ColumnsUS & Canadaகனடா மூர்த்தி

Just-In: கரி பூசப்பட்டது யாருக்கு?

கனடா மூர்த்தி எழுதும் தொடர்: ‘கெஞ்சாதே …05’
கனடா மூர்த்தி

கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஏற்கனவே மொத்தம் இரண்டு முறை தெருவிழாவிற்கு வந்து சிறப்பித்திருந்தார். (நுங்கு குடித்தார், கொத்துரொட்டி போட்டார், சிலம்பம் ஆடிக்காட்டினார்.) அதனால், இந்த ஆண்டு தெருவிழா நடைபெற்றபோது, பலரும் ஆவலுடன் கேட்ட கேள்வி: “இந்தமுறையும் ஜஸ்ரின் ட்ரூடோ வருவாரே..??” 

கேட்டதற்கு காரணம் உண்டு. ஒக்டோபர் 21 பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. லிபரல் கட்சி சென்ற முறைபோல பெரும் பான்மையை பெறுவது சிரமம் என கருத்துக் கணிப்புக்கள் காட்டுகின்றன. அதனால் தனக்காகவும், தன் கட்சிக்காகவும் பிரதமர் ஜஸ்ரினின் தெருவிழா வருகையை லிபரல் கட்சி எம்பியான கரி ஆனந்த சங்கரி ஒழுங்கு செய்திருப்பார் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. 

‘கரி பூசிய பெருமான்’


CTC கட்சி சார்பற்று இயங்கும் ஒரு அமைப்பு. ஆனாலும் தனிப்பட்ட அளவில் லிபரல் கட்சியின் ஆதரவாளர்களாக இருக்கும் பலர் CTC யின் உள்வீட்டுப் பிள்ளைகளாக உலாவருவதால் (கரி ஆனந்தசங்கரி உட்பட), CTC யானது  லிபரல் கட்சிக்கு ஒரு பக்க சார்பாக இயங்கி ஆதரவு தருகிறது என நம் ஆய்வாளர்களில் பலரும் கூறுவதுண்டு. போதாக்குறைக்கு, ‘கனடிய லிபரல் கொங்கிரஸ்’ என்றும் ஒருசிலர் CTC யினை தொடர்ந்து கிண்டல் அடிக்க, இம்முறை அவர்களில் பலரது முகத்திலும் ‘அவர்’ கரி பூசிவிட்டார். இனி CTC கனடிய லிபரல் கொங்கிரஸ் இல்லயாக்கும். 🙂

தமிழர் திருவிழாவில் கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ


அந்தக் கரி ஒருபுறமிருக்க, ஜஸ்ரின் தன் முகத்தில் கரி பூசிய  சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதப்படும் இந்நேரத்தில் – பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் இன்றைய நிலையில்  – ஜஸ்ரின் தனது முகத்தில் கரி பூசியவாறு நிற்கும் புகைப்படங்கள் வெளிவந்து, பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளன. 

உண்மையில், இன்றைய பிரதமர் 2001ம் ஆண்டு – அரசியலில் முதிர்ச்சி அடையாத நிலையில் – செய்த விளையாட்டு அது. ஆபிரிக்கர் போல தோற்றமளிக்க கருமை நிறத்தைப் பூசிக் கொண்டும், இந்தியர் போலத் தோற்றமளிக்கத்தகக்க பழுப்பு நிறத்தை பூசிக்கொண்டும் 2001ம் ஆண்டு வாக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவை. ஆனால் இன்று விவாதப் பொருளாகிக் கொண்டுள்ளன. 


