• Post category:WORLD
  • Post published:January 10, 2020
Spread the love
அவசரப்படுகிறாரா கனடியப் பிரதமர்?

ஜனவர் 10, 2020

ரெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட, FL 752 பறப்பெண்ணைக் கொண்ட யூக்கிரேனிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு ஈரான் காரணம் என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை எனவும் அப்படி இருந்தால் அதற்கான சான்றுகளை கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் பகிர்ந்துகொள்ள வேண்டுமெனவும் யூக்கிரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கேட்டிருக்கிறார்.

இதுபற்றித் தான் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுடன் பேசவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதனன்று ரெஹ்ரான் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட, யூக்கிரெயினுக்குச் சொந்தமான விமானம் புறப்பட்டுச் சில நிமிடங்களில் நடுவானில் வெடித்துச் சிதறியிருந்தது. இச் சம்பவத்தில் பயணிகள் எவரும் உயிர் தப்பவில்லை. இவர்களில் 82 ஈரானியர்களும், 63 கனடியர்களும் அடங்குவர்.

இவ் விமானம் பிரச்சினைகளுள்ள ஈரானிய பிரதேசத்தின் மேல் (rough neighbourhood) பறந்ததாகவும் ஈரான் தற்செயலாக அதைச் சுட்டு வீழ்த்தியிருக்கலாமெனவும் ஜனாதிபதி ட்றம்ப் தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து கனடிய பிரதமரும், பிரித்தானிய பிரதமரும் “ஈரானே அதைச் சுட்டு வீழ்த்தியது என ஆதாரங்கள் தெரிவிக்கின்றன, அது தற்செயலான காரியமாகவும் இருக்கலாம்” எனத் தெரிவித்து வருகிறார்கள்.

இருப்பினும், யூக்கிரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கி, தனது முகநூலில் ” விமானத்தை ஈரானிய ஏவுகணை வீழ்த்தியது என்ற விடயம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை” எனக் குறிப்பிள்ளார்.

“அவர் (யூக்கிரெயின் ஜனாதிபதி) மற்றவர்களது விளையாட்டை விளையாடுவதற்குத் தயாராகவில்லை” எனவும் விசாரணைகளின் மூலம் சரியான ஆதாரங்கள் கிடைக்குமட்டும் அப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கக் கூடாது” எனவும் அந் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் மிக்கெயில் பொக்றெபென்ஸ்கி தெரிவித்ததாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா. வின் சர்வதேச சிவில் ஏவியேசன் அமைப்பும், அவ்வறிக்கைது குறித்த முற் தீர்மானங்களை எட்டுவதைத் தவிர்க்கும்படி கேட்டிருக்கிறது. அதே வேளை, விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை எனத் திட்டவட்டமாகக் கூறிவருகிறது.

விமானத்தின் ‘கருப்புப் பெட்டி’ சம்பவத்துக்கு முன்னரான விமானிக்கும் தரைக் கட்டுபாட்டுக்குமிடையிலான உரையாடல் பதிவுகளைக் கொண்டிருக்குமெனினும் அது பற்றிய விபரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.

அதே வேளை, ஏவுகணை எங்கிருந்து புறப்பட்டது, அதன் பாதை என்ன என்ற விடயங்களை செய்மதிகள் மூலம் பார்ப்பதற்கான வசதிகளும் உண்டு. அப்படியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை மேற்குநாடுகளால் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், சர்வதேச விமான விபத்துக்கள் குறித்த ‘அனெக்ஸ் 13 விசாரணைகள்’ முடியும்வரை சர்வதேச நாடுகள் அவசரப்பட்டு அறிக்கைகளை விட வேண்டாமென்று ஐ.நா.வின் அமைப்பு (International Civil Aviation Organization (ICAO)) கேட்டிருக்கிறது.

சம்பந்தப்பட்ட போயிங் 737-800 வகையினதான, 3 வயதுள்ள, விமானம் 2400 மீட்டர்கள் உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது வெடித்துச் சிதறியது. இரண்டு நாட்களுக்கு முன்னர் அதன் மீதான முழுப்பராமரிப்பும் செய்யப்பட்டதென யூக்கிரெயின் கூறுகிறது. இதன் ஓட்டிகள் மிகவும் அனுபவமுள்ளவர்கள். இச் சம்பவம் நடப்பதற்குப் பல மணி நேரங்கள் முன்னதாக ஈரானின் அமெரிக்கப்படைகள் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படிருந்தன.

மூலம்: அல் ஜசீரா செய்திகள்

Print Friendly, PDF & Email