Opinionமாயமான்

COPE இழுத்த குரங்கு

மாயமான்

இலங்கை மின்சார சபைத் தலைவர் போட்ட வாய்க்குண்டு அரண்மனைக்குள்ளேயே வெடித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதின் பலாபலன் நாட்டு மக்களை மட்டுமல்ல பிராந்திய உறவுகளையும் பாதிக்க வாய்ப்புகளுண்டு.

பொது நிறுவனங்களின் மீதான குழு (Committee on Public Enterprises (COPE)) என்ற பெயரில் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் நடவடிக்கைகள் பற்றிய விசாரணையொன்று பல நாட்களாக நடைபெற்று வருகிறது. ராஜபக்ச ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்ட குழுக்கள் எத்தனை, அவை நடத்தி முடித்த விசாரணைகள் எத்தனை, அவற்றுக்கு என்ன நடந்தது, எவ்வளவு செலவாகியது என்பது போன்றவற்றை அறிய, பத்தோடு பதினொன்றாக இன்னுமொரு விசாரணைக்குழுவொன்றை ராஜபக்ச நியமிக்க வேண்டும்.

COPE இன் விசாரணையில் பலர் போய் உளறியதால் குளறிக்கொண்டு வெளியேறியிருக்கிறார்கள். இந்தத் தடவை அப் பாக்கியம் இலங்கை மின்சார சபைத் தலைவர் எம்.சீ.ஃபெர்ணாண்டோவுக்குக் கிடைத்திருக்கிறது. இது போன்ற உளற்ல்கள் முன்பு நடைபெற்றிருந்தாலும் இவரது உளறல் இலங்கை எல்லைகளையும் தாண்டி புது டெல்ஹி வரையும் கேட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனால் இந்த உளறல் பிராந்திய முக்கியத்துவம் பெறுகின்றது.

அந்த உளறல் இதுதான். மன்னாரில் அதானி குழுமத்துக்கு விற்கப்பட்டதெனக் கருதப்படும் இயற்கை மின்னுற்பத்தித் திட்டம் கோதாபயவின் பணிப்பின் பேரில் செய்யப்பட்டதெனவும் அதற்குக் காரணம் பிரதமர் மோடியின் அழுத்தமெனத் தனக்கு கோதாபய ராஜபக்ச கூறினாரெனவும் ஃபெர்ணாண்டோ COPE விசாரணையில் தெரிவித்திருந்தார். அவரது இந்த வாய்க்குண்டினால் அதிர்ந்துபோன கோதாபய, எப்படி வெருட்டினாரோ, உருட்டினாரோ தெரியாது ஆனால் ஃபெர்ணாண்டோ இப்போது மேலும் உளறத் தொடங்கியிருக்கிறார். கோதாபய தனக்கு அப்படி எதையும் சொல்லவில்லை, விசாரணையின்போது உணர்ச்சிவசப்பட்டுப் போனதால் தானே அப்படி ஒரு பொய்யைச் சொல்லிவிட்டேன், மன்னித்தருள்க என்று கால்களில் வீழ்ந்திருக்கிறார். போதாததற்கு கோதாபய தனது ருவிட்டர் மூலம் (ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மட்டும்) தனது மறுப்பைத் தெரிவித்திருக்கிறார். அவருக்கும் டெல்ஹிலியிலிருந்து மிரட்டல் வத்திருக்கலாம் அல்லது pre emtive ஆக அப்படியொரு அறிக்கையை விட்டிருக்கலாம்.

என்ன இருந்தாலும் இதை ஒரு உணர்ச்சிவசப்பட்ட சாதாரண உளறலாக எடுத்துக்கொள்ள முடியாது. இது ஒரு முற்கூட்டியே திட்டமிடப்பட்ட உளறல் என ஊகிக்கப் பல ஆதாரங்கள் உள்ளன. இந்தியாவிடமிருந்து உதவிகளைப் பெறுவதற்காக சிங்களத் தலைவர்கள் கடந்த நாற்தாண்டுகளில் இப்படியான பல நூற்பொம்மை ஆட்டங்களைச் செய்துவந்திருக்கின்றனர். ராஜீவ் காந்தியை வரவேற்கும் அணிவகுப்பில் துப்பாக்கியால் தாக்கப்பட்டது முதல் இப்படியான ஆட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இந்தியாவும் இதே போன்று நூற்பொம்மை ஆட்டங்களைத் தமிழருக்குச் செய்துவருகின்றது என்பதும் மறுக்க முடியாது. ஆனால் தமிழர்களது எதிர்வினை, இதுவரைக்கும், வஞ்சக முறைகளில் இருந்ததில்லை. நல்லது என்னும்போது அணைப்பதையும், கெட்டது என்னும்போது அடிப்பதையும் தவிர தமிழர் வேறெந்த வகைகளிலும் செயலாற்றியதில்லை. அந்த விதத்தில் தமிழனாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