தான் “செய்தது பிழை” என ஜஸ்ரினும் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் சீற்றம் கொண்டிருக்கின்றன. முகத்தில் கரி பூசியதன்மூலம் ஜஸ்ரின் (1) பொறுப்பற்றவர், (2) இனவாத நடவடிக்கைகளுக்குத் துணைபோய்விட்டார் என்று அவை தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றன. இன்னும் சொல்லப்போனால், அரசியல், பொருளியல், சுற்றுச்சூழல், பாதுகாப்புக் கொள்கைகளை விவாதிப்பதை விடுத்து நிறவெறி பற்றியே தேர்தல் கால விவாதங்கள் தொடர்கின்றன.  (அரசாங்கம் செய்திருக்கும் பிரச்சனைகளை மக்கள் கவனிக்காமலிருப்பதற்காகவும், வாக்காளர் கவனத்தை திசை திருப்பவும், லிபரல் கட்சியே இந்தச் சர்ச்சையை ரகசியமாகக் கிளப்பி அதன் பின்னால் இருக்கிறதோ என்ற ஹொலிவூட் சினிமா பாணிச் சந்தேகமும் பலருக்கு உண்டு.)


‘ஜஸ்ரின் மன்னிப்புக் கேட்ட பிறகு இந்த சம்பவத்தை மறந்துவிட வேண்டியதுதானே.. ஏன் இவ்வளவு சீற்றம் ஏற்பட்டுள்ளது?” என்றுதான் உடனடியாக நமது மனதில் தோன்றும். தோன்றியது. ஆனால்.. நிறவெறி குறித்து தீர்க்கமான கருத்தியல் எதிர்ப்பை மனதில் கொண்டோர் ஜஸ்ரினின் புகைப்படங்கள் குறித்து சீற்றம் கொள்வதற்கு உயரிய காரணம் உண்டு. காரணத்திற்கு ஒரு பெரிய பின்புல வரலாறும் உண்டு. 

அமெரிக்காவில் கறுப்பின மக்களை அடிமைகளாக வைத்திருந்தமை குறித்த வரலாறு நமக்குத் தெரியும். 1619ம் ஆண்டுகளில் ஆபிரிக்கக் கறுப்பர்களை அடிமைகளாக அமெரிக்காவிற்கு இழுத்து வந்தார்கள். மிருகங்கள் போல அவர்கள் கடல்தாண்டிக் கொண்டுவரப்பட்டார்கள். எப்படி மிருகங்கள் பண்ணை வேலைகளுக்கும், வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுமோ அவ்வாறே கறுப்புத்தோல் ஆபிரிக்க மனிதர்களும் உபயோகிக்கப்பட்டு வந்தனர். கால்களுக்கு விலங்குகள் இட்டு, சவுக்கடி மிருகங்களுக்கு செய்வதுபோல கறுப்புத்தோல் மனிதர்கள் வளர்க்கப்பட்ட அந்தச் சோகவரலாறுபற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். 
வெள்ளையர் இனத்திலிருந்து மனிதாபிமானிகளும், அரசியல் விழிப்புணர்வு கொண்டோரும் இதற்தெதிராக குரல் கொடுத்தும், 1864ம் ஆண்டுவரை அமெரிக்க அரசியல் அமைப்பிற்கான 13வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு அடிமை முறை நீக்கப்படும் வரை இந்தக் கொடுமைகள் அமெரிக்க மண்ணில் ஒரு குற்றமாகக் கருதப்படவில்லை. என்னதான் மாற்றங்கள் நடந்தாலும், கறுப்பின மக்கள் இன்றுவரை நிறவெறிக்கு முகம் கொடுத்துவருவது நமக்கெல்லாம் தெரிந்த விடயம்தான். 


வெள்ளையர் இனத்திலிருந்து மனிதாபிமானிகளும், அரசியல் விழிப்புணர்வு கொண்டோரும் இதற்தெதிராக குரல் கொடுத்தும், 1864ம் ஆண்டுவரை அமெரிக்க அரசியல் அமைப்பிற்கான 13வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு அடிமை முறை நீக்கப்படும் வரை இந்தக் கொடுமைகள் அமெரிக்க மண்ணில் ஒரு குற்றமாகக் கருதப்படவில்லை. என்னதான் மாற்றங்கள் நடந்தாலும், கறுப்பின மக்கள் இன்றுவரை நிறவெறிக்கு முகம் கொடுத்துவருவது நமக்கெல்லாம் தெரிந்த விடயம்தான். 

