Science & Technologyஜெகன் அருளையா

NurtureLeap: யாழ்ப்பாணத்தின் திறன்வளம் கொண்டோரை வல்லுனர்களாக்கும் நிறுவனம்

ஜெகன் அருளையா
ஜெகன் அருளையா

கோவிட்-19 பெருந்தொற்றின் பேரழிவு கொண்டுவந்த பொதுமுடக்கம் சில காரியங்களுக்கும் காரணமாக அமைந்துவிட்டது. முதல் தடவையாக, மேற்கு மாகாணத்துக்கு வெளியில் தூங்கிக்கொண்டிருந்த நகரங்கள் விழித்தெழ ஆரம்பித்தன. கொழும்பில் பணிபுரிந்த பலர் சொந்த ஊர்களுக்குக் குடிபெயர்க்கப்பட்டு அங்கு தமது குடும்பங்களுடன் வீடுகளுக்குள் முடக்கப்படலாயினர். துர்ப்பாக்கியமாகச் சிலர் வேலைகளை இழக்கவேண்டியேற்பட்டதும் உண்மை தான். உடலுழைப்பு அவசியமான பணிகளைச் செய்தவர்கள் நகர் முடக்கம் காரணமாகவும், பொதுவான பொருளாதார மந்த நிலை காரணமாகவும் வேலைகளை இழந்தார்கள். ஆனால் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் தொழில்துறை மட்டும் தொலைப்பணி (remote work) வசதிகள் காரணமாகத் தப்பிப் பிழைத்துக்கொண்டது.

விருப்பற்ற ஒன்றாக இருந்தும்கூட தொலைப்பணி முறையானது நடைமுறைக்குகந்த, வினைத்திறனுள்ள, செலவு குறைந்த ஒன்றென தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்டுகொண்டன. ஒருங்கிணைந்த குழுக்களை உருவாக்குவதன் மூலம் தொலைப்பணிகளை வெற்றிகரமாக இயக்கக்கூடிய நடைமுறைகள் வடிவமைக்கப்பட்டன. பணிமனைகளின் பரப்பளவுகளைச் சுருக்கிக்கொள்ளும் சந்தர்ப்பம் முதன்மை நிர்வாகிகளுக்குக் கிட்டியது. வாடகை, மின்சாரம், துப்புரவுப்பணி, பாதுகாப்பு, பால், சீனி, தேனீர் இத்தியாதிகள் போன்றவற்றில் சேமிப்பைக் காணும் வழிகளைக் கண்டுகொண்டார்கள். கொழும்பின் கைக்கடங்கா வாடகை, உப்புக் கரிக்கும் கடை உணவு, பொதுப் போக்குவரத்து ஆகியவற்றைக் கைவிட்டு குறைந்த செலவில் நிறைந்த வாழ்வு பணியாளர்களுக்குப் பயன் தந்தது. கண்டி, கொழும்பு, திருகோணமலை, காலி, யாழ்ப்பாணம், இன்னும் பல இடை நகரங்களில் தொலைப்பணி புரிவதற்காகப் பணியாளர்கள் குறைந்த சம்பளத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். குறிப்பாக அனுபவமற்ற புதிய தொழில்நுட்பத்துறைப் பட்டதாரிகள் பருத்த சம்பளங்களை எதிர்பார்க்காது கடமையாற்றத் தயாராகினார்கள்.

இப் புதிய வரவுகள் தாம் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் கற்றுக்கொண்ட தொழில் திறமைகள் மூலம் கொழும்பிலிருந்த தமது சகாக்களுக்கு இணையான திறமைகளைக் காட்டக்கூடியதாகவிருந்தது. ஆனாலும் சீரான ஊடாடல், நேரக் கட்டுப்பாடு ஆகிய தொழில்நேர்த்தி நெறிமுறைகள் போன்ற மென் திறன்களுக்கு (soft skills) அவர்கள் அன்னியமாக இருந்தார்கள். மென்திறன்களைக் கற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த வழி, அவற்றைப் பிறப்பிலிருந்து பின்பற்ற ஆரம்பிப்பதுவே. பாசமும் ஒழுக்கமும் கொண்ட பெற்றோர், அக்கறையுள்ள ஆசிரியர்கள், மரியாதையும் ஆதரவும் தரவல்ல சகபாடிகள் ஆகியோர் மூலமே இவை சாத்தியமாகும். இருப்பினும் இலங்கை சமூகங்களிடையே மென்திறன்கள் இன்னும் போதியளவு வளர்ச்சியடையவில்லை என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். இயற்கையாகக் கிடைக்காதவற்றை வளர்த்தெடுக்க வேண்டியதும் அவசியம்.

