராவும் துருவி எடுத்துள்ளோம். நான் சமர்ப்பித்த சீ.டி. களில், விளையாட்டுக்களில் திருகுதாளம் செய்தல் (match fixing) போன்ற விடயங்களில் பா.உ. திலங்க சுமதிபாலவின் ஈடுபாடு பற்றிய தகவல்களுண்டு” என ரஞ்சன் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதை விட, 2005 இல் நடைபெற்ற ஷாருக் கான் concert இல் குண்டு வைக்கப்பட்டதற்குப் பின்னால் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது பற்றி அவர் பலருடன் மேற்கொண்ட தகவல்கள் அச் சீ.டி.க்களில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அவர் தனது வீட்டில் பலருக்கு வழங்கிய பேட்டிகளைப் பதிவு செய்த காணொளிகள் பற்றிய தகவல்களும் அவற்றிலுணடு என ரஞ்சன் கூறியிருக்கிறார்.

“இலங்கைச் சமூகங்களில் மறுப்பது என்பது பொதுவழக்காக வந்திருக்கும் நிலையில் நான் இதைச் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. நான் முன்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இப்போது ஆதாரங்களை முன்வைக்கிறேன்” என்கிறார் ரஞ்சன்.

ஏற்கெனவே சிலரால் வெளியிடப்பட்ட தனது உரையாடல்கள் சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன எனவும், ” நான் வெளியிலிருந்து பொய்களைச் சொல்வதைவிட சிறையுள்ளிருந்து உண்மையைப் பேசுவதையே விரும்புகிறேன்” என நடிகரான அவரிடமிருந்து வரும்போது மறைந்த கலைஞர் கருணாநிதி வசனம் எழுதி எம்.ஜீ.ஆர். நடித்த படங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

பா.உ. ஹிருணிக்கா பிரேமச்சந்திரா உட்பட, இவற்றின் மூலம் சிலர் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டிருந்தால் அவரகளிடம் தான் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மிகுதி இவ்விணையத்தின் ‘வெள்ளைத்’ திரைகளில்…stay focused…