OpenAI | முதன்மை நிர்வாகி சாம் ஆல்ற்மான் திடீர் வெளியேற்றத்தின் மர்மம்
சிவதாசன்
கடந்த சில வருடங்களில் தொழில்நுட்பத் துறையில் பல மாயாஜாலங்களை நிகழ்த்திவரும் செயற்கை விவேகத்தில் முன்னணியில் இருக்கும் OpenAI என்ற அமெரிக்க நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் முதன்மை நிர்வாகியுமான சாம் ஆல்ற்மான் என்பவரை அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் சபை திடீரென்று வெளியில் தூக்கிப் போட்டுவிட்டது என்பது பெரும் செய்தியாகியிருக்கிறது. உலகின் அழிவிற்கா அல்லது வாழ்விற்கா இந்த செயற்கை விவேகம் வித்திடப் போகிறது என்பதை அறிவதற்காக சந்தியில் நிற்கும் உங்களில் ஒருவராக இச்செய்தியில் மூக்கை நுழைப்பதில் எனக்கும் மகிழ்ச்சி.
“எமது நிறுவனத்தைத் தலைமை தாங்கி நடத்தும் திறமை சாம் ஆல்ற்மானுக்கு இல்லை; அவர் மீது எமக்கு இனிமேலும் நம்பிக்கையில்லை” என்பதோடு எந்தவித ஆதாரங்களையும் வழங்காது இயக்குனர் சபை அவரை வெளியில் விட்டிருக்கிறது. அவரது வெளியேற்றத்தின் சூத்திரதாரியாக OpenAI நிறுவனத்திம் முதன்மை விஞ்ஞானியும் ஸ்தாபகர்களில் ஒருவருமான இல்யா சுட்ஸ்கெவெர் அவர்களைக் கூறுகிறார்கள். ஆல்ற்மானின் இடத்தை நிரப்புவதற்காக மீரா முறாத்தி என்பவரை நியமித்திருந்தாலும் இந்த அதிரடி நடவடிக்கையால் பல மூத்த பணியாளர்கள் நிறுவனத்திலிருந்து விலகி வருகிறார்கள். இவரின் வெளியேற்றத்தைத் தங்க முடியாமல் OpenAI நிறுவனத்தின் இன்னுமொரு ஸ்தாபகரும் நிறுவனத்தின் அதிபருமான கிறெக் புறொக்மான் என்பவரும் பதவி விலகியிருக்கிறார்.
ஆரம்பத்தில் இலாப நோக்கமில்லாத ஒரு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட OpenAI பின்னர் கூகிள் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக மைக்கிறோசொஃப்ட் போன்ற நிறுவனங்களின் பாரிய முதலீடுகளால் (வாங்கப்பட்டு) இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டது. இப்போது அதன் சந்தை விலை 90 பில்லியன் டாலர்கள்.
“சாம் ஆல்ற்மான் தனது இயக்குனர் சபையுடன் சகல விடயங்களையும் பகிர்ந்து கொள்வதில்லை; அவரது உரையாடல்களில் வெளிப்படைத் தன்மை இல்லை” என்பது இயக்குனர் சபையின் ஒரே ஒரு முக்கிய குற்றச்சாட்டு. இரு பகுதியினரும் ஏதோ ஒன்றை வெளிப்படையாகக் கூற மறுக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. ஆல்ற்மானை மீண்டும் அவரது பதவியில் இருத்த மைக்கிறோசொஃப்ட் முதன்மை நிர்வாகி சத்யா நடெல்லா உடபடப் பல தலைகள் பகீரத முயற்சிகளை எடுத்துவருகின்றன. அதே வேளை OpenAI நிறுவனத்திலிருந்து விலகி புதியதொரு நிறுவனத்தை உருவாக்குவதற்கு ஆல்ற்மான், புறொக்மான் மற்றும் பல மூத்த பணியாளர்கள் இணைந்து செயற்பட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
OpenAI இன் மூன்று ஸ்தாபகர்களில் இப்போது எஞ்சியிருக்கும் இல்யா தான் இக்குழப்பத்திற்குக் காரணம் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் அவரது profile பற்றி ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள்: அவர் ஒரு கனடாவில் பிறந்த, கனடா-இஸ்ரேல் இரட்டைக் குடியுரிமைகொண்ட ஒரு கணனி விஞ்ஞானப் பட்டதாரி. செயற்கை பொது விவேகத்தில் (AGI) மிகவும் பாண்டித்தியமுள்ளவர்.
