EntertainmentWorldசிவதாசன்

Order of the British Empire | மதிக்கப்பட்ட மாதங்கி!

சிவதாசன்

ஜனவரி 16, 2020

மாதங்கி அருட்பிரகாசம், OBE

கடந்த செவ்வாயன்று (ஜனவரி 14) ‘பேப்பர் பிளேன்ஸ்’ புகழ் பாடகி மாதங்கி அருட்பிரகாசத்துக்கு (MIA), மறக்க முடியாத ‘பொங்கல் பரிசொன்று’ கிடைத்தது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தில் போர் வீரர்களின் தீரச் செயலுக்காகக் கொடுக்கப்படும் ‘Order of the British Empire (OBE)‘ விருது, பிரித்தானிய மகாரணியார் இரண்டாம் எலிசபெத்தினால் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

உண்மையில் ‘chivalry‘ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இவ் விருதுக்கு ஒக்ஸ்போர்ட் அகராதியின் வரைவிலக்கணம் இப்படிச் சொல்கிறது “polite and kind behaviour that shows a sense of honour, especially by men towards women See related entries: Moral, Kind. ​(in the Middle Ages) the religious and moral system of behaviour which the perfect knight was expected to follow the age of chivalry”

மாதங்கி இக் கருத்துடன் முற்றாக உடன்படக்கூடியவரல்லவெனினும், அவர் தமிழர்களின் உரிமைப்போராட்டத்துக்கான நியாயத்தை வீரத்துடனும், தீரத்துடனும் உலக மேடைகளில் உரத்துச் சொன்னவர் என்ற வகையில் அவர் அவ்விருதுக்குத் தகுதியானவர்தான்.

இவ் விருதுக்குப் பின்னால் இனுமொரு சரிதமும் உண்டு.

மகாராணியார் வருடாவருடம் கொடுத்துவரும் இந்த விருதைக் கடந்த 30 வருடங்களாகத் தயாரித்து மகாராணிக்கு வழங்கி வருபவர்கள் மாதங்கியின் தாயார் கலா அருட்பிரகாசமும், மாதங்கியின் மைத்துனியும் தான். 1986 இலிருந்து அவர்கள் இப்படியான விருதுகளைச் செய்து அரண்மனைக்குக் கொடுத்து வருகிறார்கள். அதனால் அந்த விருதை அணிந்துகொள்வதில் மாதங்கிக்கு இரட்டிப்புப் பெருமை.

இந்த விருது தனக்குக் கிடைக்கவிருக்கிறது என மாதங்கி கடந்த ஜூன் மாதமே, தனது சமூக ஊடகம் மூலம் அறிவித்திருந்தார். கடந்த வியாழன், முடிக்குரிய இளவரசர் வில்லியத்தினால் அரண்மனையில் வைத்து இவ் விருது வழங்கப்பட்டிருந்தது.

தனக்கு வழங்கப்பட்ட விருதைபற்றி மாதங்கி தனது சமூக ஊடகத்தின் மூலம் பிரகடனப்படுத்தியபோது ” இந்த விருதை எனது அம்மாவே தயாரித்தார். இது இப்போது செய்யப்படுவதில்லை” எனப் பெருமையோடு கூறியிருக்கிறார்.

1980 களில் பிரித்தானியாவுக்கு அகதியாக வந்த தாயாரின் இடர்ப்பட்ட கடந்த காலத்தை நினைவு கூர்ந்து மாதங்கி பதிந்த இன்னுமொரு ‘இன்ஸ்ரகிராம்’ பதிவில் இப்படிச் சொல்கிறார்:

” அதி குறைந்த சம்பளத்தில் வேலைபார்த்து எங்களின் நல்வாழ்வுக்காக உழைத்த என் அம்மாவுக்கு அளித்த கெளரவமாக இத இன்று நான் ஏற்றுக்கொள்கிறேன்”

“ஒரு உழைக்கும் வர்க்க, முதலாவது சந்ததிக் குடிவரவாளரின் பங்களிப்பை அங்கீகரித்து இவ் விருதைத் தந்தமைக்காக நான் பெருமைப்படுகிறேன். எனது உண்மைகளைச் சொல்வதற்கான சுதந்திரம் இருந்தமையும், அதை என் இசை மூலம் சொல்ல முடிந்தமையும், அப்படியானவற்றைச் சொல்ல வசதிகளற்றவர்களுக்காகக் குரல் கொடுக்க எனக்கு உதவியாயிருந்தன. மற்றவர்களால் அமைதியாக்கப்பட்டவர்களுக்காகவும், கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்காகவும் நான் தொடர்ந்தும் போராடுவேன்”

“இன்னுமொன்று, எனது மச்சாளோடு சேர்ந்து தயாரித்த இந்த ‘சாறி பின்’ அம்மாவுக்கு மிகவும் பிடித்த ஒன்று”

மகாராணியாரின் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்படும் இவ் விருதுப் பட்டியலில் மாதங்கியின் பெயரும் இருக்கிறது என அறிவிக்கப்பட்ட போது “எனது அம்மாவுக்காகவே நான் இந்த விருதை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்திருக்கிறேன்” என அவர் தெரிவித்திருந்தார். தனது தாயார் இங்கிலாந்துக்கு அகதியாக வந்த நாளிலிருந்து ஆயிரக்கணக்கான விருதுகளைக் கைகளினால் தைத்துக் கொடுத்திருக்கிறார் எனவும். ஆங்கிலம் தெரியாத அவருக்கு அப்போது கிடைக்கக்கூடிய வேலையாக அதுவே இருந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

“நான் எதை நினைத்தாலும், அம்மா தான் செய்துவந்த வேலை குறித்து மிகவும் பெருமைப்படுகிறார். அவரது ‘அதி குறைந்த சம்பளம் பெறும்’ ‘அதி கெளரவ வேலை’ யை நான் கெளரவப்படுத்தப்படுத்துவது ஒரு தனி அனுபவம்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பின்னாலுள்ள நியாயத்துக்கு உலக மேடை கொடுத்ததன் மூலம் அவர் புகழைப் பெற்றது போலவே நிறைய இழப்புகளையும் சந்தித்திருந்தும் தொடர்ந்தும் அவர் தீரத்தோடு குரல் கொடுத்துவருவதனால் அவரால் இவ் விருதும் கெள்ரவம் பெறுகிறது.