#GotaComeHome : மாறப்போகும் சுலோகம்

மாயமான்

எனக்கென்னவோ சகுனம் நல்லதாகத் தெரியவில்லை. வேளாண்மை வீடுவந்து சேர மாட்டாது என்பதற்கான சாத்தியங்களே அதிகம் தெரிகின்றன. கோதா ஓட்டம் பிடித்ததும் அரகாலய குழந்தைப் போராளிகள் ஒரு வாரகால கொண்டாட்டங்களில் மினக்கெட்டமையால் வடையை நரி கவ்விக்கொண்டு ஓட்டமெடுத்துவிட்டது.

என்ன இருந்தாலும் ‘புலிகளிடமிருந்து நாட்டை மீட்ட ‘வீரனை’ புறமுதுகிட்டு ஓடச் செய்தது பெரும்பாலான சனத்தின்ர கண்ணீரை வரவழைத்திருக்கலாம். அதுகும் அந்த சிங்கள பெளத்த வீரனை ஒரு நாடும் உள்ளுக்கே எடுக்குதில்லை / அடுக்குதில்லை என்றதும் கவலை இன்னும் ஆழமாகத் தைத்திருக்கலாம். அதற்குள் ‘எனக்குப் படுக்க இடமில்லாவிட்டாலும் உங்களுக்குப் பெற்றோலை அனுப்ப நான் உத்தரவிட்டிருக்கிறேன்’ என்ற அறிவிப்பு வேறு “அந்தாள் கருணையுள்ள மனிசன்’ என்ற பச்சாத்தாபத்தை மக்கள் மனதில ஏற்படுத்தியிருக்கலாம்..இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பாவித்து சரத் வீரசேகர போன்ற இனத்துவேஷ அழுக்குகள் இப்போது அரசாங்க ஆலோசகர்களாகக் கிளம்பியிருக்கின்றனர்.

ஜனாதிபதி பதவிக்கான போட்டி குறித்து சில சமூகவலைப் பதிவாளர்களும், ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை நடத்தியிருந்தன. இவற்றில் பெரும்பாலானவை ரணிலை முதலாம் இடத்திலும், சஜித்தை இரண்டாமிடத்திலும் காட்டியிருந்தன. ‘நியூஸ்வயர்’ இணையத்தளம் அனுரகுமாரவை இரண்டாமிடத்தில் காட்டியிருந்தது. கிட்டத்தட்ட எல்லாக் கணிப்புகளும் டலஸை ‘அட நீயும் இருக்கிறாயா’ என்ற கணக்கில் ஒற்றை இலக்கத்தில்தான் காட்டியிருந்தன. ஆனாலும் அவர் தன்னை ஒரு தேசியத் தலைவராகக் காட்டி பேட்டிகளைக் கொடுத்து வருகிறார். அதுவே, அவரும் ரணிலின் ஆள்தான் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்போது சஜித்தும் ‘வீட்டிலை மனிசிக்குச் சுகமில்லை’ கணக்கில் காலை வாரிக்கொண்டு விட்டார்.

ரணிலைப் பொறுத்தவரை அவருக்கு ஜூலை 20 வாக்களிப்பில் தான் வென்றுவிட வேண்டும் என்பதைத் தவிர வேறெந்தக் குறியுமில்லை. அதற்காக டளஸ் அளகப்பெருமாவைக் கையில் போட்டுக்கொண்டு சஜித் பிரேமதாசாவை வெற்றிகரமாகப் பின்வாங்கச் செய்துவிட்டார் என்றே நினைக்கிறேன். ஒரு அமைச்சர் பதவியோடு எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை ரணிலிடம் இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் நாட்டின் மீதும் மக்களின் மீதும் இருக்கும் அளவில்லாப் பாசத்தின் நிமித்தம் ரணிலுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க சஜித்தும் பின்னணியில் கடமையாற்றுகிறார் என்பது போலத் தான் தெரிகிறது. இத்தோடு சஜித்தின் ஆட்டம் சரி. மொட்டைய வழித்துக்கொண்டு பிரித் ஓதப் போய்விடுவதே நல்லது.

