Health

மருதாணி: ஈரல் புற்றுநோயைத் தடுக்கிறது!

சங்க காலம் முதல் தமிழ்ப் பெண்களிடையே பிரபலமான அழகுசாதனப் பொருட்களில் ஒன்றான மருதாணி (henna) பற்றிய புதிய தகவல் ஒன்று சமீபத்தில் வெளிவந்துள்ளது. அழகு சாதனத்திற்குமப்பால் ஈரல் புற்றுநோய்க்கு முன்னோடியான ஈரல் ஃபைஃப்றோஸிஸ் (liver fibrosis) மற்றும் ஈரல் ஸிறோஸிஸ் (liver cirrhosis) ஆகியவற்றிலிருந்து குணம்பெற மருதாணி உதவுகிறது என ஒசாகா மெட்றோபோலிற்றன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பச்சை குத்துதல், மருதாணி ஓவியங்கள் மூலம் உடலை அழகுபடுத்தும் வழக்கம் சங்க காலத்துப் பெண்களிடையே பிரபலமானதென்பது பல சங்ககாலப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டை “தொய்யில்” என அவர்கள் அழைத்தார்கள். “உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்” என குறுந்தொகையிலும், “புள்ளித் தொய்யில் பொறிபடு சுணங்கின் ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் புல்லென மாலை யாம் இவண் ஒழிய”என அகநானூற்றிலும் மருதாணி பற்றிய குறிப்புகள் உண்டு.


மருதாணி இலையின் சாறு சிவப்பு நிறமானது. இச்சாற்றினால் போடப்படும் புள்ளி சருமத்தின் இயற்கையான மருவை ஒத்திருப்பதால் அதை “மரு தோன்றி” என அக்காலத்தவர் அழைத்ததாகவும் பிற்காலத்தில் இச்சொல் மருவி “மருதாணி” என ஆகிவிட்டதாகவும் ஒரு கதையுண்டு.

எப்படியாயினும் நம் முன்னோர்கள் பின்பற்றிய அனைத்து வழக்கங்களும், சடங்குகளும் மருத்துவ காரணங்களைப் பின்பற்றியவை என்பதும் அவர்கள் உணவுக்கெனத் தேர்ந்தெடுத்த அனைத்துப் பண்டங்களும் மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்தவை எனவும் புலவர்களாலும் சித்தர்களாலும் பலவிடங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் சரும நோய்களைத் தீர்க்கும் நிவாரணியாக மருதாணி பாவிக்கப்பட்டிருந்தாலும் அதை விடவும் பல மருத்துவ குணாதிசயங்களை அது கொண்டிருந்தது.

சமீபத்திய யப்பானிய விஞ்ஞானிகள் எலிகளில் செய்த ஆராய்ச்சியின்படி ஈரலில் அழற்சி மற்றும் மிகையான மது பாவனை போன்ற காரணங்களினால் ஏற்படும் ஃபைஃப்றோஸிஸ் என்னும் இழையநார்த்தன்மை அதைத் தொடர்ந்து வரும் ஸிறோஸிஸ் ஆகிய இழையம் காயப்படுதல் போன்ற வியாதிகளிலிருந்து ஈரலை மீட்டெடுக்க மருதாணி உதவுகிறது.

ஐநூறுக்கும் மேலான ஈரலின் தொழிற்பாடுகளில் முக்கியமானது குடலில் இருந்து ஊட்டத்தைக் காவிச் செல்லும் குருதியை வடிகட்டுவதோடு போஷாக்கு பதார்த்தங்களைச் சமன் செய்து, குளுகோஸ் என்னும் சர்க்கரையை சேமித்தோ அல்லது விடுவித்தோ அதையும் சமன் செய்து அத்தோடு நாம் உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் மது போன்றவற்றை சமிபாடடையச் செய்வதாகும். இதனால் உண்டாகும் கழிவுப் பொருட்கள் பெரும்பாலும் ஈரலிலேயே தேங்கிவிடுவதுமுண்டு. இதனால் ஈரலை “உடலின் குப்பைமேடு” என அழைப்பதும் வழக்கம். தேவைக்குமதிகமான சர்க்கரையை அது கொழுப்பாக மாற்றிச் சேமிப்பதனால் சில வேளைகளில் கொழுப்புக் கட்டிகள் ஈரலை நிரப்பி விடுகின்றன (fatty liver). இப்படியான பல்வேறு ‘தோட்டி’ வேலைகளையும் செய்விப்பதனால் உடலில் ஈரல் ஒன்றுதான் மிகவும் துஷ்பிரயோகம் செய்யப்படும் ஒரு உறுப்பாகும். இதன் விளைவாக, உடலின் பல குப்பை கூளங்கள் உரிய காலத்தில் அகற்றப்படாமல் இங்கு நீண்டகாலம் தங்க நேரிடும்போது ஈரலின் இழையங்கள் காயப்பட்டு அதனால் கடமைகள் சரியாக நிறைவேற்றப்பட முடியாமல் போகிறது. இக்காயப்பட்ட இழையங்கள் திரட்சிகளாகி ஃபைஃப்றோஸிஸ் அல்லது சிறோஸிஸ் என்ற நோய்களுக்குக் காரணமாகின்றன. இவற்றை உரிய காலத்தில் சிகிச்சைக்கு உட்படுத்தாவிட்டால் ஈற்றில் அவை புற்றுநோயாக மாறுகின்றன.

நோயற்ற ஒருவரது ஈரலில், உறுதியான இழையக் கட்டுமானத்தை நிர்வகிக்கும் ‘ஹெப்பாட்டிக் ஸ்ரெல்லேட் செல்ஸ்’ (hepatic stellate cells (HSC’s)) எனப்படும் விசேட கலங்களே, காயப்படும் கலங்களை / இழையங்களைப் பழுதுபார்க்கின்றன. ஆனால் மிதமிஞ்சிய மது பாவனை, மருந்துகளை உட்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளால் ஆரோக்கியமான கலங்கள் / இழையங்கள் காயப்படும்போது அவற்றிலிருந்து உற்பத்தியாகும் ‘கொலாஜென்ஸ்’ (collagens) எனப்படும் நச்சுப்பதார்த்தம் அதிகரித்து ஃபைஃப்றோஸிஸ் என்ற நோயுண்டாகக் காரணமாகின்றது. யப்பானிய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின்படி மருதாணியில் காணப்படும் நிறமூட்டியிலுள்ள ‘லோசன்’ (Lawsone) என்னும் பதார்த்தம் காயப்பட்டு ஃபைஃப்றோஸிஸ் நடைமுறைக்கு உள்ளான கலங்களை மீண்டும் ஆரோக்கியமான கலங்களாக மாற்றிவிடுகிறது எனக் கண்டறிந்துள்ளார்கள். அடுத்தபடியாக, இந்த மருதாணிச் சாயத்தை எப்படி HCS கலங்களுக்கு கொண்டுபோய்ச் சேர்ப்பது என இவ்வாராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளில் முதல்வரான டாக்டர் அற்சூகோ டாய்கோகு ஆராயவிருக்கிறாராம். (Image Credit: Thenkasi District)