IndiaOpinion

BRICS: இந்தியாவின் தலையிடி

சிதைந்துவரும் அமெரிக்க சாம்ராஜ்யத்தின் பலச்சமநிலைக்கென உருவாக்கப்பட்ட BRICS (பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா) கூட்டணியில் இணைந்துகொள்ள மேலும் பல நாடுகள் வரிசையில் நிற்கின்றன. ஆனால் அது கூட்டணியைப் பலப்படுத்தும் அதே வேளையில் சீனாவையும் சேர்த்தே பலப்படுத்தப்போவது என்பது இந்தியாவுக்கு தலையிடியைத் தந்துள்ளது. இதன் காரணமாகவே இந்தியா சமீப நாட்களில் அமெரிக்காவுடனான உறவை விஸ்தரிக்க முயல்கிறது எனக் கூறப்படுகிறது.

உலகின் சனத்தொகையின் 40% BRICS கூட்டணி நாடுகளிலேயே வாழ்கிறது. அதே வேளை உலக பொருளாதாரத்தின் (GDP) 23% இந்நாடுகளிடையேதான் சுழல்கிறது. நலிவடைந்துவரும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் பலமடைந்துவரும் சீன-ரஸ்ய கூட்டும் அங்கிள் சாமை உதறிவிட்டு பலநாடுகளை பிறிக்ஸின்பால் ஈர்த்து வருகிறது. இவ்வரிசையில் முன்னணியில் நிற்பவை சவூதி அரேபியா, இந்தோனேசியா, அரபு எமிரேட் கூட்டு, எகிப்து மற்றும் ஆர்ஜென்ரீனா ஆகியவை. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கேப் ரவுணில் நடைபெறவிருக்கும் பிறிக்ஸ் கூட்டணி நாடுகளின் உச்சிமாநாட்டில் அநேகமாக இவற்றின் இணைவு சாத்தியமாகும் எனக் கூறப்படுகிறது. இதைவிட மேலு 20 நாடுகள் இக்கூட்டணியில் இணையக் காத்திருக்கின்றன.

இந்தியாவின் தலையிடி

பிரிக்ஸ் கூட்டணியை விஸ்தரிப்பது மேற்குலகுக்கெதிராக தென்னுலகைப் பலப்படுத்துமெனினும் இப்போதுள்ள அங்கத்துவநாடுகளும், இனிமேல் இணைக்கப்படவுள்ள நாடுகளும் சீனாவின் பக்கம் சார்பனவாகவும், சீனாவின் பட்டி வீதித் திட்டத்த்தைப் பலப்படுத்தும் நாடுகளாகவே இருக்கின்றன. எனவே இந்திய – சீன முறுகல் பலமடையும்போது இக்கூட்டணிக்குள் இந்தியா தனிமைப்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இக்காரணங்களை முன்வைத்து பிறிக்ஸில் புதிய நாடுகளை இணைக்கும் விடயத்தில் அவசரப்படவேண்டாமென இந்தியா கேட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே நீண்டகால பூகோள நிலவரங்களை உத்தேசித்து இந்தியா சமீப நாட்களாக அமெரிக்காவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிப்பதாகத் தெரிகிறது.

இதே வேளை இதுவரை உலக வணிக நாணயமாகக் கோலோச்சிவரும் அமெரிக்க டாலருக்கு எதிராக BRICS கூட்டணியின் புதிய நாணயமொன்றும் விரைவில் வெளியிடப்படலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி நடைபெறும் பட்சத்தில் அமெரிக்க சாம்ராஜ்யத்தின் முடிவின் ஆரம்பமும் அதுவாகவே இருக்கும். என்னவிருந்தாலும் சீனாவின் பட்டி வீதியில்தான் இந்தியாவின் வாகனங்களும் ஓடவேண்டி ஏற்படும். (Pic Credit: India Times)