Opinionமாயமான்

Aspen Medical ஊழல் | மாட்டிக்கொண்ட ராஜபக்ச ‘அம்மான்கள்’

விசாரணை – மாயமான்

‘பலநாள் கள்ளன் ஒருநாள் அகப்படுவான்’ என்ற பழமொழியைப் புதுப்பித்து வருகிறார்கள் ராஜபக்சக்கள். ஊழல் அவர்களது மரபணுக்களில் செதுக்கப்பட்டிருக்கிறது. எத்தனை தலைமுறைகளானாலும் அது தொடரப் போகிறது. பாவம் இலங்கை மக்கள். அவர்களுக்கு என் முன்கூட்டிய ஆழ்ந்த அனுதாபங்கள்.

Profiting from the Pandemic விவரணப் படத்தைப் பார்க்க மேலேயுள்ள படத்தை அழுத்தவும்

நேற்று (மே 2, 2022) அவுஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனமான ABC ஒரு விவரணப்படத்தை ஒளிபரப்பியிருந்தது. Four Corners எனப்படும் இவ் விவரணத்தொடர் உலகின் நான்கு மூலைகள் வரை தனது வியாபகத்தைச் செலுத்தி அங்கு நடைபெறும் விடயங்களை அம்பலத்துக்கு கொண்டுவரும் ஒரு நிகழ்ச்சி. Profiting from the Pandemic என்ற தலைப்பில் நேற்று ஒளிபரப்பான இந் நிகழ்ச்சி ராஜபக்ச குடும்பத்தின் தலையில் விழுந்த இன்னுமொரு கல். நந்திக்கடலில் தவித்துநின்ற தமிழ் மக்கள் தலைகள் மீது குண்டுகளை ஏவிய ராஜபக்சர்கள் மீது அவர்களது மக்களே கற்களை எறிந்து தமது பாவங்களைக் களைய எத்தனிக்கிறார்கள்.

Profiting from the Pandemic என்ற இந்த விவரணப் படம் அவுஸ்திரேலிய மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனமான Aspen Medical என்ற நிறுவனம் எப்படி கோவிட் பெருந்தொற்றைப் பாவித்து இலாபம் சம்பாதித்தது என்பதை அவுஸ்திரேலிய மக்களுக்குப் போட்டுடைக்க எடுக்கப்பட்டது. இக் கொடிய நோயினால் உலகத்தில் மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்துகொண்டிருந்த வேளையில் ஊழலையே வாழ்வாகக் கொண்ட தெற்குலக நாடுகளில் ஆட்சியாளருக்கு இலஞ்சத்தைக் கொடுத்து வெறும் இலாபநோக்கிற்காக ஏழைமக்களின் உயிர்களைக் குடித்த இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவது இந் நிகழ்ச்சி. ஆனால் இது ராஜபக்சக்களின் அஸ்தமன காலமாகையால் அவர்களே இதில் கதாநாயகர்களாகவேண்டி ஏற்பட்டுவிட்டது.

சுமார் 44 நிமிடங்கள் நீளமான இந் நிகழ்ச்சி Aspen Medical நிறுவனத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டிருந்தாலும் அது முற்று முழுதாக ராஜபக்சக்களை அம்பலப்படுத்தும் ஒன்றாகவே தெரிகிறது. உகண்டா தூதுவர் கணநாதன் போன்ற ராஜபக்சக்களின் இன்னுமொரு கையாளான நிமால் பெரேரா என்ற ஊழல் பெருச்சாளி ராஜபக்சக்கள் ஊழல் மூலம் சம்பாதிக்கும் பணத்தை சர்வதேச ஊழல் அரசுகள் / நிறுவனங்களின் உதவியுடன் பதுக்க உதவி செய்தவர் என்பதை அம்பலப்படுத்துகிறது.

நிமால் பெரேரா

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சுமார் 70% மான வரவு செலவு அவர்கள் குடும்பத்திடமே (அமைச்சுக்கள்) இருந்தது. இதன் மூலம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்களிலும் சர்வதேச நிறுவனங்களை ஈடுபடுத்தி அவற்றுக்கு இலங்கை மக்களின் வரிப்பணத்திலோ அல்லது சர்வதேச உதவிகளின் மூலமோ பணத்தைப் பெற்றுக்கொடுப்பார்கள். இது உண்மையான செலவுகளைவிடப் பன்மடங்கு அதிகமாக இருக்கும். இந் நிறுவனங்கள் தமக்குக் கிடைத்த பணத்தில் ஒரு பங்கை ராஜபக்சக்களின் சர்வதேச கணக்குகளில் வைப்பிலிடுவார்கள். இக் கணக்குகளின் பொறுப்பாளர்களாக ராஜபக்சக்கள் தமக்கு நம்பிக்கைக்கு உரியவர்களை நியமிப்பார்கள். அப்படியான ஒருவர் தான் நிமால் பெரேரா. இந்த Aspen Medical நிறுவனம் கோவிட் பெருந்தொற்றுக்கு உபகரணங்களை வழங்குவது என்ற பெயரில் US$ 2.1 பில்லியன்களை பிரிட்டிஷ் வேர்ஜின் தீவுகளிலுள்ள Sabre Vision என்ற நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது. ஆனால் இலங்கையின் சுகாதார அமைச்சுக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது. Sabre Vision நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தவர் நிமால் பெரேரா.

