Déjà Vu அல்லது தூங்கும் நினைவுகள்
அசை
சிவதாசன்
தலைப்பைப் பார்த்துக் குழம்பிவிடாதீர்கள்.
நெவின் சூஜிக் என்பவர் என்னோடு ரொறோண்டோ சுரங்க ரயில் நிறுவனத்தில் (TTC) பணிபுரிந்தவர். யூகோஸ்லாவியா சிதறடிக்கப்படுவதற்கு முன் அக் கூட்டாட்சி நாடுகளில் ஒன்றாக இருந்த குறோவேசியாவைச் சேர்ந்தவர். போர் உச்சமடைவதற்கு முன் அந்நாட்டின் கடற்படையில் வைஸ் அட்மிரலாக இருந்தவர். கல்வியால் அவர் ஒரு மின் பொறியியலாளர்.

பால்டிக் பிரதேசத்தவர்களிடம் இருக்கும் ஒரு வகையான கிறுக்கு அவரிடமிருந்தது. அதனால் TTC யில் அவருக்கு அதிகம் நண்பர்கள் இருந்ததில்லை. அவருக்கு உதவி செய்வதற்காகவோ அல்லது என்னைப் பழிவாங்குவதற்கோ, நிர்வாகம் அவரை என்னுடைய அலுவலத்துக்கு அனுப்பிவிட்டது.
அலுவலகத்துக்குள் நுழைந்த முதல் நாள் அவர் தன்னை அறிமுகப்படுத்துவதற்கு முதல், என் முகத்தைப் பார்த்தார், பார்த்துக்கொண்டே இருந்தார். நீலக் கண்களுடனான அவரது உயர்ந்த உருவத்தின் அந்தப் பார்வை “உனக்குக் கீழ் நான் வேலை பார்ப்பதா” என்பது போல இருந்தது. எரிச்சல் எனக்குள் எழும்பிக்கொண்டு வந்தது.
“மை ஃபிரெண்ட், நான் உன்னை எங்கேயோ சந்தித்திருக்கிறேன் என்றார்”
“இருக்க முடியாது” என்றேன். தன் தலையைப் போட்டுத் தடவினார்.
“யேஸ், நான் இந் நாட்டிற்கு வந்தே இரண்டு வருடங்கள் தான்” என்றார். அன்றிலிருந்து ஆரம்பித்தது எமது நட்பு.
ஒரு வெள்ளிக்கிழமை மதியம் நாங்கள் இருவரும் அருகிலுள்ள எஸ்பிரஸ்ஸோ கடைக்குப் போய் கோப்பி அருந்தும்போது அவர் தலையை அப்படியும் இப்படியும் ஆட்டிக்கொண்டு ” என்னால் இன்னும் நம்பமுடியாமல் இருக்கிறது. Déjà Vu என்பதில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா எனக் கேட்டார். அச் சொல்லையே நான் கேள்விப்பட்டதில்லை.
“அப்படியென்றால் என்ன” என்று கேட்டேன்.
“முற் பிறப்பு, அப்பிடி இப்படி”
பேச்சு தத்துவம், ஆன்மீகம் என்று பல பரப்புகளையும் கடந்தது. என்னோடு நீண்ட காலமாகப் பழகிய ஒரு உணர்வு தனக்கு என்னைச் சந்தித்த முதல்நாளே ஏற்பட்டிருக்கிறது எனவும் இது பற்றித் தனது மனைவியிடமும் சில நாட்களாகப் பேசியதாகவும் கூறினார்.
Déjà Vu பற்றி தேடியபோது ” a feeling that one has seen or heard something before” என்றிருந்தது.
****
கொறோணாத் தொற்றுத் தீவிரமாக மக்கள் மனங்களைச் சிப்பிலியாட்டிக்கொண்டிருந்தபோது அந்தப் பொல்லாத கிருமியைப் பற்றி அறியவேண்டுமென்ற ஆவலில் என் நம்பிக்கைக்குரிய ஆசான் Kahn Academy யை நாடினேன். இது என்னை உயிர் விஞ்ஞானத்தின் போதையில் நிரந்தரமாக விட்டது. யாழ் மத்திய கல்லூரியில் ஒருகாலத்தில் கரப்பான் பூச்சிகள், எலிகள், சுறாத் தலைகள் என்று வெட்டிக்கிழித்த அனுபவம் இன்னும் அப்படியே இருந்தது. ஒரு கல உயிரினத்திலிருந்து ஆரம்பித்த பரிணாம வளர்ச்சியின் பாதையில் மீண்டும் நடக்க ஒரு சந்தர்ப்பத்தை இது தந்தது. இப் புதிய அனுபவம் திறந்துவிட்ட பெருங்கடல் மீண்டும் சிலேட்டும் பென்சிலும் கொண்டு பாடசாலைக்குப் போகும் ஆனந்தத்தைத் தந்தது.
