Entertainmentமாயமான்

Love Today (2022) | விமர்சனம்

மாயமான்

Love Today பார்த்தேன். Rating நன்றாக இருந்தது ஆனாலும் பரிச்சயமில்லாத நடிகர்கள், கவர்ச்சியில்லாத தலைப்பு என்னைப் பார்க்கத் தூண்டவில்லை. இன்று நண்பர் மூர்த்தியுடன் உரையாட நேர்ந்தபோது பல விடயங்களோடு இதுவும் தலையை நுழைத்துவிட்டது. அதானல் படத்தைப் பார்க்கவேண்டி ஏற்பட்டது. நன்றி மூர்த்தி.

Love Today என்ற பெயரில் 1997, 2004 என்று இப்போது மூன்றாவதாக 2022 இல் இது வெளிவந்திருக்கிறது. 5 கோடியில் தயாரித்து 100 கோடி உழைத்துத் தள்ளியிருக்கிறது. இத்தனைக்கும் கதை, எழுத்து, இயக்கம், நடிப்பு எல்லாம் புதியவர்கள், சத்தியராஜ், ராதிகா, யோகி பாபுவைத் தவிர.

இன்றைய சமூக வலைத்தளங்கள் ஸ்மார்ட் ஃபோன்களின் சில்மிசங்களைப் புரியமுடியாதவர்களுக்கு இப்படம் கரகரக்கும் short wave ரேடியோவைக் கேட்டதுபோல இருக்கலாம். காரணம் இப் படம் இளைய பரம்பரையினரைக் – குறிப்பாக Gen Y (Millennials), Gen Z பரம்பரையினரைக் குறிவைத்துத் தயாரிக்கப்பட்டது. வேண்டுமானால் Gen X பரம்பரையினரும் இணைந்து கொள்ளலாம். அல்லது கழுத்தில் பட்டியுடன் திரியும் IT, Teck savvy ஜாம்பவான்களுக்கும் இப்படம் இலகுவாக விளங்கலாம்.

இப்படத்தைத் தயாரித்த பிரதீப் ரங்கநாதன் ஒரு இளைஞர். இதற்கு முன்னர் ஓரிரு குறும்படங்களை எடுத்திருக்கிறார். ‘மண்டைக் காய்’ என்று நாம் சுத்தத் தமிழில் சொல்லும் வர்க்கம் அவர் என நான் உறுதியாகச் சொல்வேன். தனுஷின் நகரத்து வடிவம் பிரதீப்.

லவ் ருடே (2022) – யோகி பாபு, பிரதீப் ரங்கநாதன்

இப்படத்தில் சில சமூக விழிப்புணர்வுகளைக் கோண்டுவர பிரதீப் முனைகிறாரா அல்லது வெறுமனே போகிற போக்கில் கோடிட்டுக் காட்டுகிறாரா தெரியவில்லை. ஆனால் பல இடங்களில் அது தெரிகிறது. ஆனாலும் ஒட்டுமொத்தமாக இது நமது இளசுகள் மத்தியில் இயங்கும் இருண்ட காதல் உலகத்தை வெளிச்சமிட்டுக் காட்ட முனைகிறது. அந்த உலகத்தின் பிரஜைகளால் தான் அதைச் செய்ய முடியும். பிரதீப் அங்கு வாழ்ந்தவராகவே இருக்க மூடியும்.

இப்போது வரும் பல தொலைக்காட்சி விளம்பரங்கள் (குறிப்பாக கனடாவில்) பல வார்ப்படச் சிந்தனைகளை (sterotypical thinking) நொருக்குபவையாக உள்ளன. அவை விளம்பரங்களேயாயினும் வலிந்து புகுத்தப்பட்ட காட்சிகளாகவிருக்கும். உதாரணத்துக்கு குடும்பத் தலைவர் கறுப்பினத்தவராகவும், மனைவி வெள்ளை இனததவராகவும் பிள்ளை கலப்பினத்தவராகவும் இருக்கும் இப்படி இதர இனத்தவர்களையும் ஒரே பாலினத் தம்பதிகளையும் இவ்விளம்பரங்கள் காட்டும். விளம்பரப்படுத்தப்படும் பொருளுக்குச் சம்பந்தமில்லாவிடினும் இச் செருகல் சமூக விழிப்புணர்வைக் கொண்டுவரும் முயற்சி எனவே பார்க்கப்படவேண்டும். வெறுப்பிற்கு மூலம் அறியாமை (ignorance). பல்கலாச்சார நாடுகளில் பல்லின சமத்துவத்தைப் பேணுவதற்கு இனம், பால் பற்றிய விழிப்புணர்வுகளைத் திணிப்பது அவசியம் என யாரோ ‘ரூம் போட்டு’ யோசித்திருக்கிறார்கள்.

