Columns

CTC: ஸ்காபரோ பிரகடனம்

“CTC என்ற சொற் சுருக்கத்துடன் எவராவது தொழில் முயற்சிகள் தொடங்கினால் அதற்கு உரிமப் பாவனைக் கட்டணம் செலுத்தவேண்டும் என இத்தால் அறிவிக்கிறேன்” என அறிவிப்பு வந்தால் ஆச்சரியப்படவேண்டாம். பெயர் அந்தளவுக்கு hot ஆகிவிட்டது. கனடிய தமிழர் பேரவை ஆரம்பித்த நாளிலிருந்து இப்போதுதான் அதன் நாமகரணம் தினமும் செபம் செய்யப்படுகிறது. மாமரத்திலிருக்கும் குரங்குக்குக் கல்லெறிந்த கதைதான். Brilliant idea. ‘பிரகடனத்துக்கும்’ GTF இற்கும் நன்றிகள்.

நேற்று முன்தினம் ஊடகச் சந்திப்பு ஒன்று நடக்கவிருக்கிறது எனக் கனடியத் தமிழர் கூட்டு (CTC) என்றொரு அமைப்பின் convener அழைப்பு அனுப்பியிருந்தார். ‘ஊடகர்’ என்று மதித்து அழைப்பு அனுப்பியிருந்தமையைக் கனம் பண்ணவேண்டுமென்பதற்காகச் சென்றிருந்தேன். “எப்பொருள் யார் யார் mike(கில்) கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற கள்ள நோக்கத்துடன் அங்கு போனேன். வழக்கமான ஊடகர் சந்திப்புகளில் ஊடகர்கள் தமக்குள் வகுப்பு எடுப்பது வழக்கமெனினும் இது வித்தியாசமாக இருந்தது – காரணம் கூறத் தேவையில்லை. ஊடகர்களை விட ஊடாடுபவர்கள் அதிகம்பேர் இருந்தனர். ‘எதிர்கால ‘கூட்டு’- அமைப்பாளர்களாக இருக்கலாம்.

கூட்டத்தின் நோக்கம் ‘இமயமலைப் பிரகடனம்’ (HD) பற்றியது எனக் கூறப்பட்டது. ஐந்து பேர் மேடையை அலங்கரித்தார்கள். கூட்டு ஏன் ஆரம்பிக்கப்பட்டது? அதன் அவசியம், அவசரத்தின் காரணங்கள் என்ன என விளக்கம் தரப்பட்டது. ‘கட்டாக்காலியாக’ நடமாடும் கனடிய தமிழர் பேரவையை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவருவதே இதன் நோக்கம் எனவும் அது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் ‘கூட்டு’ கலைக்கப்பட்டுவிடும் எனவும் மேடை முதல்வர் அபி சிங்கம் கூறினார். இதற்குப் பின்னால் உள்நோக்கம் ( ulterior motive) எதுவுமில்லை என உத்தரவாதமளித்தார். ‘பேரவை’ கட்டிற்குள் கொண்டுவரப்படும் என்பதில் ‘கூட்டு’ அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பது தெரிந்தது.

