Spread the love

கொறோணாவைரஸ் தொற்று காரணம்

சிட்னி, அவுஸ்திரேலியா: இந்த வார இறுதியில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த Black Lives Matter ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு, கொறோணாவைரஸ் தொற்றைக் காரணம் காட்டி, சிட்னி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

1991 முதல், 432 அவுஸ்திரேலிய சுதேசிகள் பொலிஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்துள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் திணைக்களம் இத் தடையைக் கோரியிருந்தது.

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலையையும், பல அவுஸ்திரேலிய சுதேசிகள் பொலிசாரின் கரங்களில் மரணமடைவதையும் கண்டிப்பதுடன், அமெரிக்காவில் நடைபெறும் ஆர்ப்பாட்டக்களுக்கு ஆதரவாகவும், பல்லாயிரக் கணக்கான மக்கள் இவார இறுதியில் கூடுவதற்கு ஒழுங்கு செய்திருந்தார்கள். இருப்பினும், இத் தடையையும் மீறித் தாம் தமது ஆர்ப்பாட்டங்களை நடத்தியே தீருவோம் என அவர்கள் சூளுரைத்துள்ளார்கள்.

அவுஸ்திரேலியாவில், ஏப்ரல் முதல், 7,200 கொறோணாவைரஸ் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தாலும், அரசு அதை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டது. கடந்த ஒரு வாரமாக நியூசவுத்வேல்ஸில் ஒரு தொற்றுக்களும் அறிவிக்கப்படவில்லை.

“நோயை ஒழிப்பதற்கு ஒவ்வொருவரும் தம்மாலியன்ற அளவுக்கு தியாகங்களைச் செய்து ஒத்துழைத்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமைகளை விட உடல் நலம் மிக முக்கியமானது” என நீதிபதி டெஸ்மண்ட் ஃபாகன், இத் தீர்ப்பின்போது தெரிவித்தார்.



“இது எங்களது பூமி. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் எமது ஆர்ப்பாட்டத்தைஹ் செய்தேயாகுவோம்” எனக் கூறுகிறார் லட்டோநா டங்கே. அவரது மகன் 2015 ஆம் ஆண்டு பொலிஸ் தடுப்புக்காவலில் மரணமாகியிருந்தார்.

“எமது சுகாதாரத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகளை விட்டுவிட்டு, உணர்வுகளை வெளிப்படுத்த நாம் வேறு வழிகளைப் பார்ப்போம். தயவு செய்து ஊர்வலத்துக்குப் போகாதீர்கள்” என அவுஸ்திரேலிய பிரதமர் மக்களைக் கேட்டுள்ளார்.

சிட்னி, பிரிஸ்பேன், பேர்த், கான்பரா நகர்களில் ஏற்கெனவே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன. மெல்போர்ண் பொலிசார் ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளரிடம் அவற்றைக் கைவிடும்படி கேட்டுள்ளார்கள். அதே வேளை பிரிஸ்பேந், அடிலேட் பொலிசார் ஊர்வலத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள்.

1991 முதல், 432 அவுஸ்திரேலிய சுதேசிகள் பொலிஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்துள்ளனர்.

Print Friendly, PDF & Email
Related:  இலங்கையில் எமது பணி வெற்றியளித்திருக்குமாயின் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் - எரிக் சொல்ஹெய்ம்