யாழ்ப்பாண அலுவலகப் பணியாளர்கள்

கொழும்பில் காணப்படும் மென்பொருள்தொழில் (software industry) சிறந்ததொரு உதாரணம். நான் 1993 இல் பிரித்தானியாவிலிருந்து வெளிநாட்டுப் பணியாளனாகக் கொழும்பு வந்து ஏழு வருடங்கள் மென்பொருள் உற்பத்தி முகாமையாளாராகப் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் பின்னர் இத்துறையில் சிறப்பான மாற்றங்கள் நடந்தேறியுள்ளன. வாடிக்கையாளர் முதல் விநியோகஸ்தர் வரை, மேலாளர் முதல் பணியாளர் வரை, மென்திறன் சகல திசைகளிலும் பீரிட்ட வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. 1993 இல் துடைப்பத்துடன் கடந்து போகும் அலுவலக ‘பியோன்’ கண்டுகொள்ளப்படவே மாட்டார். பணியாளர்களுக்குத் தலைகூட அசைக்காமல் நிர்வாகி கடந்து போவார். இப்போது உயர் நிலை அதிகாரிக்கும் கடைநிலை ஊழியருக்குமிடையே சிநேக பூர்வமாக முகமன் கூறுவதும், நன்றி தெரிவிப்பதும் வழக்கமாகிவிட்டது. மேலாளர் தமது பணியாளர்களை மரியாதையுடன் நடத்துகிறார். பணியாளர் தமது மேலாளருடன் பண்புடன் பழகுகின்றனர். கோபத்துடன் வரும் வாடிக்கையாளர்களோடு தற்காப்பு விவாதங்களை மேற்கொள்ளாது சாமர்த்தியமாகப் பேசக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். மகிழ்வான வாடிக்கையாளர்கள் நல்ல விளம்பரத்தைச் செய்வதுடன் சிபாரிசுகளையும் மேற்கொள்வார்கள். இதனால் வியாபாரம் பெருகுகிறது. “குரங்கை மெது மெதுவாகப் பிடிக்கவேண்டும்” என்றொரு பழமொழி உண்டு. வெற்றிகரமான வியாபாரத்தைப் பிடிப்பதற்கு மென்திறன் ஒரு சிறந்த வழி.

2020 இல் கோவிட் -19 முடக்கங்களின்போது, பிரித்தானியாவிலிருந்து நிர்வகிக்கப்படும் நிறுவனமான ‘செபீரோ’ ( Xebiro) கொழும்பிலிருந்த தமது சில பணியாளர்களைத் தமது சொந்த நகரங்களிலிருந்து பணிபுரிய வசதி செய்து கொடுத்தது. அனுபவமுள்ள பணியாளர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்புவதன் மூலம் அங்குள்ள உள்ளூர் திறனாளிகளையும் உள்வாங்கி அங்கேயே ஒரு குழுவை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை ‘செபீரோ’ ஏற்படுத்திக்கொண்டது. தொழில் திறமைகளைப் பொறுத்தவரை புதிய வரவுகளிடம் எதுவித பிரச்சினையும் இருக்கவில்லை; கொழும்புக்குச் சமமாக யாழ்ப்பாணமும் இருந்தது. ஆனாலும் மென்திறன்கள் விடயத்தில் பிரச்சினையாகத் தான் இருந்தது. நேரம் தவறாமை, பயனுள்ள உரையாடல், குறைந்த தலையீடுகளுடன் அதிக கவனம், எதிர்பார்த்த காலத்திற்குள் பணிகளை நிறைவேற்றல், அவசரம் பற்றிய புரியாமை என்பன புதிய வரவுகளுக்குப் புரியாத விடயங்களாக இருந்தன. இதை நிவர்த்தி செய்ய, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட செபீரோவின் நிர்வாகியான சசீவன் கணேஷநாதன் ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கினார். அதுதான் ‘நேர்ச்சர்லீப்’ ( NurtureLeap). தொழில்நுட்பத்தில் திறன் வளம் கொண்ட இளையோரை இனம் கண்டு அவர்களைத் தொழில் வல்லுனர்கள் ஆக்குவதே ‘நேர்ச்சர்லீப்பின்’ தொழில்.