பிளாக் ஃபேஸ்” (Black Face)  என்பது மனிதநேயமயமாக்கல், மறுக்கப்பட்ட குடியுரிமை மற்றும் அரச வன்முறையை மன்னிக்கவும், நியாயப்படுத்தவும் வருகின்ற ஒரு வரலாற்றின் ஒரு பகுதியாகும். வன்முறைக்கான தார்மீக மற்றும் சட்டபூர்வமான நியாயப்படுத்தலின் ஒரு பகுதியாக வெள்ளையர்கள் கறுப்பு முகத்தை (மற்றும் அதன் விளைவாக மனிதநேயமயமாக்கலை) பயன்படுத்துகின்றனர். “பிளாக் ஃபேஸ்” (Black Face)  எண்ணப்பாடானது, கறுப்பின மக்கள் முழுமையாக மனிதர்கள் அல்ல என்று கற்பனை செய்ய அனுமதிக்கிறது. வன்முறை மற்றும் பிரிவினை பகுத்தறிவுக்கு இது உதவுகிறது. கறுப்பின மக்கள் ஆபத்தான குற்றவாளிகள் அல்லது சோம்பேறி வேலையற்ற மக்கள் என்பது பற்றிய இனவெறி கருத்துக்களை வலுப்படுத்த “பிளாக்ஃபேஸ்” (Black Face) இன்னும் உதவுகிறது

பேராசிரியர் டேவிட் லியோனார்ட்


இப்போது முகத்தில் கரிபூசிய விசயத்திற்கு வருவோம்: 1800களின் முற்பகுதியில் மினிஸ்ட்ரெல்  Minstrel show, or minstrelsy என்ற வகை மேடை நிகழ்ச்சி பிரபலமாக இருந்து வந்தது. இந்த வகை நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்களை நக்கலடிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கலைவடிவங்கள் ஆகும். நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அவை கொண்டிக்கும். ஆப்பிரிக்க வம்சாவளிகளை சோம்பேறிகளாக, மூட நம்பிக்கை கொண்டவர்களாக, மக்குகளாக, முசுப்பாத்திக்காரர்களாக காட்டும் கலை நிகழ்ச்சிகள் அவை. 

‘சவுக்கடிபட்ட தழும்புகளுடன்…. ‘ -அமெரிக்க வரலாற்றின் கருமையான காலம்


வெள்ளை நடிகர்கள் தமது முகத்தில் கருப்பு வண்ணம் பூசி “பிளாக்ஃபேஸ்” (Black Face) ஆக்கி வைத்துக் கொண்டு மேடையில் தோன்றுவார்கள். ஆபிரிக்க வம்சாவளிகள் குறித்த வெள்ளையரின் பார்வையிலேயே அக்கலைப்படைப்புக்களின் கருத்துகள் இருக்கும். 
“பிளாக் ஃபேஸ்” (Black Face) கறுப்பின மக்கள் குறித்த  இழிந்துரைக்கும் கேவலமான ஸ்டீரியோடைப்கள் வகையறாப் பார்வைகள் வெள்ளையரிடம் மென்மேலும் வளர்ச்சியடைய இந்த Minstrel show க்கள் உதவி செய்தன. கறுப்பினத்தவரைக் குறித்து மனதில் ஒரு வகையான திட்டமிட்ட கேலிச்சித்திரம் ஏற்பட அன்றைய “பிளாக்ஃபேஸ்” (Black Face)  நடவடிக்கைகளும் காரணம் என்பது இன்று வெள்ளிடைமலை. வெள்ளையினத்தவர் முகத்தில் கறுப்புவண்ணம் பூசி மற்றைய இனத்தவரை உருவகிக்கும் முறைமை கேவலமான செயல் என  இன்றைய காலகட்டத்தில் பார்க்கப்படுவதற்கு இதுவே காரணம். 


