Flight 752 | பிந்திய செய்தி : எதிரியின் ஏவுகணை என நினைத்து ஈரானிய இராணுவம் சுட்டு வீழ்த்தியது!

Spread the love
இராணுவத்தின் தொடர்பு கருவி ‘ஜாம்’ (jam) செய்யப்பட்டிருந்ததனால் ஏற்பட்ட குழப்பமே காரணம்

ஈரானைத் தாக்க ஏவுகணையொன்று வந்துகொண்டிருக்கிறது என நினைத்து ஈரானின் ஏவுகணை இயக்கும் இராணுவத்தினர் ஒருவர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இராணுவமான இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் (Islamic Revolutionary Guard Corps (IRGC)) மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனெரல் அமிர் அலி ஹாஜிசாடெ தெரிவித்திருக்கிறார்.

அவர் தொடர்புகொள்ளும் ரேடியோ சாதனம் ‘ஜாம்’ செய்யப்படிருந்தபடியால் கட்டுப்பாட்டுத் தளத்துடன் தொடர்புகொள்ள முடியாமல் ஏவுகணை இயக்குனர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டிய சூழலில் அவர் அப்படிச் செய்திருக்கிறார் எனவும் 10 செக்கண்டுகளில் அவர் அந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது எனவும் ஹாஜிசாடே தெரிவித்தார்.

விமானம் திரும்பி வந்ததா?

அதே வேளை, விமான நிலையத்துக்கு அருகேயுள்ள பராண்ட் நகருக்கு மேல் விமானம் பறந்துகொண்டிருந்த வேளையில் அதை ஒரு ஏவுகணை தாக்கியது எனவும் ஆனால் விமானம் அப்போது வெடித்துச் சிதறவில்லை எனவும் அது தொடர்ந்து சில நிமிடங்கள் பறந்துவிட்டுப் பின்னர் விமான நிலையத்தை நோக்கித் திரும்பி வந்துகொண்டிருந்த வேளையில் எரிந்து பின்னர் வெடித்துச் சிதறியது எனவும் காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அந்த வேளையில் விமானத்துக்கும் நிலக்கட்டுப்பாட்டுக்குமிடையில் ரேடியோ தொடர்புகள் ‘ஜாம்’ பண்ணுப்பட்டிருந்ததால் விமானிகளால் தொடர்புகளை ஏற்படுத்த முடியவில்லை எனத் தெரிய வருகிறது.

கறுப்புப் பெட்டி

தற்போது கறுப்புப் பெட்டி யூக்கிரெயின் வசம் இருப்பதால் விரைவில் விமானிகளின் உரையாடல்களின் பதிவுகள் மூலம் மேலும் சில உண்மைகளை அறியக்கூடியதாகவிருக்கும்.

‘ஜாமிங்’ (Jamming) என்றால் என்ன?

‘ஜாமிங்’ (jamming) என்பது போர்க்களங்கள், படைத் தளங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றில் இராணுவத்தினர் பாவிக்கும் சமிக்ஞைத் தடை (signal blocking). இது இரண்டு வகைப்படும். ஒன்று ‘எலெக்ட்றோனிக் ஜாமிங்க்’ (electronic jamming). இதன்போது இராணுவத்தினர் பிரத்தியேகமாகவும் இரகசியமாகவும் பேசிக்கொள்ளும் ரேடியோ அலைவரிசையில் எதிரிகள் வேண்டுமென்றே ‘இரைச்சலை’ (noise) அனுப்பிக் குழப்பும் (electronic jamming) நடைமுறை. இரண்டாவது, ரேடார் இயக்குனரின் சமிக்ஞைகளை வேண்டுமென்றே திருப்பி அனுப்புவதன் மூலம் (mechanical jamming) அவரைக் குழப்புவதும் இன்னுமொரு நடைமுறை. றேடார் என்பது அனுப்பப்படும் சமிக்ஞை (signal) ஒரு பொருளில் பட்டுத் தெறிப்பதைக் கொண்டு அப் பொருளின் நிலையை அல்லது நடமாட்டத்தை அறியும் முறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>