இந்தியாவை இலங்கை ஒருபோதும் நம்பியதில்லை. நம்புகிறோம் என அது ஆடிய நாடகங்களை இந்தியா நம்பியதோ தெரியாது ஆனால் அது பல தடவைகள் ஏமாற்றப்பட்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. அதைவிட அதிசயம் என்னவென்றால் அது மேலும் மேலும் ஏமாற்றப்படுவதற்குத் தயாராக இருக்கிறது என்பதை நெற்றியில் எழுதி ஒட்டியிருப்பது. இந்தியாவிலிருந்து பெளத்தம் துரத்தப்பட்ட நாள் முதல் துறவிகள் தம்முடன் கொண்டுவந்த இந்த கசப்பு எங்கும் போய்விடப் போவதில்லை. வாங்கும்போது பல்லிளிப்பதும் பசியாறியதும் பல் நறும்புவதும் இலங்கையின் மரபணுவில் செதுக்கப்பட்ட ஒன்று.

பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதிலிருந்து இப்படியான குழிபறிப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழருக்கான நீதியான அதிகாரப் பகிர்வைக் கொடுக்கவேண்டுமென பண்டாரநாயக்கா விரும்பியிருந்ததாகவும் ஆனால் புத்த சங்கத்தின் எதிர்ப்பினாலேயே அவர் அதைக் கிழித்தெறிந்திருந்தார் எனவும் சில வரலாற்றாசிரியர்கள் அபிப்பிராயம் தெரிவிப்பர். ஆனால் இதுவெல்லாம் சிங்கள பெளத்தம் ஆடிய நாடகங்களில் ஒன்றாகவே நான் பார்க்கிறேன். அதாவது ‘எனக்குத் தர விருப்பம் தான் ஆனால் சங்கம் விடமாட்டேன் என்கிறது’ என்கிற பாணியில் இது அமைந்திருக்கலாம். அல்லாது போகில் அவர் தனது ஆங்கிலேய உடைகளைத் துறந்துவிட்டு தேசிய ஆடைகளில் புகுந்திருக்க மாட்டார். இந்த வெள்ளை ஆடைத் தேசியம் மக்களை ஏமாற்றுவதற்கென்றே முன்னெடுக்கப்படும் ஒன்று. இதுவே சிங்கள தேசத்தின் நாடகப் பாணி.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட வடக்கு-கிழக்கு இணைப்பை ஜே.வி.பி., நீதிமன்றத்திற்குச் சென்று துண்டித்திருந்தது. ஜே.வி.பி. யின் இரண்டாவது எழுச்சியிலிருந்து இலங்கையைக் காப்பாற்றிவிட்ட இந்தியாவுக்கு இந்த முதுகுக் குத்து நடைபெற்றது. இதன் போது ஜே.வி.பி. யிற்கு இலங்கை அரசின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. இந்தியா இதற்கு எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை.

ராஜபக்சக்களின் இரண்டாவது வருகைக்கு முன்னர் கொழும்புத் துறைமுகத்திலுள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தை, இந்தியா, அதானி குழுமம், யப்பான் ஆகிவற்றுக்குத் தருவதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் எழுதப்பட்டிருந்தது. ஆனால் ராஜபக்சக்கள் ஆட்சியை ஏற்றதும் தொழிற்சங்கங்களின் அழுத்தங்களின் பேரில் அவ்வொப்பந்தம் இலகுவாக முறிக்கப்பட்டது. இத் தொழிற்சங்கங்களின் பின்னால் சீனாவின் நாணயமற்ற நாணய மாற்றங்கள் இருந்ததெனச் சந்தேகிக்கப்பட்டது.