இப் புதிய அனுபவம் சொல்லித்தந்ததன்படி, எமது தாய் தந்தையரால் எமக்குள் திணிக்கப்பட்ட பரம்பரையலகுகள் (மரபணுக்கள்) எமது பரம்பரைகள மட்டுமல்ல, மனித பரிமாணத்தின் அத்தனை படிகளினது வரலாற்றையும் ‘எழுத்தில்’ (genetic codes) பதிந்து வைத்திருக்கிறது என்ற உண்மை தெரியவந்தது. தாயிலிருந்தும், தந்தையிலிருந்தும் வருகின்ற ஒரு சோடி நிறமூர்த்தங்களில் எது பலமானதோ அதன் குணாதிசயமே ஒருவரில் வெளிப்படும் என மரபணுவியல் கூறுகிறது. வெளிப்படும் குணாதிசயம் (gene expression) பழக்கத்தில் காட்டப்படும். வெளிப்படாதவை (dormant) அவற்றின் சோடி பலம் குன்றும் மட்டும் அமைதியாகத் தூங்கத்தான் வேண்டும். இப்படி பல பில்லியன் மரபணுக் கட்டளைகள் தூக்கத்தில் இருக்கின்றன.
நமது தற்போதைய வில்லன் கொறோணாவைரஸ் உடலில் புகுந்ததும் எப்படி அதன் வருகையை நமது உடலின் கட்டளைத் தலைமையகம் உடனடியாக அறிந்து தன் பாதுகாப்புப் படைகளை ஏவ முடிகிறது என்ற கேள்வி என்னைத் துளைத்துக்கொண்டிருந்த ஒன்று. நரம்புத் தொகுதி ஒன்றே எம்முடலில் இருக்கும் தகவல் நெடுஞ்சாலை. அவை உடலின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் செல்வதில்லை. அப்படியானால் அவ்விடங்களிலுள்ள கலங்களுக்கெல்லாம் தகவல்கள் எப்படிக் கிடைக்கின்றன? அதன் பிறகுதான் தெரிந்தது உடலில் சுரக்கும் ஹோர்மோன்களின் முக்கியத்துவம். உடலின் ஒவ்வொரு கலங்களும் தமக்குள் தகவல்களைப் பரிமாற ஹோர்மோன்களையே பாவிக்கிறது. கலங்களின் தொழிற்பாடுகளை முடுக்கிவிடுவதும், தடுத்து நிறுத்துவதும் இவையே. ஆனால் கட்டளை மூளையிலிருந்து (hippocampus) தான் புறப்பட வேண்டும். இப்போது தான் படைப்பின் புதிர் கொஞ்சம் அவிழ்ந்தது.
இதில் விசித்திரமென்னவென்றால் இக் கட்டளைகள் எல்லாம் ஏற்கெனவே மரபணுக்களில் எழுதப்பட்டிருப்பவை, ஏறத்தாழ ஒரு shop operating procedure (SOP) அல்லது recipe போல. எந்த தொழிற்பாடுகளும் இக்கட்டளையை மீறித் தன் விருப்பத்துக்கு நடைபெற முடியாது. அந்தந்தக் கலங்கள் முடுக்கிவிடப்படும்போது (trigger) மரபணுவில் தரப்பட்ட கட்டளையின்படி காரியம் நடைபெறுகிறது. (இப்படியான கட்டளைகளைக் கொண்டதுதான் mRNA தடுப்பு மருந்து).
