ColumnsEnvironmentWorldமாயமான்

COP26 | வருடாந்த திருவிழா


மாயமான்

கிளாஸ்கோ, ஸ்கொட்லாந்தில் COP26 என்ற பெயரில் ஒரு திருவிழா நடக்கிறது. இது ஒரு வருடாந்த நடமாடும் திருவிழா. கிரேக்கத்தின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும், வீரத்தை வெளிப்படுத்தும் ஒரு விளையாட்டு விழா எப்படி ஒலிம்பிக்ஸ் என்ற பெயரில் பணம் பண்ணும் திருவிழாவாக ஆக்கப்பட்டதோ அப்படி ஆகிவிட்டிருக்கிறது இந்த ‘காலநிலை’ச் சடங்கும்.

காலநிலை மாற்றம் அச்சம் தருவது என்பதில் மறு பேச்சில்லை. பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது, அதனால் ஏற்படும் பருவநிலைக் கோளாறுகள் பெரும்பாலும் வறிய நாடுகளையே பாதிக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். இதனால் பாதிக்கப்படப்போவது பெரும்பாலும் குழந்தைகள், இனிப் பிறக்கப்போகும் குழந்தைகள், நமது எதிர்காலச் சந்ததிகள். அதற்காக குழந்தைகள் நலனில் அக்கறைகொண்ட UNICEF அமைப்பு அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிடம், குழந்தைகள் சார்பாகச் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது. அதைவிடவும், வறிய நாடுகளிலிருந்து செயற்பாட்டாளர்களும், கனடா போன்ற துருவங்களை அண்டிய நாடுகளிலில் வாழும் பூர்வ குடிகளும் கிளாஸ்கோ திருவிழாவில் வெளிவீதியிலும், உள்வீதியிலும் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

UNICEFF இன் தரவுகளின்படி, காலநிலை மாற்றத்தால்:

  • உலகில் தற்போதுள்ள 1 பில்லியன் குழஃதைகளின் ஆரோக்கியம் மோசமாகப் பாதிக்கப்படும்
  • இவர்களில் அரைவாசிப் பெர் 33 நாடுகளில் வாழ்கிறார்கள்
  • உலகின் காபனீரொட்சைட்டின் 9% அளவு 33 நாடுகளால் உற்பத்திசெய்யப்படுகிறது
  • வளி மாசடைவதற்குக் காரணமான வாயுக்களின் 0.5% த்தைப் 10 நாடுகளே வெளீயேற்றுகின்றன
  • அடுத்த 30 வருடங்களில் 4.2 பில்லியன் குழந்தைகள் பிறக்கப் போகின்றன
  • 2030 ஆண்டளவில் வெப்பநிலை உயர்வை 1.5 பாகை செல்சியஸுக்குள் வைத்திருக்கவேண்டுமென்பதை ஒரு நிபந்தனையாக இவ்வமைப்பு வைத்துள்ளது
  • 3000 ஆம் ஆண்டில் பூமியின் வெப்பநிலை 2.7 பாகை செல்சிசால் உயர வாய்ப்புண்டு
  • 2010 இல் இருந்த மாசு வெளியேற்ற அளவை, அடுத்த 20 ஆண்டுகளில் 45% த்தால் குறைக்க வேண்டும்

என்று யூனிசெஃப் மட்டுமல்ல பருவநிலை மாற்றத்தை நிறுத்தப் போராடும் அனைவரும் முனவிக்கும் கோரிக்கை. இவையெல்லாம் ஒரு சாதாரண மனிதருக்கு புரியும்படியான தரவுகளல்ல. ஆனால் இக் காலநிலை மாற்றத்துக்குக் காரணமானவர்களுக்கும், அதைத் தடுக்கவெனப் போராடும் போராளிகளுக்கும் நன்றாகப் புரிந்த ஒரு விடயம். இப்போது அவர்களோடு கிறெட்டா துன்பெர்க், நிக்கோல் பெக்கெர் போன்ற ‘குழந்தைப் போராளிகளும்’ போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளைத் துவட்டிப் போடும் இப் போராட்டத்தில் வேறுவழியின்றி ‘நானும் ரவுடிதான்’ கணக்கில் அரசியல்வாதிகளும் குதித்துவருகிறார்கள். மக்கள் வரிப்பணத்தில் அவர்கள் காட்டும் படம் தான் இந்த COP26 திருவிழா.



