Sports

EURO 2024: லமீன் யமால் – உதை பந்தாட்டத்தின் குழந்தை நட்சத்திரம்

யூறோ 2024 உதைபந்தாட்டட் சுற்றுப் போட்டியைப் பார்க்காதவர்களுக்கு இந்த 16 வயது ballகுடியின் சாதனைகளை ரசிக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. பார்சிலோனா விளையாட்டுக்கழகத்தில் இணைந்த முதலாவது ஐரோப்பிய கிண்ணத்திற்கான போட்டியில் ஆடி அனைத்து ரசிகர்கள் மனங்களையும் வளைத்துப்போட்டிருக்கும் இந்தப் பையன் ஒரு அதிசயப் பிறவிதான்.

நேற்று பிரான்ஸுக்கும் ஸ்பெயினுக்குமிடையில் நடைபெற்ற யூறோ 2024 கிண்ணத்திற்கான போட்டியில் 2-1 கோல்கள் மூலம் ஸ்பெயின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கிறது. ஸ்பெயின் இதில் ஆறு போட்டிகளில் தொடர்சியாக வெற்றிபெற்று இந்த நிலையை எட்டுவதற்கு யமால் பையனின் கோல்களும், கோல்கலைப் போடுவதற்கு இதர ஆட்டக்காரர்களுக்கு செய்த உதவியுமே காரணம். பிரான்ஸுடனான போட்டியில் லமீன் யமாலின் கோலின் அதிர்ச்சியிலிருந்து பிரான்ஸ் குழு மீளுவதற்குள்ளாக அடுத்த 6 நிமிடங்களில் டனி ஒல்மோவின் இரண்டாவது கோல் ஸ்பெயினின் விதியைத் தீர்மானித்துவிட்டது.

லமீன் யமால் நஸ்றோயி இபானா என்ற இந்தப் பையன் 13 07 2007 இல் பிறந்தவர். தாய் எகுவாடோகினியாவைச் சேர்ந்தவர், தந்தை மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர். யமாலுக்கு 7 வயதாகவிருக்கும்போது இக்குடும்பம் ஸ்பெயினின் கற்றலோனியா மாகாணத்திற்கு குடிபெயர்ந்தது. இங்கு பார்சிலோனா உதைபந்தாட்டக்குழுவின் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற ஆரம்பித்தார் யமால். இந்த வருட யூறோ கிண்ணத்திற்குத் தெரிவான ஸ்பானிய வீரர்களில் யமால் இடம்பெற்றதுடன் அணியின் அதி முக்கிய பதவிகளில் ஒன்றான winger இடத்தையும் பெற்றுக் கொண்டார்.

உதைப்நதாட்டாத்தில் goal keeper, full back ஆகிய பதவிகளுக்கடுத்ததாக wingers வைக்கப்படுகிறார்கள். வலது, இடது எல்லைகளினோரமாக எதிரணி வீரர்களை மடக்கி பந்தைப் பறித்து தமது அணி வீரர்களுடன் ஒரு கட்டமைப்பை (formation) உருவாக்கி இலாவகமாக கோலை அடிப்பவர்களுக்கு வசதி செய்து கொடுப்பதுவே இவர்களின் கடமை. இதில் வலது பக்கத்து winger கடமை யமாலுடையது. போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்து யமால் தனது கடமையை மிகவும் நேர்த்தியோடு செய்து வருவதனால் ஸ்பெயின் கடந்த 6 போட்டிகளில் எதிலுமே தோற்கவில்லை என்பது ஐரோப்பிய கிண்ணப் போட்டியின் சாதனை.

மியூனிக், ஜேர்மனியில் நடைபெற்ற பிரான்ஸுடனான போட்டியில் 8 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கோலோ முவானி தலையினால் பந்தை உள்ளே தள்ளியதைத் தொடர்ந்து 21 ஆவது நிமிடத்தில் யமாலின் long range curler எதிர்பாராதவாறு வந்து நுழைந்தது. நீண்ட தூரத்திலிருந்து பந்தை வளைத்து அடிக்கும் வித்தை எல்லோருக்கும் இலகுவில் கைவராத ஒன்று. அப்படியிருந்தும் இந்த ‘திருஞானசம்பந்தன்’ ஏழு வயதிலேயே இவ்வித்தையைக் கற்றுக்கொண்டுவிட்டான். மிகவும் அனுபவஸ்தர்களாகிய பிரான்ஸ் அணி அனுபவம் குறைந்த இளை இரத்தங்களால் தோற்கடிக்கப்படுவது வருத்தம் தருவது தான், குறிப்பாக பிரெஞ்சு காப்டன் கைலியன் எம்பப்பியின் build-up இன் பின்னணியில்.

லயொனெல் மெஸ்ஸியைக் கடவுளாக வழிபடும் லமீன் யமாலுக்கு அக் கடவுளின் குணம் தொற்றிக்கொண்டுவிட்டது எனப் பலரும் நம்புமளவுக்கு இந்த யூரோ 2024 அவரைத் தூக்கிக் கொண்டாட வைத்திருக்கிறது. ஐரோப்பிய உதைபந்தாட்ட வரலாற்றிலேயே அதிகுறைந்த வயதுடைய ஒருவர் கோல் போட்டமை இதுவே முதல் தடவை. அது மட்டுமல்லாது ஒரு சிறு இடைவெளி கிடைத்ததுமே கணும் தாமதிக்காது நீண்ட தூர இலக்கிற்கு போதுமான விசையுடன் பந்தை உதைக்கும் துரித குணம் இப்பையனிடம் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. பெட்டிக்குள் தனது அணி வீரர் நுழையப்போவதை மிக நீண்ட தூரத்திலிருந்தே பார்த்து அவதானித்து பந்தை உதைக்கும் அவரது பாங்கு யூரோ 2024 இன் நட்சத்திரமாக அவரை இனம் கண்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.