Volunteer Orgs.

இதுவரையில் ‘அன்பு நெறி’…

Charity brings to life again those who are spiritually dead. …

எம்மைப்பற்றிச் சில வரிகள்….

2009

போர் எங்கள் மக்களைச் சின்னாபின்னப்படுத்தியது. மாண்டவர்கள் போக மீண்டவர்கள் எஞ்சியதைப் பொறுக்கிக்கொண்டு மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையோடு நிழல்களில் தஞ்சமடைந்த காட்சி எம் நெஞ்சங்களைப் பிழிந்தது.

வாளாவிருக்க எம்மால் முடியவில்லை. ஆன்மாக்களை இழந்து நடைப்பிணங்களான எமது உறவுகளை மீட்டெடுத்து அவர்களது கருகிய வாழ்வை மீண்டும் தழைக்கவைக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தோடு சில பேராதனைப் பல்கலைக்கழகத் தோழர்களும் இதர நணபர்களும் சேர்ந்து உருவாக்கியதே அன்புநெறி.

வரலாறு…

போர் எம்முன் விரித்துவைத்த அவலத்தைத் தாண்டி அப்பால் நகரமுடியாத நிலைமை. முகாம்களில் அடைக்கப்பட்டு விலங்குகளிலும் கேவலமாக வதைபட்டுக்கொண்டிருந்த எம்மக்களுக்கு உதவிசெய்யவென விரைகிறார்கள் அப்பொழுது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த சில மாணவர்கள். ‘நேசக் கரங்கள்’ என்ற பெயரில் கைகோர்த்து நின்ற இளையோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை, மருந்து எனப்பல அத்தியாவசிய தேவைகளை வழங்கினர். ஸெவைகளும் விரிவடையத் தேவைகளும் அதிகரித்தன. கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள அவர்களது பல்கலைக்கழக முன்னாள் மானவர்களை நாடினர். போர் சப்பித் துப்பி எஞ்சிய மனிதர்களில் 90,000 பேர் விதவைகள்; கணக்கெடுக்க முடியாத அளவில் அனாதைக் குழந்தைகள். தொண்டு விஸ்தரிக்கப்படவேண்டிய தேவை எழுந்தது.

‘கடவுளின் குழந்தைகள்’ (God’s Own Children) என்ற பெயரில் இலங்கையில் போரினால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளைப் பராமரித்து வந்தது. அதன் பணிப்பாளர்களை எமது தொண்டர்கள் பலர் ஜூலை 2009 இல் சந்தித்து விபரங்களை அறிந்துகொண்டனர்.

வவுனியாவில் அமைக்கப்பட்ட தற்காலிக இடைத்தங்கு முகாம்களில் எம் மக்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் சுகாதாரமற்ற சேற்றிலும், சகதியிலும் வாழ்ந்தனர். சுகாதாரமான, பிரத்தியேகமான கழிப்பறைகளின்றிப் பொதுவெளியில் அவர்கள் தம் இயற்கை அழைப்புகளைச் செய்யவேண்டியிருந்தது.

ஆகஸ்ட் 2009 இல் நண்பர்களும் குடும்பங்களும் இணைந்து BBQ / ஒன்றுகூடல் நிகழ்வொன்றை ஒழுங்குசெய்தோம். அதில் சேர்க்கப்பட்ட நிதியைக் கொண்டு இடைத்தங்கு முகாம்களில் தற்காலிக கழிப்பகங்களை வழங்கினோம். அனைத்துலக மருத்துவ அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் இச் சேவைகளை அங்கு வழங்கிக்கொண்டிருந்தது. அதன் மூலம் இச் சேவையை எங்களால் செய்ய முடிந்தது.

இந் நிதிசேகரிப்பின் வெற்றி தந்த உற்சாகத்தில் அதைத் தொடர்ந்து வருடாவருடம் செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. இன்று வரை அது தொடர்கின்றது.

எம் மக்களின் அவலங்களின் குரல்கள் உலகம் முழுவதும் கேட்க ஆரம்பித்தது. பல தொண்டு நிறுவனங்கள் நிலத்திலும், புலத்திலும் இயங்க ஆரம்பித்தன. நாங்கள் தொடர்ந்தும் ‘பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்’ என்ற குழுமத்துக்குள் எம்மை அடக்கிவிட முடியாது என்றுணர்ந்ததும், நாமும் நிறுவனமயப்படவேண்டிய தேவையுண்டென்பதை உணர்ந்தோம்.