காலநிலை மாற்றம்: ஒரு விளக்கம்

இதற்கு முன்னர் சாதாரண மனிதர் ஒருவருக்கு இக் காலநிலை மாற்றம் பற்றிய ஒரு சிறு வகுப்பு. நித்திரை வரும்போது பந்தியை மாற்றிக்கொள்ளலாம்.

மாசுபடும் வளி (காற்று) க்கும் காலநிலை மாற்றத்துக்கும் என்ன தொடர்பு?

பூமியைச் சுற்றி வளிமண்டலம் (atmosphere) இருக்கிறது. இதில் தரையிலிருந்து 10 கி.மீ. வரையுள்ள வளிமண்டலம் ட்றோபோஸ்ஃபியர் (troposphere) எனவும் 10 – 40 கி.மீ. வரை உள்ள மண்டலம் ஸ்றாட்டொஸ்ஃபியர் (stratosphere) எனவும் அழைக்கப்படுகிறது. இதில் ஒக்சிசன் (O2) ஐதரசன் (H2), காபனீரொக்சைட் (CO2), மீதேன் (CH4) உள்ளிட்ட பல வாயுக்கள் இருக்கின்றன. இவற்றில் காபனீரொக்சைட், மீதேன் ஆகிய வாயுக்களை கூடார வாயுக்கள் (greenhouse gases) எனக் கூறுவார்கள். உதாரணத்துக்கு குளிர் கூடிய நாடுகளில் குளிரான காலங்களில் குளிரைத் தாங்கமாட்டாத தாவரங்களை வளர்ப்பதற்கு கண்ணாடி யன்னமல்களுடனான கூடாரங்களை அமைத்து அதற்குள் தாவரங்களை வளர்ப்பார்கள். இக்கூடாரங்கள் greenhouses என அழைக்கப்படுகின்றன.

இக்கூடாரம் இரண்டு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. ஒன்று தேவையான சூரிய ஒளியை உள்ளே விடுகிறது. இரண்டாவது இத் தாவரங்களிலிருந்து வெளியேறும் நீராவி கூடாரத்துள் தங்கியிருப்பதால் உள்ளே சென்ற வெப்பத்தைத் திரும்ப வெளியேற விடாது தடுத்து விடுகிறது.. இதனால் அங்கு வளரும் தாவரங்களுக்கு உஷ்ண வலயச் சூழல் வழங்கப்படுகிறது. இங்கு நீராவி (H2O) காபனீரொக்சைட்டைப் போலவே ஒரு கூடார வாயுவாகச் செயற்படுகிறது. உள்ளே அனுமதித்த சூரிய ஒளி வெப்பமாக வெளியேறுவதை அனுமதிக்க மறுக்கும் இந்தக் குணாதிசயததைத்தான் greenhouse effect என்கிறார்கள்.

நாம் முன்னே பார்த்த ஸ்ட்றாட்டோஸ்ஃபியர் மண்டலத்தில் நிறைய கூடார வாயுக்கள் இருக்கின்றன. இவை சூரியனிலிருந்து உள்ளே ஒளி வடிவில் வரும் சக்தியைத் தடுக்கமாட்டா. ஆனால் பூமியிலிருந்து தெறித்து வரும் வெப்பத்தைத் தடுத்துவிடும். காரணம் உள்ளே போன சூரிய சக்தி ஒளி வடிவத்திலும் (light waves) , தெறித்து வரும் வெப்பம் அகச்சிவப்புக் கதிர்களாகவும் (infra red waves) வருவதால் தான் இந்த நிலைமை. ஸ்றாட்டோஸ்ஃபியர் மண்டலத்தில் இருக்கும் காபனீரொக்சைட், மீதேன், நீராவி (நீர்) ஆகிய கூடார வாயுக்களே இத் தடுப்பு வேலைகளைச் செய்கின்றன. எனவே இம் மண்டலத்தில் அதிகம் காபனீரொக்சைட் வாயு இருந்தால் பூமியின் மேற்பரப்பில் அதிக வெப்பம் தங்கிக்கொள்ளும்.

