International Medical Health Org. (IMHO)Volunteer Orgs.

உதவுங்கரங்கள் திட்டத்தின் கீழ் IMHO USA மலையக மக்களுக்கு உதவி

அமெரிக்காவில் தலைமைச் செயலகத்தை அமைத்து உலகம் முழுவதும் மருத்துவ, அறப் பணிகளை செய்துவரும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO USA) ‘உதவுங்கரங்கள்’ திட்டத்தின் கீழ் மலையக மக்களுக்கு உதவி செய்து வருகிறது.

தற்போது உலகை உலுக்கி வரும் கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கைகளினாலும், மலையகத்தில் தற்போது இருக்கும் கடும் வெப்பநிலை காரணமாகத் தேயிலைத் தோட்டங்களில் மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையாலும், அங்குள்ள தொழிலாளர்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



இலங்கையின் மலையக மக்கள் பெரும்பாலோர், தமது நாளாந்த வருமானத்துக்காக மலையகத்தின் தேயிலைத் தோட்டங்களிலேயே பபுரிகிறார்கள். தற்போதுள்ள உயர் வெப்பக் காலநிலை காரணமாக பல தேயிலைத் தோட்டங்களில் மரங்கள் பாதிக்கப்பட்டமையால் பணியாளர்களது வருமானம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மிக உக்கிரமாக நடைமுறைப்படுத்தி வருவதனாலும் உகந்த வருமானமின்றி அவர்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அவல நிலையில், அனைத்துலக மருத்துவ நல அமைப்பு இலங்கையில் நடைமுறைப்படுத்திவரும் உதவுங் கரங்கள் திட்டத்தின் கீழ் இம் மக்களுக்கு சில உதவிகளைச் செய்து வருகிறது.

பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு மளிகைப் பொதிகளையும் (provision packages) அத்தோடு, 1000 தோட்டத் தொழிலாளர்களுக்குத் தற்காலிக கடன்களையும், 200 நாளாந்த வருமானத் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொதிகளையம் வழங்கியுள்ளது.

அனைத்துலக மருத்துவ நல அமைப்பு, 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நல்லுள்ளங்கொண்ட சில தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 2004 டிசம்பரில் நடந்த ஆழிப் பேரலையின் அனர்த்தத்தின் போது இவ்வமைப்பைச் சேர்ந்த பல மருத்துவர்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களிலும், இதர பாதிக்கப்படட பகுதிகளிலும் பல நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருந்தது.

இவ்வமைப்பின் பணிகள் இலங்கையின் தமிழர் பிரதேசங்களை மையம் கொண்டிருந்தாலும், உலகின் பல நாடுகளிலும் இயற்கை அனர்த்தங்கள் நிகழும்போது ஆங்காங்கு நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இலங்கையில் பதியப்பட்ட இவ்வமைப்பு, தமிழர் வாழும் பிரதேசங்களில் தொடர்ச்சியான வாழ்வாதார, மீள்கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.