சரி இம் முடுக்குதலில் தவறு ஏற்பட முடியுமா? ஆம். ஒன்று: மரபணுக்களில் ஏற்படும் திரிபு மற்றது: தகவலைக் கொண்டுபோகும் தூதுவரான ஹோர்மோனில் ஏற்படும் திரிபு. சும்மா தன்பாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த கலமொன்றைத் திடீரெனக் கட்டுப்பாடற்றுப் பிரிவடையச்சொல்லி ஒரு ஏவல் வருகிறது. கலம் அக்கட்டளையைப் பின்பற்றத்தான் செய்யும் அதுதான் புற்றுநோயாக வளர்கிறது. இது ஒரு திரிபடைந்த மரபணுக் கட்டளையால் ஏற்பட்ட விபத்து. இது ஒரு உதாரணம்.
சரி சும்மா கதையளக்காமல் விசயத்துக்கு வாரும் -அதற்கும் Déjà Vu வுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்கள்.
நண்பர் நெவின் சூஜிக்கின் ‘என்னை எங்கேயோ கண்டது போல இருக்குது’ என்ற அந்த மனக்குழப்பத்துக்கும் இந்த மரபணு முடுக்கலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று எனக்கொரு சந்தேகம். இப்போ எனது மூளையில் ஏதோ முடக்கப்பட்டுவிட்டது என நீங்கள் நினைக்கலாம். உடன் படுகிறேன்.
*****
இப்போது உங்களில் சிலர் பாவித்துக்கொண்டிருக்கும், பலர் வாங்குவதற்குக் கனவுகண்டுகொண்டிருக்கும் Tesla வாகனத்தின் பெயருக்குப் பின்னாலுள்ள நிக்கொலா ரெஸ்லா ஒரு எஞ்சினியர், மேதாவி; நமக்கு இப்போது மின்சாரத்தை வழங்கிக்கொண்டிருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியால் தினமும் உருட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மின்பிறப்பாக்கி (generator) ரெஸ்லாவின் கண்டுபிடிப்பு. அவர் கண்டுபிடித்த பல அதிசயங்கள் ஆய்வுகூடத்தை விட்டு வெளியே வரவில்லை. அந்த மேதாவியின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் இதர விஞ்ஞானிகள் செய்வதுபோல கணித வாய்பாடுகளைக்கொண்டு பெருமுயற்சிகளின் பின்னர் உருவாக்கப்பட்டதல்ல.
ரெஸ்லாவின் மனநிலையை யாராலும் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியாது. அவரது மனநிலை பரவசத்தின் உச்சிக்குப் போகும்போது (trance) அவரது எண்ணத்தில் உருவாகும் சிந்தனைகளின் வெளிப்பாடுகளே அவரது பல கண்டுபிடிப்புகள். இப்பரவச நிலையை எட்டியதும் அவர் நேரடியாக ஆய்வுகூடத்துக்குச் சென்று தனது கருவியின் prototype (முதல் கட்டுமானம்) ஐ அவர் செய்துவிடுவாராம். அவரது லீலைகளைக் கொண்ட biography ஒன்றை நெவின் சூஜிக் எனக்கு வாசிக்கத் தந்தார். சந்தர்ப்பவசமாக ரெஸ்லாவும் ஒரு யூகோஸ்லாவியர்.
ரெஸ்லா வசித்த தொடர்மாடிக் கட்டிடத்தில் வசித்த அயலவர்கள் கட்டிடம் சில வேளைகளில் ஒரு விசித்திரமான அதிர்வுக்குள்ளாவதைப் பற்றி முறையிட்டுள்ளார்கள். அது அவர் அந்தப் பரவச நிலையை எட்டும் வேலைகளிலாகவிருக்கலாம் எனப் பின்னர் கருதப்பட்டது. அது மட்டுமல்லாது ரெஸ்லா ஆழ் தியானம் செய்பவர். அவருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் நெருக்கமான தொடர்பிருந்தது. சரி தியானத்துக்கும் இதுக்குமென்ன தொடர்பென்னவென்று கேட்கிறீர்கள்.
