World History

Four Hours in My Lai – விவரணத் திரைப்படம்

போர்க்காலக் கதைகள் -1

சிவதாசன்

குறிப்பு: மைக்கேல் பிள்டனினால் தயாரிக்கப்பட்டு யோக்‌ஷையர் ரெலிவிசனில் ஒளிபரப்பாகிய Four Hours in My Lai, anatomy of a massacre (1989) என்னும் விவரணப்படம் மனித மனசாட்சியை உலுக்குவது. வியட்நாமில் அமெரிக்க இராணுவம் செய்த அட்டூழியத்தின் உச்சம் இங்குதான் நிகழ்நதது எனலாம். நேற்று ருவிட்டரில் John Bull இட்ட பதிவினால் தடக்கி நிறுத்தப்பட்டபோது மிய் லாய் (இப்படித்தான் உச்சரிக்கிறார்கள்) படுகொலை பற்றி அறிய முடிந்தது. இதுவரை எனக்குத் தெரிந்த வியட்நாம் போரின் முகம் ஒரு இளம் சிறுமி அமெரிக்காவின் நேபாம் குண்டினால் எரியூட்டப்பட்டு தெருவில் கதறிக்கொண்டு ஓடும் காட்சி மட்டும்தான். அதுவும் மிய் லாயிலேயே நடந்தது. இக் கட்டுரையினால் அமெரிக்காவின் கோரமுகத்தை விவரிக்கும் நோக்கம் எனக்கில்லை. அது ஏற்கெனவே தெரிந்த ஒன்று. ஆனால் இப் போரை வெறுத்த, நிறுத்தியதற்கான பங்கு மிகச் சில நல்ல உள்ளங் கொண்ட அமெரிக்கர்களையே சாரும். வியட்நாம் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தியவர்களில் ஹுயூ தொம்சன் என்ற இராணுவ ஹெலிகொப்டர் ஓட்டியும் ஒருவர். இப் படம் அவரது கதை. அவரைப் போன்ற இதர மானிடர்களின் கதை. அவர்களும் அமெரிக்கர்களே என்பதைச் சொல்வதற்கான கதை -சிவதாசன்

மார்ச் 16, 1968 வாரண்ட் ஆபீசர் ஹியூ தொம்சன் ஜூனியர் வியட்நாம் போரின் போதான வேவு பார்க்கும் நோக்குடன் வியட்கொங் கெரில்லாக்களின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்தின் மேலாகத் தனது ஹெலிகொப்டரில் பறந்துகொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தபடி அமெரிக்கப்படையினரின் தாக்குதல்கள் அங்கு நடைபெறாதது அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. மாறாக அவர் கண்ட காட்சி அவரை உறைய வைத்தது. அது ஒரு படுகொலைக் களமாக மாறிக்கொண்டிருந்தது. உடனடியாகக் களத்தில் இறங்கினார். அதுவேதான் அமெரிக்காவுக்கு அவமானம் தேடித்தந்த மிய் லாய்.

தொம்சனுடன் அவரது சக இராணுவ வீரர்களான லோறென்ஸ் கொல்பேற்ண் மற்றும் கிளென் ஆன்றியோட்டா ஆகியோரும் ஹெலிகொப்டரில் இருந்தார்கள். கால்வாய்க்குள் காயப்பட்ட பல பொதுமக்களின் உடல்கள் சிதறிக்கிடந்தன. அமெரிக்கப்படைகளின் பீரங்கித் தக்குதலினால் அவர்கள் காயமடைந்திருக்கலாம் என தொம்சனும் சகபாடிகளும் நினைத்திருந்தார்கள். காயப்பட்டுக் கிடந்த ஒரு வியட்நாமியரின் உடலருகே ஒரு பச்சை வெளிச்சத்தை (மத்தாப்பு) ஒளிரச்செய்தார்கள். இதன் மூலம் தமக்கு அந்த இடத்தில் உதவி தேவை என அருகேயுள்ள காலாட்படையினருக்கு அறிவிப்பதே நோக்கம். ஆனால் நடந்ததோ வேறு. அருகே நிலைகொண்டிருந்த சார்ளி கொம்பனியின் காப்டன் மெடீனா அக் காயப்பட்ட பெண்ணின் தலைமீது சுட்டு அவளைக் கொன்றுவிட்டார்.

