Arts & Entertainmentமாயமான்

Baby Girl (மலையாளம்)

பிரபல ஆங்கிலேய திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கல் கெயின், நடிப்பு பற்றி ஒரு முறை சொல்லியிருந்தார்: “ஒருவன் மது போதையில் இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டுமென்றால் அவன் தனக்கு மித மீறிய போதை இருப்பதாகக் காட்டிக்கொள்ள முனையக்கூடாது. மாறாக அவன் தனக்கு போதையில்லை சாதாரணமாக இருக்கிறேன் எனக் காட்டுவதற்கு முனைந்து அதில் தோற்றுப்போவதாகக் காட்ட முற்படவேண்டும்” என. சமீப காலமாக நான் அதிகம் மலையாளப் படங்களைப் பார்க்க விரும்புவதற்கு இப்படியான நடிப்பும் ஒரு காரணம்.

பாகவதர் காலத்து இசைத்தலில் ஆரம்பித்து சிவாஜி கணேசனின் கர்ச்சிப்பு, ஜெமினி கணேசனின் கதறல், ரஜினியின் விசிறல் (சண்டை) , தற்போதைய சில்லறைகளின் சுழற்றல் (குத்தாட்டம்) என்று பரிமாணத் தேய்வு கண்டு வரும் தமிழ்த் திரையுலகைச் சிலாகித்து எழுத எதுவுமில்லை. சமீபத்தில் சிவகார்த்தியேயனின் சுழற்றலோடு பறந்து வந்த பராசக்தி வந்த வேகத்தில் தொலைந்து போனது அதிசயம் தருவதல்ல. பழைய காலத்தைக் காட்டுவதற்கு கறுப்பு வெள்ளை டெலிவிசன் திரையை மட்டும் காட்டுவது போதாது. இங்கு, ரொறோண்டோவில், இத்தாலிய மாஃபியா படங்களை எடுக்கும் போது வீதிப்பலகைகளை மாற்றுவது முதல், அந்தக் காலத்து வாகனங்களை வீதியோரங்களில் நிறுத்திவைப்பது என அக்காலத்தைப் பிரதிபலிக்கக்கூடிய பல தடயங்களை வைப்பார்கள். ஆனால் பராசக்தியிலோ சிவகார்த்தியேயனின் தற்போதைய ஹெயர்ஸ்டைல் முதல் ஆடை வகைகள், காதல் நடனங்கள் என எதுவுமே கதைக்களமான 1960களைப் பிரதிபலிக்கவேயில்லை. பெருஞ் செலவுடன் தியேட்டர்களை நிரப்பக்கூடிய தயாரிப்பளர்கள், முட்டாள் ரசிகர்களை உசுப்பேத்துதல் எனத் தமது பணத்தை வாரிச்சுருட்டும் நடவடிக்கைகளில் இப்படங்கள் வெற்றி பெற்றாலும் சிறிய பட்ஜட் மலையாளப்படங்களுக்கு இவை ஒருபோதும் நிகராக இருந்ததில்லை.


மைக்கேல் கெயின் சொல்வதைப் போல, தமிழ்ப்பட நடிகர்கள் தாம் மதுபோதையில் இருக்கிறோம் என்பதை ‘டாய்’ போட்டுச் சுழன்று விழுந்து காட்டுவார்கள். மலையாள நடிகர்கள், குறிப்பாக மமுட்டி, மோஹன்லால், நிவின் போலி போன்றோர் மிகக்குறைந்த முகத் தசைகளினால் மட்டுமே தமக்கு போதையில்லை என்பதைக் காட்டிவிட்டுப் போய்விடுவார்கள்.

லிம்போல் ஜோசே

சமீபத்தில் நிவின் போலியின் இரண்டு மலையாடப்படங்களைப் பார்த்தேன். எனக்குப் புதிய நடிகராகத் தெரிந்தாலும் பல விருதுகளைப் பெற்றவர் எனப் பின்னால் அறிந்தேன். நான் பார்த்த அவரது முதலாவது படம் சர்வம் மாயா. ஒரு பேய்க் கதையானாலும் காதலின் வலிமையை வெளிக்கொணரும் படம்.

