Science & Technology

ERNIE Bot | சீனாவின் Chatbot – செயற்கை விவேகத்திலும் ஆதிக்கப் போட்டி

சிவதாசன்

OpenAI நிறுவனத்தினால் சமீபத்தில் திறந்துவிடப்பட்டு உலகைப் பரபரப்பில் ஆழ்த்திவரும் செயற்கை விவேகப் படைப்பான ChatGPT எனும் உரையாடிக்கு (chatbot இற்கு இப்படியொரு தமிழ்ப் பெயரை இத்தால் சூட்டி விடுகிறேன். இதைவிட நல்ல பெயர் கிடைத்தால் சொல்லுங்கள், திருத்திக்கொள்ளலாம்!!) போட்டியாளனாக – அல்லது போட்டியாளியாக – சீனா தனது உரையாடி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான Baidu வினால் தயாரிக்கப்பட்டு ERNIE bot எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை விவேகக் குழந்தை இப்போது பரீட்சார்த்த தேவைகளுக்காக தனது சுற்றுவட்டத்துடன் உரையாடி வருகின்றது.

இணையத் தொடர்பாடல்களின்போது பின்னணியிலிருந்து உருவியெடுக்கப்பட்டும் தகவல்களைக் கட்டற்ற களஞ்சிய அறையில் சேகரித்து வைத்து அவற்றைக்கொண்டு சொற்களையும், சொற்றொடர்களையும், கேள்வி பதில்களையும் தந்துவந்த ரோபோட்டுகள் இப்போது ஒருபடி மேலே போய் மனிதனுக்குச் சமமான இடத்தில் உட்கார்ந்து அவனோடு விவேகமான உரையாடல்களை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டன. கூகிள், மைக்கிரோசொஃப்ட் போன்ற நிறுவனங்கள் இப்படியான உரையாடிகளை எப்போதோ உருவாக்கியிருந்தாலும் அவற்றை மனித உரையாடல் பரிசோதனைகளுக்கென இலவசமாக திறந்த வெளியில் அனுமதிக்காமல் வழமையான குறிப்பிட்ட ‘தொண்டர் படையிடம்’ பரீட்சிக்கும்படி விட்டுவிட்டன (beta testing). ஆனால் கலிபோர்ணியாவைச் சேர்ந்த OpenAI நிறுவனம் தமது உரையாடியான ChatGPT யை இலவசமாக உலகவலத்துக்கு ஏற்கெனவே அனுப்பிவிட்டது. இந்த உலகவலத்தின் பின்னாலும் இன்னுமொரு தொழில் இரகசியம் இருக்கிறது. அதாவது இலவச பாவனைக்கென்று விடும்போது பெருவாரியான மக்கள் அதைப் பாவித்துப் பரவசமடையலாம். அதன் மூலம் OpenAI தமது தயாரிப்பை roadsafety செய்துபார்த்துத் தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்வதோடு மேலும் பல பில்லியன்கள் தரவுகளைப் பாவனையாளர்களிடமிருந்து உருவியும் கொள்ளலாம். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல இலவசம் என்றால் அது சேவை என இனிமேல் எண்ண முடியாது.

ChatGPT யைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கென பல மில்லியன்கள் வரிசையில் நிற்கிறார்கள். அதன் வெற்றியைக் கண்ட சீன நிறுவனமான பாய்டு ERNIE bot (Enhanced Representation through Knowledge Integration) என்ற தனது உரையாடியைத் தனது சுற்றுவட்டத்தில் பரிசோதித்து வருகிறது. இது வெற்றிகரமானது என நிரூபிக்கப்படும் பட்சத்தில் அடுத்த மாதமளவில் அதை இணையத்தில் உலாவர அனுமதிக்கும் என அது கூறியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் தயாராகிவிட்ட ERNIE bot அடுத்த மாதம் தனது beta test பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது என பாய்டு அறிவித்துள்ளது. இவ்விடயத்தில் ChatGPT முன்னோடியாகக் காணப்பட்டாலும் போட்டி என்று வரும்போது ERNIE, ChatGPT யைவிட வேகமாக முன்னோக்கிச் செல்வதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு என சீன நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம், அடக்குமுறை நாடான சீனா தனது குடிமக்களின் தனிமனித சுதந்திரங்களை மதிக்காது அவர்களது உரையாடல்கள், நடமாட்டங்கள், பொழுதுபோக்குகள், நடை, உடை, பாவனைகள் எனச் சகலவற்றையும் பல தசாப்தங்களாகவே சேகரித்து களஞ்சியப்படுத்தி வந்துள்ளது. இதனால் சுதந்திர நாடுகள் தம்மிடம் வைத்திருக்கும் தரவுத் தேட்டத்தை விடவும் பல்மடங்கு தேட்டத்தை சீனா வைத்திருப்பதால் சீனாவின் உரையாடி கொஞ்சம் பண்டிதத்தனமாக இருக்குமெனெ அவர்கள் பெருமைப்படுகிறார்கள்.

