Columnsசிவதாசன்

மாயப் பெட்டி 

அறை – 1

நீண்டநாட்கள் மறைந்திருந்த அந்த nostalgia சங்கடம் கடந்த சில நாட்களாகத் தொல்லை தரத் தொடங்கி விட்டது. பல ஒளித்தட்டுக்கள் (ஒலியும் தான்)அடங்கிய பெட்டியொன்று ஒருநாள் என் மேசையில் குந்திக்கொண்டிருந்தது.

விடயம் இதுதான். எனது நீண்டகாலத் தேட்டமும் இரண்டாவது மிக விருப்பமானதுமான (முதலாவது தமிழ், இலக்கியம், எழுத்து) electronic hobby and serious stuff பலதுக்கு இறுதி விடை கொடுத்து அனுப்பியது என் மனைவிக்கு நல்ல  சந்தோசம். தட்டுகள் நிறைந்த புத்தகங்களுக்கு இன்னும் விதி வந்து சேரவில்லை. இப்போதைக்கு மகிழ்ச்சி. மனைவிக்கு தமிழ் தெரியாவிடடாலும் அவளும்  ஒரு புத்தகப் பிரியை என்பதாலும் இருக்கலாம்.

பெட்டிக்குள் இருந்தவையம் எனது நீண்டகாலத் தேட்டமான ஒலி, ஒளித் தட்டுக்கள். அவற்றுக்கும் பிரியாவிடை கொடுக்கும்படியான வேண்டுகோள் ( அல்லது பணிவாக உத்தரவு) தான் அந்த மாயப் பெட்டி.

1983 இல் கனடா வந்ததிலிருந்து நான் எழுதிய, பேசிய நண்பர்களோடு குலாவிய சமூக, இலக்கிய அரட்டல்களை அவ்வப்போது பதிவு செய்து சேமித்து வைத்தவையே அந்தப் பெட்டியில் இருந்தவை. இவற்றில் எனது இலக்கிய , அரசியற் கிறுக்கல்கள் முக்கியம் பெறாவிட்டாலும் பல நண்பர்கள், படைப்பாளிகள், சுற்றத்தில் இருக்கவேண்டும் என நான் நினைக்கும் சில மனிதர்கள் என்று பலரை உள்ளடக்கிய புகைப்படங்கள் மிகவும் பூதாகாரமாக எழுந்து எனது கரங்களைக் கட்டி விட்டன. அவற்றை குப்பைக்குள் சேர்த்துவிடுவதில்லை என்று தீர்மானித்து விட்டேன்.  அது மட்டுமல்ல அப்படங்களில் உள்ளவர்களில் பலர் அகாலமாகப் பிரிந்து விட்டார்கள்.  அந்தப் படங்கள்  ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதை இருக்கிறது. என் பிரிவிற்கு முன்னர் அவற்றைத் தமிழ்ச் சமூகப் பொது வெளியில் உலவ விட வேண்டும் என்பதே என் பெரு விருப்பு.

 கவிஞர் திருமாவளவன்

கலாநிதி நித்தியானந்தன், திருமாவளவன், சிவதாசன்

இந்தப் படம் 2004ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக நினைக்கிறேன்.
படத்தில் இடது பக்கம் இருப்பவர் பேராசிரியர் மு.நித்தியானந்தன். நடுவில் இருப்பவர் தான் கவிஞர் திருமாவளவன்.

2004ம் ஆண்டு தமிழ் இலக்கியத் தோட்டம் ரொறோண்டோவில் திரு பத்மநாப ஐயர்  அவர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது கொடுத்து கெளரவித்தது. அதன் பின்னொரு நாளில் அவரை நானும் நண்பர்களும் எனது அலுவலகத்தில் சந்தித்தபோது இப் படம் எடுக்கப்பட்டது.

எங்கு எப்படி நாங்கள் அறிமுகமானோம் என்பது தெரியாது. எண்பதுகளில் திருமாவளவன்  மொன்றியாலில் வசித்தார். அங்கு அவரது சில கவிதைகள் பதிப்பு பெற்றன. ஆனால் அப்போது நான் அவரைச் சந்தித்திருக்கவில்லை. ரொறொண்டோவில் தான் அவர் தமிழ் இலக்கிய உலகத்தில் அதிகம் அறியப்பட்டவர் எனவே நினைக்கிறேன்.

திருமாவளவனின் கவிதைகள் பொதுவாகவே ஏக்கம் நிறைந்தவை. போரின் வழுக்களை பிரதிபலிப்பவை சில. இயற்கையை ஆராதிப்பவை சில. பிரிந்த மண்ணின் பிணைப்புகளை இந்தக் கவிஞனாலும் இலகுவாக அறுத்துவிட்டு முடியாது தான்.


பல்கலைக் கழகப் படிப்பு இல்லாதது அவருக்கு ஒரு ஏக்கம். அவருடைய கவிதைகள் தகுந்த அளவுக்கு அங்கீகாரம் பெறவில்லை என்றொரு தாழ்வு மனப்பான்மை அவரிடம் இருந்திருக்கலாம். சுய விளம்பரம் செய்து பிழைக்கும் அளவுக்கு அவர் இறங்கிப் போகவில்லை. கூச்சமோ கொள்கைப் பிடிப்போ தெரியாது. எழுத்தில் இருந்த திறமை வியாபாரத்தில் இருந்திருக்கவில்லை.

அவரது கவிதைகளுக்கான அங்கீகாரம் ஒரு ஜாம்பவானிடம் இருந்து கிடைத்தது. அது எழுத்தாளர், விமர்சகர் வெங்கட் சாமிநாதன். அவருக்கும் இலக்கியத் தோட்டம் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்திருந்தது. அதற்காக ரொறொண்டோ வந்திருந்தபோது நாங்கள் திருமாவளவன் வீட்டில் விருந்துடன் சந்தித்தோம். வெங்கட் சாமிநாதன் எவருக்கும் முகத்துதி பாடுபவர் அல்ல. மிகவும் நேர்மையானவர். அவர் திருமாவளவனின் கவிதைகளை உண்மையிலேயே சிலாகித்தார்.

திருமாவளவன் சிறந்த கவிஞர் மட்டுமல்ல ஒரு கை தேர்ந்த மேடை நடிகனும் கூட.  மகாகவியின் ‘புதியதொரு வீடு’ மற்றும் பல நாடகங்களில் அவர் நடித்திருந்தார்.

உலகத்தில் எங்கிருந்தும் இலக்கிய பிரமுகர்கள் கனடாவுக்கு வந்தால் அவரது வீட்டில் விருந்துண்ணாது போதல் அரிது. அவரது குடும்பம் அவரது காலை இலக்கிய முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுத்தமையும் ஒரு காரணம். அவரது மக்கள் கன்னிகாவும் காலை இலக்கிய நாடக ஆர்வம் கொண்டவர்.
திருமாவளவன் எழுதி வெளியிட்ட சில நூல்களின் முகப்புகளை இங்கே தந்திருக்கிறேன்.

அகாலமாக அவர் பிரிந்தது கனடிய தமிழ் உலகுக்கு பேரிழப்பு.