“பிளாக்ஃபேஸ்” (Black Face)  என்பது மனிதநேயமயமாக்கல், மறுக்கப்பட்ட குடியுரிமை மற்றும் அரச வன்முறையை மன்னிக்கவும், நியாயப்படுத்தவும் வருகின்ற ஒரு வரலாற்றின் ஒரு பகுதியாகும். வன்முறைக்கான தார்மீக மற்றும் சட்டபூர்வமான நியாயப்படுத்தலின் ஒரு பகுதியாக வெள்ளையர்கள் கறுப்பு முகத்தை (மற்றும் அதன் விளைவாக மனிதநேயமயமாக்கலை) பயன்படுத்துகின்றனர். “பிளாக்ஃபேஸ்” (Black Face)  எண்ணப்பாடானது, கறுப்பின மக்கள் முழுமையாக மனிதர்கள் அல்ல என்று கற்பனை செய்ய அனுமதிக்கிறது. வன்முறை மற்றும் பிரிவினை பகுத்தறிவுக்கு இது உதவுகிறது. கறுப்பின மக்கள் ஆபத்தான குற்றவாளிகள் அல்லது சோம்பேறி வேலையற்ற மக்கள் என்பது பற்றிய இனவெறி கருத்துக்களை வலுப்படுத்த “பிளாக்ஃபேஸ்” (Black Face) இன்னும் உதவுகிறது.” என்று வாஷிங்டன்  மாநில பல்கலைக்கழகத்தின் ‘ஒப்பீட்டு இன ஆய்வுகள் மற்றும் அமெரிக்க ஆய்வுகள்’ பேராசிரியர் டேவிட் லியோனார்ட் தனது சமீபத்திய கட்டுரை ஒன்றில் கூறுகிறார். 


“வெள்ளையின நடிகர்கள் தங்கள் முகத்தை கருப்பு நிறமாக ஒப்பனை செய்ததற்கான வரலாறு சேக்ஸ்பியரின் ஓதெல்லோ நாடகங்களிலேயே இருக்கிறது”  உண்மை. ஆனால் ஒதெல்லோ பாணி ஒப்பனையால் எழுப்பப்படும் கருத்துருவாக்கம் வித்தியாசமானது.அது “பிளாக்ஃபேஸ்” (Black Face)  உருவாக்குவதுபோன்ற கேலிச்சித்திரம் அல்ல என்பதும் புரிந்து கொள்ளப்படவேண்டும். ‘காந்தி’ திரைப்படத்தில் நடிகர் பென் கிங்ஸ்லி முகத்தில் சற்று அடர்த்தியான ஒப்பனை செய்ததற்கே – பென் கிங்ஸ்லியின் தந்தை ஒரு குஜராத்தி என்பது தெரிந்தும் – எதிர்க்குரல்கள் எழும்பின என்பதையும் இவ்விடத்தில் அடிக்கோடிடலாம். இனம் குறித்த கேலிச்சித்திரம் உருவாக்கப்படுவது மேடை, திரைப்படங்களாக இருந்தால் என்ன, விருந்துபசாரங்களாக இருந்தாலென்ன.. “நக்கீரா… குற்றம் குற்றமே…”