மேடை விளக்கம் முடிந்தவுடன் மைக் சபைக்குள் வந்தது. முதலாவது கேள்வியை ‘தேசியம்’ இலங்கதாஸ் பத்மநாதன் கேட்டார். “இப்படியொரு அமைப்பைத் தொடங்குவதற்கு உங்களுக்கு இந்த ஆணையை யார் தந்தது?” என்ற தொனியுட்பட்ட கேள்வி. சமீப காலங்களில் அரசியல்வாதிகள் முதல் ‘ஆன்ரி’கள் வரை கேட்டு வரும் கேள்வி. “பேரவையின் ஆரம்பத்தில் எங்களுக்குப் பங்கு இருந்தது. நாம் தொண்டர்களாக உழைத்து உருவாக்கியதுதான் இந்த அமைப்பு. அது பாதை மாறும்போது அதைத் திருத்த எங்களுக்குக் உரிமையுண்டு” என்ற சாராம்சத்தில் சிலர் பதிலளித்தார்கள். “‘Founding fathers’ என்ற வகையில் ‘பேரவையைக்’ கேள்வி கேட்க, திருத்த எங்களுக்கு அருகதை உண்டு” என்ற கருத்துப்பட சந்திரகாந்தன் அடிகள் தன் கருத்தைத் தெரிவித்தார். அப்படிப் பார்த்தால் பிறப்புப் பெற்றோர்கள், பின்னர் வளர்ப்புப் பெற்றோர்கள் (foster parents) எனப் ‘பேரவை’ க்கு பல பெற்றோர்கள் இருந்து அதைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பது குறித்து திருவாளர் பொதுமகன் புளகாங்கிதம் அடைந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் பின்னர் திரு. பொ.ம. தந்த இன்னுமொரு தகவல் எனக்கு அதிர்ச்சி தந்தது. “‘பேரவை’ ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அனாதையாக விடப்பட்ட நிலையில் திருவாளர் தியோ அந்தோனி அவர்களுடைய அலுவலகத்தில் அது தஞ்சம் புகுந்தபோது ‘பேரவையிடம்’ ஒரு சதம் வங்கியில் இல்லை, ஒரு கதிரை மேசை கூட இல்லை” என அப் பொ.ம. கூறினார். பின்னர் தத்தெடுத்த வளர்ப்பு பெற்றோர் அதை மிக ஊட்டத்துடன் வளர்த்து விட்டார்கள். சிலவேளைகளில் உண்மையான பெற்றோர் கைவிட்ட படியால் தான் ‘பேரவை’ இப்படிக் கட்டாக்காலியாக வளர்ந்ததோ என அப் பொ.ம. கேட்டார். கண்ணீர் வரப் பார்த்தது.

வேறு பலரும் கேள்விகளைக் கேட்டார்கள். அவற்றை விட பெரும்பாலான ஊடகர்கள் மேடையில் இருந்தவர்களுக்கு வகுப்பு எடுத்தார்கள். இது ஒரு தமிழ் ஊடக சந்திப்பு என்பதை மறந்துவிட்டதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். உடம்பு சிலிர்த்தது. நிறைய சனம். ஒழுங்கமைப்பு சிறப்பு. அபி சிங்கம் மிகவும் இலாவகமாகக் கையாண்டார். வழக்கமான ‘இனப்படுகொலை’, ‘சுமந்திரன்’ போன்ற தேசிய அம்புகளிலிருந்து விலத்தி “இது ‘இமையமலைப் பிரகடனம்’ பற்றியது மட்டுமே” என அவர் ‘யுவர் ஆனர்களுக்கு’ அடிக்கடி வகுப்பெடுத்து கொஞ்சம் களைத்துப் போனார், பாவம்.

‘கூட்டில்’ ஒருவரான நீதன் சானைத் தவிர வேறொரு current தமிழ் அரசியல்வாதிகளும் சமூகமளித்திருந்ததாகத் தெரியவில்லை. Aspiring politicians களை இனம்காட்ட நான் விரும்பவில்லை. இக்கூட்டில் நீதன் ஷான் ஒருவராக இருப்பது சரியாகப் படவில்லை. அவர் ஒரு sitting politician. அரசியல்வாதிகளுக்குரிய கட்டுப்பாடுகளை மீறி அவர்களால் சுதந்திரமாகக் கருத்துக்களைக் கூறமுடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்பவன். ஆனால் சில தமிழ் அரசியல்வாதிகள் பொதுவெளியில் நாக்குகளைப் புரட்டிவிட்டுப் பின்னணியில் மன்னிப்புக் கேட்டுக் கொள்வார்கள் என்பது வேறு. ‘பிரகடனத்திற்கு’ நீதன் ஷான் கொடுத்த வரைவிலக்கணம் full of b.s. அவரது வரைவிலக்கணத்திற்குள் ‘திம்பு பிரகடனம்’ அகப்படாது என்பதை அவர் சற்றே திரும்பிப் பார்ப்பது நல்லது.