இந்த நிலையில் அனுரகுமார என்ன செய்யப்போகிறார் என்பது தெரியாது. மே 09 அன்று மஹிந்தவின் குண்டர் கூட்டம் கூடாரங்களைப் பிடுங்கி அடுக்கியபோது முன்னணி சோசலிசக் கட்சித் தோழர்கள் களத்திலிறங்கிக் குண்டர்களையும் அவர்கள் வந்த பஸ்களையும் ஏரிகளில் குளிப்பாட்டி அனுப்பினார்கள். அத்தோடு ஐம்பது வீடுகளையும் தீக்குளிக்க வைத்தார்கள். அதற்குப் பிறகு அரகாலயா குழந்தைப் போராளிகள் மீது எவரும் கைவைக்கப் பயந்திருந்தார்கள். இரண்டு மாதங்களில் மந்தமடைந்துபோயிருந்த அரகாலயர்களுக்கு மீண்டும் புத்துணர்வு கொடுக்க ‘முன்னணி’ களத்தில் இறங்கியது. ஜூலை 09 இன்னுமொரு வெற்றி. கோதபயவை நேரே மாலைதீவுக்கு அனுப்பி அங்கே குளிப்பாட்டினார்கள். பிறகு கொண்டாட்டம் ஒரு வாரகாலத்துக்கு நடந்தது. இப்போது அரகாலயர்கள் ஜனாதிபதி தடாகத்தில் தங்களையே குளிப்பாட்டிக் கொண்டார்கள். ஜே.வி.பி. நானும் உள்ளேன் ஐயா கணக்கில் பொதுமக்களுக்கு சுற்றுலா வசதிகளைச் செய்துகொடுத்துப் புல்லரித்துக் கொண்டது.

இதற்குப் பிறகு குழந்தைப் போராளிகளின் வழிகாட்டிப் புத்தகத்தில் எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை. இதை நன்றாக அவதானித்துக்கொண்ட நரியார், ஓரமாக வாயூறிக்கொண்டு வட்டம் போட்டுக்கொண்டிருந்த ‘ஹையீனா’ நாய்களுக்கு சமிக்ஞையைக் கொடுத்துவிட்டார். இனத்துவேஷம் இப்போது சமூகவலைத்தளங்களாலும், வழமையான ராஜபக்ச ஊடகங்களாலும் ஒலிபெருக்கப்படுகிறது. ஞானசேரர்களும், சரத் வீரசேக்கரர்களும் ‘குளோன்’ செய்யப்பட்டு கிராமோபதேசங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பரிசுத்த தந்தையாரும் விடுமுறை எடுத்திருக்கிறார். அரகாலயர்கள் பிளான் ‘B’ இல்லாதமையால் பிளான் ‘A’ யை recycle பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ‘முன்னணி’ புதிய தந்திரத்தோடு களமிறங்குமோ தெரியாது.

அரகாலயர்களைப் போலவே எந்தவொரு எதிர்க்கட்சிகளுக்கும் பிளான் B’ இருப்பதாகத் தெரியவில்லை. எல்லோருடைய பிளான் ” க்களையும் மாட்சிமை தங்கமுடியாமல் தங்கியிருக்கும் ரணில் பறித்துக்கொண்டுவிட்டார். பல உலகத் தலைகளை உருட்டிய ராகு/கேது மாற்றம் ரணிலை மட்டும் உச்சத்துக்குத் தள்ளிக்கொண்டு போகும் போலிருக்கிறது. ‘ஆட்சியை எடுத்தும் என்ன செய்கிறது’ என்ற நிலை மற்றவர்களுக்கு. ஜே.வி.பி.க்கு இருந்த ஒரு எதிரி இந்தியா. அதன்மேல் வாய் வைத்தால் அது ரணிலுக்கு வெற்றி. ராஜபக்சக்கள் இல்லாத பூமியில் சீன அரிசி வேகாது. மேற்கைப் புகழ ஜே.வி.பிக்கு மனம் இடந்தராது. அப்படியிருந்தும் அமெரிக்க தூதுவர் அனுராவுடன் படமெடுத்துப் புழுகிப் புளகாங்கிதமடைந்து பார்த்தார். பொலிற் பீரோ விட்டிருக்குமென்று நான் நினைக்கவில்லை. எனவே இப் போட்டியில் அனுரகுமார வெல்லாமல் விட்டல் அவரே தான் அதிகம் சந்தோஷப்படுவார்.

