Arts & EntertainmentIndiaNews & Analysis

‘Family Man 2’ | தொடரைத் தடைசெய்யாவிட்டால் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – சீமான் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகவும், தமிழர்களை வன்முறையோடு தொடர்பு படுத்தியும், அமசோன் பிறைமில் வெளிவரவிருக்கும் Family Man 2 தொடரைத் தடைசெய்யும்படியும் அல்லாதுபோனால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்திருக்கின்றார்.

Family Man 2 தொடரின் விளம்பரமுன்னோட்டத்தைப் (trailer) பார்த்த போது, அதில் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் சித்தரிக்கும் விதம் குறித்து சீமான் அதிர்ச்சியடைந்ததாகவும் அதைத் தொடர்ந்து இவ்வெச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

கடந்த வெள்ளியன்று, இது தொடர்பாக, சீமான் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் Family Man Season 2 தொடரை அமசோன் பிறைம் வெளியிடக்கூடாது; அது தமிழர்களை மிக மோசமாகச் சித்தரிக்கிறது, இதை அவர்கள் தடை செய்ய்யாவிட்டால் அதன் மூலம் நாடு தழுவிய ரீதியில் தமிழரைப் பற்றி மிக மோசமான கருத்துருவாக்கம் மக்கள் மனதில் எழுப்பப்படும். அதனால் பாரதூரமான எதிர்விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும்” என சீமான் தெரிவித்திருக்கிறார்.

சென்னைப் பின்புலத்தில் எடுக்கப்பட்ட இத் தொடரில், விடுதலைப் புலிகளின் சீருடையுடன் தோன்றும் ஒரு ஈழப்பெண் தனது அமைப்பை பாகிஸ்தானிலிருக்கும் ஐ.எஸ்.ஐ. பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபடுத்துவதாக காட்சி ஒன்று வருகிறது.

“ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அநீதியையோ அல்லது அவர்கள் அனுபவித்துவரும் வலிகளையோ பற்றி எதையுமே குறிப்பிடாமல், அவர்களை மிக மோசமான வன்முறையான ஒரு சமூகமாக இத் தொடர் சித்தரிக்கிறது. இத்தனை பேரழிவுகளைச் சந்தித்த போதும், விடுதலைப் புலிகள் நீதியிலிருந்து வழுவாது இருந்து வந்தனர். அதைப்பற்றி எதையுமே காண்பிக்காது, அவர்களை இருதயமற்ற, வன்முறைக் குழுவாகக் காட்டப்படுகிறது. இதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தடை செய்யப்படவேண்டுமெனெ நான் வலியுறுத்துகிறேன்” என சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இனம், மட்றாஸ் கஃபே ஆகிய படங்களுக்கு நடந்த கதியே Family Man 2 விற்கும் நடக்கும் என சீமான் தனது கடிதத்தில் எச்சரித்துள்ளார்.

சந்தோஷ் சிவா வின் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட இனம் (2014) விடுதலைப் புலிகளை மிகவும் மோசமாகச் சித்தரித்திருந்ததைத் தொடர்ந்து திரையரங்குகளினால் நீக்கப்பட்டிருந்தது. அதே போல ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட மட்றாஸ் கஃபே (2013), தமிழ் நாட்டிலும், தமிழர்கள் அதிகமாக வாழும் அமெரிக்கா, அரபு ஐக்கிய எமிரேட்டிலும் திரையரங்குகளில் காண்பிக்கப்படவில்லை. இப்படத்தில் மலையாள நடிகர்களான ஜோன் ஏப்ரஹாம், நர்ஹீஸ் ஃப்ஹ்றி மற்றும் ராஷி கன்னா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

மனோஜ் பாஜ்பாயி, பிரியாமணி முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் Family Man 2 வில் விடுதலைப் புலி உறுப்பினராக நடிகை சாமந்தா தோன்றுகிறார். இத் தொடரின் விளம்பர முன்னோட்டம் வெளியிடப்பட்டத்தும் அதைப் பார்த்த பலர் தமது எதிர்ப்புகளைச் சமூக வலைத் தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

Family Man 1, 2019 இல் அமசோன் பிறைம் மூலம் வெளியாகியிருந்தது. Family Man 2 வின் வெளியீட்டுத் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.