Science & Technology

ChatGPT: உலகை அதிரவைக்கப் போகும் மூன்றாவது பூதம்

செயற்கை விவேகத்தின் அடுத்த பரிணாமம்

சிவதாசன்

காதற் கடிதம் எழுத வேண்டுமா? அல்லது விழா மலருக்கான கட்டுரை எழுத வேண்டுமா? இதற்கெல்லாம் இனிமேல் நண்பர்களையோ எழுத்தாளர்களையோ தேடி ஓடவேண்டியதில்லை. ChatGPT உதவிக்கு இருக்கிறது. செயற்கை விவேகம் (Artificial Intelligence (AI)) அசுரப் பாய்ச்சலோடு ஓடிவரக் காத்திருக்கிறது.

செயற்கை விவேகம் பற்றி கடந்த ஓரிரு தசாப்தங்களாகச் செய்திகள் வந்தவண்ணமுள்ளன. ஆனால் தமிழில் இதுபற்றிய போதுமான விளக்கங்கள் புரிதல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது செய்தி வலைகளை எரித்துக்கொண்டிருக்கும் செய்தி OpenAI எனப்படும் கேள்வி/பதில் மென்பொருள் பற்றியது. கேட்கப்படும் தகவல்கள் எழுத்திலா, படங்களிலா, காணொளிகளிலா அல்லது வரை கோடுகளிலா – எப்படி வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளமுடியும். அதுவும் இலவசமாக. அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவைத் தளமாகக் கொண்ட OpenAI என்ற நிறுவனம் மைக்கிரோசொஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து இதைத் தயாரித்திருக்கிறது. ChatGPT எனும் இதைப் பெறுவதற்கு உங்களுக்கு இணைய இணைப்பு மட்டுமே தேவை. முதலில் செயற்கை விவேகம் பற்றி ஒரு வகுப்பு.

செயற்கை விவேகம் (Artificial Intelligence (AI))

இது வேறொன்றுமில்லை மனித மூளையை மேலும் பலமாக்கி இயந்திரத்துக்குள் முடக்கும் ஒரு செயல். மனித மூளைக்கும் கணனிக்கும் தொழிற்பாட்டு ரீதியில் பல ஒற்றுமைகள் உண்டு. கணனியால் மனித மூளையை ஈடுசெய்ய முடியாது என்பது வேறு விடயம். அதே வேளை மனித மூளையின் தொழிற்பாட்டை இலகுவில் விளங்கப்படுத்துவதற்கு கணனியைப் போல் சிறந்த சாதனம் வேறொன்றுமில்லை.

ஒரு குழந்தை பிறந்ததும் அதற்கு முதலில் தெரிவது தாயின் முகம் தான். அம் முகத்திற்கு ‘அம்மா’ என்று பெயரிட்டு அந்தக் குழந்தை அதை நிரந்தரமாக மூளையில் பதிந்துவிடும். அப்பிள்ளை வளர்ந்ததும் இன்னுமொரு பெண்ணைக் கூட்டி வந்து ‘இவர் தான் உனது அம்மா’ என்றால் அந்தக் குழந்தை அதை நம்பாது. முதலாவது தடவையாக ஒரு உயிர் தன் சூழலிலுள்ள ஒரு பொருள் பற்றி அறிவதை கற்றல் (learning) என்கிறார்கள். செயற்கை விவேகத்தில் இந் நடைமுறையை machine learning என்கிறார்கள். இணைய உலகில் பரவிக்கிடக்கும் கோடானு கோடி தகவல்களைக் ‘கற்றறிந்து’ நிரந்தரமான ஒரு சேமக்கலத்தில் (storage device) சேமித்து வைத்துக்கொண்டு அவற்றைத் தேவையான வகையில் ஒழுங்கு செய்து ‘கதையாகக் கட்டி’ விரும்பிய வகையில் பொதி செய்து தருகிறது இந்த AI. இதன் பின்னாலுள்ள தொழில்நுட்பத்தை அறிய இன்னுமொரு வகுப்ப்புக்கு நீங்கள் செல்ல வேண்டும்.