“அண்ணன் வந்தால் குடுப்பன்” என்ற சொற்பதத்தை இப்போது “உவங்களுக்கு இந்த ஆணையை ஆரு குடுத்தது” என்னும் சொற்பதம் விலத்தி வைத்துவிட்டது. இவ்விழாவை யார் ஒழுங்கு செய்தவர்கள் என்று தமிழர் தெருவிழாவில் பங்குபற்றுபவர்களிடம் கேட்டால் பெரும்பாலானவர்களுக்கு அது தெரியாது. ஆனால் ‘இமயமலைப் பிரகடனம்’ செய்யப்பட்டதிலிருந்து அதன் எதிரிகள் ‘பேரவை’யின் பெயரைப் பிரபலமாக்கி விட்டார்கள் என்று திரு. பொ.ம. கூறினார். அவரின் புத்திக்கூர்மை ‘பேரவையின்’ எதிரிகளுக்கு இல்லாமற் போனதை நினைத்தவுடன் இரந்டு ‘ஷொட்’ அடிக்கவேண்டும் போலிருந்தது. ‘பேரவையினர்’ கைகளைக் கட்டிக்கொண்டு பேசாமல் இந்த free promotion ஐ ரசித்துக்கொண்டு இருக்கலாம்.’பேரவை’ யை ஒழித்துக்கட்டவேண்டும் என்று கூக்குரலிட சில முகவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் அவதானிக்கப்பட வேண்டியது. Commission rate தெரியாது.

ஆணை குடுப்பது / எடுப்பது என்ற விடயத்தில் கொஞ்சம் மயக்கம் இருக்கிறது. எந்தவொரு அமைப்பின் ஆரம்பமும் சமூக அக்கறையுள்ள ஒரு நான்கைந்து பேரினால்தான் ஆரம்பிக்கப்படுகிறது. அதற்கும் தொண்டர்களைச் சேர்ப்பது மிகவும் கடினம். தலைவர்கள், செயலாளர்கள் என்று ஒரே சுழற்சி முறை ஆட்சிதான் அங்கும் நடக்கும். அது funding கிடைக்கும் வரை. அதற்குப் பிறகு போட்டியோ போட்டி. சில அமைப்புகள் ‘தேசியக் கடமையைக்’ காட்டி சுழராத முறையில் இருந்துகொள்கின்றன. ‘முடிவு பாதையைத் தீர்மானிக்கிறது’ (end justifies means) என்ற மக்கியாவெல்லியின் தத்துவத்தை மக்களின் தலைகளில் சுமக்கவைத்து காரியங்கள் முடிக்கப்படுவதுமுண்டு. போருக்கு முன்னரும் பின்னரும் நிலைமை இதுதான்.

கனடாவில் பல தொண்டரமைப்புக்கள் இயங்குகின்றன. அரச மானியம் பெற்றுச் சீரும் சிறப்புமாக இவை இயங்குவதற்குக் காரணம் இவற்றில் பெரும்பாலானவை குடும்ப அமைப்புகளாக இயங்குவதனாலாகும். அவற்றின் உருவாக்கத்தில் எந்த மக்கள் ஆணையும் இருபதில்லை. அவை நடைமுறைப்படுத்தும் திட்டங்களினால் ‘பலன் பெறும்’ மக்கள் பேசாமல் கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு ஜாலியாக இருந்துவிடுவார்கள். பிரச்சினை என்று எதுவும் வெடித்தால் அது ‘பணம்’ ‘அதிகாரம்’ சம்பந்தப்பட்டதாகவே இருப்பது வழக்கம். அரசியல்வாதிகள் ‘இக்குடும்பங்களின்’ தூரத்து உறவினர்கள் போல வந்து அவ்வப்போது பட்டு உத்தரீயங்களோடு வீடுகளேகுவது கண்கொள்ளாக் காட்சியென திரு. பொ.ம. வர்ணித்தார்.