ஜஸ்ரினின் முகப்பூச்சு புகைப்படம் எனக்கு பல விடயங்களை கண்டுணர உதவியிருக்கிறது. ஜஸ்ரின் செய்தது ஒரு விளையாட்டு என்று ஆரம்பத்தில் நான் நினைத்தபோதும், “விடயம் புரிந்த பலரும் ஏன் எதிர்க்கிறார்கள்?”; என்ற கேள்விக்கு பதில் தேடியதால் “ஜஸ்ரின் செய்தது தவறுதான்” என ஜஸ்ரின்போலவே உறுதியாக ஒத்துக் கொள்ள இப்போது மனம் வந்திருக்கிறது. பிரதமர் என்றும் பாராமல் ஜஸ்ரின் விட்ட தவறை வெளிக் கொண்டு வந்திருக்கும் மீடியாக்கள் மீதும் மரியாதை வருகிறது.
ஜஸ்ரின் ஒரு தலைவர் என்பதால் அவர் எப்போதோ செய்ய விளையாட்டை மறந்து மன்னித்து விட வேண்டுமா? இந்த இடத்தில் ஒரு கேள்வி: “லிபரல்கட்சியில் போட்டியிட நியமனம் கோரிய ஒரு அவெரேஜ் வெள்ளையின வேட்பாளர் இப்படிச் செய்திருந்து அதை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தால், வேட்பாளர் கெஞ்சினாலும், மன்னிப்புக் கேட்டாலும் அவரை தன் கட்சியில் போட்டியிட ஜஸ்ரின் ட்ரூடோ அனுமதித்திருப்பாரா?”


தமிழர்களான நாம் இன்னும் இந்த நிறவெறி, இனவெறி குறித்த ‘கேலிச்சித்திரங்கள்’ குறித்த சரியான புரிந்துணர்வுகள் குறைந்த சமூகமாகவே தென்படுகிறோம் என்பதையும் நாமே முதலில் ஒத்துக் கொள்ளவேண்டும். அதில் நானும் அடக்கம். ஒரு சமூகமாக நம்மிடம் பல பாசாங்குத்தனங்கள் இருக்கின்றன. ‘The Party’ என்ற ஆங்கிலப் படத்தைப் பார்த்தபோது,  Peter Sellers  இந்தியராக மண்நிற மேக்கப் போட்டுக்கொண்டு நகைச்சுவையாக நடித்தது அப்போது பிடித்திருந்தது. செந்தில்-கவுண்டமணி “ஜூம்பலக்கடி ஜூம்மா.. ஆபிரிக்க நாயே..” என ஆபிரிக்கர்ளை நக்கலடிக்கும்போது நமக்கு எதுவும் உறைப்பதில்லை. சிவாஜி கணேசன் “நீயென்ன மாமனா மச்சானா மானங்கெட்டவனே” என்று ரோஸ் பவுடர் அப்பிய ‘ஈஸ்ட்மென்’ கலர் வெள்ளைக்காரத்துரையிடம் வீர வசனம் பேசும்போது தமிழ் மன்னனின் வீரத்தை மனதில் கண்டுதான் புல்லரிக்கிறோம். (ஆனால் மலையாள நடிகர் ஜெயராம் ஒருமுறை “என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடிச்ச தமிழிச்சி.. எருமை மாதிரி இருப்பாள்.”  என்றபோது இனமானம் போய்விட்டதாகக் குமுறினோம்.) 


ஆக மொத்தம் இந்தத் தேர்தலின்போது வந்திருக்கும் இந்த “பிளாக் ஃபேஸ்” (Black Face)   சர்ச்சை மிக முக்கியமான பிரச்சனையான நிறவெறி குறித்த தேசிய விவாதத்தை கனடா அளவில் தூண்டுகிறது. இன்னும் தூண்டக்கூடும். அதனால் அதை ஏன் தொடர்ந்து விவாதிக்கக்கூடாது? விவாதிப்போம். விவாதங்கள் ‘மனதிற்கானவை’யாகக் குறுகாமல் ‘புத்திக்கானவை’யாக மாறட்டும்!இன்னும் பெரிய அளவில் அவை நடக்கட்டும்!! CBC போன்ற பெரும் ஊடகங்கள் அவற்றைத் தொடருகின்றன. ஜஸ்ரினின் உருவாக்கித் தந்திருக்கும் “பிளாக் ஃபேஸ்” (Black Face)  எதிர்ப்பலை தொடரட்டும். தீப்பொறி நெருப்பானாலும் பரவாயில்லை.