‘அன்புநெறி’

ஜனவரி 2010 இல் நண்பர்களும் ஆதரவாளர்களும் சந்தித்து எதிர்கால நடைமுறைகள் பற்றி அளவளாவினோம். அதன் விளைவாகப் பிறந்ததே ‘அன்பு நெறி’. தற்போது ‘அன்பு நெறி’ , ‘அன்புநெறி மனிதாபிமான நிவாரண அமைப்பு’ (Anpuneri Humanitarian Relief Organaization) என்னும் பெயரில் ஜனவரி 7, 2011 இல் கனடாவில் இலாப நோக்கற்ற அமைப்பாகப் பதியப்பட்டது.

எமது நோக்கு…

30 வருடங்கள் நடைபெற்ற போரின் தாக்கத்தினால் அனாதைகளாக்கப்பட்டவர்கள், உடற்பாவனையை முழுமையாகப் பயன்படுத்த முடியாமற்போனவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், நல்வாழ்வைத் தொலைத்தவர்கள் எனப் பலரது வாழ்வையும் மறுசீரமைத்து சுயமாகத் தமது வாழ்வை மேற்கொள்ள தனியாகவோ, கனடிய தமிழ் மக்களின் உதவியுடனோ, இதே நோக்கங்களுடனான இதர அமைப்புகளுடனோ சேர்ந்து எம்மாலியன்ற உதவிகளைச் செய்வதே ‘அன்புநெறி’ யின் நோக்காகும்,

எங்கள் வெற்றியின் கட்டுமானம்…

எமது நண்பர்கள், குடும்பங்களிடையே எமது மக்களின் இயல்பற்ற வாழ்நிலைமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் போர் தின்று உமிழ்ந்த எம் உறவுகளுக்கு உதவிகளைச் செய்ய அவர்களையும் ஈடுபடுத்துவதன் மூலம், எங்கள் இலக்கை அடையும்வரை பணியாற்றுவது.

இதர மனிதநேய அமைப்புகளுடன் கை கோர்த்து எமது மக்களின் நீண்டகால ஆரோக்கியமான இருப்பை நோக்கிய காத்திரமான திட்டங்களை மேற்கொள்ளல்.

அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்வியை வழங்குவதன்மூலம் அவர்களது எதிர்காலத்தைப் பிரகாசமாக்கும் முயற்சியில் பயணிக்கும் இதர அமைப்புகளுக்கு உதவிகளை வழங்கல்.

இயற்கை, மனித அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க முடியாமல், வறுமை, பாதுகாப்பு காரணங்களினால் மக்கள் தம் பூர்வீக கிராமங்களை விட்டு உள்ளகப் புலப் பெயர்வை மேற்கொள்ளாமலிருக்க அவர்கள் வாழும் எல்லைக் கிராமங்களில் அபிவிருத்திகளை மேற்கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு ஆகிய விடயங்களில் தன்னிறைவு பெற பயிற்சிகளையும், உபகரனங்களையும் வழங்குதல்.

செய்முறை

‘அன்புநெறி’ தன் நிவாரணத் திட்டங்களை எப்படி முன்னெடுக்கிறது? நிலத்திலும், புலத்திலும் பல நூற்றுக் கணக்கான தொண்டு நிறுவனங்கள் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் தத்தம் வழிகளையும், முறைகலையும் பாவித்துத் தம் பணிகளை மூனெடுக்கின்றன.

