Spread the love
நியூயோர்க்கில் மனதை உருக்கும் சம்பவம்

கொறோனாவைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமான தன் கணவனுக்கு, ஃபேஸ்புக்-பஃபேஸ்ரைம் மூலம், தமது திருமணத்தன்று இசைக்கப்பட்ட பாட்டை இசைத்து மனைவி இறுதிவிடை கொடுத்தனுப்பிய துயரமான சம்பவம் நியூ யோர்க்கில் நடைபெற்றுள்ளது.

மரணமடைந்த கணவர், ஜோ லூவிங்கெர், சம்பவத்தின்போது, கொறோனாவைரஸ் தொற்றுக் காரணமாக வாஷிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.

“இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவரது அச்சத்தைக் குறைத்து சாந்தப்படுத்துவதற்காகத் தான் தினமும், 24 மணித்தியாலங்களும் அவரோடு ஃபேஸ்ரைம் மூலம் பேசிக்கொண்டிருப்பேன். அவர் தனிமையில் விடப்படவில்லை என அவருக்கு நான் உறுதியளித்துக் கொண்டிருந்தேன்” எனத் திருமதி லூவிங்கெர் சி.என்.என் னிற்குத் தெரிவித்தார்.

நோய்த் தொற்று அச்சம் காரணமாக நோயாளிகளருகில் போக எவரையும் அனுமதிப்பதில்லை. ஜோ லூவிங்கெரின் சுவாசத் திறன் குறைந்துகொண்டு போகிறது என மருத்துவர்கள் அறிவித்தபோது, அவரோடு ஃபேஸ்ரைம் மூலம் தொடர்புகொள்ள அவர்கள் அனுமதித்தார்கள். “அவரைப் பார்க்க முடிந்தது. எங்களை விட்டுவிட்டுப் போய்விடவேண்டாம் எனக் கெஞ்சினேன். அவர் எங்களுக்குத் தேவை என்று மன்றாடினேன்” எனத் திருமதி மோறா லூவிங்கெர் தெரிவித்தார்.

வேறு முறைகளைப் பாவித்து அவரை உயிருடன் வைத்திருக்க டாக்டர்கள் முயன்றதாகவும் அப்போது தான் தங்களது திருமணத்தின்போது இசைக்கப்பட்ட பாட்டை மீண்டும் மீண்டும் அவருக்குப் ஃபேஸ்புக் மூலம் இசைத்துக் காட்டியதாகவும், டாக்டர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என அவர் தெரிவித்தார்.

“தினமும் தன் சாப்பாட்டுப் பெட்டியில் தன் கணவன் காதல் கடிதங்களை எழுதி வைத்து விடுவார். அவர் என்னை எப்போதும் மிக நன்றாகக் கவனித்துக்கொள்வார். தினமும் காலை காப்பி போட்டுத் தருவார்” என அவர் தனது கணவனைப் பற்றி மிகவும் பெருமிதமாகச் சொன்னார்.

ஜோ லூவிங்கெர் சென்ற வார இறுதியில் மரணமானார். அவருக்கு வயது 42.

அமெரிக்காவின் இதர கோவிட்-19 மரணங்களைப் போலவே இதுவும் ஃபேஸ்புக்-ஃபேஸ்ரைம் மூலம் விடைகொடுக்கப்பட்ட ஒன்று.

ஜோ லூவிங்கெர், கடந்த 20 வருடங்களாக, லோங் ஐலண்ட் கத்தோலிக்கப் பட்டசாலையில் உதவி பிரின்சிப்பலாகக் கடமையாற்றிவந்தார். அவருக்கு எந்தவித நோய்களும் இருக்கவில்லை எனவும் கோவிட்-19 இற்குரிய சிறிதளவு அறிகுறிகள் அவருக்கு இருந்தனவெனவும் மோறா தெரிவித்தார். மார்ச் மாதம், செயிண்ட் பட்றிக்ஸ் நாளன்று அவரது காய்ச்சல் அதிகமானதென்றும் அப்போது அவர் சுவாசிப்பதற்குச் சிரமப்பட்டார் எனறும் மோறா மேலும் தெரிவித்தார்.

“இதயத் துடிப்புக் குறைந்துகொண்டு போகின்றது என மருத்துவர்கள் கூறினார்கள். வாழ்வின் இறுதிக் கணங்களைக் கடக்கும்போது, “நீங்கள் ஒரு அற்புதமான கணவர். ஒவ்வொரு நாளும் நீங்கள் என்னை நேசித்து இவ்வுலகில் மிகவும் வேண்டப்பட்டவளாக என்னை உணர வைத்தீர்கள். அதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன் எனக்கூறி அவரை வழியனுப்பி வைத்தேன்”. அவரது இருதயம் இறுதியாகத் தனது துடிப்பை நிறுத்திக்கொண்டது” என அவர்களுடனான இறுதிக்கணங்களை அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Related:  ரொறோண்டோ | வீட்டு உரிமையாளருக்கு $55,000 வாடகை பாக்கி!

இவர்களுக்கு ஒரு மகனும் இரண்டு பெண் குழந்தைகளுமுண்டு.

“தயவு செய்து வீட்டில் இருந்துகொள்ளுங்கள். முன்னர் சந்திக்காத எவருக்கும் அருகே போய்விடாதீர்கள். எவ்வளது தனிமையாகவும், துன்பமாகவும் இருப்பினும், உங்கள் உறவுகளுடன் வீட்டிலேயே இருந்துகொள்ளுங்கள்” என அறிவுறுத்துகிறார் மோறா. (மூலம் சி.என்.என்.)

Print Friendly, PDF & Email
Facetime மூலம் இறக்கும் கணவனுக்கு இறுதி விடைகொடுத்த மனைவி!

Facetime மூலம் இறக்கும் கணவனுக்கு இறுதி விடைகொடுத்த மனைவி!