தியானத்தின் மூலம் ஒருவரது உடலின் கட்டுப்பாட்டை auto mode இலிருந்து manual இற்கு மாற்ற முடியும். முனிவர்களும், துறவிகளும் தமது பசியையும், கோபத்தையும், காமத்தையும் இன்னோரன்ன இச்சைகளையும் கட்டுப்படுத்த தியானத்தையே கருவியாகப் பாவித்தார்கள். ஒருங்கு குவிக்கப்பட்ட சக்தியின் மூலம் இது சாத்தியமென்கிறது இந்திய தத்துவ நூல்கள். ரெஸ்லாவும் தன் தியான செயற்பாட்டின் மூலம் தன்னுள்ளே ஒடுங்கிக் கிடந்த (dormant) ‘அமானுஷ்ய’ சக்தியைத் தட்டி எழுப்பியிருக்கலாமா? பசிக்குக் காரணமான ஹோர்மோன் சுரப்பையோ, காமத்துக்குக் காரணமான ஹோர்மோன் சுரப்பையோ, சீரணிப்பிற்கான (metabolism) ஹோர்மோன் சுரப்பையோ எம்மால் கட்டுப்படுத்த முடியுமா? ஏற்பதற்கும் மறுப்பதற்குமான ஆதாரங்களில்லை.
நெவின் சூஜிக்குக்கும் எனக்குமான இறுதிக்கால விவாதங்கள் இப்படித்தான் இருந்தன. எங்கள் உடலில் தூங்கிக்கொண்டிருக்கும் பலவிதமான காட்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றுக்கு கால எல்லை இல்லை. அவை எமது பல பிறப்புக்களையும் தாண்டி மரபணுக்களின் மூலம் கடத்தப்பட்டுக்கொண்டு வருவது என்பது அவரது வாதம். தூங்கிக் கொண்டிருக்கும் அந்த ஞாபகங்களை விருப்பின் மூலமும் (தியானமூலமும்) தட்டி எழுப்பலாம். பொதுவாக அவை ஆழ்நிலையில் ‘மறக்கப்பட்டவையாகவே’ இருக்கும். பவ்லோவின் நாய் போல ‘ஏதாவது ஒன்று’ முடுக்கும்போது தூங்கும் இந் நினைவுகள் விழித்துக்கொள்கின்றன. பொதுவாக அவை நினைவுக் கலங்களாக இருப்பின் அங்கு பதியப்பட்டுள்ள காட்சிகள், சம்பவங்கள் மீண்டும் திரையிடப்படலாம். இந் நினைவுக் கலங்களில் பல்வேறு பிறப்பு அனுபவங்களும் பதியப்பட்டிருக்குமானால்? அதுவே நெவினின் சந்தேகம்.
‘என்னை அவர் எங்கோ பார்த்திருந்த’ அந்த அனுபவம்கூட அவரது ஏதோ ஒரு மரபணுவிலோ அல்லது நரம்புக்கலமொன்றிலோ நீண்ட காலமாக உறங்கிக்கொண்டிருந்திருக்கலாம், யார் கண்டது? ஆனால் அதை உறுதியாக நம்பினார்.
துர்ப்பாக்கியமாக எம்மிடையேயான இத் தத்துவ விசாரணைகள் தொடரமுடியவில்லை. நான் விடுமுறைக்கு அமெரிக்காவுக்குச் சென்றது அவருக்குப் பிடிக்கவில்லை. ‘உனது இனத்தை அழிக்கத் துணைபோன அமெரிக்காவுக்கு நீ எப்படிப் போகலாம்” என்பது அவரது வாதம். தனது நாட்டைச் சிதறடித்தது அமெரிக்கா என்ற தீராத கோபத்துடன் அவர் இருந்தார். ஒரு தடவையாவது அவர் அமெரிக்கா செல்லவில்லை. அத்தோடு அவர் என்னோடு பேசுவதை நிறுத்திவிட்டார். எனக்கும் வேறு திணைக்களத்துக்கு மாற்றம் கிடைத்துவிட்டது. அவரது கிறுக்குத் தனத்தை நான் பூரணமாகத் தெரிந்துகொண்டபோது அவர் இறந்துபோனதாகத் திணைக்களத் தகவல் படிவத்தில் வந்திருந்தது.
Déjà Vu வில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ “keep an open mind, my friend” என்ற அவர் அடிக்கடி கூறும் வார்த்தைகள் இன்றுவரை அந்த Déjà Vu தருணங்களை நினைவுபடுத்துகிறது. So long Neven, we shall meet where you thought we have met once.
(‘அன்புநெறி’ 2021 மலரில் பிரசுரமானது)