ColumnsWorldசிவதாசன்

9/11 | 20 வருட நிறைவு – உலக ஒழுங்கு மாறியதா? – ஒரு மீள்பார்வை


சிவதாசன்

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்களுள் பயணிகள் விமானங்கள் புகுந்து இன்றுடன் இருபது வருடங்கள் பூர்த்தியாகின்றன. இச்சம்பவங்கள் யாரால், ஏன் நிகழ்த்தப்பட்டந எனப் பொதுமக்கள் அறிவதற்கு இன்னும் இருபது வருடங்கள் எடுக்கலாம். விசாரணைகள் நடைபெற்று முடிவுகள் பெட்டிக்குள் வைத்து மூடிப் பூட்டுக்கள் போடப்பட்டுள்ளன. சட்டத்தின் சாவியைக் கொண்டு ஜநாதிபதி பைடன் அவற்றைத் திறப்பதற்கு ஆணையிட்டுள்ளார் என்கிறார்கள். சுருக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட சில பிரதிகள் வெளிவரலாம். எப்போது? தெரியாது.

இச்சமபங்களின் காரணமாக உலகம் புதிய ஒழுங்கிற்குள் போகப்போகிறது (New World Order) என அமெரிக்கா, பிரித்தானியா உட்பட்ட, உலகச் சண்டியர் சம்மேளனம் அறிவித்திருந்தது. உலகம் எங்காகிலும் ‘பொங்காத அமெரிக்கனுக்குப் பங்கம் விளைந்தால் சங்காரம் நிசமென்று’ புஷ் சங்கூதி முழங்கியதும், அவரை இழுத்துத் திரிந்த பிரித்தானிய பிரதமர் ரோணி பிளையர் அதைவிட உரத்த குரலில் அதை எதிரொலித்ததும் நகச்சுவைத் துணுக்குகளாக இப்போதும் வலம் வருகின்றன.

மக்களின் மனங்களைச் சலவை செய்ய அமெரிக்காவில் ஆயிரம் கருவிகளுண்டு. பென்டகனால் நிர்வகிக்கப்படும் ஹொலிவூட், மற்றும் ஊடக ஊதுகுழல்கள் எனப் பல வடிவங்களில் அவைகளைக் காணலாம். 9/11 தாக்குதல்களின் பின்னால் மர்மங்கள் பல சூழ்ந்துள்ளன என்ற விடயத்தைப் பலர் இன்னும் கிண்டிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் கொண்டுள்ள அக்கறை நியாயமானதாக இருந்தாலும், அவர்களை மனநோயாளிகளாகச் சித்தரித்து, இச் சாதனங்கள் உண்மையிலேயே மனநோயாளிகளாகவும் ஆக்கி விடுகின்றன. 9/11 மர்மம் அதன் இடிபாடுகைடையே செத்துப்போய்விட்டது. அதன் மீதான மரணவிசாரணை அறிக்கை வரும்போது உலகம் அதில் அக்கறை கொள்ளாத வேறொன்றாகவிருக்கும். ஆனால் இந்த சண்டியர் சம்மேளனம் பிரகடனம் செய்த புதிய ஒழுங்கு நடைமுறைக்கு வந்துள்ளதா என்பதே இப்போது நம்முன்னாலுள்ள கேள்வி.

உலகம் இப்படிப் பல ஆனானப்பட்ட பிரகடனங்களை எல்லாம் கண்டு வந்திருக்கிறது. ஒரு காலத்தில் உலகை ஆண்ட சண்டிய இனமான டைனாசோர்களை அழிக்கவென ஒரு தூமகேது காரணமாக இருந்தது என்கிறார்கள். இன்று அவற்றை நிலக்கீழ் படிமங்களாகச் சுரண்டி எடுக்கிறோம். புஷ்ஷும், ரோணி பிளையரும் இன்னும் சில வருடங்களில் வரலாற்று மாணவர்களால் ‘சுரண்டி’ எடுக்கப்படுபவர்களாக இருப்பர் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தென்பட ஆரம்பித்துள்ளன.

