Blue Ocean Group | குற்ற விசாரணைத் திணைக்களம் பாய்ச்சல்?
ஜூலை 17, 2020: இலங்கையின் பிரபல தொடர்மாடிக் கட்டிட நிறுவனமான புளூ ஓசியன் குழுமம் மீது (Blue Ocean Group), நிதி மோசடி, ஏமாற்று பற்றிக் கிடைத்த புகார்களை முன்வைத்து, குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் சொகுசுக் குடியிருப்புக்களை அமைத்துத் தருவதாகப் பணத்தைப் பெற்றுவிட்டு அவற்றைக் கட்டிக்கொடுக்கவில்லை என இந்நிறுவனம் மீது பல புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புளூ ஒசியன் குழுமத்திலிள்ள இரண்டு நிறுவனங்களின் பணிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் பதிவாகியதன் தொடர்பாக, மவுண்ட் லவினியா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தின்படி, ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டு 18 மாதங்களுக்குள் வீட்டின் உறுதி வாங்குபவரிடம் கையளிக்கப்படவேண்டும். புளூ ஓசியன் குழும நிறுவனங்கள் பல வாடிக்கையாளருக்கு உரிய காலத்தில் குடியிருப்புக்களைக் கட்டிக் கொடுக்க முடியாமல் போவிட்டதன் காரணமாக அந் நிறுவனங்கள் மீது பல புகார்கள் செய்யப்பட்டிருந்தன.
புளூ ஓசியன் குழுமம், இலங்கை, மத்திய கிழக்கு, பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைத் தளங்களாகக் கொண்டு இயங்கும் பிரபல நிறுவனமாகும். கட்டிட நிர்மாணம், கல்வி, வாணிப ஆலோசனை, வர்த்தகம், பொறியியல் ஆலோசனை என்று பல துறைகளில் நிபுணத்துவத்தைக் கொண்டது இந் நிறுவனம்.
இலங்கையில் குடியிருப்பு நிர்மாண நிறுவனங்கள் எதிர்கொள்ளும் உள்ளக, வெளியகக் காரணிகள் திருப்திதரும் நிலையில் இல்லை எனினும் நீண்ட காலத்தில் அதை வென்றெடுக்கலாமென்ற நம்பிக்கையுள்ளதாக புளூ ஓசியன் குழுமத்தின் தலைவர் எஸ்.துமிலன் தெரிவித்திருக்கிறார்.