Spread the love
சிவதாசன்

ஜனவரி 30, 2020

Brexit | மீண்டும் 'தனிநாடாகும்' பிரித்தானியா! 1
நாளை 11 மணி முதல்…

நாளை (வெள்ளி) யுடன் பிரித்தானியாவின் சரித்திரம் புதிய அத்தியாயத்துடன் விடியப்போகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான 47 வருடத் திருமணம் முறிகிறது. பிரிவுகள் எப்போதுமே வருத்தம் தருவன.

2016 இல் பிரிவுக்கான ஒப்புதல் மனத்தளவில் கொடுக்கப்பட்டது. 1,317 நாட்களுக்குப் பிறகு, வெள்ளி இரவு பிரித்தானிய நேரம் 11:00 மணிக்குக் கூடும் அப முகூர்த்தத்தில் பிரிந்துகொள்வதாக இரண்டு சம்பந்த பகுதியினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பிரித்தானியாவில் சனிக்கிழமை கொண்டாட்டம் தான். புதிய சகாப்தம் பிறக்கப் போகிறதென்று பிரதமர் ஜோன்சன் அறிவித்திருக்கிறார்.

பிரித்தானியாவின், ஐரோப்பிய ஒன்றியத்துடனான, உலகத்துடனான உறவு எப்படி இருக்கப்போகிறது என்பது நிச்சயமற்ற நிலையில் ஜோன்சன் தன் தோள்களில் பாரிய சுமையொன்றை ஏற்றிக்கொண்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பல நூற்றாண்டுகால ஏகாதிபத்தியம் சேர்த்து வைத்திருக்கும் பணம், கலாச்சாரம் ஆகிய கொழுப்புத் திரட்சிகள் வற்றிப் போவதற்குள் அது மீண்டும் தழைத்துவிடும். நலிந்தால் அது தற்காலிகமானதாகவே இருக்கும். Britain is too shrewd to fail.

பிரித்தானியா, ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. 1. முதிய தலைமுறையினரின் ‘பழைய நினைவுகள்’ (nostalgia) 2. அதீத குடிவரவும், கலாச்சார மாற்றமும்.

வரலாறு

பிரித்தானியா 1973 ஜனவரி 1இல் அப்போதய ஐரோப்பிய ஆணையத்தில் (European Commission (EC)) அங்கத்துவம் பெற்றது. ஆனாலும் அதற்கான எதிர்ப்பு சகல கட்சிகளிடையேயும் இருந்துவந்தது. 1970, 80 பதுகளில் இதற்கு எதிராகப் போராடியவர்கள் பெரும்பாலும் தொழிற்கட்சி போன்ற இடதுசாரிகள் தான். ஒன்றியத்தின் உருவாக்கத்தின் பின்னால் உலகமயமாக்கலும், பெரும் வணிகர் கூட்டமுமே இருந்தது என்பதால் கன்சர்வேட்டிவ் கட்சியினர் அதற்கு இணங்கிப் போனதில் ஆச்சரியமில்லை எனினும், மார்கரெட் தச்சர் போன்றோர் பிரித்தானிய தனித்துவமான கலாச்சார காரணங்களுக்காக இந்த இணைவை எதிர்த்தனர். அதற்காக அவர் அரசியலிலிருந்து படு பாதகமாக ஒதுக்கப்பட்டது மட்டுமல்லாமல் இறக்கும்வரைக்கும் அவர் அவமானப்படுத்தப்பட்டு அவரது மரணச் சடங்குகள் கூட உரிய அரச மரியாதைகள் கொடுக்கப்படாமல் நடைபெற்றதெனச் சொல்வார்கள். அவரை ஆட்சியிலிருந்து தூக்கி எறிவதற்குப் பிரதான காரணமாக, உலகமயமாக்கலின் நாயகன் கிளிண்டன் இருந்தார் எனவும் கதையுண்டு.

மார்கரட் தச்சரின் மறைவுடன் ஐரோப்பிய எதிர்ப்பு அணைந்து போய்விடவில்லை. அவருக்குப் பின்னர் வந்த ஜோன் மேஜர் (கன்சர்வேட்டிவ்), ரோணி பிளேயர் (லேபர்) எல்லோருமே இந்த உலகமயமாக்கல் கோஷ்டியின் விருந்தினர்கள் தான்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் திறந்த எல்லைகளைப் பாவித்து பிரித்தானியாவில் நிறைய கிழக்கு ஐரோப்பியர்கள் குடியேறத் தொடங்கினார்கள். இவர்களோடு ரஷ்யாவில் கோர்பச்சேவ் திறந்துவிட்ட ‘பிறெஸ்ட்றோய்க்கா’ படலை, ரஸ்யர்களையும் அனுப்பிவைத்தது. தொடர்ந்து 2011 இல் டேவிட் கமெறோன், கனடாவின் ஸ்டீபன் ஹார்ப்பர் ஆகியோர் கடாபியைக் கொன்று லிபியாவின் படலையையும் திறந்துவிட்டார்கள். பிரித்தானியா மட்டுமல்ல ஐரோப்பா முழுவதுமே அகதிகளால் நிரம்பியது.

