கோவிட்-19 மூலம் தொற்றுக்குள்ளானவர்கள், இறந்தவர்கள் பற்றிய புள்ளி விபரங்கள் இன ரீதியாக இன்னும் பகுப்பாய்வு செய்யப்டவில்லை (அல்லது வெளியிடப்படவில்லை?) எனினும், பெரும்பாலான மேற்கு நாடுகளிலும், நகர்வாசிகளிலும், வெள்ளைத் தோல் அல்லாதவர்களே அதிகம் பாதிக்கப்பட்டிருப்ப்து மருத்துவ நிபுணர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதற்கு சமூக, பொருளாதார, அரசியற் காரணங்கள் இருப்பினும், கறுப்பு அல்லது மண்ணிறத் தோலுள்ளவர்களில் வைட்டமின் டி யின் அளவு குறைவாக இருப்பது ஒரு பொதுவான குணாம்சமாகப் பார்க்கப்படுகிறது. வைட்டமின் டி பற்றாக்குறையுள்ளவர்கள் கோவிட்-19 நோயால் அதிகம் பாதிக்கப்படுவதும் அவதானிக்கப்பட்ட ஒரு விடயம்.

பெரு நகரங்களில் வாழும் பலர் அலுவலகங்களிலோ, வீடுகளிலோ பெறுகின்ற சூரிய வெளிச்சம் போதாது என்கின்ற விடயம் சகல இனங்களுக்கும் பொதுவாக இருப்பினும், ஒரே அளவு சூரிய வெளிச்சத்தில் வெள்ளைத் தோல் உற்பத்தி செய்யும் வைட்டமின் டி யை விடக் கறுப்புத் தோலோர் உற்பத்தி செய்யுமளவு குறைவு என்பது ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

அதே வேளை, வைட்டமின் டி இற்கும், கொறோனாவைரஸ் தொற்றுக்கும் நேரடித் தொடர்பேதும் இல்லை எனச் சில நிபுணர்கள் கருதுகிறார்கள் என்பதும் உண்மை.

இங்கிலாந்தின் பொதுச் சுகாதாரத் திணைக்களத்தின் போஷாக்கு நிபுணர் டாக்டர் அலிசன் ரெட்ஸ்ரோன் அவர்களில் ஒருவர். “கோவிட்-19 தொற்றை வைட்டமின் டி குறைக்கிறது என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை ” என அவர் கூறுகிறார்.

அமெரிக்காவிந் இறப்பு வீதங்களை ஒப்பிட்ட, இலஙைகையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர் ஒருவர், சில மாநிலங்களில் வாழும் வெள்ளையரல்லாதவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் அவர்களது இறப்பு  வீதம் பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. லண்டனிலும் இதே கதை தான். அமெரிக்க கறுப்பின மக்களின் இறப்புக்கு, இதர சமூக பொருளாதாரக் காரணங்கள் இருப்பினும், லண்டனில் வாழும் வசதி படைத்த ‘இந்திய’ சமூகத்தின் இறப்பு வீதமும் அதிகமாக இருப்பதற்கு வைட்டமின் டி பற்றாக்குறை ஒரு காரணமாக இருக்குமோ என்னும் சந்தேகம் உண்டாவதையும் தவிர்க்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.

சூரிய வெளிச்சத்தைத் தவிர, முட்டையின் மஞ்சட்கரு, சிவப்பு இறைச்சி, எண்ணைத் தன்மையுள்ள மீன் ஆகிய இயற்கை உணவுகளிலும் வைட்டமின் டி உண்டு.

 மேற்கு நாடுகளில் வாழ்பவர்களுக்கு, மார்ச் மாதப் பிற்பகுதியிலிருந்து செப்டம்பர் இறுதிவரை போதுமான சூரிய ஒளி கிடைக்கிறது. இலையுதிர், கூதிர் காலங்களில் சூரிய ஒளிப் போதாமையினால் வரும் வைட்டமின் டி பற்றாக்குறையைத் தீர்க்க, மருத்துவர்களினால் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் உரிய அளவு வைட்டமின் டி மாத்திரைகளை எடுக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

அதே வேளை அளவுக்கு மேல் வைட்டமின் டி எடுப்பதும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். ஏற்கெனவே கூறியது போல், வைட்டமின் டி யின் முக்கிய தொழிற்பாடு, உடலின் கல்சிய உள்ளெடுப்பை ஊக்குவிப்பது. உடலின் கல்சிய அதிகரிப்பு (hypercalcemia),

சிறுநீரகக் கற்கள் உருவாகுதல் முதல், குமட்டல், தளர்ச்சி, எலும்பு நோவு, அடிக்கடி சலம் கழிப்பு போன்ற இதர உபாதைகளையும் உருவாக்கலாம்.

எனவே உங்கள் மருத்துவரின் ஆலோசனயின்றி எந்தவித மருந்துகளையும் உட்கொள்ளக் கூடாது எனப்து மீண்டு மீண்டும் இங்கு வலியுறுத்தப்படுகிறது.

-வைத்தியன்