“அப்போது சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 அடி தூரத்தில் நிலத்திலிருந்து ஆறடி உயரத்தில் எங்கள் ஹெலிகொப்டர் மிதந்துகொண்டிருந்தது. காப்டன் மெடினா அக் காயப்பட்ட வியட்நாமிய பெண்ணை நோக்கி நடந்து சென்று முதலில் அவரைக் காலினால் உதைத்துவிட்டுப் பின்நோக்கி நகர்ந்து நின்று அப்பெண்ணைச் சுட்டுக் கொன்றார். இது எங்கள் முன்னிலையில் நடந்தது. அப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது இது பீரங்கித் தாக்குதலினால் காயமடைந்த மக்களல்ல. அது எமது படைகளால் திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்ட கொலைகள் என்று” என்கிறார் தொம்சன்.

அருகிலிருந்த வாய்க்காலில் மேலும் பல உடல்கள் சிதறிக் கிடந்தன. ஆத்திரமுற்ற தொம்சன் ஹெலிகொப்டரைத் தரையிறக்கிவிட்டு நடக்கும் படுகொலையைத் தடுக்க முயற்சித்தார். “அவர்களும் மனிதர்கள் தான். அவர்கள் நிராயுதபாணிகள், சேர்” என்று உரத்த குரலில் அப்படையணியின் லெப்டினண்டைக் கெஞ்சினார். லெப்டினண்ட் அவரை ஹெலிகொப்டரினுள் ஏறுமாறு கட்டளையிட்டார்.

சார்லி கொம்பனி காலாட்படைகளைக் கட்டுப்படுத்த முடியாது என்று தொம்சன் புரிந்துகொண்டார். அப்படைகளின் கட்டளைத் தலைமையகத்தோடு தொடர்புகொள்ளும் அதிகாரமோ அல்லது அதற்கான ரேடியோ அலைவரிசைகளோ அவருக்குக் கொடுக்கப்படவில்லை. ஆனால் அவர் நகர்வதாக இல்லை. அருகே வேவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த இதர விமானப் படையினரைத் தலையிடுமாறு கேட்டார். ஆனால் அவர்கள் பக்கமிருந்து மெளனமே பதிலாகவிருந்தது.

உதவிக்காகக் காத்திருக்கும்போது லெப்டினண்ட் புரூக்ஸின் தலைமையில் சார்ளி கொம்பனியின் இரண்டாவது பிளட்டூன் ஒன்று வடக்குத் திசையில் வயோதிபர், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட இன்னுமொரு குழுவை நோக்கிச் செல்வதை தொம்சன் அவதானித்தார். தனது ஹெலிகொப்டரை உடனடியாக மேலெழுப்பி முன்னேறிவரும் இரண்டாவது படையணி க்கும் அச்சத்தினால் உறைந்துபோயிருந்த பொதுமக்களுக்குமிடையே தரையிறக்கினார். ஹெலிகொப்டரிலிருந்து பாய்ந்து இறங்கிய அவர் ஹெலிகொப்டரில் துப்பாக்கி மீது கைகளை வைத்துக்கொண்டிருந்த தனது சகபாடி கொல்பேர்ணுக்குக் கட்டளையிட்டார். “அமெரிக்க் இராணுவம் தன் மீதோ அல்லது பொதுமக்கள் மீதோ சுட ஆரம்பித்தால் அவர்களைச் சிதறடித்துவிடுங்கள்” என்பதே அக் கட்டளை. தொம்சனும் அவரது சகாக்களும் உடனடியாக அவ்விடத்திலிருந்து விலகவேண்டும் என படையணித் தலைவர் புரூக்ஸ் ஆணையிட்டார். தொம்சன் அதற்கு மறுத்துவிட்டார்.

அடுத்த 20 நிமிடங்களுக்கு இரு தரப்பினரிடையேயும் வாய்த்தர்க்கம் நிகழ்ந்தது. இதர வான் படைகளை உதவிக்கு வருமாறு தொம்சன் கெஞ்சினார். இறுதியில் தொம்சனின் சகபாடிகளின் நண்பர்களின் கட்டுப்பாட்டிலிருந்த இரண்டு ஹெலிகொடர்கள் உதவிக்கு வந்தன. இறுதியில் மூன்று ஹெலிகொப்டர்களுமாகச் சேர்ந்து அனைத்து பொதுமக்களையும் ஏற்றிப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றன.