ராஜபக்சக்களின் பணத்தை நிர்வகிப்பதில் நிமால் பெரேரா ஈடுபடுவது இதுவல்ல முதல் தடவை. ராஜபக்சவின் முந்திய ஆட்சிக் காலத்தில் அவர் ஒதுக்கிக் கொடுத்த பணத்தில் கொழும்பில் தனக்கும், நாமல் ராஜபக்சவுக்கும் பல சொத்துக்களை வாங்கியிருக்கிறார். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட ‘மன முறிவு’ காரணமாகவோ அல்லது பொலிசாரின் திறமை காரணமாகவோ நிமால் பெரேரா போட்டுக் கொடுத்த காரணத்தால் நல்லாட்சிக் காலத்தில் நாமல் கைதுசெய்யப்பட்டிருந்தார். கைகளில் போடப்பட்ட விலங்கைப் பெருமையாகத் தூக்கிக் காட்டிக்கொண்டு அவர் சிரித்துக்கொண்டு பொலிஸ் வானில் ஏறுவது அப்போது இலங்கை வானொளிகளில் பிரசித்தமாக இருந்தது.

தற்போதைய மக்கள் புரட்சி பல ராஜபக்ச எதிகளின் முதுகெலும்புகளை நிமித்தியிருக்கிறது. ஒரு காலத்தில் இவர்களை மிரட்டிக்கொண்டு திரிந்த வெள்ளைவான் தளபதி ‘அவான் கார்ட்’ சேனாதிபதி நாட்டை விட்டு ஓடித்தப்பிய நிலையில் அவரது கொலைகாரப் படை, தமது வெள்ளை வான்களுக்கும் மோட்டர் சைக்கிள்களுக்கும் பெற்றோல் வாங்கப் பணமில்லாது ஒளித்துவிட்டது. இதனால் ராஜபக்ச எதிரிகள் பகிரங்கமாகச் செயற்பட ஆரம்பித்திருக்கிறார்கள். 2009 இல் இராணுவத்தினர் செய்த முள்ளிவாய்க்கால் அட்டூழியங்கள் பற்றிய படங்களும், காணொளிகளும் கூடக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்ட ஆரம்பித்துள்ளன. உகண்டா, கேமன் தீவுகள், வேர்ஜின் தீவுகள், துபாய், சேஷெல்ஸ் போன்ற நாடுகளில் ராஜபக்சக்கள் பதுக்கி வைத்திருக்கும் பணம் பற்றிய தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இதைவிடவும் விடுதலைப் புலிகள் பதுக்கி வைத்திருந்த பணம், தங்கம் போன்றவற்றைச் சில முன்னாட் போராளிகளின் உதவியுடன் கிண்டியெடுத்து அவற்றை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று பதுக்கி வைத்திருப்பதாகப் பல வதந்திகளும் உலாவுகின்றன. சமீபத்தில் இப்படியொரு தங்க வேட்டையில் முன்னாள் பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேகராவின் ஆட்களும், முன்னாள் கடல் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவின் ஆட்களும் போட்டி போட்டுக்கொண்டு தவறான இடங்களைக் கிண்டி ஏமாந்தமை பற்றிய செய்திகளும் அப்போது வந்திருந்தன. இப்படியெல்லாம் சிதறி, எஞ்சியது மட்டுமே பல பில்லியன் டாலர்கள். இதனால் தான் இலங்கையின் அதியுச்ச பணக்காரராக மஹிந்த ராஜபக்சவால் தொடர்ந்தும் இருக்க முடிகிறது. புலிகளின் கிடங்குகளைக் காட்டிக் கொடுத்தமைக்காகக் கிடைத்த பங்குகளினால் சில ‘அம்மான்களும்’ பில்லியனாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இப்படி ராஜபக்சக்கள் சுருட்டிய பணத்தை வெளிநாடுகளுக்குக் கொண்டுவந்து சேர்ப்பதில் நிமால் பெரேராவைப் போலவே பல தமிழர்களும் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களின் பெயர்கள் இனிமேல்தான் அம்பலத்துக்கு வரும். இதுவரை ராஜபக்ச கோவில்களில் அர்ச்சனை செய்துகொண்டிருந்த வெளிநாட்டுப் பக்தகோடிகள் இப்போது வெளிநாட்டுத் தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ‘கோதா கோகம’, ‘மைனா கோகம’ ஆர்ப்பாட்டங்கள் இவர்களை உசுப்பேத்தி வருகின்றன. இவர்கள் போன்றவர்களின் துணையில்லாது ‘Profiting from the Pandemic‘ வெளிவந்திருக்குமென நான் நினைக்கவில்லை.

இறுதிப் போரின்போது விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு ‘கட்சி மாறிய’ அம்மான்கள் எப்படிக் காரணமானார்களோ அதே போன்ற ‘ முள்ளிவாய்க்கால் moment’ இப்போது ராஜபக்சக்களுக்கு வந்திருக்கிறது. பல அம்மான்கள் கட்சி மாறப் போகிறார்கள். அவர்களில் பலர் இராணுவத்தினராக இருந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. அவர்களது ‘சிமார்ட் ஃபோன்களில்’ ஒளிந்திருக்கும் பல காணொளிகள் இனிமேல் அம்பலத்துக்கு வரலாம். கணநாதன், நிமால் பெரேரா போன்றோர் கூட கூண்டுகளில் ராஜபக்சக்களுக்கு எதிராகச் சாட்சியம் சொல்லத் தயாராகலாம். Four Corners போல இன்னும் பல நிகழ்ச்சிகள் ராஜபக்சக்களை நாலு மூலைகளுக்கும் முடக்கி அந்த முள்ளிவாய்க்கால் சீவன்களுக்கு அமைதியைப் பெற்றுக்கொடுக்கும் என நம்பலாம்.