இத்தனைக்கும், வளிமண்டலத்தில் இருக்கும் காபனீரொக்சைட் ஆக 0.04% மட்டுமே. அப்படியிருந்துமா இந்த நிலை என்று நீங்கள் கேட்பீர்கள். 1700 களில் தொழிற்புரட்சி உலகைப் புரட்டி எடுப்பதற்கு முன்னர் வளிமண்டலத்திலிருந்த காபனீரொக்சைட்டின் அளவைவிட இப்போதுள்ள அளவு 40% த்தால் அதிகரித்திருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்களுண்டு. ஒன்று தாவரங்களை வெட்டிக் குவிப்பது. இரண்டாவது மரங்களையும், நிலக்கரியையும், பெற்றோல் போன்ற எரிபொருட்களை வாகனங்களில் பாவிப்பது மற்றும் எரிப்பதன் மூலம் நாமே காபனீரொக்சைட்டை உற்பத்தி செய்து வளிமண்டலத்துக்கு அனுப்புகிறோம். இதனால் ஒவ்வொரு வருடமும் இவ்வாயுவின் அளவு அதிகரித்துக்கொண்டு போவதால் பூமியின் வெப்பநிலையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. 3,000 ஆம் ஆண்டில் அது 2.7 பாகை செல்சியஸால் அதிகரிக்குமென எதிர்வுகூறப்படுகிறது.



வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதனால் வரட்சி ஏற்படும் அதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். ஆனால் அதைவிட மிக முக்கியமான இன்னுமொரு காரணமுமுண்டு. அதாவது பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதால் துருவங்களிலுள்ள பனி மூடிகள் உருகவாரம்பித்துவிட்டன. இதனால் கடல் நீரின் உயரம் அதிகரித்து பல தீவுகள் கடமில் மூழ்கும் அபாயமுமுண்டு. அத்தோடு பனி மூடிகளின் அளவு பெரிதாக இருக்கும்போது அது சூரிய ஒளியைக் கண்ணாடியைப் போல் திருப்பி (ஒளியாகவே) வளிமண்டலத்துக்குத் திருப்பியனுப்பிவிடுகிறது. ஏற்கெனவே சொன்னதுபோல கூடார வாயுக்கள் வெப்பத்தை மட்டும்தான் (infrared waves) தடுத்துவிடுமே தவிர ஒளியையல்ல. எனவே ஒளிவடிவத்தில் சூரிய சக்தி திருப்பி அனுப்பப்படுவதால் அது பூமிக்கு நன்மையாகவே இருந்தது. இந்நிலையில் பனி மூடிகள் உருகித் தண்ணீராக மாறிவிட்டால் சூரிய சக்தி திருப்பித் தெறித்து விடாமல் வெப்பமாக பூமியிலேயே தங்கிவிடுகிறது.

இன்னுமொரு விடயம், பூமியின் நிலப்பரப்பு அதிக வெப்பமடையும்போது அதிலிருக்கும் நீர்த்துணிக்கைகள் நீராவியாகி மேலெழுந்து வளிமண்டலத்தை அடைந்ததும் அதுவும் காபனீரொக்சைட்டைப் போல ‘கூடார வாயுவாக’ மாறி பூமியின் வெப்பத்தைத் திருப்பி அனுப்பிவிடும். எனவே பூமி வெப்பமாதல் ஒரு தொடர் சங்கிலியாக அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

சமநிலை

அப்போ மனிதன் வளிமண்டலத்தை மாசுபடுத்தாமல் இருந்த காலங்களில் பூமி வெப்பமடைந்திருக்க முடியாதா என உங்களில் சிலர் கேட்கலாம். தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் மரம் அல்லது நிலக்கரி, எண்ணை போன்ற பொருட்கள் அப்போது அதிகம் எரிக்கப்படவில்லை. காடுகள் அதிகம் அழிக்கப்படவில்லை. மின்சாரம் பாவனையில் இல்லாமையால் அதன் தயாரிப்புக்காக நிலக்கரிகளோ அல்லது டீசலோ பாவிக்கப்படவில்லை. மாடுகளாலும், குத்க்ஹிரைகளாலும் இழுக்கப்பட்ட வண்டிகள் காபனீரொக்சைட்டை வெளியேற்றவில்லை. காடுகள் வளியிலிருந்து காபனீரொக்சைடையும் நீரையும் தொடர்ந்து உறிஞ்சிக்கொண்டே இருந்தன. இவற்றைக் கொண்டுதான் சூரிய ஒளியுடன் அவை அமக்கான உணவைத் தயாரித்துத் தந்தன. இயற்கையாக உருவாகும் காபனீரொக்சைட்டை இயற்கையே பாவித்துக்கொள்வதால் எப்போதுமே சமநிலை பேணப்பட்டு வந்தது. தொழிற்புரட்சி இச் சமநிலையைப் புரட்டிப் போட்டுவிட்டது. வளிமண்டலத்தில் காபனீரொக்சைட்டின் அளவு அதிகரித்துவிட்டது.