எரிபொருள் அருகிப்போன நிலையில் டொட்டீயிலுள்ள தளமொன்றுக்குச் செல்வதற்காகப் பறந்துகொண்டிருக்கும் வேளை இன்னுமொரு வாய்க்காலில் 3 வயதுப் பையனொருவன தொம்சனின் சகபாடி ஆன்றியோட்டா அவதானித்தார். இன்னுமொரு படையணியைச் சமாளித்து அக் குழந்தையையும் தொம்சனும் சகபாடிகளும் காப்பாற்றினார்கள்.

டொட்டீ தளத்தில் புயல் போல் நுழைந்த தொம்சன் தலைமையகத்தில் நுழையும்போது சகலரும் கேட்கும்படியாக உரத்த குரலில் மிய் லாய் படுகொலைகளைப் பற்றிக் கூறிக்கொண்டே வந்தார். “அங்கு நடப்பது ஒரு படுகொலை. மக்களைச் சுற்றி வளைத்து கால்வாய்களுக்கு அழைத்துச் சென்று அங்கே சுட்டுத்தள்ளுகிறார்கள்” என அவர் உரத்த குரலில் கத்திக் கூறினார். எவராலும் அவரைச் சமாதானப்படுத்த முடியவில்லை. கட்டளைத் தலைமையகத் தளபதியின் அலுவலகத்தினுள் வலுக்கட்டாயமாக நுழைந்தார். நாஜிகளைவிட மோசமாக அமெரிக்கர்கள் நடந்துகொள்வது அவரை ஆத்திரத்தின் உச்சிக்கு எடுத்துச் சென்றிருந்தது. தொம்சனின் முயற்சி வெற்றி கணடது; மிய் லாய் கொலைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டுமென செலணியின் தளபதி ஆணையிட்டார். எரிபொருள் முற்றாக நிரப்பப்படாத நிலையிலும் தொம்சன் மிய் லாய்க்குத் திரும்பிச் சென்று அங்கு கொலைகள் நிறுத்தப்பட்டனவா என்பதை உறுதிசெய்துகொண்டார்.

மிய் லாயில் நடைபெற்ற அனைத்து விடயங்களையும் தொம்சன் தலைமையகத்துக்கு அறிவித்துவிட்டார். இந்த நடவடிக்கையால் அமெரிக்கப் படைகள் மிக மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டன. அவரைச் சாந்தப்படுத்த தலைமையகம் அவருக்கு ‘ஃப்ளையிங் குறோஸ்’ விருதொன்றை வழங்கினர். அவர் அதைத் தூக்கி எறிந்துவிட்டார். பிறிதொரு சம்பவத்தில் காயமடைந்த தொம்சனை இராணுவம் அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பிவிட்டது. அத்தோடு அவரது சகபாடிகளான கொல்பேர்ண் மற்றும் ஆண்ட்றியோட்டாவுடனான தொடர்புகளும் முறிந்துவிட்டன. இச்சம்பவங்களினால் மனமுடைந்த நிலையிலும், இராணுவத்துடன் செய்துகொண்ட சத்தியப்பிரமாணத்தின் காரணமாக இவ் விடயங்களை வெளியில் பகிரங்கப்படுத்த முடியாத நிலையிலும் அவர் தனது சக இராணுவத்தினருடன் மட்டுமே இப் படுகொலைகளைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள முடிந்தது.

*****

மிய் லாய் படுகொலைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் கசிய ஆரம்பித்தபோது தொம்சன் தனது முகமூடியைக் கழற்றிக்கொண்டார். அவரை எவராலும் அமைதிப்படுத்த முடியவில்லை. ஊடகங்கள், இராணுவம், காங்கிரஸ் ஆகியவற்றின் அழுத்தங்களையும் மீறி மிய் லாய் பற்றிய அத்தனை உண்மைகளையும் அவர் வெளியே கொணர்ந்துவிட்டார். தனது சாட்சியத்தின்மீது அவர் உறுதியாக இருந்துகொண்டார். விசாரணைகளில் பங்கேற்றார். இதனால் பலரது கசப்பையும் அவர் சம்பாதித்துக்கொண்டார்.