சில விடயங்களை இலகுவாகச் சமாளித்து விடலாம். தினமும் கைரேகை மூலம் கணனிகளிலுட்புகுதல், வெளிவருதல் போன்ற விடயங்கள் மூலமாக மேலாளர் முதல் பயிற்சியாளர் வரை நேரக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தல் என்பது இலகுவாக நடைமுறைப்படுத்தக்கூடிய ஒன்று. ஆனால் திறனுள்ள உரையாடல், அவசரம், அவசியம் பற்றிய புரிந்துணர்வு போன்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவது கொஞ்சம் கடினமாகவே இருந்தது. தலையை மேலும் கீழும், பக்கவாட்டு என்று அசைப்பது ஆம் அல்லது இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியாத நிலை. தெருக்களில் விரைவாகப் போகவும் வேலைத்தளங்களில் மெதுவாகப் பணியாற்றவும் கூடிய வித்தைகளை இலங்கையர்கள் நன்றாக அறிந்துவைத்திருக்கிறார்கள். எதற்கு அவசரம் தேவை என்பது அவர்களுக்குப் புரியாத ஒன்று. அவசரமாக வீடேகவேண்டும் என்பதற்காகப் பணிகளை இடைநிறுத்திவிட்டுச் செல்லும் பொதுத்துறை வியாதி தனியார் துறைகளுக்கும் தொற்றிவிட்டது. வாடிக்கையாளரின் தேவைகளை உரிய நேரத்தில் வழங்க முடியாமை என்பது போட்டிகள் மிக்க தனியார் துறைக்கு மிகவும் ஆபத்தான ஒன்று.

‘செபீறோ’ வில் இணைவதற்கு முன்னர் சஜீவ் எட்வார்ட் ‘ஸ்ராக்ஸ்’ (STAX) என்னும் பிரபல ஆலோசக நிறுவனத்தில் பணியாற்றியிருந்தார். தற்போது கொழும்பிலுள்ள ‘செபீரோ’ அலுவலகத்தில் முதன்மை சந்தைப்படுத்தும் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். யாழ்ப்பாண அலுவலகத்தை நிர்வகிப்பது அவரது பணி.

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் இதர கல்விநிலையங்களிலிருந்து வரும் பட்டதாரிகள் தொழில்நுட்பத்தில் சிறப்பானவர்களாகவும் கொழும்பு பணியாளர்களுக்குச் சமமானவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் மொழிப்பிரயோகம், தலைமைத்துவம், திட்டமுகாமைத்துவம், தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சு வல்லமை போன்ற மென்திறன்களில் அவர்கள் சோடை போய்விடுகிறார்கள். ஆடை நெறி ஒரு பிரச்சினயே அல்ல. ‘ஸ்மார்ட் காசுவல்’, ‘ஸ்மார்ட் ஷூஸ்’ போன்றவற்றில் பிரச்சினைகள் இல்லை. நேரம் தறாமை, விடுமுறை விண்ணப்பம், மூத்தோரின் கீழ் பணியாற்றல், உரையாடல் திறன் போன்றவை கற்பிக்கப்பட வேண்டியவை. கை ரேகைப் பதிவுகளுடன் தொடர்புள்ள மனிதவள முறைமை (HR) எங்களிடம் உண்டு. வரவை உறுதிசெய்யவும், விடுமுறை விண்ணப்பங்களை நடைமுறைப்படுத்தவும் இது உதவுகிறது. ஒவ்வொருவரும் தமது பணிகள் பற்றிய விளக்கங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அளிப்பதன் மூலம் உரையாடற் திறன், தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள முடியும்” என்கிறார் சசீவன்.

“நிறுவனத்தின் பணியாளர்களிடையேயான சமூக ஊடாடலை மெருகூட்டுவதற்கென வருடத்திற்கு இரு தடவைகள் கொழும்பு, யாழ்ப்பாணக் குழுக்கள் இணைந்து உலாக்களை மேற்கொள்கின்றனர். சென்ற வருடம் வில்பத்திலுள்ள ஆளுனர் வாடியில் இரண்டு நாட் சந்திப்பும், வருட இறுதிக் கொண்டாட்டமாக வாஸ்கடுவவிலுள்ள சிற்றஸ் ஹொட்டேலில் சந்திப்பும் எமது குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. புதியோர் முதல் மூத்தோர் வரை, நிறுவனப் பணியாளர்கள் மத்தியில் கிடையாகவும் (horizoantal), நெடுவாகவும் (vertical) தோழமையும் விசுவாசமும் உருவாகவேண்டுமென்பதே எமது நோக்கம்” என்கிறார் சசீவன்.

‘நேர்ச்சர்லீப் நிறுவனத்தில் மாணவர்கள் பலரும் இணையவேண்டுமென்பதே சசீவின் விருப்பம். தொழில்நுட்ப ரீதியில் ஏற்கெனவே திறமைகளைக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மேலும் பயிற்சிகள் தேவையில்லை. அவர்கள் உடனடியாகவே பணிகளை ஆரம்பிக்கலாம். மிகவும் கவனமாக மேற்பார்வை செய்யப்படும் இவர்கள் பணியிடைப் பயிற்சிகள் (on-the-job-training) மூலம் தமது தொழிநுட்பத் திறன்களையும் மென்திறன்களையும் வளர்த்துக்கொள்ள முடியும்.