நீங்கள் ஒவ்வொரு தடவையும் இணையத்தளத்தில் தேடும் விடயங்களையும் தேடுபவர்கள் பற்றிய பிரத்தியேக தகவல்களையும் உருவியெடுப்பதற்கு ஏறாளாமான செயலிகள் (apps) காத்திருக்கின்றன. Data mining என அழைக்கப்படும் இம்முறையால் சேகரிக்கப்பட்ட தகவல்களை வணிக நிறுவனங்களுக்கு விற்றுப் பிழைப்பதே இச்செயலி நிறுவனங்கலின் வேலை. இலவசமாக உங்கள் படங்களை அழகாக்கித் தரும் செயலிகள் உங்களைப்பற்றிய தகவல்களை உருவி இந்நிறுவனங்களுக்கு விற்றுவிடுகின்றன. அமசோன், கூகிள் போன்ற நிறுவனங்கள் தமது serach engine கள் மூலம் உங்களுக்கு ‘இலவச’ சேவைகளைத் தருவது இதற்காகவே. இப்படியாக உருவப்பட்ட தகவல்களையே OpenAI தனது சேமக்கலத்தில் வைத்திருக்கிறது.

இப்படிச் சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்துக்கொண்டு தமது ‘விவேகத்தின்’ மூலம் கதைகளையோ, கவிதைகளையோ, படங்களையோ, காணொளிகளையோ புனைந்து ஒரு நொடியில் உங்களுக்குத் தருகிறது OpenAI.

கடந்த தசாப்தத்தில் மிகவும் பிரபலமான Alexa, Siri போன்ற கணனி ‘வேலைக்காரர்கள்’ வீடுகளில் சில ஏவல்களைச் செய்து வருகின்றன. நேரம் என்னவென்று கேட்டால் பதில் சொல்வது, தொலைக்காட்சியை On /Off செய்வது, வெப்பநிலை பற்றிக் கேட்டால் பதில் சொல்வது போன்று பல கட்டளைகளை ஏற்கெனவே இவை தாள் பணிந்து செய்கின்றன. உங்களது கட்டளைகளைக் கிரகித்துச் செயலாற்ற இச்சாதனங்கள் பழகிக்கிகொண்டுவிட்டன. அனேகமான voice control சாதனங்கள் உங்கள் குரல்களை அறிந்து உங்கள் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செயலாற்றுகின்றன. ஆனால் “காதல் கதை ஒன்று சொல்” என்று கேட்டால் இப்படியான சாதனம் பெரும்பாலும் (வெட்கப்பட்டு) மெளனமாகிவிடும். இவை செயற்கை விவேகத்தின் ஆரம்ப ‘பிறவிகள்’. தற்போது உலகை ஆர்ப்பரிக்க வைத்துக்கொண்டிருப்பது செயற்கை விவேகத்தின் மூன்றாம் பரிமாணம், Chatbots / ChatGPT, LaMDA, Dall-E எனப் பலபெயர்களில் பல பண்டங்கள் உலாவருகின்றன. ஆனால் ChatGPT தான் இலவசமான ஒன்று.

OpenAI நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ChatGPT எனப்படும் chatbot உண்மையில் ஒரு robot தான். Alexa அல்லது Srii போன்று ஏவல்களைச் செய்யாது இது கேட்ட கேள்விக்கு ஒரு பிம்பத்தை (image) உருவாக்கும் வல்லமை கொண்டது. “எனது அம்மவைப்பற்றிக்கூறு” என்று கேட்டால் அம்மாவைப்பற்றி தனது சேமக்கலத்தில் கிடைக்கக்கூடிய அனைத்துத் தகவல்களையும் தேடிப்பொறுக்கி ஒரு அழகான கதையாக்கி ஆங்கிலத்தில் (தற்போதைக்கு) கணனியின் திரைக்கோ அல்லது பிறிண்டருக்கோ கொண்டுவந்துவிடும். உங்கள் அம்மாவைப் பற்றிய படங்கள் ஏற்கெனவே அதன் வசமிருந்தால் அவற்றைப் படங்களாகவோ காணொளிகளாகவோ காட்டிவிடும். ஆச்சரியமென்னவென்றால இவற்றையெல்லாம் கணப்பொழுதில் செய்துமுடிக்கும் வல்லமையை ChatGPT கொண்டுள்ளது. இதற்காக OpenAI தற்போது பாவிக்கும் மென்பொருளை GPT-3 என அழைக்கிறார்கள்.

