Columnsமாயமான்

Mug shot ஐ மகிமைப்படுத்திய துரும்பர்

மாயமான்

இந்த ஆனைக்கும் அடி சறுக்கி விட்டது. மூன்று குழிகளில் தப்பி நான்காவதில் விழுந்துவிட்டது. பாவம் துரும்பர். அரசியலை நகைச்சுவையாக்கிய ஒரு கோமாளி. பைடன் போன்ற நஞ்சர்களை விட இவர் எவ்வளவோ மேல். பல வீடுகளில் ஏறியவர் இப்போ கோ(ர்ட்)டுகளில் ஏறி இப்போ கைதி #1 என்ற நிலையை விரைவாக எட்டிக் கொண்டிருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் முதலாவது mug shot எடுக்கப்பட்ட ஜனாதிபதி, சாதனையாளர். இதுவரை ஒரு அவமானச் சின்னமாகப் பார்க்கப்பட்டு வந்த mug shot இனிப் பிரபலமாகப் போகிறது. ரீ சேர்ட்டுகளில் முன்னும் பின்னும் துரும்பரின் விசிறிகள் mug shot படங்களைத் தாங்கிக்கொண்டு விசிலடிக்கப் போகிறார்கள். இந்த mug shot பற்றி ஒரு சிறிய ஆராய்ச்சி.

Mug என்பது தேனீர் போன்ற சூடான பானங்களை அருந்துவதற்கு பிரித்தானியர்கள் பாவித்து வரும் ஒரு கிண்ணம். பொதுவாக மண்ணில் செய்யப்பட்டு களிம்பு பூசப்பட்டு அழகுபடுத்தப்பட்ட ஒரு பாத்திரம். துரும்பரின் படத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம், கெதியா விசயத்துக்கு வா என்கிறீர்கள். சரி வருகிறேன்.

17ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் குயவர்கள் களிமண்ணில் செய்யும் பாத்திரங்களை அழகியதும், நகைச்சுவை ததும்புவதுமான வடிவங்களிலும் வர்ணங்களிலும் கலைத்துவமாகச் செய்தார்கள்; இப்போதும் செய்து வருகிறார்கள். இவற்றில் சிலவற்றை குரூரமான மனித முகங்களுடனும் செய்தார்கள். இதே வேளை திருடர்கள், கொலைகாரர்களைச் சித்தரிக்கும் கார்ட்டூன்கள், சித்திரக் கதைகள் போன்றவற்றில் அவர்களின் முகங்களை விகாரமாகவும் வரைவதும் இக்காலத்தில் வழக்கமாகவிருந்தது.

குற்றவாளிகளைத் தேடும்போதோ அல்லது பொதுமக்களை இது குறித்து எச்சரிக்கும்போதோ அவர்களை அடையாளம் காட்டுவதற்கென பொது இடங்களில் rogue galleries எனப்படும் அறிவிப்புப் பலகைகளில் குற்றவாளிகளின் படங்களை ஒட்டி வைப்பது வழக்கமாக இருந்தது. இதற்காக காவல் துறையினர் கொஞ்சம் குரூரமான அல்லது விகாரமான அச்சுறுத்தும் படங்களையே வரைவார்கள் அல்லது பிரசுரிப்பார்கள். இப்படியாக முதன் முதலாக ஒரு குற்றவாளியை mug shot புகைப்படமாக எடுக்கப்பட்டது 1843 இல் பிரஸ்ஸெல்ஸ், பெல்ஜியத்தில் எனக் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது மேற்கு நாடுகளில் பாவிக்கப்படும் mug shot முறை 1880 இல் பாரிஸ், ஃபிரான்ஸைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியான அல்ஃபோண்ஸ் பேர்ட்டியோன் (alphonse Bertillon) என்பவரால் தரப்படுத்தப்பட்டது. இதில் குற்றவாளியின் முகம் நேர் கோணத்திலும் பக்கவாட்டிலும் எடுக்கப்பட்டு ஒரு குறிக்கப்பட்ட பரிமாணத்தில் அருகருகே வைத்துப் பிரசுரிக்கப்படும். இந்நடைமுறை இப்போதும் தொடர்கிறது.

