Arts & Entertainment

Good Night – திரை விமர்சனம்

மாயமான்

பெரிதாகப் பேசப்படாமல் சல சலப்பில்லாமல் வந்து ஓடிப் பெட்டிக்குள் முடங்கப்போகும் அருமையான படம் Good Night. 6 கோடி செலவழித்து 4 கோடியை மட்டும் உழைத்துத் தந்திருக்கிறது. தவறு படத்தில் அல்ல. ரசிகர்களில் தான்.

கதை என்று ஒன்றும் இல்லை. சாதாரண தினசரி வாழ்வில் அநேகமாக எல்லோர் குடும்பங்களிலும் நடக்கின்ற ஒன்று தான். பலத்த குறட்டை விடும் ஒரு இளைஞனின் வாழ்வை மட்டுமல்ல அவனைச் சுற்றி வாழும் பலரையும் சுழற்றி அடிக்கும் இயற்கையின் விளையாட்டை படாடோபம் எதுவுமில்லாது படைப்பாக்கியிருக்கிறார் புத்தம் புதிய இயக்குனர், வசனகர்த்தா விநாயக் சந்திரசேகரன்.

அகன்ற இந்திய பல்மொழிப் படங்களைப் பலநூறு கோடிகளில் தயாரித்து, விளம்பரப்படுத்தி மத்திம புத்தி ரசிகர்களை உசுப்பேத்தி பணம் சம்பாதிக்கும் தமிழ் சினிமா உலகில் இது ஒரு மலையாளத் தரப் படம். அதாவது சாதாரண மக்களையும் அவர்தம் பிரச்சினைகளையும் சிறந்த கலைப்படைப்புகளாக்கும் மகிமையை உலகுக்குக் காட்டியது மலையாள சினிமா தான். தமிழில் திருச்சிற்றம்பலம், டடா போன்றவற்றைத் தொடர்ந்து இப்போது குட் நைட். வெகு சாதாரண மனிதர் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சினை ஒன்றை எடுத்து நவரசங்களால் அலங்கரித்து இதயங்களை நிரப்பிவிட்டுப் போகிறார் விநாயக்.

இயக்குனரைப் போலவே பாத்திரங்களும், ஓரிருவரைத் தவிர, புதியவர்கள். அடுத்த வீட்டுப் பிள்ளைகள் அல்லது அலுவலக நண்பர்கள் என நினைக்ககூடிய அளவுக்கு எளிமையான பாத்திரங்கள். கிராமத்துப் பாஷையில் சொன்னால் எல்லாம் நாட்டு மாடுகள். அதனால் பால் சுவையாக இருக்கிறது.

இயக்குனர் புதியவர் என்றாலும் இப்போது தமிழ்ச் சினிமாவில் இருக்கக்கூடியவர்களை இலகுவாகத் தள்ளி விழுத்திவிட்டுப் போகக்கூடிய திறமை படமெங்கும் தெரிகிறது. படம் ஆரம்பிக்கும்போது எழுத்தோட்டம் என்று எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லை. அறிமுகமில்லாத பாத்திரங்கள் என்பதனால் படம் சலிப்பைத் தரலாமென்ற முற்சாய்வு (bias) எதுவுமில்லாது காட்சிகளினூடு அறிமுகத்தைச் செய்தாரா அல்லது அது அவரது புதிய உத்தியா என்பது தெரியாது. ஆனால் ரசித்தேன். மோஹன் (மணிகண்டன்) என்ற கதாபாத்திரம் அலுவலக பஸ்ஸில் சக பணியாளர்களோடு பயணம் செய்வதுடன் படம் ஆரம்பிக்கிறது. அவர்தான் கதாநாயகன் என்பதை நான் முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தளவுக்கு ஒரு சாதாரண தோற்றம். அந்த பஸ்ஸில் சக பயணியான அவரது கனவுக்கன்னி – நட்சத்திர நடிகர்களின் படத்திலென்றால் இவளைத்தான் கதாநாயகியாக்கியிருப்பார்கள். பாவம் மணிகண்டன் – தனது காதலை முறித்துக்கொள்கிறார். காரணம் பஸ்ஸில், பட்டப்பகலில் மோஹன் விடும் குறட்டை. “உன்னோடு எப்படி வாழ்நாள் முழுவதும் காலம் கழிப்பது” என்பது அவளது வாதம். அவளைப் பிழை சொல்ல முடியாது. இந்த ஏமாற்றத்துடன் ஆரம்பிக்கிறது படம். ஆனால் கதாநாயகன் அழுது குளறாமல், அடித்து நொருக்காமல் அதையுமே நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு போகிறார்.

