‘No Time To Die’ | 25 ஆவது ஜேம்ஸ் பாண்ட் படம் லண்டனில் வெளியிடப்பட்டது
டானியல் கிறெக்கின் ஐந்தாவதும் இறுதிப் படமும்
மாயமான்
வெளிவருமா என்ற ஐயத்தில் இருந்த ஜேம்ஸ் பாண்ட் படமான No Time To Die லண்டனில் உலக பிரிமியராக நேற்று (செப் 28) வெளியிடப்பட்டிருக்கிறது. பிரித்தானிய அரச குடும்பம், மற்றும் ஒஸ்கார் பிரபலங்கள் இந்த சிவப்புக் கம்பள விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.
கொரோனா பெருந்தொற்றினால் ஒரு வருடத்துக்கும் மேலாக அழுது வழிந்த திரையரங்குகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர இப் படம் உதவிசெய்யுமென்ற பலத்த எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறது No Time To Die.
25 ஆவது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான No Time To Die, ஏப்ரல் 2020 இல் வெளிவருவதாக இருந்து, பெருந்தொற்றுக் காரணமாக, மூன்று தடவைகள் தன் வருகையைப் பினபோட்டு ரசிகர்களை ஏமாற்றியிருந்தது.
யூனிவேர்சல் பிக்சர்ஸ் மற்றும் எம்ஜிஎம் தயாரிப்பான இப் படமே நடிகர் டானியல் கிரேக்கின் இறுதி ‘பாண்ட்’ படம். 2006 இல் கசீனோ றோயால் படத்தின மூலம் புதிய ஜேம்ஸ் பாண்டாக அறிமுகமாகிய கிரேக்கின் 15 வருட ஒப்பந்தம் இப்படத்தோடு முடிவடைகிறது. அதனால் இப்படத்தின் வெளியிடுகையைப் பிரமாண்டமாகக் கொண்டாட அவர் விரும்பியிருந்ததாகவும், இப்படம் வெளிவருமெனத் தான் நம்பியிருக்கவில்லை எனவும் அவர் ராய்ட்டர் செய்தி ஸ்தாபனத்துக்குத் தெரிவித்திருந்தார்.
US$200 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்ட இப் படத்தில் ஜமெய்க்காவில் ஓய்வு நிலையில் இருந்த ஜேம்ஸ் பாண்ட், மிகவும் ஆபத்தான கொலைக் கருவியுடன் அலையும் வில்லனைத் தேடிப்பிடிப்பதற்காக தன் ஓய்விலிருந்து மீளுவதாகக் கதை அமைகிறது. ஒஸ்கார் பரிசு பெற்ற ராமி மாலிக் இப் படத்தில் வில்லனாக வருகிறார். இப்படத்தில் புதியதொரு பாத்திரம் அறிமுகமாகிறது. 00 ஏஜண்ட் நோமி என்ற இப் பாத்திரத்தில் லின்ச் நடிக்கிறார். மடெலேய்ன் ஸ்வான் பாத்திரத்தில் சேய்டூ நடிக்கிறார்.
இவ்வெளியீட்டு விழாவிற்கு இளவரசர் சார்ள்ஸ், இளவரசர் வில்லியம் மற்றும் அவர்களது துணைவியர், இராணுவத்தினர், முன்னணி சுகாதாரப் பணியாளர் எனப் பலரும் அழைக்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.