9/11 நிரந்தரமான புதிய உலக உழுங்கொன்றைக் கொண்டுவராவிடினும், சண்டியர்களின் தற்காலிக தேவைகளைப் பூர்த்திசெய்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தம்மைச் சுற்றியிருந்த வியாபாரிகள் இலாபமடைவதற்காக அரசியல்வாதிகள் பொதுமக்களை நரபலிகளாகக் கொடுப்பது என்பது இரண்டாம் உலகயுத்தத்துக்குப் பிறகு ஏற்பட்ட ஒரு புதிய ‘உலக ஒழுங்காக’ வேண்டுமானால் இருக்கலாம். அதற்கு முந்திய உலக யுத்தங்கள் பெரும்பாலும் மன்னர்களினது ஆணவத்தைத் திருப்தி செய்வதற்காகவாக (இதற்குள் பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்பனவும் அடங்கும்) இருக்கலாம். ஆனால் அம்மன்னர்கள் மக்களால் தெரியப்பட்டாத சக்கரவர்த்திகள். தமது விருப்பு வெறுப்புக்களுக்காக அவர்கள் மக்களிடம் மண்டியிடவேண்டிய தேவைகள் இருந்ததில்லை. இரண்டாம் யுத்த காலத்தில் உலகின் புதிய ஒழுங்கு மக்களின் சம்மதம் என்ற ஒன்றையும் தனது ஆட்சியில் இணைத்துக்கொண்டிருந்தது. இதைப்பெறுவதற்காக தலைவர்கள் மக்களை ஏமாற்ற்ற வேண்டிய தேவையும், அதற்காக அவர்கள் பலவித கருவிகளைப் பாவிக்கவேண்டிய தேவையும் ஏற்பட்டன.இக் கருவிக்களைப் பாவிக்கத் தெரிந்தவர்களும், வசதி படைத்தவர்களுமாக இருந்த நாடுகள் மேற்கிலேயே இருந்தன. பொய்யான தகவல்களைத் தரும் ஊடகங்களும், தத்ரூபமாக கற்பனை கலந்த செய்திகளைச் சித்தரித்துக் காட்டவென நடிகர்களும் திரையுலகமும் இவர்களால் உருவாக்கப்பட்டன. செய்திகளுக்கு நம்பகத்தன்மையை ஊட்ட அவற்றை விமர்சிக்கும் எதிரான ஊடகங்களையும் அவர்களே சிருஷ்டித்தார்கள். இந்த உளவியல் கருவி மக்களை இலகுவாக வசப்படுத்தியது. இதன் உருவாக்கத்தின் பின்னால் இருந்த ராட்சச இயந்திரத்தை ‘military, industrial, academic complex’ என கனடிய கட்டுரையாளர் குவின் டையர் விபரிக்கிறார்.

உதாரணத்திற்கு, முன்னேறிவரும் ஜேர்மனி, யப்பான் கூட்டணியை நொருக்குவதற்குப் பலமான ஆயுதம் (அணுக்குண்டு) தேவை; அதை உருவாக்கிக் கொடுக்க அமெரிக்க பல்கலைக்கழகங்கள் உதவிசெய்கின்றன. அமெரிக்க தொழிற்சாலைகள் உற்பத்தியில் பங்களிக்கின்றன. இராணுவம் யப்பானில் குண்டைப் போட்டு யப்பானை மண்டியிட வைக்கிறது. குண்டை ஏன் ஜேர்மனியில் போடவில்லை என்பது வேறு சமாச்சாரம்.

இக்குண்டு வீச்சின் விளைவு, உலக அனுமானம், அமெரிக்க மக்களின் எதிர்வினை எப்படியிருக்கும் என்பதை முன்கூட்டியே அலசி ஆலோசித்த திட்ட வகுப்பாளரின் திட்டமொன்றுதான் ஹவாய் துறைமுகத்தை யப்பான் விமானங்கள் தாக்குவதை அனுமதித்தமை. அச் சம்பவமே அமெரிக்க மக்களிடையே யப்பானுக்கு எதிரான கொந்தளிப்பை உருவாக்கி அணுக்குண்டுவீச்சில் முடித்தது. யப்பானிய விமானங்கள் ஹவாய் துறைமுகத்தை நோக்கித் தாக்குதலுக்கு வர்கின்றன என்பதை அமெரிக்க கடற்படை முன்னரே அறிந்திருந்தும் அவ்விமானங்களை இடைமறிப்பதை இராணுவம் அனுமதிக்கவில்லை என வரலாறு கூறுகிறது.

இப்படியொரு இன்னுமொரு சம்பவம் தான் ஜேமனியின் ‘யூ-கப்பல்கள்’ (U-Boats) அமெரிக்க பயணிகளின் கப்பலைத் தாக்குவதை ‘அனுமதித்தமையும்’. அமெரிக்க மக்களின் மனங்களைச் சலவையிட இந்த கல்வியாளர் கூட்டம் முக்கிய பங்களித்திருந்தது.