தாய், இரண்டு சகோதரிகள் (ஒருவர் மணமானவர்), சகோதரி கணவர் எல்லோரும் ஒரு வசதிகளற்ற வீட்டில் வாழ்கிறார்கள். அந்த வீட்டைக் காட்சிப்படுத்தும்போது இயக்குனர் – சீ வேண்டாம். அதை நீங்கள் பார்த்தே அனுபவியுங்கள். இப்படம் ஐந்தே ஐந்து லொக்கேஷன்களில், அவுட்டோரைத் தவிர, படமாக்கப்பட்டிருக்கிறது. மோஹனின் தாய் வீடு, மோஹனின் மாமனார் வீடு, மோஹன் வீடு, அலுவலகம், மருத்துவ மனை. அலுவலக, மருத்துவமனைப் பாத்திரங்களைத் தவிர மொத்தம் 8 பேரும் ஒரு நாயும்.. மிகவும் திட்டமிட்டு சிக்கனமாக ஒரு சிறிய கதையை பிரமாண்டமான பிம்பமாக்கித் தந்திருக்கிறார் விநாயக்.

பாத்திரத் தேர்வு – இதைவிட இனிமேல் முடியாது என்றளவுக்குக் கச்சிதமாக இருக்கிறது. மோஹனை விடவும் அவரது மனைவியாக வரும் அனு (மீதா ரகுநாத்) மிகத் திறமையாகச் செய்கிறார். அவர் நடித்திருக்கிறார் என என்னால் கூறமுடியாது. மிகவும் இயல்பாக, ஒரு அயல் வீட்டு, வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்ட பெண்ணை மனதில் இருத்திப் பாருங்கள்- அவளே தான். எப்போதும் பயந்த, சுய கழிவிரக்கம் கொண்ட விருத்தியடையாத ஒரு பெண். படத்தின் இறுதிக் கட்டத்தில் அவள் வேறு. மீதாவுக்கு அடுத்தது மோஹனின் அத்தானாக (brother-in-law) வரும் ரமேஷ் (ரமேஷ் திலக்). மிக இயல்பான நடிப்பு, அங்க அசைவு, நகைச்சுவை என அவரது நடிப்பு வேறு தரம். மருத்துவமனை அறையிலிருந்து வெளியே வந்து ஓவென்று அழுகின்ற காட்சி உச்சம். மோஹன் உண்மையில் பலவிதமான ரோல்களுக்குள் இலகுவாக சுவிட்ச் பண்ணக்கூடிய ஒரு பிளாஸ்டிக் கரக்டர். மிகச் சிறந்த குணசித்திர நடிகர் ஒருவரை விநாயக் கண்டுபிடித்திருக்கிறார். கதாநாயகர்கள் அழக்கூடாது என்ற செயற்கைப் பிம்பங்களை உடைத்துவிட்டு ஒரு சாதாரண மனிதன் தாங்கமுடியாத துயரங்களை எப்படிக் கையாளலாம் என்பதை மோஹன் காட்டித்தருகிறார். தமிழ் சினிமாவில் இப்போதுள்ள பல நட்சத்திரங்கள் இவரிடமிருந்து கற்க நிறைய இருக்கிறது. அடுத்தபடியாக அந்த குட்டி நாய். பெரும்பாலான ஹொலிவூட் படங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நாய்களின் நடிப்பு பிரமிப்பை ஊட்டுவது வழக்கம். தமிழ்ப் படத்தில் சேரிகளின் உருவகங்களாக மட்டுமே நாய்களுக்குப் பாத்திரங்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்தப் படத்தில் நாய்க்கான அந்தஸ்தை மிகவும் உயர்த்திவிட்டார் விநாயக். நாய் மிகவும் திறம்பட நடித்திருக்கிறது. இதர பாத்திரங்களும் ஒன்றும் சோரம் போகவில்லை.

படத்தில் இளையோடும் ஒரு விடயம் தற்கால இளம் குடும்பங்களுக்கு சொல்லும் அறிவுரை. “எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள். எல்லாவற்றுக்கும் மிக எளிமையான தீர்வுகள் இருகின்றன” , தற்கால இளம் குடும்பங்களிடையே இருக்கும் தன்னம்பிக்கைக் குறைபாடு, அவசர முடிவுகளை எடுத்தல், பரஸ்பர உரையாடல்கள் இல்லாமை போன்றவற்றை இதில் வரும் மூன்று குடும்பங்கள் மூலமாகவும் இயக்குனர் தொட்டுக் காட்டுகிறார். இளம் தம்பதி, முதிய தம்பதி, சகோதர-சகோதரி, தாய்-பிள்ளைகள் எனப் பலவித உரையாடல்கள்களில் கையாளப்படும் நேர்த்தியான, தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்கள் (விநாயக்கினுடையவை) ரசிகர்களின் உணர்வுகளை ஊடறுத்துச் செல்பவை.

இப்படத்தில் வரும் நாய் உட்பட அனைத்துப் பாத்திரங்களும் மிகவும் சிறப்பாக நடித்திருப்பது இயக்குநர் விநாயக்கின் திறமையைக் காட்டுகிறது. மருத்துவ மனைக் காட்சியில் அனைவரது நடிப்பும் ஒன்றிணைந்து வேறொரு உலகுக்கு அழைத்துச் செல்கிறது.

மிக அருமையான , light hearted படம். இதன் தரத்தை எட்டக்கூடிய ரசிகர்கள் தமிழ்நாட்டில் போதாது. அந்த வகையில் படம் வெற்றி, ரசிகர்கள் தோல்வி. கட்டாயம் பாருங்கள்.

9/10

Sponsored