விசாரணைகளைத் தொடர்ந்து தொம்சனால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்களெனத் தீர்ப்பளிக்கப்பட்டதை அவர் பார்த்துச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. கொலை அச்சுறுத்தல்களை அவர் எதிர்கொண்டார். அவரது வீட்டு முற்றத்தில் இறந்த விலங்குகளின் உடல்கள் வீசப்பட்டன. சார்ளி கொம்பனி காலாட்படைமீது துப்பாக்கியால் அச்சுறுத்துவதற்குக் கட்டளையிட்டமைக்காக தொம்சன் மீது இராணுவ விசாரணை செய்யப்போகிறோமென எச்சரித்தார்கள். அப்படியிருந்தும் அவர் தனது வாக்குமூலத்தில் ஒரு சொல்லைக்கூட மாற்றிக்கொள்ளவில்லை.

*****

1988 இல், பிரித்தானிய திரைப்படவியலாளர் மைக்கேல் பில்டன் தொம்சனின் இக் கதையை ஒரு விபரணப் படமாக எடுத்தார் இதற்காக அவர் தொம்சனைத் தேடிக் கண்டுபிடித்து அவரது வாக்குமூலத்தைப் பெற்றார். காமெராவுக்கு முன்னால் வந்து நேரடியாக இதைச் சொல்வீர்களா என பில்டன் கேட்டபோது எந்தவித தயக்கமுலில்லாது அதற்கு உடனடியாகவே இணங்கியிருந்தார். யோர்க்‌ஷையர் தொலைக்காட்சியால் எடுக்கப்பட்ட Four Hours in My Lai -anatomy of a massacre என்ற இந்த விவரணப்படத்துக்கு British Academy award, Emmy award ஆகிய விருதுகள் கிடைத்துள்ளன. இவ்விவரணப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மைக்கேல் பில்டன் கெவின் சிம் என்பவருடன் இணைந்து Four Hours in My Lai என்னுமொரு புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். வியட்நாமில் அமெரிக்கா புரிந்த கொடுமைகளை இறுதியில் உலகம் புரிந்துகொள்ள இப் படம் உதவியிருக்கிறது.

இப் படத்தை எடுக்கும்போது பில்டன் மேற்கொண்ட முயற்சியால் தொம்சனும் கொல்பேர்ணும் மீண்டும் சந்தித்துக்கொண்டார்கள். இதனால் அவர்களுடைய நட்பு தொடர்ந்தது.

மிய் லாய்ப் படுகொலைகளை ஏற்றுக்கொள்வதிலும் அதற்காக மன்னிப்புக் கோருவதிலும் அமெரிக்க அரசு மிக மிக மெதுவாகவே நகர்ந்தது. அதை முன்னகர்த்தி செயற்படுத்துவதற்கு தொம்சனின் விடாமுயற்சியே காரணம்.

1989 இல் கிளெம்சன் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் எகன் அமெரிக்க அரசு தொம்சனின் வீரசாகசத்தை அங்கீகரிக்க வேண்டுமென ஒரு கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்தார். பத்து வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க இராணுவத்தால் போரில் ஈடுபடாத ஒருவருக்கு (non combat) வழங்கப்படும் அதியுயர் விருதான ‘போர்வீரர்’ விருதை தொம்சனுக்கு வழங்க இராணுவம் தீர்மானித்தது. இதை அறிந்த தொம்சன் இதே விருது தனது சகபாடிகளான கொல்பேர்ணுக்கும் ஆன்றியோட்டாவுக்கும் வழங்கப்படாவிடில் அதைத் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அறிவித்துவிட்டார். இறுதியில் இராணுவம் மூவருக்கும் இவ் விருதை வழங்கியது. துர்ப்பாக்கியமாக, அவ்விருதைப் பெற ஆண்ட்றியோட்டா அப்போது உயிரோடு இருக்கவில்லை.

*****

1998 இல் தொம்சனும் கொல்பேர்ணும் மிய் லாய்க்கு விஜயம் செய்தார்கள். மக்கள் அவர்களை எப்படி எதிர்கொள்வார்கள் என அறிந்துகொள்ள முடியாத நிலையில் பல்வேறு உணர்வுகளுடன் அவர்கள் அங்கு சென்றார்கள். மக்களோ அவர்களை விருந்தாளிகளாக வரவேற்று இப் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து ஒரு மாபெரும் விழாவையே எடுத்திருந்தார்கள்.

