COVIDSafe | அவுஸ்திரேலியாவின் தொற்றறிவிக்கும் App
கொறோனோவைரஸ் தொற்றுக்குள்ளானவர்களைக் காட்டிக் கொடுக்கும் ஸ்மார்ட் ஃபோனுக்கான app ஒன்றை அவுஸ்திரேலியா இன்று (ஞாயிறு 26) விநியோகத்துக்கு விட்டிருக்கிறது. அறிவித்து சில மணி நேரத்தில் 1 மில்லியன் பேருக்கு மேல் அதைத் தரவிறக்கம் செய்துள்ளார்கள்.
கோவிட்சேஃப் (COVIDSafe) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த App தரவிறக்கம் செய்யப்பட்ட ஃபோன்கள், 5 அடிகள் தூரத்துக்குள் வந்திருக்கும் போது தமக்கிடையே ‘பேசிக் கொள்ள’ வல்லன. இதற்காக அவை bluetooth தொழில்நுட்பத்தைப் பாவிக்கின்றன. இவர்களில் எவருக்காவது நோய் தொற்று இருப்பவரானால் அவரது 5 அடி சுற்றுவட்டத்துக்குள் வந்து 15 நிமிடங்களுக்கு மேல் நின்றிருப்பாரானால், அவரது ஃபோனில் எச்சரிக்கைச் செய்தி அறிவிக்கப்படும்.
சிங்கப்பூரில் தற்போது பாவனையிலிருக்கும் TraceTogether மென்பொருளைப் பாவித்து அவுஸ்திரேலியா இந்த இலவச App பைத் தயாரித்திருக்கிறது.
நோய் தொற்றியவர் தனது தகவலைப் பயிர உடன்படாத பட்சத்தில் அவரது தகவல்கள் பகிரப்பட முடியாது. அதே வேளை, அவர் நிற்கும் இடம் எதுவென்பதும் பகிரப்பட முடியாது. அவுஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சுக்கு மாத்திரமே இப்படியான பிரத்தியேக தகவல்களைச் சேகரிக்கவும் பரிமாறவும் அருகதையுண்டு.
அப்பிள், கூகிள் ஆகிய நிறுவனங்கள் இபடியான ஒரு App பைத் தயாரிக்கவிருப்பதாக இந்த மாதம் அறிவித்திருந்தன. ஆனால் அவர்களது App பைப் பகிர்ந்துகொள்ள உலகின் எந்த நாடுகளும் முன்வரவில்லை. இத் திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் தரவுகளின் பாதுகாப்புக்கு இவ்விரண்டு நிறுவனங்களினதும் முதன்மை நிர்வாகிகள் தனிப்பட்ட ரீதியில் உத்தரவாதம் வழங்கவேண்டுமென அமெரிக்க செனட்டர் ஜொஷ் ஹோலி கேட்டிருந்தார்.
ஜேர்மனியும் அப்பிள், கூகிள் ஆகியவற்றின் App ஐப் பாவிப்பதற்குத் தயாராகி வருகின்றது.