இந்தியாவின் மறைந்த பிரபல வங்காள இயக்குனர் சத்தியஜித் ராய் எப்போதும் இந்தியாவின் வறுமையை உலகிற்குக் காட்டி வியாபாரம் செய்கிறார் என்றொரு குற்றச்சாட்டு ஒரு காலத்தில் இருந்தது. அவர் ஒரு சமூக செயற்பாட்டாளர் இந்தியாவின் யதார்த்தத்துக்கு கலை வடிவம் கொடுத்தார். அதே வேளை தமிழ்நாட்டின் ஹீரோ இன்னும் convertible வாகனத்தில் ஹீரோயினுடன் சுற்றியடித்து டூயட் பாடிவிட்டு கிளப்களில் ரொக் அண்ட் றோல் இசைக்கு ஆடிப்பாடிக்கொண்டிருந்தார். அது யதார்த்தமில்லாவிடினும் இந்த இரண்டு சம்பவங்களும் இந்தியாவைத் தெரியாதவர்களின் மனங்களில் எப்படியான பிம்பத்தை வளர்த்திருக்கும்? இதைத் தான் பின்நாட்களில் சந்தைப்படுத்தல் (branding / marketing) எனப் பலவிதமான சோடிப்புகளுடன் எமது காதுகளில் செருகினார்கள். தீபா மேத்தா போன்றவர்கள் இதைவிட ஒரு படி மேலே போய் இந்தியாவில் இன்னும் காலூன்றாத மேற்குலக கலச்சார வடிவங்களை மட்டும் சுட்டிக் காட்டி இந்தியா இன்னும் முன்னேறவில்லை எனத் தம்பட்டம் அடித்துப் பணம்பண்ண முயற்சித்தார்கள். ஆனால் அமெரிக்காவை இந்திய IT படையணி முற்றுகையிட்ட பிறகு நிலைமை மாறிவிட்டது. இட்லியும் சாம்பாரும் அமெரிக்க சத்துணவின் தரம் காட்டிகளாக நிர்ணயம் பெற்றதுபோல் தமிழ்நாட்டின் தொழில்நுட்பம் தர நிர்ணயத்தோடு கூடவே வாழ்க்கைத் தரத்தையும் அமெரிக்கச் சம நிலைக்கு உயர்த்தி வருகிறது. Love Today போன்ற படங்கள் மூலம் பிரதீப் போன்ற அடுத்த தலைமுறையினர் சத்தியஜித் ராயின் பார்வையிலோ அல்லது தீபா மேத்தாவின் பார்வையிலோ போல் இந்தியா இல்லை இது வேறு இந்தியா எனக்கூறி மேற்கின் அறியாமையைத் தகர்க்கிறார்களா? -இந்த விடயத்தில் இந்தியா என்பதை விட தமிழ்நாடு எனக் கூறினால் மிகப் பொருத்தமாக இருக்கும் (இப்போதைக்கு).

இந்த விடயத்தில் தளபதி விஜய், ரஜினி போன்றவர்கள் சிலவேளைகளில் கிராபிக்ஸ்கள் மூலம் காட்டும் அதிரடி நடவடிக்கைகளை வைத்து ஒரு மேநாட்டான் இந்தியாவை ஒருபோதும் எடைபோடப் போவதில்லை. கிராஃபிக்ஸை அவன் பாவிக்கத் தொடங்கியதே குறைந்த செலவில் மக்கள் மனங்களில் பிரமாணடமான பிம்பங்களை எழுப்புவதற்கு. எனவே அதன் மாயா ஜாலம் அவனுக்கு இலகுவாகப் புரியும். ஆனால் பிரதீப், மாதவன் (Rocketry) போன்றோரது படங்கள் சமகால இந்தியாவின் யதார்த்தத்தைக் காட்டுகின்றன. Image building என்ற இந்த சாமர்த்தியமும் ஒரு கலாச்சாரத்தையும் அதைப் பின்பற்றும் மக்களையும் மற்றவர்கள் மதிப்பதற்கு வழிகோலுகின்றன.

