Science & Technologyசிவதாசன்

ChatGPT: உலகின் விரும்பத்தகாத விளைவுகளுக்குக் காரணமாகலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை

சிவதாசன்

மனித குலத்தின் நவீன பயணம் பல குறுக்கீடுகளைக் கண்டுவந்திருக்கிறது. மின்சாரம், மின்குமிழ், தொலைத் தொடர்பு, கணனி, இணையம் என்று பல. இதுவரை அவை இயந்திரங்களாகவே இருந்துவருகின்றன. இவற்றில் ஒரு கண்டுபிடிப்பேனும் மனித குலத்துக்கு ஆபத்தை விளைவிக்கப்போகிறது என எவரும் முன்கூறவுமில்லை; அவை தூக்கி வீசப்படவுமில்லை. அவற்றை இயக்குவதற்கு எப்போதுமே மனித மூளை தேவைப்பட்டு வந்தது, அதனால் மனிதன் இவற்றில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. ChatGPT யின் வருகையுடன் இனிமேல் மனித மூளைக்கான தேவை அருகிப்போய்விடுவதற்கான ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. முன்னையவற்றைப் போலல்லாது இதன் குறுக்கீடு எமது இயல்பு வாழ்வை மிக மோசமாகப் பாதிக்கப்போகிறது. அரசாங்க தலையீடுகள் இல்லாத வரைக்கும் எமது அழிவு உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்கிறார்கள் நிபுணர்கள்.

வரலாற்றில் அதி வேகமாகப் பாவனைக்குள்ளாகிவரும் செயலி ChatGPT. நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இரண்டு மாதங்களில் 100 மில்லியன் பாவனையாளர்களை அது பெற்றிருக்கிறது. 375 பணியாளர்களுடனும் சிறிய வருமானத்துடனும் ஆரம்பித்த இச் செயலியை உருவாக்கிய OpenAI நிறுவனம் இப்போது $30 பில்லியன் பெறுமதி வாய்ந்த ஒன்றாகிவிட்டது.

ChatGPT யின் செயற்பாடு பற்றி முன்னொரு கட்டுரையில் எழுதியிருந்தேன். இது இணையத்தில் தொடர்ச்சியாக இணைந்துகொண்டிருக்கும் (real-time) ஒன்றல்ல. அவ்வப்போது பாவனையாளர் கேட்கும் கேள்விகளுக்கு தன்னிடமுள்ள தரவுக் களஞ்சியத்தில் இருந்து தேவையான சொற்களைத் தேடிப்பிடித்து கணப்பொழுதில் மறுமொழியைப் புனைந்து தருகிறது. இசைக் கோர்வை, கணனி மென்பொருள், கணித வாய்ப்பாடுகள், நாவல் எழுதுதல், கதை எழுதுதல், பரீட்சை எழுதுதல் என அது செய்யாத பணிகள் எதுவுமே இல்லை. இதன் விளைவு பல மில்லியன் பேர்களுக்கு வேலைகளை இல்லாமல் செய்து வீட்டுக்கு அனுப்புவது. இனி தீர்மானங்களை எடுக்கப்போவது மனிதரல்ல, ChatGPT மட்டுமே.

மனிதனின் கற்கை என்பது (human learning) பலகாரணிகளால் உருவாக்கப்பட்டது. அனுபவம், உள்ளுணர்வு, தொடர்பாடல்கள், தவறுகள், திருத்தங்கள், சுய பரிசோதனைகள், தனிப்பட்ட கோபதாபங்கள், துணிச்சல், பயிற்சி, ஆன்ம விழிப்பு எனப்பல காரணிகளைக் கூறலாம். ChatGPT இற்கு இப்பாக்கியம் கிட்டாது. மனிதக் கற்றலின் முக்கிய கூறான ‘வலியின்றி வளமில்லை’ (no pain, no gain) என்ற கூற்றை ChatGPT அறிந்திருக்க நியாயமில்லை. களைப்பு, ஓய்வு நாட்கள், வியாதிகள் என்று எதுவும் அதற்கில்லை.

அமெரிக்காவிலுள்ள வால்ற்றன் குடும்ப நிதியத்தினால் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றின்படி 51% மான பாடசாலை ஆசிரியர்களும், பெரும்பாலான மாணவர்களும் ஏற்கெனவே ChatGPT யைப் பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள். 1000 அமெரிக்க பாடசாலைகளில் 30% மான மாணவர்கள் தமது அப்பியாசங்களைச் செய்ய ChatGPT யைப் பாவிக்கிறார்கள். ChatGPT பல பரீட்சைகளை எழுதிச் சித்தி பெற்றிருக்கிறது. MBA, US medical licensing exam, Law exams என்று பல பரீட்சைகளை அது எழுதியிருக்கிறது. உலகின் பிரபலமான ஸ்ரான்ஃபோர்ட் மருத்துவக் கல்லூரியிலேயே இது நடைபெற்றிருக்கிறது. ‘குதிரையோடி’ப் பல்கலைக்கழகங்களுக்குப் போனவர்களின் பிடியிலிருந்து நமது நாடுகள் பல இன்னும் விடுபடவில்லை. வலியில்லாமல் வளர்ந்த இந்த நிபுணர்கள் எமது வாழ்வை நிர்ணயிக்கப் போகிறார்கள்.ஆனாலும் சிலர் விழித்துக்கொண்டுள்ளார்கள். நியூ யோர்க், ஹொங் கொங், பங்களூர் நகரங்கள் தமது மாணவர்கள் ChatGPT யைப் பாவிப்பதைத் தடைசெய்திருக்கின்றன.