GPT என்பது Generative Pretrained Transformer என்பதன் சுருக்கமாகும். அதாவது ஏற்கெனவே கற்றறிந்த சொற்களையும் வடிவங்களையும் கொண்டு (pre trained) ஒரு கருப்பொருளை மீளுருவாக்கம் (regeneration) செய்து மாறுபட்ட வடிவத்தில் (transformed) தருமொரு கருவி என்பது இதன் பொருள். GPT-3 என்பது இத்தொழில்நுட்பத்தின் மூன்றாவது பரிமாணம். இதன் ‘சகோதரரான Dall-E 2 வைப் போலல்லாது GPT-3 பேசுவதையும் எழுதுவதையும் துல்லியமாகக் கிரகித்துச் செய்லாற்றும் தன்மை கொண்டது. தற்போதுள்ள GPT-3, 300 பில்லியன் சொற்களை (570GB) தன்னகத்தே சேமித்து வைத்திருக்கிறது. இணையத்தில் உலாவும் புத்தகங்கள், பதிவுகள், விக்கிபேடியா, கட்டுரைகள், போன்றவற்றை எல்லாம் இது உருவித் தன் தரவுக் களஞ்சியத்தை உருவாக்கியிருக்கிறது. இத்ன் மூலம் பெறப்படும் பண்டத்தை ChatGPT என அழைக்கிறார்கள்.

தக்கன / தகாதன

ஏற்கெனவே கூறியது போல ‘அம்மாக் கதைகள்’ மட்டுமல்லது பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் முதல் மருத்துவ நிபுணர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வரை உலகின் அத்தனை தேவைகளையும் நிறைவேற்றுமளவுக்கு வலிமை கொண்டது இது. ஆனால் அதற்காக கூகிளே இதுவரை அறியாத நமது கிராமமொன்றைப் பற்றிக் கேட்டால் அது நியாயமான கேள்வியாக இருக்காது – தற்போதைக்கு. மாறாகப் ‘பொன்னியின் செல்வனைப்’ பற்றிக் கேட்டால் சில வேளை அத்தனை அதிகாரங்களையும் உங்கள் முன் வைக்கலாம். எல்லாம் AI இன் கற்றலைப் பொறுத்தே இருக்கிறது. அதே வேளை மிக நவீனமான விடயங்களைப் பற்றிக் கேட்டால் அது அறிந்திருந்தால் மட்டுமே தனது கருத்துக்களை அவிழ்த்து விடும்.

அதே வேளை ஹிட்லரைப் பற்றியோ அல்லது உலகினால் வெறுக்கப்படும் விடயங்கள் பற்றியோ நீங்கள் கேட்டால் ஒன்றில் அது கருத்துத் தெரிவிக்க மறுத்துவிடும் அல்லது உங்கள் காதுகள் (கண்கள்) கிழிய நாலு வார்த்தைகளில் வகுப்பெடுத்துவிடும். அந்தளவுக்கு அதற்குப் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு வானத்தின் நிறம் என்னவென்று கேட்டால் அது பச்சை என்று கூறினால் அதன் பயிற்சியாளர் அதைத் திருத்தி ‘நீலம்’ எனக் கூற வைத்துவிடுவார். ஹிடலர் என்றால் யார் என்று கேட்டால் அதற்கான வேறு பதிலைக் கொடுக்கவும் அவர் கற்றுக்கொடுத்திருப்பார். இப்படியான படிமுறைப் பயிற்சிகள் மூலம் நெறிப்படுத்தப்பட்ட ஒன்றே ChatGPT. இது தொடர்ந்து பயிற்சியளிக்கப்பட்டு மேலும் மேலும் புதிய சொற்களை அதற்கு அறிமுகம் செய்ய அதன் பயிற்சியாளர் காத்திருக்கிறார்கள்.