இந்த இடத்தில் இந்த விடயமும் சொல்லப்படுதல் பொருத்தமாகவிருக்கும் என நினைக்கிறேன். ஈரானிய நாட்டவர் ஒருவர் கனடாவில் ஒரு தமிழரின் பணியகத்தில் கட்டுமான வேலைக்குப் போயிருந்த்போது சொன்னாராம் “ஈரானில் இலங்கையர்கள் பெரும்பாலும் எங்களது கூலி வேலைகளையே செய்வார்கள். இங்குதான் இலங்கயர் ஒருவருக்கு நான் கூலி வேலை செய்யவேண்டியிருக்கிறது” என்று. இதுதான் நான் மேலே கூறிய image building. பிரதீப், மாதவன் போன்ற இளைய தலைமுறையினர் இந்தியாவின், பெரும்பாலும் தமிழ்நாட்டின், image builders ஆக இருக்கிறார்கள். இவர்கள் கட்டும் இந்தியாவின் பிம்பங்களை வைத்தே அமெரிக்க, கனடிய தெருக்களில் இந்தியர்கள் மதிப்பீடு செய்யப்படுவார்கள். Love Today படத்தின் ஆரம்பம் இப்படியான theme இல் ஆரம்பிக்கிறது எனவே நான் பார்த்தேன்.

ஒரு ஸ்மார்ட் ஃபோனைக் குறியீடாக வைத்து கதை நகர்கிறது. சமூக வலைத்தளங்களின் ஏகோபித்த காவியாக இருப்பதனால் இந்த சமூக வலைத்தளங்களின் இம்சைகளுக்கு ஸ்மார்ட் ஃபோன் உருவகமாக அல்லது குறியீடாக அமைகிறது. பாவம் ஸ்மார்ட் ஃபோன். கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களில் உலகின் அறிவியற் பாய்ச்சலுக்கும் அழிவியற் பாய்ச்சலுக்கும் சம அளவில் உதவி செய்து வருவன சமூக வலைத்தளங்கள். குறிப்பாக பல காதலர்களைச் சேர்த்து வைத்ததற்கும் பல காதலர்களது வாழ்க்கையைச் சிதைத்தமைக்கும் சமூக வலைத்தளங்கள் பொறுப்பேற்க வேண்டும். இப்படியொரு காதல் கதையை (spoiler alert) பின்னணியாக வைத்தே Love Today (2022) பின்னப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட் ஃபோன்களின் தொழில்நுட்பத்தையும், அதன் இயங்கு தளங்களையும் வெகுவாக அறிந்து வைத்திருக்கும் தமிழ்நாட்டின் புழுத்துப்போன IT துறை ஒரு அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கியிருக்கிறது. அது தனக்குள் உருவாக்கிவரும் கலாச்சாரத்தை முதிர்ந்த தலைமுறையினர் (பெற்றோர்) அறியாமல் இருக்கவும், தாங்கள் செய்யும் சில்மிசங்களை மறைக்கவும் எனப் பலவகையான உத்திகளைக் கையாள்கிறது. காதல், மோதல், கதை கட்டுதல், பழிவாங்குதல் எனப்பலவகையான சில்மிசங்களையும் நொடிப்பொழுதில் காவிச்சென்று உரியவர்களிடம் சேர்ப்பது இந்த ஸ்மார்ட் ஃபோன். பிரதீப் ரங்கநாதன் இச்சமூகத்தில் வளர்ந்தவராக இருக்கவேண்டும். இப்படியொரு காதல் கதையை எடுத்துப் பின்னிய படமே Love Today (2022).