இதற்கு முன்னரும் பின்னரும் அம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம், தீவுப் பகுதிகளில் மின்னுற்பத்தி நிலையங்கள் எனச் சீனாவுக்கு நிலங்கள் தாரைவார்க்கப்பட்டபோது எந்தவித எதிர்ப்பையும் காட்டாத தொழிற்சங்கங்கள், ஜே.வி.பி., சிங்களத் தேசியவாதிகள் இந்தியாவுக்கு எதைக் கொடுப்பதானாலும் அதை எதிர்க்கிறார்கள். இதற்குப் பின்னால் அரசாங்கம் இல்லை என ஒருபோதும் கூறிவிட முடியாது. ஆனால் அரசாங்கங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படாமலிருக்க இப்படியான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதற்காக சம்பளத்துக்கு அமர்த்தப்பட்ட நடிகர்கள் தான் வீரவன்ச, நாணயக்கார போன்றவர்கள்.

COPE விசாரணைகளில் தேசியவாதிகள் தமது நாடகத்தைச் சற்றே நாகரிகமாக ஆட முற்படுகிறார்கள். அதாவது நீங்கள் அதானி குழுமத்துக்குக் கொடுப்பதில் எங்களுக்கு எந்தவித தகராறும் இல்லை ஆனால் அதைப் பல நிறுவனங்களுக்கும் பரந்தளவில் அறிவித்து போட்டி முறையில் தெரிவு செய்யுங்கள் என்பதே எங்கள் வாதம் என்கிறார்கள். நல்லது ஆனால் அதே நடைமுறையை நீங்கள் சீனா விடயத்திலோ அல்லது உங்கள் சகபாடிகள் விடயத்திலோ நடைமுறைப்படுத்தவில்லை என்பதே இந்தியா முன்வைக்காத வாதம்.

இதே வேளை அமெரிக்க தனியார் நிறுவனமான New Fortress Energy இற்கு 30% உரிமத்தை வழங்கியபோது அதைச் சாத்தியப்படுத்திய பசில் ராஜபக்சவுக்கு எதிராக எந்தவித எதிர்ப்பும் கிழம்பவில்லை. கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தம் முறிக்கப்பட்ட பின்னர், அபிவிருத்தி என்ற பெயரில் சீனாவுக்கே அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலாக ஆழமில்லாத, சீனாவினால் நிராகரிக்கப்பட்ட மேற்குக் கொள்கலன் முனையம் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டது. அப்போதுகூட இந்த ஜே.வி.பி. உட்பட்ட கடும் தேசியவாதிகள் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

இதைவிட இன்னுமொரு விடயம். இந்தியாவிடமிருந்து இலங்கை அத்தியாவசிய கடனுதவிகளைப் பெறும் பேரத்தின்போது தான் திருமலை எண்ணைக் குதங்களும், அதானியின் மன்னார் ஒப்பந்தமும் செய்யப்பட்டன. அப்போதுகூட இந்த விவாதங்கள் எழவில்லை. இப்போது சுமார் US$ 6 பில்லியன்களைப் பெற்று ஓரளவு சுவாசிக்க ஆரம்பித்த பிறகுதான் அதானி விவாதத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். எனவே இது சிங்கள பெளத்த தேசியம் ஆடும் இன்னுமொரு ஆட்டம். இதில் கோதாபய ஒரு ஆட்டக்காரனோ இல்லையோ தெரியாது ஆனால் மின்சார சபைத் தலைவர் உட்பட வழமையான ஒரு குழு பின்னணியில் இருக்கிறது. அதற்கான எண்ணையை சீனா ஊற்றவில்லை எனத் திட்டவட்டமாகக் கூற முடியாது.

அதானிக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்கவேண்டுமென்பது இந்தியாவின் நிபந்தனைகளில் ஒன்றாக இருந்திருக்கலாம். காரணம் கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தத்தில் ஏற்கெனவே இந்தியாவுடன் அதானியும் ஒரு பங்காளி. ஏமாற்றப்பட்டவர்களில் அவரும் ஒருவர். எனவே அவருக்கு மன்னார் மின்னுற்பத்தித் திட்டத்தை வழங்கும்படி பிரதமர் மோடி கேட்டிருக்க வாய்ப்புண்டு. அதை கோதாபயவும் மின்சார சபைத் தலைவருக்குப் பிரத்தியேகமாக அல்லது ‘தெரியாத் தனமாகக்’ கூறியிருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் அதைப் போட்டுடைத்தது ஒரு தற்செயலான காரியமாக இருக்குமெனக் கூறமுடியாது. இது பல பெருச்சாளிகளின் கூட்டுத் திட்டத்தின் ஒரு அங்கம்.