கனடிய தமிழர் பேரவையும் ஏறத்தாழ இப்படியொரு அமைப்புத் தான். அது வருடம் தோறும் நடத்தும் ‘தமிழர் தெருவிழா’ விற்கு மட்டுமே அரச மானியம் கிடைக்கிறது என்கிறார்கள். மீதி நடைமுறைச் செலவுகள் அங்கத்தவர் பணத்திலிருந்தும் விளம்பரதாரர்கள், தொண்டர்களிடமிருந்தும் தான் கிடைக்கிறது. ‘தெருவிழாவை’ ப் பிடுங்கி வேறு தமிழரமைப்பொன்றிடம் கொடுக்கவேண்டும் எனச் சமீபத்தில் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இது குறித்து தமிழ் அரசியல்வாதி ஒருவர் நகராட்சி வரை முறையிட்டு இருப்பதாகவும் கேள்வி. எனவே CTC என்ற புதிய ‘கூட்டின்’ ஆரம்பமே இம்முயற்சியை நிறைவேற்றுவதற்கான ஒன்றா? எனத் திரு. பொ.ம. திரும்பத் திரும்பக் கேட்டார். ஆனால் இக் ‘கூட்டின்’ கூட்டத்தில் அபி சிங்கம் மற்றும் சந்திரகாந்தன் அடிகள் ஆகியோரின் பேச்சு இச்சந்தேகத்தை நிரூபிப்பதாக இல்லை.

‘இமயமலைப் பிரகடனம்’ தொடர்பாக கனடிய தமிழர் பேரவை சில தவறுகளை இழைத்திருக்கிறது என்பது பலரது கருத்து. காலம் தான் இதற்குப் பதில் சொல்லும். ‘பொறுப்புக்கூறல்’, ‘இனப்படுகொலை’ தொடர்பாக மக்களின் உணர்வுகளை அது மதிக்கவில்லை என்பது அதிலொன்று. ஆனாலும் ‘பேரவை’ யின் கடந்தகால செயற்பாடுகள் இவற்றைக் கடந்துபோவதற்குப் போதுமானவை. பெரும்பாலான மக்கள் இக்குற்றச்சாட்டுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இக்குற்றச்சாட்டுகளை முன்னெடுப்பவர்கள் இரண்டு வகையினர். ஒன்று மாறிவரும் சமகால உலக ஒழுங்கையும் கடந்தகால பெரும் போர்களுக்குப் பின்னான சமாதான முயற்சிகளையும் புரிந்துகொள்ள முடியாதவர்கள். மற்றது ‘பேரவைக்கு’ எதிரான வன்மத்துடன் செயற்படுபவர்கள். இவர்கள் ‘பேரவையின்’ வெற்றிகளால் புழுக்கம் கொள்பவர்களாகவோ அல்லது அதன் கடந்தகால நடவடிக்கைகளால் காயப்பட்டவர்களாகவோ இருக்கலாம்.

‘பேரவை’ யின் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதும் அதனுடன் நீண்டகாலம் பணியாற்றியவர்களை இலகுவாகப் புறந்தள்ளி வருவதும், ஒருவகையான மேட்டுக்குடித் தன்மையின் பிரதிபலிப்பாக இருப்பதும் அதன் மீதுள்ள பொதுவான குற்றச்சாட்டுகள். ஆனாலும் பண மோசடி அல்லது முதுகு சொறிபவர்களைக் கொண்டாடுவது, குடும்ப, நண்ப உறவுகளுக்கு வாய்ப்புகளை வழங்குவது ( neopotism / cronyism) போன்ற விடயங்களில் அது சற்று நேர்மையாகவே இருந்து வருகிறது என்பது என் கருத்து. ‘பேரவையின்’ வெற்றிக்கும் அதுவே காரணம். இதே வேளையில் வேறேதும் அமைப்புகள் உங்கள் ஞாபகத்திற்கு வந்து அவற்றுடன் நீங்கள் ஒப்பிட்புப் பார்க்க முனைந்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