“18 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமரின் செய்த மேக்கப் தேர்வினைவிட பேசுவதற்கு முக்கியமான பிரச்சினைகள் உள்ளன” என்றும் சில அரசியல் பண்டிதர்கள் இப்போது வாதாடி இந்த நெருப்பை அணைக்க முயல்கிறார்கள். முக்கியமான பிரச்சினைகள் பல உள்ளனதான்.. யார் இல்லை என்கிறார்கள்? தாராளமாக பேசலாமே.. அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கான ஒரு ஆரோக்கியமான விவாதத்தை தடுத்துவிட வேண்டுமா என்ன?


ஆனால், இங்குதான் நம் ‘நடுநிலையாளர்’களிடம் ஒரு பாசாங்குத்தனத்தைக் காண முடிகிறது. “பிளாக் ஃபேஸ்” (Black Face) க்குப் சர்ச்சைக்குப் பதிலளிப்பதாக பாவ்லா பண்ணிக் கொண்டு  முந்தைய கொன்ஸவேடிவ் அரசாங்கத்தின் கொள்கைகளை சொல்வதோ (நிறவெறியாம்) அல்லது தனது கட்சியின் இருப்பினை தக்க வைப்பதற்காக ஜஸ்ரின் அரசாங்கம் செய்துவரும் நிறவெறி சாரா நடவடிக்கைகளைப் பட்டியல் இடுவதோ எந்த வகையில் நியாயம்? (வேடிக்கை என்னவென்றால் முந்தைய அரசாங்கம் செய்ததாக சிலர் குற்றம் சாட்டும் நிறவெறிச் சட்டங்களை ஜஸ்ரின் அரசு முற்றுமுழுதாக நீக்கியதா என்பது குறித்து நியாயவான்கள் எவரும் எங்கும் பேசுவதில்லை.) அறம் பேசும் தாராளமய பேராசிரியர்கள்கூட இது குறித்து மௌனம் சாதிக்கிறார்கள். என்னே பாசாங்குத்தனம்!


ஆக மொத்தமாக பல பாசாங்குத்தனங்கள் பற்றி தேசிய அளவில் விவாதிக்க இந்த “பிளாக் ஃபேஸ்” (Black Face)   விவகாரம் கனடாவிற்கு உதவுகிறது. இதனால் வருகின்ற  பல விவாதங்கள் வெள்ளை இனத்தவரை வெள்ளை இனத்தவர்களே கேள்வி கேட்கும் விவகாரமாகும். அவர்களை அவர்களே பண்படுத்தும் நெடிதுயர்ந்த முயற்சி! நிறவெறிக்கு எதிராக நடந்து வருகின்ற பெரும் வேள்வி!! அதன் பலாபலன்களை அறிந்தவர்களெல்லோருமே ஜஸ்ரினின் “பிளாக்ஃபேஸ்” (Black Face)   படங்களை கண்டு அதிர்ந்துபோயிருக்கிறார்கள். ‘நிறவெறியின் சிக்கல்களைப் பற்றி புரியாதவராக கனடாவின் பிரதமர் இருந்திருக்கிறாரா?” என்ற கேள்வியுடன் வருகிறார்கள். சிந்தித்துப் பார்த்தால் நேரம் தவறி வந்திருந்தாலும் இந்தக் கேள்வியே சிக்கலானதுதான்.


(தொடரும்)


(பிற்குறிப்பு: “உவன் கொன்சவேட்டி(வ்)…  Blue Face  மேக்கப்… உப்பிடித்தான் எழுதுவான்” என்று அப்பாவிபோலச் சொல்லும் Red Face மேக்கப்களும் உண்டு என்பதையும் அறிந்து வைப்போமாக!)