Science & Technology

Chipபோர்க் கலகம்: வற்றிப்போகும் சிலிக்கன் பள்ளத்தாக்கு

Microchips பற்றாக்குறை பற்றிய ஒரு பார்வை

சிவதாசன்

முன்பெல்லாம் ஒரு புதிய வீட்டை வாங்க விரும்புபவர் முற்பணத்தைக் கட்டிவிட்டு ஓரிரண்டு வருடங்கள் பொறுத்திருக்க வேண்டி இருந்தது. இப்போது புதிய வாகனத்தை வாங்க விரும்புவோருக்கும் அதே நிலைதான். மூன்று, நான்கு மாதங்கள் என்று காத்திருக்க வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக இது மேலும் மோசமான நிலைக்கு வந்துள்ளது. இதற்குக் காரணம் மைக்குரோச்சிப்ஸ் (semiconductors /integrated circuits) பற்றாக்குறை எனக் கூறப்படுகிறது. அப்படி என்னதான் நடந்தது? ஒரு விபரமான பார்வை.

மைக்குரோச்சிப் என்பது ஏறத்தாள மண்ணையும் (சிலிக்கன்), தங்கத்தையும் (பெரும்பாலும்) மூலப்பொருட்களாகக்கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் சுவிட்ச் (On / Off) என்று அண்ணளவாகக் கூறலாம். செல்ஃபோன் முதல் வாகனங்கள் வரை இச் சிப்புகள் இல்லாது இயங்க மாட்டா. இன்றைய கம்ப்யூட்டர்களில் செயலிகளாகப் பயன்படும் மென்பொருள் (software) ஒன்றையும் (1) பூச்சியத்தையும் (0) கொண்டு எழுதப்பட்ட நீண்ட சொற்தொடர். தொல்காப்பியம் மாதிரி அதற்கும் ஒரு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணத்தைப் பின்பற்றியே எல்லோரும் மென்பொருளை உருவாக்குகிறார்கள்.

ஒரு சொல்லை 01001011 என்றவாறு எழுதினால் அதில் பொதிந்திருக்கும் ஏவலை அல்லது கட்டளையைச் செயலாக்குவது இந்த மைக்குரோச்சிப்ஸ் தான். உதாரணத்துக்கு “நான் சுட்டு விரலை உயர்த்தி 1 எனக் காட்டினால் பாத்தியை மூடு எனவும் விரலை மடக்கினால் பாத்தியைத் திற எனவும் ஒரு விவசாயிக்கு தூரத்திலிருந்து சமிக்ஞை அனுப்ப முடியுமானால் அதையேதான் “1” “0” மூலம் மென்பொருள் செய்கிறது. இங்கு விவசாயி மைக்கிரோச்சிப் என எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆரம்பத்தில் இந்த வேலையை ட்ரான்ஸிஸ்டர் செய்தது. மூன்று கால்களைக் கொண்ட இந்த ட்ரான்ஸிஸ்டரும் சிலிக்கன் மற்றும் உலோகப் பொருட்களைக்கொண்டு செய்யப்பட்டது. ஒரு ட்ரான்ஸிஸ்டர் ஒரு சுவிட்ச். பின்னர் தொழில்நுட்பம் வளர பல ட்ரான்ஸிஸ்டர்களை ஒன்றாகக் கூட்டி ஒரு பெட்டிக்குள் வைத்து அதற்கு பல கால்களைப் பொருத்தி மைக்குரோச்சிப் என்று பெயரிட்டார்கள். முதலாவது மைக்குரோச்சிப் 4 ட்ரான்ஸிஸ்டர்களை மட்டும் உள்ளடக்கியிருந்தது. இப்போது அது பல பில்லியன்கள் ட்ரான்ஸிஸ்டர்களை உள்ளடக்கக்கூடியதாக வளர்ந்துவிட்டது. இரண்டு மூன்று அணுக்களின் பருமனில் தங்கம் மற்றும் பெறுமதியான உலோகங்களில் இழைகளைச் செய்து இணைப்புகளை ஏற்படுத்தும் இயந்திரங்கள் இதைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. 1960 களில் இதன் தயாரிப்பிடம் அமெரிக்காவின் கலிபோர்ணியா மாகாணத்திலுள்ள சிலிக்கன் வலி. சிலிக்கன் எனப்படும் ஒருவகை கண்ணாடி மண்ணை அரைத்து நாராக்கி இங்குதான் அந்த சிப்புகள் முதலில் வடிவமைக்கப்பட்டன.

தேவைகள் அதிகரிக்க புதிய கண்டுபிடிப்புகள் தோன்றுவது வழமைதானே. இப்படி வலுவான (computing power) மைக்கிரோச்சிப்ஸ்களைத் தேவைக்கு ஏற்றவாறு உருவாக்கும் வித்தையைப் பல நிறுவனங்கள் கற்றுக்கொண்டுவிட்டன. Intel (அமெரிக்கா), Samsung (தென் கொரியா), TSMC (தாய்வான்) ஆகியன உலகின் பெரும்பாலான மைக்கிரோச்சிப்ஸ்களைத் தயாரிக்கின்றன. அதே வேளை இச் சிப்ஸ்களைத் தயாரிக்கும் இயந்திரங்களைத் தயாரிப்பதில் அமெரிக்காவும், நெதர்லாந்தும் முன்னணியில் இருக்கின்றன.

தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது?

1970 களில் சமையலறையில் நாம் பாவித்த எந்தவொரு மின்னுபகரண்க்களிலும் மைக்கிரோச்சிப்ஸ் பாவிக்கப்பட்டதில்லை. இப்போ சிப்ஸ் இல்லாத எந்தவொரு உபகரணத்தையும் சமையலறையில் காணமுடியாது. சிப்ஸ்களின் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் உட்பட சகல எலெக்ட்றோனிக் பொருட்களினது தயாரிப்பும் காலதாமதமாகிறது. இதற்கு கோவிட் பெருந்தொற்று ஒரு காரணமென்று சிலர் கூறுகிறார்கள். கோவிட் பெருந்தொற்று காரணமாக சீனா ஒன்றுதான் பெருமளவில் நடமாட்ட முடக்கமொன்றை நடைமுறைப்படுத்தியது. சீனா பல எலெக்ட்றோணிக் (consumer electronics) பொருட்களைத் தயாரிக்கும் நாடு என்பது உண்மைதான் ஆனால் அது மைக்குரோச்சிப்ஸ்களைத் தயாரிக்கும் நாடுகளில் முக்கியமன ஒன்றல்ல. எனவே தட்டுப்பாட்டுக்கு சீனா ஒரு காரணம் இல்லை.

போர்கள்

ஒரு காலத்தில் எண்ணைக்காக போர்கள் நடந்தன. முதலாம், இரண்டாம் வளைகுடாப் போர்கள், லிபியா மீதான போர், வெனிசுவேலா மீதான பொருளாதாரத்தடை என எல்லாமே எண்ணைக்காக நடத்தப்பட்டவை. இப்போது எண்ணையின் மவுசு குறைந்து மின்வாகனங்களின் தயாரிப்பு முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறது. இவ்வாகனங்கள் ஏராளமான மைக்குரோச்சிப்ஸ்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மின்வாகனத் தயாரிப்பில் சீனா படு வேகமாக முன்னேறிக்கொண்டு வருகிறது. ஆனால் அதற்குத் தேவையான சிப்புகள் தாய்வான், அமெரிக்கா, தென்கொரியா, யப்பான் ஆகிய நாடுகளிலிருந்துதான் வர வேண்டும். இப்போது போர் மேகங்கள் மத்திய கிழக்கிலிருந்து நகர்ந்து பசுபிக் சமுத்திரத்திற்கு மேலே சூல் கொள்ள ஆரம்பித்துவிட்டன. மேற்கூறிய நாடுகள் அனைத்தும் சீனாவின் எதிரிகள், அமெரிக்காவின் நண்பர்கள். சீனாவின் பொருளாதாரத்தின் கணிசமான பங்கு எலெக்ட்றோணிக் பொருட்களின் ஏற்றுமதியில் தங்கியிருக்கிறது. எனவே சீனாவை முடக்க அமெரிக்க கூட்டுச்சதியின் வெளிப்பாடுதான் இந்த சிப்ஸ் தட்டுப்பாடு என நீங்கள் நம்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இதைவிட இன்னுமொரு புதிய போர்வடிவம் எதிர்காலத்தில் அறிமுகமாகவிருக்கிறது. சென்ற வாரம் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளால் பரீட்சிக்கப்பட்ட விண்பாறையை உடைக்கும் / திசைதிருப்பும் DART எனப்படும் விண்கலம். இதன் நோக்கம் உலகைத் தூமகேதுகளிடமிருந்து காக்கும் புனிதப்பணியாகக் காட்டப்பட்டாலும் வானில் வலம் வந்துகொண்டிருக்கும் தகவற் பரிவர்த்தனை செய்யும் ( communication sattellites) விண்கோள்களை எந்த நேரமும் வானிலிருந்து மாயமாக்க இக்கருவியைப் பயன்படுத்தலாம் என்ற அச்சமும் எழுப்பப்பட்டிருக்கிறது. விண்ணை வலம் வந்துகொண்டிருக்கும் பல விண்கோள்கள் வேவு பார்ப்பதற்கென்வே அனுப்பப்பட்டவை.

