FIFA: விளையாட்டரங்கு நிர்மாணத்தின்போது 400-500 வெளிநாட்டுப் பணியாளர் மரணமாகியிருக்கலாம் – கட்டார்

கட்டாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டிகளைப் புறக்கணிக்கும்படி பல சர்வதேச மனிதவுரிமைகள் அமைப்புகளும் முன்னணி உதைபந்தாட்ட வீரர்களும் குரலெழுப்பி வருகிறார்கள். இதற்கு அவர்கள் முன்வைக்கும் இரண்டு பிரதான காரணங்களாக, இப் போட்டி நடைபெற்றுவரும் மைதானத்தை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பணியாளர்களில் 6,500 பேர் விபத்துகள் காரணமாக இறந்திருக்கிறார்கள் என்பதும் கட்டார் நாட்டில் ஒரினச் சேர்க்கையாளர்கள் மீதான கெடுபிடிகள் என்பதும் மேற்கத்தைய ஊடகங்களில் பரவலாகக் கூறப்பட்டு வருகிறது.

பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிகளுக்குச் செல்பவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதும் அவர்களது உயிர்கள் துச்சமாக மதிக்கப்படுவதும் இதுவே முதற் தடவையல்ல. இருப்பினும் உலகக் கிண்ணம் போன்ற பிரபலமான நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் கட்டார் போன்ற நாடுகள் தமது மனித உரிமை மீறல்களை மூடி மறைத்து மேற்கத்தைய நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற முயற்சி செய்கின்றன. கட்டாரில் நடைமுறையில் இருக்கும் கஃபாலா எனப்படும் சட்டத்தின்படி வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் அந்நாட்டுக்குப் பணிநிமித்தம் அழைக்கப்படும்போது அவரை அழைத்தவரின் அனுமதியின்றி அப் பணியாளர் வேலை மாறவோ அல்லது நாட்டைவிட்டுத் தப்பியோடவோ முடியாது. இதனால் மிகவும் கடினமான பணிகளைச் செய்ய இவ்வெளிநாட்டுப் பணியாளர்கள் வற்புறுத்தப்படுகின்றனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் ஆகியன கூறுகின்றன.

கட்டாரின் குடிமக்கள் இக் கடினமான வேலைகளைச் செய்ய விரும்புவதில்லையாதலால் இப்பணிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பணியாளர்கள் தருவிக்கப்படுகிறார்கள். சுமார் 2 மில்லியன் வெளிநாட்டுப் பணியாளர்களில் குறைந்தது 500,000 பேர் இந்தியர்கள். மொத்தப் பணியாளர்களில் வருடமொன்றுக்கு குறைந்தது 4,000 பேராவது பணிநிமித்தம் காரணமாக மரணமாகிறார்கள். 2010 இல் ஆரம்பித்து உலக கிண்ண விளையாட்டரங்கை நிர்மாணிக்கும் பணிகளில் இறந்தவர்களில் 522 நேபாளியர்களும், 700 இந்தியர்களும் அடங்குவர் என ‘தி கார்டியன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இது பற்றி கட்டாருக்கு அழுத்தத்தைக் கொடுக்கும்படி றோயல் டச் உதைபந்தாட்டாக் கழகத் தலைவர் மைக்கேல் வான் பிராக் உலகக் கிண்ண விளையாட்டு அமைப்பிற்கு (FIFA) கோரிக்கை விடுத்திருந்தார். அப்போது கட்டார் முழுவதிலுமே சுமார் 40-50 பேர்களே விபத்துக்கள் காரணமாக இறதிருக்கிக்கிறார்கள் என கட்டாரின் உலகக் கிண்ண அமைப்பின் பணிப்பாளர் கூறியிருந்தார், ஆனால் நடைபெற்றுவரும் FIFA போட்டிகளின்போது கட்டாரைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் உலகமெங்கும் பரவியிருந்தன. இதற்கு விளையாட்டுகளில் பங்குபற்றியவர்களுடன் கூடவே பல மனித உரிமை அமைப்புகளும், விளையாட்டு வீரர்களும் காரணமாகவிருந்தனர். கட்டாரில் நடைபெற்று வரும் விளையாட்டில் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகு குறைவு என்பதையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த ஒட்டுமொத்த உலக அழுத்தத்தின் காரணமாக தற்போது கட்டாரின் உலகக் கிண்ணப் போட்டிக்குப் பொறுப்பாளரான அல் தாவடி என்பவர் இவ்விளையாட்டரங்கின் நிர்மாணத்தின்போது சுமார் 400-500 பேர்கள் வரை இறந்திருக்கலாம் என்பதை ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் இவ்வெண்ணிக்கை 6,500க்கும் மேல் என ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

எப்படியிருந்தாலும் உலகக் கிண்ணத்துக்கான அமைப்பு (FIFA) மிகவும் ஊழல் நிறைந்த ஒன்று என்பதும் பல நாடுகள் தமது வியாபார நோக்கத்துக்காக்வோ அல்லது மனித உரிமை மீறல்களை மறைப்பதற்காகவோ இவ்வமைப்பைக் கைக்குள் போட்டுக்கொண்டு காரியங்களைச் சாதித்துவிடுகின்றன எனப் பல மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. (Image Credit: Photo by Markus Spiske on Unsplash)