திடீரென்று வானத்திலிருந்து வந்து குதித்த இந்த AI கடவுளைப் பற்றி முற்றிலும் அறியமுடியாத நிலையில் கற்றுக்கொடுப்போர் செய்வதறியாமல் தத்தளிக்கிறார்கள். கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம் என்பது அவர்களது அணுகுமுறை. இது கடவுளா அல்லது கடவுள் வடிவத்தில் வந்த அசுரனா என்பது தெரியாது அவர்கள் அவதிப்படுகிறார்கள். இதன் உருவாக்கத்தின் பின்னால் எந்த நிறுவனங்கள் இருக்கின்றன என்பதை உலகறியும் ஆனால் அவற்றில் யார் யார் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பது மர்மம் தான். உலகின் அதிபெரிய பணக்காரர்களான இலான் மஸ்க், பில் கேட்ஸ் போன்றோர் இவர்களில் சிலர் எனக் கூறப்படுகிறது. இப்போதைக்கு இலவசமான ‘கடவுளை’ இவர்கள் விரைவில் காசாக்காமல் விடுதற்கான சாத்தியங்கள் இல்லை. குதிரைகள் மீது காசுகளைக் கட்டிப் பரீட்சை சித்தியடந்தவர்களுக்கு இது ஒரு சின்ன விடயம்.

சமீபத்தில் சிங்கப்பூர் பணியாளர்களின் வேலைப்பளுக்களைக் குறைப்பதற்காக தனது வேலைத் தளங்களில் ChatGPT யை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அது சிறிய சனத்தொகையுடன் பல வேலைகளுக்கு வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது தங்கியிருக்கிறது. கனடா போன்ற நாடுகளிலும் பணியாளர்கள் போதாமையால் குடிவரவை அதிகரிக்கும் திட்டங்கள் உள்ளன. தமது சுதேசிகளின் இன சுத்தியைப் பேண விரும்பும் பல நாடுகளுக்கு ChatGPT ஒரு வரப்பிரசாதமாக இருக்கலாம். எனவேதான் இக் ‘கடவுளின்’ படைப்பின் பின்னால் ஒரு பெரிய மர்மம் இருப்பது போல் நான் உணர்கிறேன். பெரும்பாலான நிறுவனங்களில் வேலை ஒதுக்கப்படுவதிலும், பறிக்கப்படுவதிலும் நிறத்தவர்களே முதலில் பாதிக்கப்படுபவர்கள். நேரே பார்க்காவிடினும் பாவிக்கும் நான்கு சொற்களை வைத்தே ChatGPT ஒருவரை இனம்கண்டுவிடும். எனவே அது இனபேதம், நிற பேதம், சாதி பேதம் பார்க்காது என எவராலும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது.

இருப்பினும் எனது ஆதங்கம் அதுவல்ல. ‘அணு ஆயுதத்தை எபடித் தயாரிப்பது’ என்பதை ChatGPT யாருக்காவது சொல்லிக்கொடுத்து விடுமா? அல்லது நச்சு, கிருமி ஆயுதங்களைத் தயாரிக்கும் முறைகளை அது கற்றுக்கொடுத்துவிடுமா? படுக்கையறை வரைக்கும் வந்து தாம்பத்தியம் எப்போது , எப்படிச் செய்யவேண்டுமென வகுப்பு எடுத்துவிடுமோ? மருத்துவர்களை விட கூகிள் அதிகமாகச் சமபாதிக்க வழிசெய்துவிடுமா?

இப்படியொரு அறிவுடைய யுகமொன்று முன்னர் இருந்தது எனவும் மனிதரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் அது அழிக்கப்பட்ட்து எனவும் சில புராணங்கள் கூறும். நடக்கும் இந்தக் கலியுகமும் அப்படியொரு அழிவுக்கும் மறுபிறப்புக்கும் வழிவகுக்கும் எனவும் அதே புராணங்கள் தான் கூறுகின்றன. யாராவது இந்த ChatGPT யைப் பாவித்து நமது புராணங்களை ஆய்வு செய்து அவை முற்றிலும் தப்பு எனக் கூறினாலும் ஆச்சரியப்படவேண்டாம்.

மங்களம் சுப மங்களம்.

(Photo by Rolf van Root on Unsplash)