‘அன்புநெறி’ இலங்கையில் பதியப்பட்ட ஒரு அமைப்பல்ல. அதற்கு அங்கு கிளைகளும் கிடையாது. அதனால் அது தாயகத்தில் அபிவிருத்தி தேவைப்படும் பிரதேசங்களிலுள்ள கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, அரசியல் கலக்காத, நம்பிக்கைக்குப் பாத்திரமான அமைப்புகளுடன், திட்டத்திற்கேற்றபடி (project specific) தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு மது திட்டங்களை நிறைவேற்றுகிறது. எமது மக்கள் வாழும் கிராமங்கள் சிறீலங்கா என்றொரு நாட்டின் இறைமைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொண்டு, சிறீலங்கா அரசின் சட்ட திட்டங்களுக்கு முரண்படாத வகையில், அவ்வப் பிரதேச அரச அலுவலகங்களின் அனுமதியைப் பெற்றே எமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். அத்தோடு, பல திட்டங்களுக்கு அரச அலுவலகங்களின் அங்கீகாரமும் தேவைப்படுகிறது. எமது பணிகளினால் கிடைக்கும் பொது நன்மைகளைக் கவனத்திலெடுத்து அரசாங்கமும் எமது மக்களுக்குப் பல நலத்திட்டங்களைச் செய்துவருவதால் அவர்கள் இரட்டிப்பு நன்மையைப் பெறுகின்ற சந்தர்ப்பங்களுமுண்டு.

எமது மனிதநேயப் பணிகளில் எம்மோடு கரம் கோர்த்துப் பயணிக்கும் சில தொண்டு நிறுவனங்கள் ஆற்றிவரும் மகத்தான சேவைகளை முன்னிறுத்தி அவற்றில் சில வற்றை இங்கு சொல்லியேயாக வேண்டும்.

‘அன்பு நெறி’ யின் அடித்தளத்தை ஆழமாகப் பதியவைத்தது, பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் ‘நேசக்கரங்கள்’. முதன் முதலாக நாம் சேர்த்த நிதியின் மூலம் முகாம்களில் கழிப்பறைகளை வழங்க உதவி செய்தது அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்துலக மருத்துவ அமைப்பு (IMHO), அனாதைக் குழந்தைகளைப் பாரமரிக்கும், யாழ்ப்பாணத்தைச் சேந்த ‘கடவுளின் குழந்தைகள்’ (God’s Own Children), யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கி வந்தது. யாழ்-ஜெய்ப்பூர் மாற்று இயக்கத்துக்கான மையம், போரினால் அவயவங்களை இழந்தவர்களுக்கு சில்லுக்கதிரை போன்றவற்றை வழங்கியது. கனடாவிலும், தாயகத்திலும் இயங்கிவரும் ‘வரோட்’ (VAROD) வசதியற்ற மாணவர்களுக்கு கல்வி வசதிகளைச் செய்து வருகிறது. கனடாவிலும், தாயகத்திலும் நீண்டகாலமாகப் பதியப்பட்டு இயங்கிவரும் சமூக அமைப்பு. தாயகத்திலும், கனடாவிலும் இயங்கிவரும் ‘புன்னகை அமைப்பு’, கனடாவில் இயங்கிவரும் போதை வஸ்துப் பழக்கம், மனநோய் சிகிச்சைகளுக்கான மையம் (CAMH). உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் – KAMHA, Ramakrishna Mission மற்றும் அரச அலுவலகமான RDHS Batticaloa. அதே வேளை தாயகத்தில் கிராமங்கள் தோறும் இயங்கிவரும் முன்பள்ளிகள், அரச அலுவலகங்கள் என்று பல மனிதநேயப் பங்காளிகளை நாம் மறக்க முடியாது.