மொத்தத்தில் இக்கூட்டின் சிலருக்கு ‘பேரவை’ மீது உண்மையான அக்கறை இருப்பது தெரிகிறது. ‘பேரவை’ யின் இயங்கு முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்ற அவர்களது அக்கறை கவனத்தில் எடுக்கப்படவேண்டியது. அவர்களது அக்கறை தானெழுந்தவாரியில் (spontaneous) ஆக இருக்குமென்பதே எனது நம்பிக்கை. மாறாக அது புறவிசைகளின் தாக்கத்தினால் தயாரிக்கப்பட்ட (manufactured) ஒன்றாக இருக்குமானால் அது தோல்வியைத் தழுவ வாய்ப்புண்டு.

நேர்மையாக இயங்கின் இக் ‘கூட்டின்’ பெரும் திட்டத்தினுள் அனைத்து அமைப்புகளும் கொண்டுவரப்பட்டால் ‘கூட்டின்’ இருப்பு மக்களால் நிரந்தரமாக்கப்பட வாய்ப்புண்டு. ஈழ மக்களின் அரசியல் விடுதலையோடு நின்றுவிடாது பொருளாதார விடுதலையையும் ஏககாலத்தில் பெற்றுக்கொள்ள உதவி செய்வது நற்பணியாக இருக்குமென நான் கருதுகிறேன். ‘பேரவை’ இவ்விடயத்தில் உழைப்பதற்கான தடயங்கள் காணப்படுகின்றன.

‘பேரவை’ கனடிய தமிழர்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று என சந்திரகாந்தன் அடிகள் கூறுவது நெருடலைத் தருகிறது. புலம் பெயர்ந்த தமிழர் சமூகம் நான்கு தசாப்தங்களைத் தாண்டி வெற்றிநடை போடுகிறது. போரின் வடுக்களைத் தாண்டி இரண்டாவது தலைமுறை தனக்கான புதிய உலகை நிர்மாணித்துவிட்டது. ஆனால் ஈழத்தில் நிலைமை அப்படியில்லை. அவர்களது அரசியல், பொருளாதார விடுதலைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக புலம்பெயர் தமிழர்களின் உதவிக்கரங்களை ஒன்றிணைத்துக் கொடுப்பதற்கு இவ்வமைப்புகள் முயற்சிப்பதில் தவறில்லை எனவே நான் நினைக்கிறேன். ‘இமயமலைப்’ பிரகடனம் இம்முயற்சிகளில் ஒன்று. வேறெந்த அமைப்பும் முன்னெடுக்கும் முயற்சிகளை முறியடிக்க அது முயலவில்லை.

‘பேரவை’ மீது சுமத்தப்படும் பல குற்றங்களை முன்வைப்பவர்கள் பலர் ‘சுத்தமானவர்கள்’ அல்லர். கிண்டி எடுத்தால் பல அசிங்கங்கள் வெளிப்படும். அதற்காக அக்குற்றச்சாட்டுகளில் உணமை (merit) இல்லாமலில்லை என்ற திரு. பொது மகனின் நமுட்டுச் சிரிப்பையும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. எதற்கும் ‘அண்ணி’ வருமட்டும் பொறுத்திருப்போம்.

‘பேரவை’ மீதான குற்றச்சாட்டுகளைக் கண்ணாடி உடைத்துச் சொல்லிக்காட்டாமல் கூட்டம் போட்டுச் சொல்லியதன் மூலம் தமிழர் ஜனநாயகத்தைப் பேணியதற்கு ‘கூட்டிற்கு’ நன்றி.