IndiaWorld

H-1B விசா வைத்திருப்பவர்களை அமெரிக்க அரச சேவைகளில் பணிக்கமர்த்த முடியாது – ட்றம்ப் உத்தரவு


ஆகஸ்ட் 3, 2020: அமெரிக்க அரச சேவைகள் இனிமேல் H-1B விசாவுடன் அதிபவர்களை நேரடியாகவோ அல்லது ஒப்பந்த ரீதியிலோ பணிக்கமர்த்த முடியாது என புதிய நிர்வாகக் கட்டளைமூலம் (executive order) உத்தரவிட்டுள்ளார்.

இலாபகரமான வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கமர்த்துவதன் மூலம் கடின உழைப்பாளிகளான அமெரிக்கர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதைத் தனது நிர்வாகம் சகித்துக்கொள்ளாது என இது தொடர்பாக ஜனாதிபதி ட்றம்ப் பதிதிரிகையாளருக்குத் தெரிவித்தார்.

திங்களன்று (03) கையெழுத்திடப்பட்ட இக் கட்டளை, அமெரிக்க மத்திய அரசின் திணைக்களங்கள் தமது பணிகளை, ஒப்பந்த ரீதியிலோ அல்லது துணை ஒப்பந்த ரீதியிலோ, H-1B விசா வைத்திருக்கும் வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கமர்த்துவது தடைசெய்யப்படுகிறது. இதனால், அமெரிக்க வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பல்லாயிரக் கணக்கான இந்திய தொழில்நுட்பத் துறைப் பணியாளர்களின் கனவுகள் தகர்க்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனெவே, ஜூன் 23 இல் விடப்பட்ட்ட நிர்வாக உத்தரவின் பிரகாரம், 2020 ஆம் ஆண்டின் இறுதிவரை, H-1B எனப்படும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளருக்கான விசா வழங்கப்படுவது நிறுத்திவைக்கப்படுகிறது. நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்கள் முடியும்வரை ட்றம்ப் இப்படியான அதிரடி நடவடிக்கைகளை எடுக்கிறார் எனப் பரவலாக நம்பப்படுகிறது.

இந்திய தொழில்நுட்பத் துறை நிபுணர்களால் பெரிதும் விரும்பப்படும் H-1B விசா, அமெரிக்க நிறுவனங்கள் பயிற்றப்பட்ட நிபுணர்களைத் தற்காலிக ரீதியில், துரித கதியில் பணிக்கமர்த்த வழிசெய்கிறது. இதனால், பல அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து, வருடா வருடம், பல்லாயிரக் கணக்கான பணியாளர்களை வேலைக்கு அமர்த்திவருகின்றன.



இவ்வுத்தரவு காரணமாக, மத்திய அரசின் திணைக்களங்கள் தமது பணியாட்களில், அமெரிக்கப் பிரஜைகள் அல்லாதவர்கள், H-1B விசாவுடன் இருப்பவர்கள் பற்றிய விபரங்களை அறிவிக்க வேண்டும். தொழிற் திணைக்களம் இதற்கான வழிகாட்டல்களை இதர திணைக்களங்களுக்கு வழங்கும்.

H-1B விசா வழங்கப்படுபவர்களில் 70 வீதமானோர் இந்தியர்கள் என இன்னுமொரு புள்ளி விபரம் சொல்கிறது.