பாலச்சந்தரின் (மற்ற) ‘பொம்மை’ படத்தைப் போல Love Today (2022) ஒரு Smart Phone ஐக் குறியீடாக வைத்து ஆரம்பிக்கிறது. ஒரு ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பு நிலையத்தில் றொபோட்டுகள் தயாரிப்பில் ஈடுபடுவதையும் இறுதியில் ஃபோன்கள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு ‘எயர் இந்தியா’ விமானத்தில் வெளிநாடுகளுக்கு பறந்து போவதாகவும் காட்டப்படுகிறது. 35,000 இந்திய ரூபாய்களைக் கொடுத்து உத்தமன் பிரதீப் (ஹீரோ) ஒரு ஃபோனை வாங்கி அவரது காதலி நிகித்தா (ஐவானா) வுக்குப் பரிசளிப்பதும் அது நிக்கித்தாவின் தகப்பன் வேணு சாஸ்திரிக்கு (சத்யராஜ்) தெரிய வந்ததிலுமிருந்து ஆரம்பிக்கிறது கலாட்டா.

இளையவர்களுக்கு இக் கதை புதியதல்ல. இக்கதை அவர்களது வாழ்வில் எப்போதாவது ஒரு வகையில் குறுக்கிட்டிருக்கும். வலைத்தளங்களின் கட்டற்ற சுதந்திரம் எப்படியெல்லாம் அரும்பும் இதயங்களில் சந்தேகங்களையும் போலி ‘நிஜங்களையும்’ வளர்த்து பயிர்களை முளைகளிலேயே அழியச் செய்கிறது என்பதை தொழில்நுட்பத்தின் சாத்தியங்களையும், சாகசங்களையும் புட்டுப் புட்டு வைப்பதன் மூலம் பிரதீப் ஒரு சமூக செயற்பாட்டைச் செய்கிறார். ஆனால் துர்ப்பாக்கியமாக இப்படம் அவரது பரம்பரையினரை மட்டுமே இலக்கிட்டுத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பெரியவர்கள் வழக்கம்போல ‘மூதுரை’ வழங்குவதற்கே பாவிக்கப்படுகிறார்கள். எனவே விஜய், ரஜினி ரசிகர்களுக்கு இது புரியாமல் போனால் ஆச்சரியப்படத் தேவையில்லை.

உள்ளே போனால் படத்தில் பல காட்சித் தெரிவுகள், பின்புலங்கள் மேற்குநாடுகளின் நகரங்களைப் பிரதிபலிக்கும் தமிழ்நாட்டைக் காட்டுகின்றன. அது மட்டுமல்லாது தமிழ்நாட்டின் மத்தியதர வர்க்கத்தில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை ஸ்மார்ட் ஃபோன்கள் பற்றித் தெரிந்துவைத்திருப்பது யதார்த்தம். படம் அதைப் பிரதிபலிக்கிறது.

வசதியான வேணு சாஸ்திரி (சத்தியராஜ்) குடும்பத்தின் மூத்த பெண் நிகித்தா (ஐவானா). நிகித்தாவைக் காதலிக்கிறார் பிரதீப். அவர் என்ன சாதியோ ஆனால் பிராமணரல்லர். ஸ்மார்ட்ஃபோனை ஸ்மார்ட்டாகப் பாவிக்கத் தெரிந்தவர் சாஸ்திரி. காதலர்களின் உரையாடலைத் தனது திறமையால் ஒட்டுக்கேட்டுவிடுகிறார். காதல் பிடிபட்டதும் பிரதீப்பை வீட்டுக்கு அழைத்து நிக்கித்தாவினதும் பிரதீப்பினதும் ஸ்மார்ட் ஃபோன்களை மாற்றி இருவர் கைகளிலும் கொடுத்துவிட்டு 24 மணித்தியாலங்களில் ஒருவரையொருவர் அறிந்துகொண்ட பின்னர் மட்டுமே திருமணம் என அறிவித்து விடுகிறார். இதனால் இருவரும் தமது பிரத்தியேக வாழ்வில் நடந்துகொண்ட முறைகள், பழைய காதல்கள் நட்புகள் என அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. பிரச்சினையும் அங்குதான் ஆரம்பிக்கிறது. மிகுதி வெள்ளித்திரையில் அல்லது சின்னத்திரையில் பாருங்கள்.