கொழும்பு தராதரத்தில் போட்டியிடுமளவுக்கு நேர்ச்சர்லீப் இளையோருக்கு திறன்களைக் கற்பிக்கிறது. பட்டதாரிகளையும், பட்டங்களுக்கு இணையான இதர தொழில்முறைத் தகுதிகளையும் நேர்ச்சர்லீப் அங்கீகரிக்கிறது. உயர் தேசிய டிப்ளோமா (Higher National Diploma (HND)) மற்றும் அதற்கு மேலான தகுதிகளைக் கொண்டவர்கள் பணிக்கு எடுக்கப்படுகிறார்கள். தொழில்நுட்பத் தகுதிகளைக் கொண்டவர்கள் மட்டுமல்லாது சந்தைப்படுத்தல் (Marketing), மனிதவளம் (Human Resources (HR)) போன்றவற்றில் தகுதிகளைக் கொண்டிருப்பவர்களும் உள்வாங்கப்படுகிறார்கள்.

Developer Screenshot

பயிற்சியாளர்களாக (interrns) உள்வாங்கப்படுபவர்களுக்கு சந்தை நியமக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இப்படியாக உள்வாங்கப்படுபவர்கள் ஆரம்பத்திலிருந்தே முறைப்படியான விடுமுறை விண்ணப்பங்கள், வர்த்தக விடுமுறைகள், நேரம் தவறாமை, ஆடை நெறி (dress code), மருத்துவர் சான்றுடனான நோய் விடுப்பு (sick leave) போன்ற தொழில் நேர்த்தி நடைமுறைகளைப் (professional procedures) பின்பற்றவேண்டும். ஆறு மாதப் பயிற்சிக்காலத்தில் மாதமொரு தடவை அரை நாள் விடுப்பும் வழங்கப்படும்.

பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து வெளியேறுபவர்கள் சிலருக்கு செபீரோ குழுமத்தின் நிறுவனங்களில் வேலை வழங்கப்படுகிறது. வேறு சிலருக்கு யாழ்ப்பாணத்திலோ அல்லது கொழும்பிலோ உள்ள இதர நிறுவனங்களில் வேலைகளைப் பெற உதவி வழங்கப்படுகின்றது. நவம்பர் 2023 வரை நேர்ச்சர்லீப் 96 பேர்களை உள்வாங்கியிருக்கிறது. இவர்களில் 35 பேர் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். பயிற்சிகளை முடித்துக்கொண்டவர்களில் 23 பேர் செபீரோவிலும், 22 பேர் இதர நிறுவனங்களிலும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்; 14 பேர் பல்கலைக்கழகங்களில் கல்விகளைத் தொடர்கிறார்கள்.

நேர்ச்சர்லீப் தொழில்துறைகளுக்காக மக்களைப் பதப்படுத்துகிறது. செபீரோ இதற்கான செலவுகளை எடுத்துக்கொள்கிறது. இருப்பினும் இச்சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்காக தளபாடங்கள், மடிக்கணனிகள் போன்றவற்றைக் கொள்முதல் செய்வதற்காக நிதியுதவிகளை எதிர்பார்க்கிறது.

வாழ்வில் ஒவ்வொரு தெருக்களும் மேடுபள்ளம் கொண்டவைதான். மென்திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் மேடு பள்ளங்ளைத் தவிர்த்து சுமுகமான உறவுகளைத் தக்கவைத்துக்கொள முடியும். இலங்கை சமூகத்தில் மென்திறன்கள் பரவலாக அறியப்பட்டவையல்ல. நேர்ச்சர்லீப் யாழ்ப்பாணத்தில் பயிற்சிகளை வழங்கி வேலைகளைப் பெற வழிவகுக்கிறது. வடக்கில் வேறு பல நிறுவனங்களும் இப்படியான மென்திறன் பயிற்சிகளை வழங்குகின்றன. இவற்றில் சில சிறப்பான பயிற்சிகளை வழங்குபவையாகவும் இருக்கின்றன.

சஜீவ் எட்வார்ட் உடன் தொடர்புகளை மேற்கொள்ள விருபுபவர்கள் sajeev@xebiro.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்.

( — இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் பிரித்தானியாவிற்குத் தனது பெற்றோருடன் இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தஙகளுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக இலஙகையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனஙகளில் பணியாற்றியவர். 2015 இல் ஜெகன் யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். jekhan@btinternet.com – தமிழாக்கம்: சிவதாசன் tam@veedu.com)