எமது பணிகள் சில…
 • உள்ளக இடப்பெயர்வு இடைத்தங்கல் முகாம்களில் இருந்தவர்களுக்கு உணவு, உடை, மருந்து, தற்காலிக கழிப்பறைகள் (IMHO)
 • மாற்று வலுவுள்ளோருக்கு சில்லுக் கதிரைகள் (JJCDR)
 • கர்ப்பிணித் தாய்மாருக்கு போசாக்குணவு
 • வசதியற்ற மாணவர்களுக்குக் காலை உணவு, இலவச மாலை வகுப்புகள், கல்வி உபகரணங்கள், இருசக்கர வண்டிகள்
 • முன்பள்ளிகளுக்கான பழைய கட்டிடங்களைச் சீரமைத்தல், புதிய கட்டிடங்களை நிர்மாணித்தல், நிர்வாகச் செலவு
 • கிராமங்களில் பொதுப்பாவனைக்கான (சமூக ஒன்றுகூடல்) கட்டிடங்கள்
 • ஆசிரியர்களுக்கு ஊதியம்
 • விதவைகளுக்கு சுய தொழில் ஊக்குவிப்பு
 • வசதியற்றோர் தொழில் முயற்சிகளுக்காக நுண் கடன்
 • அநாதைக் குழந்தைகளுக்கு உதவி (GOC)
 • கனடாவிலிருந்து வறிய குடும்பங்களுக்கு பாவிக்கப்பட்ட ஆடைகள்
 • வறியவர்களுக்கு உதவிப் பணம்
 • விளையாட்டுப் பயிற்சியும் உபகரணங்களும்
 • வெள்ள நிவாரணம் (வன்னி, மட்டக்களப்பு, களுத்துறை, புதுச்சேரி)
 • மாற்றுவலுவுள்ள பெண் பிள்ளைகளுக்கு மறுவாழ்வுக் கட்டிடம் (VAROD)
 • மது / போதைப் பழக்கமுள்ளவர்களுக்கு சிகிச்சை (CAMH)
 • ‘ஆட்டிசம் (மதியிறுக்கம்)’ சிகிச்சைக்கு உதவி (SAAC)
 • வகுப்பறை வசதிகள் (புதுக்குடியிருப்பு R.C. வித்தியாலயம்)
 • எல்லைக்கிராம மக்களின் வாழ்வாதரம் (ஆயித்தியமலை, உன்னிச்சை, பான்சேனை முதலியன)
 • தலைமத்துவப் பயிற்சி
 • குழாய்க்கிணறுகள்
 • வீடுகள் நிர்மாணம் (பாவற்குளம்)
 • குழந்தைகள் மறுவாழ்வு (விபுலானந்தபுரம், மட்டக்களப்பு) (C-REP)
 • முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் தொழிற்பயிற்சி (Smile Foundation)
 • விவசாய நிலக் கொள்வனவு (பன்சேனை)
 • தெருவிளக்கு, மின்சாரம் வழஙகல் (பன்சேனை)
 • யானைகளிலிருந்து பாதுகாப்பு (பன்சேனை)
 • வேலையற்றோருக்கு வேலைவாய்ப்புத் திட்டஙகள் (பன்சேனை)
 • நடமாடும் மருத்துவ, தபால் நிலையங்கள் (பன்சேனை)
 • குழந்தைகளுக்கான உதவி மானியம்
 • மீள்குடியேற்ற உதவிகள் (குஞ்சுப்பரந்தன்) (வளர்மதி நிறைவாழ்வகம் – யாழ்ப்பாணம்)
ஒரு பார்வையில் அன்புநெறியின் பணிகள்
Some organizations abbreviated above

International Medical Health Organization (IMHO) -USA

Jaffna Jaipur Center for Disability Rehabilitation (JJCDR)) – Jaffna

Centre for Adiction and Mental Health (CAMH) – Toronto

God’s Own Children Foundation (GOCF) – Srilanka

குஞ்சுப்பரந்தன் – சாலம்பன், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஒரு கரையோரக் கிராமம். அங்கு தற்போது 52 குடும்பங்கள் அடிப்படை வசதிகளற்று வாழ்ந்துவருகின்றனர். போர் இக் குடும்பங்களைப் பலதடவைகள் இடம்பெயர்த்ததன் மூலம் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாக்கியிருக்கிறது. அது போதாதென்று, இது ஒரு கடற்கரைக் கிராமமென்பதனால் பல தடவைகள் இவர்கள் இயற்கை அனர்த்தங்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியவர்களாகியிருயிருக்கிறார்கள். போர்க்காலத்தில் வவுனியா தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்ட இவர்கள் விடுதலையாகியதும் கூடாரங்களில் தமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

முடிவாக….

எமது உறவுகளுக்கும், உதவிக்கரங்களை நீட்டிய நன்கொடையாளர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், சகல வழிகளிலும் எமது கடமைகளைப் புரிவதில் ஒத்தாசை புரிந்தவர்களுக்கும், எம்மோடு துணைநின்ற நண்பர்கள் உறவினர்களுக்கும், எம் மக்களின் சார்பில் மனம் நிறைந்த நன்றியை ‘அன்புநெறி’ தெரிவித்துக் கொள்கிறது. எதிர்காலத்தில் இப் பணி மேலும் சிறப்புடன் நிறைவேற உங்கள் உதவிகளை எதிர்பார்க்கிறோம்.

http://anpunericanada.org/ http://www.facebook.com