Phone Charger: இனிமேல் சகல ஃபோன்களுக்கும் USB-C வலுவேற்றி
ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளையை அப்பிள் ஏற்றுக்கொண்டது
கைத்தொலைபேசிகளுக்கு வலுவேற்றுவதற்குப் பாவிக்கப்படும் சாதனமான charger இதுவரை அப்பிள் மற்றும் ஆண்ட்றோய்ட் ஃபோன்களுக்கு வித்தியாசமாக இருந்துவருகின்றது. அப்பிள நிறுவனம் தனக்கென்று தனித்துவமான வலுவேற்றித் துளையையும் (charging port) அதற்கு மட்டுமே பாவிக்கக்கூடியதுமான வலுவேற்றியையும் (charger plug) வடிவமைத்திருந்தது. ஆனால் ஆண்ட்றோய்ட் ஃபோன்கள் எல்லாம் பொதுவான சர்வதேச தரத்திலுள்ள USB-C வலுவேற்றித் துளைகளையே பாவித்து வந்தன. நேற்று (ஒக்டோபர் 4) ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி இனிமேல் அப்பிள் சாதனங்களும் USB-C தரத்தைக் கடைப்பிடிக்க அந்நிறுவனம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
2024 பிற்பகுதியில் நடைமுறைக்கு வரும் இச்சட்டத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளில் விற்கப்படும் சகல எலெக்ட்றோனிக் சாதனங்களும் தமது வலுவேற்றிகளுக்கு USB-C துளையையே பாவிக்கவேண்டும். அனைத்து ஃபோன் வகைகளுடன் மேல்ம் 12 எலெக்ட்றோனிக் சாதனங்கள் இத் தர்க்கட்டுப்பாட்டை அனுசரிக்க வேண்டும். மடிக்கணனிகள் (laptops) மீதான தரக் கட்டுப்பாடு 2026 இல் நடைமுறைக்கு வரும்.
அப்பிள் நிறுவனம் தனது ஃபோன்களில் பிரத்தியேகமான lightening connector என்ற வலுவேற்றியைப் பாவிக்கின்றது. பல புதிய மாடல்கள் இணைப்பில்லா வலுவேற்றல் முறையைக் (wireless charging) கடைப்பிடிக்கின்றன. விரிப்பொன்றின்மீது (mat) அப்பிள் சாதனங்களை வைக்கும்போது அவை எந்தவித இணைப்புமில்லாமல் தாமாக வலுவேற்றிக்கொள்ளும் முறையைத் தமது அனைத்து சாதனங்களிலும் நடைமுறைப்படுத்த அப்பிள் நிறுவனம் திட்டமிட்டிருந்தாலும் தற்போது USB-C இணைப்புக்கள ஏற்கும் வகையில் சர்வதேச தரத்தையும் ஏற்றுக்கொள்ள அது தயாராகின்றது எனக் கூறப்படுகிறது.
இச்சட்டம் நடைமுறைக்கு வந்தாலும் தமது பழைய ஃபோன்களையும் சாதனங்களையும் ஐரோப்பியர்கள் எறிந்துவிடத் தேவையில்லை. புதிய சாதங்களுக்கு மட்டுமே இந்த தர நிர்ப்பந்தம். இத் தரக் கட்டுப்பாடு விரைவில் உலகம் முழுதும் பரவுமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்பிள், கூகிள் ஆகிய அமெரிக்க நிறுவனங்களும், சாம்சுங் (தென் கொரியா), ஹுவாவே (சீனா) ஆகியனவும் உலகின் பிரபல ஃபோன் தயாரிப்பாளர்களாவார்கள்.
சூழல் மாசடைவதைத் தவிர்க்கும் காரணத்துக்காக இத் தரக் கட்டுப்பாட்டைக் கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் பல தசாப்தங்களாக முயற்சித்து வருகிறது. 2019 இல் அது மேற்கொண்ட கணிப்புகளின்படி 2018 இல் விற்பனை செய்யப்பட்ட ஃபோன்களில் 50% USB micro-B வலுவேற்றிகளும், 29% USB-C வலுவேற்றிகளும், 21% அப்பிள் வலுவேற்றிகளும் பாவிக்கப்பட்டிருந்தன.
இம்மாற்றத்தை அப்பிள் நிறுவனம் ஏற்க மறுத்து வந்ததோடு தமது கண்டுபிடிப்பான இணைப்பற்ற வலுவேற்றும் முறையைச் சர்வதேச தரமாக ஏற்றுக்கொள்ளும்படி ஒன்றியத்தைக் கேட்டுவந்தது. இந்த இணைப்பற்ற வலுவேற்றும் மூறை இன்னும் பரீட்சார்த்த நிலையில் இருப்பதால் ஒன்றியம் அதற்கு மறுத்து USB-C தரத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.