இதைவிட இன்னுமொரு விடயத்தையும் நான் அவதானித்தேன். கோதாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களில் பல முக்கிய புள்ளிகளின் ருவிட்டர் வலையமைப்பில் நானும் இருக்கிறேன். அவர்களது கருத்துக்கள் பெரும்பாலும் தமிழர் விடயத்தில் ஒரு நியாயமான தீர்வைக் கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் கோதாகோகம வெற்றி பெறும்போது அவர்களும் பண்டாரநாயக்காவைப் போலச் சட்டைகளை மாற்ற மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை. இதனாலேயே வடக்கு கிழக்கில் தமிழர்கள் நாமுண்டு நம் சோலியுண்டு என இருக்கிறார்கள்.

அதானி விடயம் என்று வந்ததும் இந்த ‘வலையமைப்பிலுள்ள’ பல இடதுசாரி பிரமுகர்கள் திடீரென ‘அதானி எதிர்ப்புக்’ குளறல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அது மறைமுக இந்திய எதிர்ப்பும் அதன் நிழலில் எப்போதுமே தொங்கிக்கொண்டிருக்கும் தமிழர் எதிர்ப்புமென இலகுவாக அனுமானிக்க முடிகிறது. இந்தியாவிடமிருந்து எண்ணை, எரிவாயு, உணவு, மருந்து, உபகரணம், வாகனம் போதாததற்குப் பணம் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்ட பிறகு மீண்டும் இந்திய எதிர்ப்பைத் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றால் இதன் பின்னால் யார் இயங்குகிறார்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

மற்றய சகோததர்களைப் போல் கோதாபயவுக்கு இப்படியான திருகுதாளங்களைச் செய்வதற்கான குணாம்சம் இல்லை எனப் பலர் கூறுகிறார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டுமென உறுதியாக இருப்பதில் அவரும் ஒருவர் எனவும் கூறப்படுகிறது. அது உண்மையானால் இதில் தீர்க்கமான தீர்மானமொன்றை எடுக்க கோதாபய தள்ளப்படுவார். அவரது இந்த நிலைப்பாட்டின் காரணமாகத்தான் அவரை வெளியேற்றப் பின்னணியில் இருந்து இயங்கும் மாய சக்திகள் முனைகின்றனவா?. அதற்கு கோதாகோகம போராட்டக்காரர்கள் விரும்பிய / தெரியாத பலிக்கடாக்களா? இந்தியாவுக்கு எதிராகப் பூசலைக் கிழப்பிவிட்டு கோதாகோகமவின் வேகத்தைத் தணிக்க ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனை ஏதாவது ஒரு வழியில் கவனத்துக்கு எடுக்கப்படுகிறதா?

எதுவாக இருந்தாலும், மின்சார சபைத் தலவைர் இழுத்த இந்த COPE இல் பலர் மாட்டுப்படலாம். இது கொழும்புக்கு வெளியிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தும் சாத்தியமுண்டு.

சில நாட்களுக்கு முன் சில தமிழ், அடுத்த தலைமுறைக் ‘கல்விமான் – செயற்பாட்டாளர்களைச்’ சந்தித்தேன். இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதாரப் பிரச்சினை தற்செயலானதல்ல, அது தமிழ்ப் போராட்டத்தின் தொடர்ச்சி; அது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான்; அது நிறைவு பெறவேண்டும் என்ற கருத்தில் அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தார்கள். அக் கோணத்தில் இப் பிரச்சினையை நான் முன்னர் அணுகியிருக்கவில்லை. திடீரென்று ஒரு புதிய ஒளிப்புலக் கதவு திறந்தது போன்ற உணர்வு. தெற்கில் தற்போது அவிழ்ந்துவரும் கட்டுக்கள் அனைத்துமே முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது என்ற இப்புதிய கருத்துருவாக்கதை அதானி என்ற பொறி மீண்டும் தீவைக்குமா?

Interesting times….