COP26

சரி, அதிகமான வாகனங்கள் எண்ணைகளை எரிப்பதும், காடுகள் எரிக்கப்படுவதும், நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிப்பதுமெனப் பல வழிகளில் மனிதன் காபனீரொக்சைட்டை உருவாக்குகிறான்; அதைக் குறைக்கவேண்டுமென்பதுவே இந்த COP26 திருவிழாவின் நோக்கம். எப்படி இந்நாடுகள் அதைச் சாதிக்கப்போகின்றன என்பது அடுத்த கேள்வி.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி, வளியிலிருக்கும் காபனீரொக்சைட்டின் அளவைக் குறைப்பதுவே இம்மாநாட்டில் பங்குபற்றும் நாடுகளின் நோக்கம். அதன் முதல் படியாக எரிபொருளில் இயங்கும் வாகனங்களை மின்வாகனங்களாக மாற்றுதல், சூரிய ஒளி, காற்று, அலை, நீர் போன்ற இயற்கையாக பெறக்கூடிய சக்திமூலங்களைப் பாவிப்பதன் மூலம் நிலக்கரி மற்றும் டீசலிலிருந்து மின்சாரம் பெறுவதைக் குறைப்பது. வீடுகள், தொழிற்சாலைகளில் சக்தியை விரயம் செய்யாது பாதுகாத்தல் எனப் பலவிதமான மாற்று வழிகளைக் கையாளல். இதன் மூலம் வளிமண்டலத்துக்கு அனுப்பும் கரியின் (காபனீரொக்சைட்) அளவைக் குறைப்பதற்கு ஒவ்வொரு அபிவிருத்தியடைந்த நாடுகளும் வருடாந்தம் US$ 100 பில்லியன்களைச் செலவுசெய்யவேண்டுமெனத் தீர்மானித்துள்ளன. இதற்கு ரஷ்யா, சவூதி அரேபியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நாடுகள் எல்லாம் எண்ணை, இயற்கை வாயு ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் தமது அன்னியச் செலவாணியைப் பெறுகின்றன என்பது இதற்கு முக்கிய காரணம்.



இதில் நகைப்புக்குரிய விடயமென்னவென்றால், அபிவிருத்தியடைந்த, அடைந்துவரும் நாடுகள் தான் பூமியின் காபனீரொக்சைட் அதிகரிப்பிற்குக் காரணமானவர்கள். ஆனால் அவர்களின் பேராசைக்குப் பலிக்கடாவாக்கப்படுவது வறிய நாடுகள் தான். உதாரணமாக பூமி வெப்பமடைவது போலவே, கடலடி நீரும் வெப்பமடைகிறது. இதனால் ஏற்படும் நீரோட்ட மாற்றங்கள் புயல், சூறாவளி, மழை, வெள்ளப்பெருக்கு ஆகியவற்றுக்குக் காரணமென (El Nino, El Nina) விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இதனால் அநேகமாகப் பாதிக்கப்படுவது பஹாமாஸ், இலங்கை, பங்களாதேசம் ஆகிய தீவுகள் மற்றும் வறியநாடுகள் தான். அதேபோல பனிமூடிகள் உருகுவதால் துருவப்பகுதிகளை அண்டி வாழும் வறிய பழங்குடி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.