இரண்டாவது படம் Baby Girl. அருண் ராஜ் வர்மா இயக்கிய இப்படத்தில் நிவின் போலி, லிம்போல் ஜோசே, சங்கீத் பிரதாப் ஆகியோர் நடிக்கிறார்கள். மருத்துவமனையொன்றிலிருந்து குழந்தையொன்றைக் கடத்துவதுடன் பொலிஸ் சைரன்களின் கதறல்களுடன் படம் ஆரம்பமாகும்போது ‘எட இன்னுமொரு கடத்தல் கதையா?’ என மனம் சலிக்கத் தொடங்கும். மருத்துவமனையில் அட்டர்ண்டண்ட் ஆகப் பணிபுரிபவராக நெவின் போலி, வழக்கமான, மீசைக்குப் பின்னால் பாதுகாப்பாக மடித்து வைக்கப்பட்ட வாயுடன், தோற்றம் தருகிறார்.

வில்லனாகச் சித்தரிக்கப்படும் சங்கீத் பிரதாப்பின் வற்புறுத்தலில் கடத்தப்பட்ட குழந்தைக்கு பலவந்தமாகப் பால் கொடுக்க முனைந்து குழந்தையுடன் நெருக்கமாகும் மாற்றாந்தாயாக லிம்போல் ஜோசே தோன்றுகிறார். ‘அரிதாரம்’ இல்லாத இயற்கை முகம். இயல்பான நடிப்பு. கடத்தல்காரனைக் கண்டுபிடித்துக் கொடுக்க முனைந்து தோற்றுப்போய் இறுதியில் ஹீரோவாகும் நிவின் போலி மட்டுமல்ல வில்லன் பிரதாப், வில்லி ஜோசேயின் மனப்போராட்டங்களை இவர்கள் அனைவரும் வெளிப்படுத்தியிருக்கும் விதம் “இதுவும் ஒரு கடத்தல் கதை” என்பதிலிருந்து பார்வையாளரை விடுவித்து ஒரு சிறந்த மலையாளப் படத்தைப் பார்த்த நிறைவுடனும் “இனிமேல் ஒருபோதும் தமிழ்ப்படமே பார்க்கப்போவதில்லை” என்ற சபதத்துடனும் பெருமூச்சுடன் அனுப்பி வைக்கிறது.

சங்கீத் பிரதாப்

மலையாளப் படங்களில் எனது ஈர்ப்புக்கு இன்னுமொரு காரணம் இங்கு தயாரிப்பாளர்கள் கதையின் இயங்குகளமாகத் தாம் வாழும் சகஜமான சூழலையே தெரிவு செய்கிறார்கள். ஆகக்கூடி, அவர்கள் வெளியே போவதானால் பாலக்காடு, கோயம்புத்தூர் வரை களத்தை விரித்துக்கொள்வார்கள். தமிழ்ப் படங்களைப் போல சுவிட்சர்லாந்து, டுபாய் எனக் கதாநாயகிகளுக்கென விசேடமாகத் தெரிவு செய்யப்பட்ட களங்களுக்கு திரைக்கதைகளை வலிந்து இழுத்துச் செல்லும் பழக்கம் மலையாளத்தில் இல்லை. அதனால் தான் அவர்களால் சிறிய பட்ஜட்டில் பிரமாண்டமான படங்களைத் தயாரிக்க முடிகிறது.

ஈழத் தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான (60-70 களில்) வாழைக்குலை தூங்கும் பெட்டிக் கடைகளில் சிறிய கிளாஸ்களில் தேனீர் அருந்தும் பழக்கம் இன்றுவரை மலையாளப் படங்களில் சர்வசாதாரண நிகழ்வுகளாக இருக்கும். சண்டைக்குப் போகும்போதும் ஒற்றைக்காலை எகிறித் தூக்கி சண்டிக்கட்டைக் கட்டும் காட்சி மோஹன்லால் முதல் சிறிய நடிகர்கள் வரை இருப்பது தற்செயலான நிகழ்வல்ல. அடிக்கடி மழை பெய்யும். பின்னணியில் அடர்ந்த மரங்கள், இலாது போனால் மலை. குடைகளுடனும் சண்டிக்கட்டுகளுடனும் நடமாடும் கிராமத்து மக்கள். தமது கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காது, தமது கிராமிய வாழ்வை விட்டுக்கொடுக்காது திரைக் கதைகளைத் தம்பக்கம் வளைத்தெடுக்கும் பாங்கு பாரதிராஜாவுடன் தமிழ்ப்படங்களில் நிறைவுற்று விட்டது. Baby Girl படத்தில் மருத்துவமனை அட்ரெண்டனாக வரும் நிவின் போலி வேட்டியுடன் தான் வருகிறார். இறுதியில் ….

என்னவோ, எனக்குப் பிடித்திருக்கிறது. பாருங்கள். Sub-titles இருக்கிறது.