ChatGPT ஐப் போலவே கூகிள் நிறுவனமும் ஒரு AI சாதனத்தைத் தயாரித்திருக்கிறது. LaMDA என்று அதற்குப் பெயர். ஸ்ரான்ஃபோர்ட் பலகலைக்கழகம், மைக்குறோசொஃப்ட் நிறுவனம், அமசோன் ஆகியவையும் தமது சொந்த AI சாதனங்களை உருவாக்கியுள்ளன. ஆனால் இவற்றின் பெரும்பாலானவை பொதுமக்கள் பாவனைக்கு விடப்படவில்லை.

விக்கிபீடியா போன்ற தகவற்களஞ்சியங்களின் அடுத்த பரிணமமான ChatGPT யும் மூன்றாம் தரப்பின் தகவல் இடுகைகளைக்கொண்டே தமது களஞ்சியங்களைப் பெருப்பிக்கின்றன. இதற்காகவே ChatGPT பொதுமக்கள் பாவனைக்கென இலவசமாக விடப்பட்டுள்ளது. எமது பாவனைகளையும் அதனால் கிடைக்கப்பெறும் பின்னூட்டங்களையும் கொண்டு அது தன்னை மேலும் திருத்திக்கொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும் முயலலாம். இருப்பினும் இதன்மூலம் எதிர்காலக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி மந்தமடைந்துவிடுமோ என்ற குழப்பம் கல்வியாளர் மத்தியில் தோன்றியிருக்கிறது. நேற்று (ஜன்வரி 06) நியூ யோர்க் கல்விச்சபை தனது மாணவர்கள் ChatGPT யைப் பாவிக்கமுடியாது எனத் தடை செய்திருக்கிறது. விரைவில் இதர மாநிலங்களும் தடைசெய்யும் சாத்தியமிருக்கிறது. ஒரு விடயத்தைப்பற்றி நுணுக்கமாகத் தேடி அறியும்போது அறிவு விரிவடையும். ஆனால் அதை ChatGPT மூலம் பெற்று ஒப்புவிக்கும்போது அதனால் அறிவு வளர்ச்சி ஏற்படமுடியாது என்பது கல்விச்சபையாளரின் வாதம். அதே வேளை பலரது வேலைகளுக்கு இது ஆப்பு வைக்கப் போகிறது என்பதையும் ஒத்துக்கொள்கிறார்கள்.

எனவே ChatGPT போன்ற இலவச செயற்கை விவேக சாதனங்களின் பாவனை கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருக்கலாமெனவே எதிர்பார்க்கப்படுகிறது. சில வேளைகளில் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சிகளுக்காக இது தொடர்ந்தும் பாவனையில் இருக்கலாம்.

பல மில்லியன் / பில்லியன் ஆண்டுகளாக நிலத்தின்கீழ் உறங்கிக்கொண்டிருந்த இரு பெரும் பூதங்களான இரும்பையும் நிலக்கரியையும் 15, 16ம் நூற்றாண்டுகளில் மானிட சமூகம் திறந்துவிட்டதன் பலனே மனித குலத்தின் அழிவு எனக்கூறுபவர்களும் உள்ளனர். இப்போது செயற்கை விவேகம் என்ற பெயரில் மூன்றாவது பூதம் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதனால் அழிவு அதிகம் என்பதில் சந்தேகமில்லை எப்போ என்பது தான் கேள்வி. (Image Credit: Photo by Alex Knight on Unsplash)