சென்ற வாரம் சீ.பீ.சீ. வானொலியில் கனடாவின் இனுவிட் குலத்தைச் சேர்ந்த ஒருவர் கூறிய விடயம் மிகவும் நெகிழ்ச்சி தருவதாக இருந்தது. இதுவரை காலமும் தங்களுக்கு மின்சாரத்தை வழங்கிக்கொண்டிருந்த டீசல் இயந்திரங்கள் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டன எனவும், அவற்றுக்குப் பதிலாக இப்போது சூரியத் தகடுகள் (solar panels) மூலம் மின்சாரரம் பிறப்பிக்கப்படுகிறது எனவும் இதனால் மிக நீண்ட காலத்துக்குப் பிறகு தனது கிராமத்தில் காகம் கரைவதைக் கேட்டுத் தான் மகிழ்ந்ததாகக் கூறியிருந்தார். அந்தளவுக்கு டீசல் இயந்திரங்களின் இரைச்சல் சூழலைப் பாதித்திருக்கிறது.

அதே வேளை, COP26 திருவிழாவில் கனடா போன்ற நாடுகள் காபன் வெளியேறத்தைக் குறைப்போமெனச் சூளுரைத்தாலும் அவர்கள் தாம் பாவிக்கும் எரிபொருளைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறார்களே தவிர, தாம் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் எரிபொருளைக் குறைப்போமெனச் சூளுரைக்கவில்லை. அமெரிக்கா fracking எனப்படும் தொழில்நுட்பத்தைப் பாவித்து பூமியின் ஆழத்தில் சிறைப்பட்டிருக்கும் இயற்கைவாயுவைச் சேகரித்து தமது எரிபொருள் தேவையில் தன்னிறவைப் பெற்றுள்ளது. இந்நடைமுறையின்போது தப்பித்து வளிமண்டலத்தை அடையும் மீதேன் வாயுவும் ஒரு ‘கூடார வாயு’ தான். Fracking நடைமுறையைக் கைவிடும்படி சூழலியலாளர் வைத்த கோரிக்கைகளை ஒபாமா நிர்வாகம் நிராகரித்துவிட்டது. ஆனால் அமெரிக்காவும் இத் திருவிழாவில் வறிய நாடுகளுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறது.

கனடா, அவுஸ்திரேலியா, நியூசீலந்து, ஆர்ஜென்ரீனா போன்ற நாடுகள் வணிகரீதியில் நடத்தும் விலங்குப் பண்ணைகள் உருவாக்கும் மீதேன் வாயு பூமியின் வெப்பமதிகரிப்பதற்கான இன்னுமொரு காரணம். இந்நாடுகள் ஒருபோதும் பண்ணை விலங்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் தயாராகவில்லை. மாமிசத்துக்காகவும், பால், வெண்ணெய் போன்ற ஏற்றுமதி வணிகத்துக்காகவும் அவை தமது நடவடிக்கைகளைத் தொடரத்தான் போகின்றன.

எனவே இந்த COP26 திருவிழாவில் படம் காட்டும் அத்தனை நாடுகளும் ஒருவகையில் hypocrites தான். அவர்களது நோக்கம் முழுவதும் மற்ற நாடுகளுக்குப் புத்திமதி சொல்வதே தவிர வேறொன்றுமில்லை. தாம் கீறிய கோடுகளை இலகுவாக மாற்று வழிகளைப் பாவித்து மீறிச் செந்றுகொண்டே இருப்பார்கள். இவ்விடயத்தில் COP26 திருவிழாவில் கலந்துகொள்ளும் இலங்கை ஜனாதிபதியும் பின்தங்கியவரல்ல. அமெரிக்க இயற்கைவாயு விநியோக நிறுவனமான நியூ ஃபோர்ட்றெஸ் எனெர்ஜியுடன் ஒப்பந்தத்தைச் செய்துவிட்டு தாம் இயற்கை வழிகளில் மின்சாரத்தை உற்பத்திசெய்யத் திட்டமிட்டுள்ளதாக விளாசியிருக்கிறார். பாவம் இருக்கிற பிரச்சினைகளுக்குள் ‘நானும் உள்ளேன்’ என்று நாலுபேரோடு கைகுலுக்கவாவது இத்திருவிழா வழி செய்திருக்கிறது.

இப் போராட்டத்தில் அரசாங்கங்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பிருக்கிறது. எவர் எப்படிக் குத்தினாலும் அரிசி வந்தால் சரி ஆனால் குத்த வேண்டும்.