தொழில்நுட்பம்

எலெக்ட்றோனிக்ஸ் துறையில் இரண்டு முக்கியமான கூறுகள் இருக்கின்றன. Hardware / Software எனப்படும் இந்த இரட்டையர்கள் சக்தியும் சிவமும் போல ஒன்றை விட்டால் மற்றது இயங்காது. எவ்வளவு வேகமாக இயங்கும் சிப்புகளை (hardware) ஒரு நிறுவனம் தயாரிக்கிறதோ அந்தளவு வேகமாக செயல்களை முடுக்கிவிடும் மென்பொருளை எஞ்ஞினியர்கள் எழுதிவிடுவார்கள். விளைவு புதிய அம்சங்களைக் கொண்ட ஐ-ஃபோன் 14 அல்லது அதிவேக Computer Game சந்தைக்கு வந்துவிடும். சிப்ஸ்களில் இரண்டு முக்கிய வகைகள் உண்டு. ஒன்று Processors எனப்படும் ‘மூளை’. இதுவே மென்பொருளின் கட்டளைகளைச் செயற்படுத்துகிறது. மற்றது Memory. இது தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கிறது. இவை எல்லாவற்றினதும் வடிவமைப்பு அமெரிக்காவிலும், processors தயாரிப்பு தாய்வானிலும், memory தயாரிப்பு தென்கொரியாவிலும் நடைபெறுகின்றன. இத்தயாரிப்பிற்கான இயன்ந்திரங்கள் நெதர்லாந்தில் தயாராகின்றன. சீனா இதில் பங்காளியல்ல. தற்போதய சிப்ஸ் தட்டுப்பாட்டுக்கு சிப்ஸ் மீதான தேவையதிகரிப்பே (demand) காரணமென்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அது உண்மையானாலும் அந்த demand எங்கிருந்து வந்தது?

கூகிள், முகநூல், அமசோன் போன்ற பெரு நிறுவனங்கள் தமது சொத்துக்களாகக் கருதுவது தகவற் சேகரிப்பையே. தகவற் சுரங்கம் எனப்படும் இச்சுரங்கம்தான் உலகின் மக்கள் / பாவனையாளர்கள் / நுகர்வோர். இவர்களைப் பற்றிய தகவல்களை உருவி விற்றுக் காசாக்குகிறது சமூகவலைத்தளங்கள். பாரிய இத்தகவல்களைச் சேகரிக்க போதுமான memory வேண்டும். உருவி எடுக்க வேகமான processors வேண்டும். இப்படிச் சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு விளம்பரங்களைச் செய்து பொருள்களை விற்றுப்பணமாக்க பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் (அமசோன்) வரிசையில் நிற்கின்றன. எனவே சிப்ஸ் தயாரிப்பாளர் இப்பெருந்தனவந்தர்களது தேவைகளையே முதலில் கவனிப்பார்கள். நீங்கள் முற்பணம் கட்டிய வாகனம் இன்னும் மூன்று மாதங்களுக்குப் பின்போடப்படுவதில் அவர்களுக்கு எந்த நட்டமும் இல்லை. அல்லது உங்களுக்கு வழங்கப்படும் அந்தப் ‘பள பள’ வாகனங்கள் 1960 களில் தயாரிக்கப்பட்டவையைப் போல எலெக்ட்றோணிக்ஸ் எதுவும் இல்லாதவையான, தானியக்க அம்சங்கள் இல்லாதவையாகவும் வழங்கப்படலாம்.

எதிர்காலம்

ஒரு சின்னத் தீவான தாய்வானுக்காக இரண்டு உலக வல்லரசுகள் போருக்குப் போகின்றன என்றால் காரணம் இல்லாமல் இல்லை. உலகின் கணனி வலுவின் (computing power) மூன்றிலொரு பங்கை வழங்கி வருவது தாய்வான். உலகின் போர் வெற்றிகளைத் தீர்மானிக்கப்போகும் அதிவல்லமை வாய்ந்த ஆயுதங்களில் தாய்வானின் சிப்புகள் தான் இருக்கபோகின்றன. தாய்வானையும் அந்த தயாரிப்பு நிறுவனங்களையும் கைப்பற்றிவிட்டால் உலகின் அதிநவீன ஆயுதங்களை சீனாவினாலும் தயாரிக்க முடியும் எனவே பசிபிக் சமுத்திரத்தில் தற்போது சூல்கொள்ளும் போர் மேகம் வெறுமனே கேந்திர முக்கியத்துவம் காரணமான ஒன்றல்ல. சிறீலங்காவில் அள்ளிக்குவித்த சிலிக்கன் (மண்) மட்டும் சீனாவுக்குப் போதாது. அவற்றை மைக்குரோச்சிப்ஸ் ஆக்கும் தொழில்நுட்பமும் அதற்குத் தேவை.

தற்போதுள்ள மைக்குரோச்சிப்ஸ் தட்டுப்பாட்டின் பின்னால் ஒரு பெரிய அரசியல் இருக்கிறது. இராணுவம், விண்வெளி, நுகர்வோர் சந்தை எனச் சகல முனைகளிலும் வேகமாக முன்னேறிவரும் சீனாவைப் போரின்றி நிறுத்துவதற்கு அல்லது தாமதப்படுத்துவதற்கு அமெரிக்காவிற்கு இருக்கும் ஒரே வழி ‘சிலிக்கன் பள்ளத்தாக்கில்’ போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது. ஒரு அட்வைஸ். பழைய வாகனங்களை விற்றுவிடாதீர்கள்.