முதலாம் வளைகுடாப் போரில் குவைத் அரசு தனது எண்ணை விலைகளைக் குறைக்கப் போகிறேன் என அறிவித்தபோது அமெரிக்கா அதை எதிர்த்தது. குவைத் அதற்கு இணங்காமையினால் தான் அமெரிக்கா சதாம் ஹுசேனைக் கொண்டு குவைத் மீது படையெடுக்கச் செய்தது. பின்னர் சதாமைப் பலமிழக்கச் செய்வது அமெரிக்காவின் இரண்டாவது திட்டம். இதற்காக அமெரிக்க மக்களின் சம்மதத்தைப் பெற நடத்தப்பட்ட உருவாக்கப்பட்ட ‘விளம்பர’ தொலைக்காட்சிச் செய்தி ஒன்றில், “குவைத் மருத்துவமனைகளிலிருந்து குழந்தைகளை சதாமின் இராணுவம் கொல்வது” போன்றதொரு காட்சியை அமெரிக்க விளம்பர நிறுவனமொன்று தயாரித்திருந்தது. அதில் சாட்சியாகக் கண்ணீருடன் கதறித்துடிக்கும் பெண் அப்போதைய குவைத் தூதுவரின் மகள். இச் செய்தி அமெரிக்காவின் சகல ஊடகங்களும் ஒளிபரப்புச் செய்தன. விளைவு ஈராக் மீதான முதலாவது படையெடுப்பு. இதன்பிறகுதான் சதாம் ஹுசேன் தான் அமெரிக்காவினால் வஞ்சிக்கப்பட்டதை உணர்ந்து இரண்டாம் வளைகுடாப் போருக்குள் தள்ளப்பட்டார். இரண்டாம் வளைகுடாப் போருக்கான தயாரிப்பே 9/11 எனப் பலரும் சொல்கிறார்கள். அதை நம்புபவர்கள் ‘சூழ்ச்சிவாதக் கொள்கையர்’ (conspiracy theorists) என முத்திரை குத்தப்பட்டு மனநோயாளிகளாக்கப்படுகின்றன்ர் எனச் சிலர் நம்புகிறார்கள். ஆனால் அவர்களது நம்பிக்கையும் அமெரிக்க வரலாற்றின் நேரடி வெளிப்பாடுகள் எனவும் கூறமுடியும்.சரி, 9/11 பெற்றுத் தந்த அனுமதிச்சீட்டை வைத்துக்கொண்டுதான் அமெரிக்கா தனது நேச சக்திகளைப் பலவந்தமாக இழுத்துக்கொண்டு (பிரித்தானியா வேறு விடயம்) 2001 இல் ஆப்கானிஸ்தானுக்குள் பாய்ந்தது. ஆப்கானிஸ்தானில் 1990களில் பெண்களைப் பாவாடைகள் சட்டைகளோடு பள்ளிக்கூடம் போக அனுமதித்த நஜிபுல்லா அரசைக் கலைத்துவிட்டு முஜாகிடீன்களிடம் (முஜாஹிடீன்களின் மோசமான திரிபுதான் இப்போதைய தலிபான்கள்) ஆட்சியைக் கொடுத்தது அமெரிக்கா. நஜிபுல்லாவின் சோசலிச அரசுக்கு வழங்கிவந்த ஆதரவைக் கோர்பச்சேவ் திடீரென வாபஸ் வாங்கியது இதற்கு முக்கிய காரணம். அதிலும் அமெரிக்கா சம்பந்தப்பட்டிருந்தது உலகமறிந்த விடயம். உலகம் முழுவதும் பின்னர் பரவிய இஸ்லாமிய தீவிரவாதம் தோன்றிய இடம் ஆப்கானிஸ்தான் – வேண்டுமானால் அமெரிக்காவின் ‘வூஹான் ஆய்வுகூடம்’ என்று வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் இந்த தலிபான்களைக் (v 1.0) கலைக்கவென 2001இல் தனது நேசப் படைகளுடன் வந்திறங்கியது அமெரிக்கா.

2001 முதல் 2021 வரையான காலப்பகுதியில் தலிபான்கள் எங்குமே போகவில்லை. குகைகளுக்குழ் வாழப்பழகிப்போனவர்கள் ஆப்கானியர்கள். ஒருகாலத்தில் வழிப்பறி கொள்ளைகளுக்குப் பேர்போன அவர்கள் பின்னர் போதைவஸ்து தயாரிப்பில் வருமானமீட்டினார்கள் அப்போதைவஸ்துகூட அவர்களை விட்டுவிட்டு அமெரிக்க மண்ணில், அமெரிக்கர்களையே அழித்தது. இப்போது, 6,800 இராணுவத்தினர்,900,000 பொதுமக்கள் இறப்புக்கும், 8 ட்றில்லியன் டாலர்கள் செலவுக்கும் பின்னர் தமது விலையுயர்ந்த Blackhawk ஹெலிகொப்டர்கள், ஆயுத தளபாடங்களைத் தலிபான்களுக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டு அமெரிக்கா காயங்களுடன் வெளியேற்றப்பட்டிருக்கிரது.