இப்படத்தில் பிரதீப் இந்திய சாதியமைப்பையும் தொட்டுக்காட்டுகிறார். ஆனால் தீர்ப்புச் சொல்லாமல் குறியீட்டுடன் நழுவுகிறார். கதையோடு சம்பந்தமில்லாத ஆனால் பக்கவாட்டுக் குறியீடுகளின் (காட்சிகளின்) மூலம் பாத்திரங்களின் குணாதிசயங்களைக் காட்ட முற்படுவது வரவேற்கத்தக்க உத்தி. வேணு சாஸ்திரியின் வீட்டிற்கு தண்ணீர்க் கலனுடன் வரும் ஒருவர் வீட்டு வாசலினுள் வராமல் வெளியே நிற்பதும் அவருக்கு சரியான பணத்தைக் கொடுக்க சாஸ்த்திரி சில்லறை தேடுவதும் சாஸ்திரியின் கஞ்சக் குணத்தையும் சாதித் திமிரையும் காட்டுவதற்காக இயக்குனர் அக்காட்சியைச் செருகியிருக்கலாம். ஆனால் தண்ணீருடன் வந்தவரை ஒரு கரிய உடம்புடன் காட்டுவதன் மூலம் அவர் ‘சாதியில்’ குறைந்தவர் அல்லது பிராமணர் அல்லாதவர் எனக் குறியீடாகக் காட்ட முனைவது இயக்குனர் இன்னமும் தனது வார்ப்படச் சிந்தனையில் தான் உள்ளார் என்பதையே காட்டுகிறது. இயக்குனர் சேரன் போன்ற திராவிடக் காவலர்களின் படங்களிலும் நிலைமை இதுதான்.

இப்படம் பெண்களை இழிவுபடுத்துகிறது எனப் பெண்ணீயவாதிகள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது. பொதுவாக உலகம் முழுவதுமே சமூக வலைத்தளங்களினால் பாதிக்கப்படுபவர்களில் அதிகம் பேர் பெண்கள் தான். அது இந்தியாவுக்கும் மட்டும் பொருந்துமென்பதில்லை. இக் கதையிலும் வட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்களை மிக மோசமாகப் பாவிக்கும் ஆண்களை அம்பலப்படுத்துவதற்காய் அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களைக் காட்டுவது அப்த்தமெனச் சிலர் ஆர்ப்பரிக்கிறார்கள். காதல், காமம், பலவீனம் ஆகியவற்றின் ஒரு இருண்ட உலகத்துக்குள் இப்படம் விளக்குடன் அலைகிறது. அது பெண்களை மட்டும் நோக்கி ஒளிர்ந்ததா? கூடவே ஆண்களையும் எரித்ததா? பார்ப்பவர்கள் முடிவு கூறட்டும்.

யோகி பாபு என்றொரு பாத்திரத்தின் மூலம் பக்கவாட்டுக் கதையொன்றையும் இயக்குனர் நகர்த்துகிறார். அதுவும் ஸ்மார்ட் ஃபோனை மையமாகக் கொண்டதுதான். ‘மறைப்பதெல்லாம் கெட்டவையாக இருக்க வேண்டியதில்லை” என்ற தத்துவத்தோடு கிளைக்கதையொன்றும் நகர்கிறது. அவசியமற்ற இடைச்செருகல்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு சிறு பையன் ஒரு மாவிதையை மண்ணில் புதைத்துவிட்டு அது முளைக்கிறதா என அடிக்கடி கிளறிப் பார்ப்பான். முடிவில் அது முளைத்து மூன்று இலைவிட்டு வளர்வதை இயக்குனர் காட்டுகிறார். அச்சிறுவன் பின்னர் பிரதீப் ஆகிறார். அம்மா ராதிகா மூதுரை கூறுகிறார். படம் முடிகிறது. சமூக வலைத்தள்ங்களின் பாவத்தைச் சுமக்கும் ஸ்மார்ட் ஃபோன் மூலம் ஒரு நல்லுரையைச் சொல்ல முனைந்திருக்கிறார் பிரதீப். பாலச்சந்தர் ‘பொம்மை’ படம் மூலம் காட்டிய பழைய உத்தி தான். ஆனால் புதிய பானையில் புதிய தலைமுறைக்கு வித்தியாசமாக வழங்கப்பட்டிருக்கிறது. பார்க்கலாம் 7..0/10.