வெள்ளைக்கார நாடுகளில் இப்படியான mug shot சட்டங்களுக்குள் மாட்டுப் படுபவர்களில் பெரும்பாலானோர் வெள்ளையரல்லாதோராகவே இருப்பதுண்டு. இங்கு காவல்துறையினர் பாவிக்கும் கமராக்களும் எஜமான்களைப் போலவே துவேஷம் பிடித்தவையாக இருப்பதனால் இப்படங்கள் உண்மையான மனிதர்களை விட மேலும் குரூரமாக இருப்பதுண்டு. அல்லது குரூரமான கோணங்களில் இவர்கள் படம்பிடிக்கப்படுவதாகவும் இருக்கலாம். மொத்தத்தில் 17ம் நூற்றாண்டு களிமண் கிண்ணங்களுக்கும் இப்போதுள்ள mug shots இற்கும் உள்ள வித்தியாசம் மக்களில் ஏற்படுத்தும் உணர்வு நிலைகளே. முதலாவது நகைச்சுவையை ஏற்படுத்தும் இரண்டாவது அச்சத்தை ஏற்படுத்தும். கனடாவில் வெள்ளையரல்லாதோர் குற்றவாளிகள் எனத் தீர்மானிக்கப்படுவதற்கு முன்னரே அவர்களின் குரூரமான படங்களைத் தேடிப்பிடித்து காவல்துறை பத்திர்கைகளில் குற்றவாளிகள் எனப் பிரசுரிக்கும். வெள்ளையரின் மிக கவர்ச்சியான அல்லது கல்லூரி பட்டம் பெறும் படங்கள் போன்றவற்றை ‘சந்தேக நபர்’ என்ற தலைப்புகளுடன் பிரசுரிப்பார்கள். இவைக்கு mug shots என்ற அந்தஸ்து கிடைப்பதில்லை.

சரி நம்ம துரும்பர் விடயத்துக்கு வருவோம். இவர் ஒரு பிரபலமான பணக்கார, அதிகாரத்துக்கு மீண்டும் வரக்கூடிய ஒரு அரசியல்வாதி. எனவே வழக்கமாக குற்றவாளிகள் அணியும் ஒறேஞ் நிற ஆடை இவருக்கு வழங்கப்படவில்லை. அந்த வகையில் சட்டம் கொஞ்சம் வளைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் தென் மாநிலங்களில் ஒன்றான அட்லாண்டாவிலுள்ள ஃபுல்டன் கவுண்டி காவல்துறை இவருக்கு விசேட நடைமுறையென்று எதையும் பாவிக்கவில்லை என்கிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று குற்றப்பதிவுகளின் போதும் அந்தந்த இடங்களின் காவல்துறைகள் mug shots எடுக்காமல் அவரை மரியாதையோடு அனுப்பி வைத்திருந்தன. அந்த விடயத்தில் ஃபுல்டன் கவுண்டி காவல்துறை பாராட்டுக்குரியது. அட்லாண்டா மாநிலம் கறுப்பு அடிமைகளின் சந்ததிகள் பெரும்பான்மையாக வாழும் நிலம். அங்கு வெள்ளையர்கள் ஏனைய இனங்களோடு கலந்து வாழ்வதில்லை. நிறப் பிரிகை அங்கு இன்னும் கோலோச்சுகிறது. எனவே அங்கு துரும்பருக்கு நீதி கிடைத்திருக்கலாம்.

இருந்தாலும் அட்லாண்டா வாசிகள் துரும்பர் விடயத்தில் கொஞ்சம் மெத்தனமாக நடந்திருக்கிறார்கள். கறுப்பின மக்களைக் காட்டுவதுபோல அவரை அதிகம் குரூரமாகக் காட்டவில்லை. அவரே தான் தனது மூஞ்சியை குரூரமாகக் காட்டிக்கொள்கிறார். அவரோடு குற்றம் சாட்டப்பட்ட மீதிப் பேர் கொஞ்சம் நிதானமாக இருக்கிறார்கள். எவரது பக்கவாட்டுப் படங்களும் இதுவரை பிரசுரமாகவில்லை. அந்த விடயத்தில் ஃபுல்டன் கவுண்டி காவல்துறை அநியாயம் செய்திருக்கிறது. ஆனாலும் நம்ம photoshop பண்டிதர்கள் துரும்பருக்கு ஒறேஞ் உடுப்பு உடுத்தி தலைவாரி அழகுபடுத்தி mug shots எடுத்து நேராகவும் பக்கவாட்டிலும் நயம்பட அலுவல் பார்த்திருக்கிறார்கள். நன்றி தோழர்களே! இப்படியான படம் போட்ட ஒரு ரீ-சேர்ட் $36 இற்கு விற்கப்படுகிறது. யானை விழுந்தாலும் ஆயிரம் பொன்.

கடந்த நான்கு கோடேற்றத்திலும் துரும்பர் மீது வழக்குகள் தான் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இவ் வழக்குகள் கோடேறிக் குறுக்கு விசாரணைகளை எதிர்கொள்ள இன்னும் சில வருடங்கள் பிடிக்கும். அதற்குள் மனிசன் ஜனாதிபதியாகி தன்னைத் தானே மன்னித்துவிட்டு மண்டையைப் போடலாம். அல்லது அவரைப் பாவித்து ஆட்சியேறும் விவேக் ராமசாமி போன்றவர்கள் அவரை மன்னித்து விடலாம்.

என்ன இருந்தாலும் mug shots ஐ மகிமைப்படுத்தியதன் மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட மற்றும் சிறைகளில் வாடும் கறுப்பின, இலத்தீனோ மக்களுக்கு இனச்சமத்துவத்தைப் பெற்றுக்கொடுத்த துரும்பர் வாழ்க!