இதைவிட சீனாவில் என்னதான் நிறுவனங்கள் சுயாதீனமாகத் தமது பண்டங்களை உற்பத்தி செய்கின்றன என்றாலும் அரச கண்காணிப்பு இல்லாமல் அங்கு எதுவும் நடந்துவிட முடியாது. அங்குள்ள பல நிறுவனங்கள் சீன இராணுவத்தினால் உருவாக்கப்பட்டவையாகவோ ( ராஜபக்ச இலங்கையும் இதையே ‘கொப்பி’ பண்ணினார்கள்) அல்லது அதன் கட்டுப்பாட்டில் இயங்குபவையாகவோ இருப்பதனால் வழமையாக மேற்குநாடுகளில் தனியார் நிறுவனங்கள் எதிர்நோக்கும் தெருத்தடைகள் அங்கு குறைவு. எனவே ERNIE bot விரைவாக ஓடி முதலிடத்தைப்பெறும் வாய்ப்புக்களும் உண்டு.

இதே வேளை ERNIE bot சீன மொழிக்காக மட்டுமே செய்யப்பட்டது (தற்போதைக்கு). சீன மொழியில் ஒரு சொல்லை மட்டும் வைத்து ஒரு வசனத்தை உத்தேசித்துவிட முடியாது. ஒரு தனிச் சொல் அதற்கு முன்னால் வரும் சொல்லினாலோ அல்லது பின்னால் வரும் சொல்லினாலோ கருத்துமாற்றம் பெறும் வாய்ப்புண்டு. ஆங்கிலத்தில் இப்படியான நெருக்கடிகள் மிக மிகக்குறைவு. இதனால் ERNIE bot இற்கும் பிரச்சினைகள் இல்லயென்று கூற முடியாது. அவர்களது சனத்தொகையைக் கணக்கில் எடுத்தால் வணிகரீதியாக ERNIE bot அதிவிரைவாகப் பணக்காரனாகிவிட முடியும்.

ChatGBT பாவனைக்குத் திறந்துவிடப்பட்டு முதலிரண்டு மாதங்களில் மட்டும் 100 மில்லியன் பாவனையாளர்களை அது எதிர்கொண்டது. நான் முதல் தடவையாக பாவிக்க முனைந்தபோது ‘போயிட்டு கொஞ்ச நாளில திரும்பி ட்றை பண்ணு’ என்று ChatGPT அனுப்பிவிட்டுது. பாவித்த சில நண்பர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஆனால் பள்ளிக்கூடங்களும், பிரின்சிப்பல்களும், தங்கள் மாணவர்களுக்காக ChatGPT பரீட்சைகளை எழுதிவிடுமென்று அஞ்சுகிறார்கள். இனிமேல் பாடசாலைகளோ அல்லது ஆசிரியர்களோ தேவைப்படாமலும் போகலாம். Unemployment வரிசையில் டாக்டர்களையும் இந்த ChatGPT கொண்டுவந்து நிறுத்தப்போகிறது என்ற அச்சமும் உண்டு. சமீபத்தில் ஒரு நோயாளியின் X-Ray றிப்போர்ட்டை மருத்துவர் ஒருவரிடமும் (Radiologist) கூகிள் AI இடமும் கொடுத்துப் பார்த்தபோது மருத்துவரை விட கூகிள் சரியாக நோயை அடையாளம் கண்டுகொண்டதாகச் செய்திகள் வந்திருந்தன.

செயற்கை விவேகத்தினால் வேலை இழந்தவர்கள் சாராயக் கடையை நாடுவார்கள் என்பதால் அரசாங்கங்களுக்கு எல்லாமே இலாபம் தான். (Image Credit: ©  AFP / Jade Gao