OpenAI நிறுவனம் ஒரு இலாபநோக்கற்ற நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டபோது ரெஸ்லா அதிபர் இலான் மஸ்க் மற்றும் டாறியோ அமோடே ஆகியோர் அதில் முக்கிய பங்கு வகித்திருந்தனர். ஆனால் பின்னர் மைக்கிறோசொஃப்ட் நிறுவனம் அதற்குள் புகுந்து அதை ஒரு இலாபநோக்கான நிறுவனமாக மாற்றியதும் மஸ்க், அமொடே ஆகியோர் விலகித் தமது சொந்த செயற்கை விவேக நிறுவனங்களை ஆரம்பித்தனர். செயற்கை விவேகத் தொழில்நுட்பத்தின் அசுரவேகத்தைக் கட்டுப்படுத்தி அபாயம் விளைவிக்காத முறையில் பிரயோகிக்கவேண்டுமென்பது மஸ்க், அமொடே,இல்யா போன்றோரின் விருப்பமெனவும் ஆனால் ஆல்ற்மான் போன்றோர் இலாபத்தை மட்டும் கருத்தாகக்கொண்டு ChatGPT போன்ற Chatbot களை அவசரம் அவசரமாக சந்தையில் இறக்கிவிட்டனர் என்பதும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு. ஒரு வருடத்தின் முன்னர் சந்தைக்கு வந்த ChatGPT தற்போது 100 மில்லியன் மாதாந்த வாடிக்கையாளர்களால் பாவிக்கப்படுகிறது. Fortune 500 நிறுவனங்களில் 80 வீதமானவை சந்தா செலுத்தி இச்சேவையைப் பாவிக்கின்றன. இதற்குள் GPT5 யும் சந்தைக்குள் நுழைந்துவிட்டது. இலாபம் தலைக்கேறும்போதுதான் இது நிகழ முடியும்.
OpenAI ஒரு இலாபநோக்கமுள்ள நிறுவனமாக மாற்றப்பட்டிருந்தாலும் அதன் இயக்குனர் சபைப் பணிப்பாளர்களுக்கு, ஆல்ற்மான் உடபட, எவருக்கும் நிறுவனத்தில் பங்குகளில்லை. அதே வேளை இயக்குனர்களையோ அல்லது ஸ்தாபகர்களையோ பாதுகாக்கும் சட்டவரம்புகளையாவது அந்நிறுவனம் முறையாக கொண்டிருக்கவில்லை எனவும் இதை அறிந்திருந்தும்கூட சாம் ஆல்ற்மான் இதர பங்காளிகள், பணிப்பாளர்களுடன் கலந்தாலோசியாது புதிய தொழிநுட்பங்களை அவசரம் அவசரமாக அறிவித்துவிடுகிறார் என்பதும் ஒரு பரவலான குற்றச்சாட்டு. சந்தையில் இதர போட்டியாளர்கள் முன்னிலைக்கு வருவதற்கு முன்னரே சந்தையைக் கைப்பற்றிவிடவேண்டுமென்பது மைக்கிரோசொஃப்ட் போன்ற முதலீட்டாளர்களின் அவா என்பதும் ஆல்ற்மானின் சீரற்ற நடைமுறைகளுக்கு ஒரு காரணம் எனப்படுகிறது.
மைக்கிறோசொஃப்ட் போன்ற முதலீட்டாளர்களின் பணப்பசியே ஆல்ற்மானின் சீரற்ற நடைமுறைகளுக்குக் காரணமென்பதும் இதனால் கடந்த சில காலமாக இதர பணிப்பாளர்களுக்கும் ஆல்ற்மானுக்குமிடையே முறுகல் நிலை இருந்துவந்ததெனவும் இதைத் தொடர அனுமதித்தால் மனித குலத்தின் அழிவு துரிதப்படுத்தப்பட்டுவிடும் என்ற அச்சம் OpenAI நிறுவனத்துக்கு வந்துவிட்டதெனவும் இதன் காரணமாகவே சாம் ஆல்ற்மான் வெளியேற்றப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. மைக்கிரோசொஃப்ட் முதலீட்டுடன் இன்னுமொரு நிறுவனம் உருவாகுமானால் மனித குலத்தை எப்படிப் பாதுகாக்கமுடியும்? எனவே அவரை நிறுவனத்துக்குள் மீண்டும் தள்ளிக்கொண்டுவருவதற்கான முயற்சிகளும் ஏககாலத்தில் எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன. Image Credit: Uwy8jIn