Related:  கருணா விடுதலைப்புலிகளின் தலைவரின் இருப்பிடத்தைக்கூடக் காட்டித்தரவில்லை - சரத் பொன்சேகா

தமது கலாச்சாரத்தையும், தனித்துவத்தையும் கூடவே இனச் சுத்தத்தையும் இழப்பதாகப் பொருமிக் கொண்டிருந்த ஒரிஜினல் பிரித்தானியருக்குக் கடுப்பேறியது. தீவிர கன்சர்வேட்டிவ் கட்சிக்காரரும், UKIP போன்ற கட்சிகளும் கொடுத்த அழுத்தத்தைத் தாங்க முடியாது ஜூன் 2016 இல் அப்போதைய பிரதமர் டேவிட் கமெறோன் பிரித்தானியா ‘பிரிந்து போக வேண்டுமா?’ என ஒரு கருத்துக் கணிப்பை பிரித்தானிய குடிமக்களிடம் எடுத்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஆரம்பத்தில் இணையக்கூடாது என்று சண்டை பிடித்த தொழிற் கட்சி (ஜெரெமி கோர்பின் தலைமையில்) இப்போது, ஒன்றியத்திலிருந்து பிரியக்கூடாது எனப் போராடியது. அதற்கு உதவவென அமெரிக்காவிலிருந்து சாண்டேர்ஸ் போன்றவர்களும் பிசாரத்துக்குப் போயிருந்தார்கள். 51.9 % மக்கள் பிரிந்து போவதென வாக்களித்து விட்டார்கள். மார்ச் 2017 மண முறிவுக்கான திகதியும் குறிக்கப்பட்டது.

இப்போது பிரச்சினையை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தத்தெடுத்திருக்கிறார். ஆனால் அவரது பிரச்சினை, பிரித்தானியா தனியே வாழ முடியுமா என்பதல்ல. அவர் தத்தெடுத்திருக்கும் பிரச்சினை பிரித்தானியா மேலும் உடைந்துபோகாமல் பாதுகாக்க வேண்டிய பிரச்சினை.

பிரித்தானியா என்ற சிறிய சாம்ராஜ்யத்துக்குள், ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து என்ற சிற்றரசுகள் உண்டு. அவர்களது பிரிவினைப் போராட்டங்களும் அவ்வப்போது எழுவதும், தணிவதுமாகப் பல தசாப்தங்களாக நடந்துவருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் என்ற மகா சாம்ராஜ்யத்துக்குள் இவர்கள் எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள். தற்போது அவர்களிடம் கலந்தாலோசிக்காமல் பிரித்தானியா விலகிப் போவதற்கு ஒன்றியம் அனுமதித்துவிட்டது. அவர்கள் பிரித்தானியாவோடு இருப்பதைவிட ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருப்பதையே விரும்புகிறார்கள். எனவே பெப்ரவரி 1ம் திகதியிலிருந்து ஸ்கொட்டிஷ் தேசீயக் கட்சி பிரிவினைக்கான கருத்துக்கணிப்பொன்றை நடத்துமாறு போராட்டமொன்றை ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. ‘Scotxit’ என்றதற்கு நாமம் சூட்டினால் அதற்கு நானும் பொறுப்பு.

நாளை விவாகரத்து நாள். ஜோன்சன் அதைப் பெரிதாகக் கொண்டாடுவார் என எதிர்பார்க்காவிட்டாலும் ‘ஒரிஜினல்’ பிரித்தானியர்கள் கொண்டாடலாம். புதிய குடியேறிகள் கண்ணீரும் கம்பளியுமாக இருக்கவேண்டி ஏற்படலாம்.

தமிழர்களைப் பொறுத்தவரை பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்கிறார்கள். அவர்களது பிரச்சினையை ‘லைக்கா’ பார்த்துக்கொள்ளும். பொறிஸ் ஜோன்சன் ஒரு ‘தமிழர் விரும்பி’ என அறியப்பட்டவர். உடனடியான பாதிப்பு எதுவும் இருக்காது. இசைபட வாழ்தலில் தமிழர் கெட்டிக்காரர். பார்ட்டிகளில் கூடிக் கும்மாளமடித்தாலும் அடுத்தநாள் ஏழு மணிக்கு வேலையில் நிற்பவர்கள் என அறியப்பட்டவர்கள். வேலைத் தலங்களில் அவர்கள் இல்லாவிட்டால் கணக்கு balance பண்ணாது. எனவே பயப்பட ஒன்றுமில்லை. நாளையும் நேற்றயதுபோலவே இருக்கும்.

ஜோன்சனுக்குத் துரும்பரின் ஆசியுமுண்டென்ற படியால் ‘சொலைமானி எபெக்ட்’ அங்கொன்றுமிராது.

Enjoy!

Big Ben 11 மணிக்கு அலறப் போகிறது.

வாழ்த்துக்கள்!

Print Friendly, PDF & Email