தொம்சனும் கொல்பேர்ணும் தாம் இரண்டாம் படையணியை எதிர்கொண்ட இடத்திற்குத் தனியாகச் சென்றார்கள். அங்கே எதிர்பாராதவிதமாக இரண்டு பெண்கள் அங்கு அவர்களை அணுகி “எங்களைக் காப்பாற்றியவ்ர்கள் நீங்கள்தான்” எனத் தெரிவித்தார்கள். “அன்று எங்களால் மேலும் பலரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்” என தொம்சன் அவர்களிடம் இறைஞ்சிக் கொண்டார். அதற்குப் பதிலளித்த பெண்களில் ஒருவர் “அன்று நடைபெற்றது உங்கள் தவறினாலல்ல. அது சரி அந்த சார்ளி கொம்பனியில் எஞ்சியவர்கள் ஏன் உங்களுடன் வரவில்லை? அவர்களும் வந்திருந்தால் அவர்களை நாங்கள் சந்தித்து நடந்ததை மறந்து மன்னித்துக்கொண்டிருக்கலாம்”. இப்படியான ஒரு பதிலை தொம்சன் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. பழிவாங்கும் உணர்வோடு கூடிய ஒரு பதிலையே எதிர்ப்பார்த்திருந்தார். இப் பெண்ணின் வார்த்தைகள் தன்னைச் சிதறடித்து விட்டதாக தொம்சன் பின்னர் ஒரு ஊடகவியலாளரிடம் கூறியிருந்தார். மன்னிப்பு என்பது தனக்கு அப்பாற்பட்ட ஒன்றாக அவர் எண்ணிக்கொண்டிருந்தார். “அதைச் செய்யுமளவுக்கு நான் ஒரு முழுமையான மனிதனாக இருக்கவில்லை. எனக்குப் பொய் கூற விருப்பமில்லை. இன்றுவரை அதைச் செய்வதற்கான அருகதையுள்ள ஒரு மனிதனாக நான் என்னை நினைத்திருக்கவேயில்லை” எனத் தொம்சன் கூறுகிறார்.

*****

2006 இல், அவரது 62 ஆவது வயதில் பைன்வில், லூசியானா இளைப்பாறிய இராணுவத்தினருக்கான மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக்த் தொம்சந் மரணமானார். இறக்கும்போது அவரது நண்பர் லோறன்ஸ் கொல்பேர்ண் அருகிலிருந்தார். அதற்காக அவர் அட்லாண்டா மாநிலத்திலிருந்து வந்திருந்தார்.

தனக்குச் சரியெனப் படுவதற்காகத் தன்னை முன்னிறுத்துவதில் தொம்சன் உறுதியாகவிருந்தார். இராணுவத்திலோ அல்லது பிரத்தியேக வாழ்விலோ அவர் தனது தலைமைத்துவத்தையும், துணிச்சலையும் காட்டத் தவறவில்லை. ஆனால் ஊடகங்களும், பொதுமக்களும் அவரை ஒரு துரோகியாகவே இனம் காட்டினார்கள். உண்மையான தேசப்பற்று என்பது சரியானதென்பதைச் செய்வதே தவிர சொல்வதைச் செய்வதல்ல என்பதை அவர் கடைப்பிடித்தவர்.

போர்களை நிறுத்துவதற்கு இராணுவமோ, பலம் வாய்ந்த அரசுகளோ தேவையென்பதில்லை. தொம்சன் போன்ற நேர்மையான தனிமனிதர்களாலும் இயலும். வியட்நாமியர்கள் அமெரிக்காவை மன்னித்ததற்கு தொம்சன் போன்ற தனி மனிதர்களே காரண்ம்.

கம்போடியாவின் படுகொலைகளை நிறுத்துவதற்கு எப்படி ஜோன் பில்ஜெர் என்ற ஒரு தனி மனிதனது எழுத்துக்கள் காரணமாக இருந்தனவோ அதெ போலத்தான் ஹியூ தொம்சன் என்ற ஒரு மனச்சாட்சியுள்ள மனிதனால் வியட்நாம் போர் நிறுத்தப்பட்டது. துர்ப்பாக்கியமாக முள்ளிவாய்க்காலை நிறுத்துவதற்கு ஒரு மனச்சாட்சியுள்ள மனிதன் கிடைக்கவில்லை.

மைலாய் படுகொலை பற்றிய மைக்கேல் பில்டனின் விவரணப் படம்

[இக் கதை ருவிட்ட்டரில் ஜோன் புல் அவர்களால் பதியப்பட்ட சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்டது. நன்றி John Bull]