வாக்கெடுப்பு இரகசியமானது. அப்படியிருந்தும், கனடியத் தமிழ் வேட்பாளரிடமிருந்து கற்றுக்கொண்டதுபோல ஒவ்வொரு வாக்காளரும் (பா.உ.) வாக்காளர் அட்டையில் புள்ளடி போட்டுவிட்டு அதைப் படமெடுத்துக் காட்டவேண்டும் என்பது நிபந்தனையாம். சில உறுப்பினர்களுக்கு ‘அச்சுறுத்தல் விடப்படதென ரணிலும், அவரது குரலை அப்படியே எதிரொலிக்கும் சபாநாயகரும் கூறிவருகிறார்கள். இப்படியான வெருட்டுக்களைச் செய்பவர்கள் பொதுவாக மொட்டுக் கட்சியினர். அவர்கள் ரணிலுக்குத் தான் வாக்குகளைப் போடவேண்டுமென்பது அரச கட்டளை. அப்போ வெருட்டுவது யார்? நடந்து முடிந்த கணக்குகளைப் பார்த்தால் பொ.சி.பெ. (பொதுச் சினைகளில் பெரியது) ‘முன்னணி’ யாகவே இருக்கும் என அனுமானிக்கலாம். அப்படியானால் எஞ்சியிருக்கும் வீடுகளுக்கு இராணுவம் காவல் போட வேண்டும். அதையும் மீறி உயிராபத்து அப்படி இப்படி ஏதாவதென்றால் அனுரகுமாரவுக்கு கணிசமான புள்ளடிகள் கிடைக்கலாம். ஆனால் அவரே ‘வற்புறுத்தலின்’ பெயரில் தான் இறங்கினாரோ என்னவோ. எனவே இந்த விசயத்தில் பட்சிதான் முடிவு சொல்ல வேண்டும்.

பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவின் முகம் மொட்டாக இருந்து மலர்ந்த புத்துணர்வுடன் இருப்பதுபோலத் தெரிகிறது. அவரைத் தவிர வேறெவராலும் நாட்டை மீளக்கட்டியெழுப்ப்ப முடியாது என அவரே தீர்க்கமாக நம்புகிறார். அவர் வென்றால்தான் தாம் பாதுகாக்கப்படுவோம் என ராஜபக்சக்களும் தீர்க்கமாக நம்புகின்றனர். மொட்டுக் கட்சியில் இருக்கும் அத்தனை மந்தைகளும் மேய்ப்பரின் தடிகாட்டும்பக்கமே சாயும். எனவே ரணில் வெல்வது நிச்சயம்.

அரகாலயப் ப்ரட்சியால் புல்லரித்துப்போயிருந்த தமிழருக்கு இது வயிற்றில் புளி கரைத்ததுபோலவே இருக்கும். ராஜபக்சக்கள் இன்னும் ஒழிக்கப்படவில்லை. அவர்கள் அஞ்ஞாதவாசமே சென்றிருக்கிறார்கள். அவர்களது மீள் வருகைக்காக ‘மோசஸ்’ ரணில் நிலத்தைப் பண்படுத்திக்கொண்டிருக்கிறார். கோதாபயவைச்ச் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் போகிறார்கள் என்ற புதுக்கதையை இப்போது வீரசேகரர் படையணி பறையறிந்து அறிவிக்க ஆரம்பித்திருக்கிறது. கோதபயவைப் பாதுகாப்பாக ஊருக்குள் கொண்டுவருவதற்கான களப்பணி இது. பெற்றோலையும், எரிவாயுவையும், உரத்தையும் அள்ளிக் கொடுத்து இந்தியா ரணிலின் கைகளைப் பலப்படுத்தும். ஏனெனில் ராஜபக்சக்களை விடப் பேரம் பேசும் திறமை வேறெவரிடமும் இல்லை. ஜே.வி.பி. இன்னும் துருப்பிடித்த அரிவாளுக்கும் சுத்தியலுக்கும் ஆயுத பூஜை நடத்திக்கொண்டிருக்கிறது. எனவே இந்தியாவுக்கென்றாலும், சீனாவுக்கென்றாலும் ராஜபக்சக்களே தேவை. அரசியல்வாதிகளுக்கு சமூகவாதிகள் வகுப்பெடுக்க முடியாது. எனவே ரணிலே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஜனாதிபதி. #GotaGoHome என்ற அரகாலயர்களின் சுலோகம் விரைவில் “GotaComeHome என்ற சிங்களவர்களின் சுலோகமாக மாறமாட்டாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை.

அப்போ தமிழர்கள்? தொடர்ந்தும் வீட்டுத் தோட்டங்களில் மினக்கெடுவது விரும்பத்தக்கது. அவ்வப்போது இந்திய உயர்ஸ்தானிகர் வைக்கும் கூட்டங்களில் நமது தலைவர்கள் கலந்துகொண்டு தேநீரை அருந்திவிட்டுத் தொடர்ந்தும் அதே நமுட்டுச் சிரிப்போடு வெளியே வந்து அப்படியே அமெரிக்க தூதுவரோடு ஒரு படத்தை எடுத்துவிட்டு வீடேகுவது அவர்களுக்கும் தமிழர்களுக்கும்பாதுகாப்பு.