2001 இல் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கும்போது ஜனாதிபதி புஷ் “நீங்கள் ஓடலாம் ஆனால் எங்கும் ஒளிக்க முடியாது” (“you may run but you cannot hide” ) எனத் தலிபான்களை எச்சரித்த வார்த்தைகள் இன்னமும் இணையவெளிகளில் கூவித் திரிகின்றன. பிரித்தானிய பிரதமர் ரோணி பிளையரை ஒரு வேட்டை நாயாகவும் அதைப் பிணைத்திருக்கும் நாடாவை புஷ் பிடித்து இழுத்துக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயற்சி செய்வதாகவும் சித்தரித்து ஒரு கார்ட்டூன் அப்போது வெளிவந்திருந்தது.

ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்கா தளம்கொண்டிருக்கும் நிலைகளில் அவர்களது பெரும்பான்மையான நடவடிக்கைகளை அமெரிக்கத் தனியார் நிறுவனங்களே பொறுப்பேற்றிருந்தன. சர்வதேச போர் நியமங்களுக்குப் புறம்பான பல சட்டவிரோத கொலைகள், குண்டுவைப்புகள் போன்ற விடயங்களை இன்நிறுவனங்களே செய்துவந்தன. அமெரிக்கா செலவழித்ததாகக் கூறப்படும் 8 ட்றில்லியன் டாலர்களில் பெரும்பங்கு திரும்பவும் அமெரிக்காவுக்கே அதுவும் டிக் ஷேனி போன்ற, ஜனாதிபதியின் நண்பர்களின் நிறுவனங்களுக்கே வந்து சேர்ந்தது எனவும் கூறுவார்கள். (இந்த மாடலைப் பின்பற்றியே பிரித்தானிய அரசு கீனி மீனி என்ற நிறுவனத்தை உருவாக்கி இலங்கை இராணுவத்தின் அதிரடிப்படைகளைப் பயிற்றுவித்தது).

இந்த 20 வருட காலங்களில் ஆப்கானிய மக்களுக்கென எந்தவொரு காத்திரமான உட்கட்டுமானத் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆப்கானிய மக்களின் மனங்களை வென்றுகொள்ள அதனால் முடியவில்லை. இலங்கையில் சீனா செய்வதைப்போல ஊழல் நிறைந்த, விவேகம் குறைந்த அரசியல்வாதிகளைத் தூக்கி வைத்திருந்தமையால் அமெரிக்காவே தலிபான்களின் மீள்வருகையையும் துரிதப்படுத்தியது.எனவே 9/11 இன் 20 வருட கால நிறைவில், அச் சம்பவம் அரங்கேறியதா அல்லது அரங்கேற்றப்பட்டதா என்ற விவாதத்தை இப்போது அப்பால் வைத்துவிட்டு, அது உலக உழுங்கை மாற்றியமைத்திருக்கிறதா எனக் கேட்டால், இல்லை என்றுதான் கூற முடியும். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளாலும், அவர்களின் சுயநல சகபாடிகளாலும் அவ்வப்போது சுயதேவைகளைத் திருப்திசெய்யவென உருவாக்கப்படும் சம்பவங்களே (events) போர்கள். உலக ஒழுங்கென்ற அந்த நடைமுறை (process) ஒரு தொடர் நிகழ்வு. இப்படியான சம்பவங்களால் அதன் திசையையோ அல்லது பரிமாணத்தையோ மாற்ற முடியாது.

ஆப்கானிஸ்தான் விடயத்தில் மட்டுமல்ல, மொத்தமாக மத்திய கிழக்கிலேயே, அமெரிக்கா இருப்பதோ அல்லது துரத்தப்படுவதோ அப்பகுதிவாழ் மக்களின் நீண்டகாலத் தாங்குதிறனைப் பொறுத்தே அமையும். குகைவாழ் தலிபான்களை bunker buster குண்டுகளால் கொல்ல முடியாது என்பதை உணர அமெரிக்காவுக்கு 20 வருடங்கள் பிடித்திருக்கிறது. அந்த வகையில் 9/11 சம்பவம் 3000 பொதுமக்களைக் கொன்றும் இரண்டு வானளாவிய கோபுரங்களைத் தகர்த்தும் செய்தவற்றைவிட உலக ஒழுங்கை மாற்றியமைக்க அதனால் முடியவில்லை.

இலங்கையில் நடைபெற்ற உயிர்த்தஞாயிறுக் குண்டுத்தாக்குதல்களும் ஏறத்தாழ் 9/11 இற்குச் சமானது என யாராவது உணரத் தலைபட்டால் – அதற்கு நான் பொறுப்பல்ல…ஆனால் இரண்டு மூன்று வருடங்களில் அங்கும் ஆப்கானிஸ்தான் போன்றதொரு மாற்றம் ஏற்படலாமென நம்பினால் அதற்கு நானும் பொறுப்பு..