Science & Technology

Gmail பாவனையாளருக்கு எச்சரிக்கை – முக்கியமான அஞ்சல்கள், இணைப்புகளைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்

அடுத்த மாதம் முதல் கூகிள் தனது இயங்கு தளத்தை மாற்றிக்கொள்ளவிருப்பதனால் பாவனைக் குறைவாக இருக்கும் மின்னஞ்சல் முகவரிகளின் கீழுள்ள அஞ்சல்களையும் அவற்றின் இணைப்புக்களையும் நிரந்தரமாக அழித்துவிடத் திட்டமிட்டுள்ளது. கூகிளின் இந்நடவடிக்கையால் இரண்டு வருடங்களுக்கு மேல் பாவிக்கப்படாமலிருக்கும் மின்னஞ்சல்கள், இணைப்புப் பத்திரங்கள், படங்கள், காணொளிகள், நாட்காட்டி அறிவிப்புகள் போன்ற தனிப்பட்ட கணக்குகளின் கீழுள்ள தகவல்கள் நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிடுமென பாவனையாளர்களை கூகிள் எச்சரிக்கின்றது.

இந்த வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இத் திட்டம் டிசம்பர் 2023 இல் நடைமுறைக்கு வரவிருக்கின்றது. இதுவரை காலமும் Gmail மின்னஞ்சல்களோ அல்லது அதில் வரும் இணைப்புக்களோ பாவனையாளர் அழிக்காது போனால் நிரந்தரமாக சேமிக்கப்பட்டு வந்தது. டிசம்பர் முதல் கூகிளின் சகல கணக்குகளுக்கும் 2 வருட கால எல்லை வழங்கப்படவிருக்கிறது. பாவனையளரின் அஞ்சல்களைத் திருடர்கள் திருடுவது மற்றும் கடத்திக்கொண்டு போவது போன்ற விடயங்களிலிருந்து பாவனையாளரைக் ‘காப்பாற்றுவதற்கு’ தாம் எடுகின்ற நடவடிக்கை எனக் கூகிள் கூறினாலும் இதுவும் ஒரு இலாப அதிகரிப்பிற்கான வியாபார முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

இருப்பினும் பாவனையற்ற கணக்குகளை நிரந்தரமாக அழிப்பதற்கு முன்னர் பாவனையாளர்களுக்கு கூகிள் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் முன்னறிவித்தலை வழங்குமெனக் கூறப்படுகிறது. இதில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால் பலர் தமது இதர இணையப் பாவனைகளுக்கோ அல்லது அரசாங்க தொடர்புகளுக்கோ இம்மின்னஞ்சல்களை மிக நீண்ட காலத்திற்கு முன்னர் கொடுத்திருக்கலாம். எனவே இவற்றை ஞாபகத்தில் வைத்திருக்காதவர்கள் தமது மின்னஞ்சல்களை மீண்டும் பாவிக்க ஆரம்பிப்பது பயனுள்ளதாக இருக்கும். அத்தோடு அவற்றில் இணைப்புகள் ஏதும் இருந்தால் அவற்றைத் தரவிறக்கியோ அல்லது கூகிள் ட்றைவ் இல் சேமித்தோ வைப்பது நல்லது. (Image Credit: Wikipedia)