75 ஆவது சுதந்திர தினம் – கேட்டவையும் பார்த்தவையும்
சிரி லங்கா -13
கிருஸ்ணாநந்தா
“சனம் எதோ இப்பவும் இயக்கம் இருக்கிற மாதிரியல்லோ நடக்குதுகள். அப்பிடிப் பாக்கேக்கை இந்த 75 ஆம் ஆண்டு கொண்டாட்டம் ரணிலுக்குத் தோல்வி தான்” என்றபடி வடிவேலர் சைக்கிளைச் சுவரோடு சாத்தி வைத்துவிட்டு சுருட்டொன்றைப் பத்த வைத்தார்.
“அண்ணை இப்பிடிப் பப்ளிக்கா புகைக்கக்கூடாது. பொலிஸ் அறெஸ்ட் பண்ணப்ப் போகுது”. எனக்குச் சுருட்டு மணம் பிடிக்காது என்பதற்காக மிரட்டிப் பார்த்தேன்.
“தம்பி கிருசு, கொஞ்ச பொலிஸ் ஊர்வலத்தை அடக்கப் போயிட்டுது. கொஞ்சம் மோட்டச் சயிக்கிள்களிலை கொடிகளைப்ப் பிடிச்சுக்கொண்டு உவன் ஆவா குழு சித்தார்த்தின்ர குண்டிக்குப் பின்னால போட்டாங்கள். பாரடா நாடு படுகிற கஷ்டத்தில ரணில் அள்ளி எறிஞ்சு செலவழிக்குது”
“என்ன செய்யிறது அண்ணை. அந்தாளுக்கு ஆபிழுத்த குரங்கின் நிலமை. சுதந்திர தினத்தைக் கொண்டாடினாலும் பிரச்சினை, கொண்டாடாவிட்டலும் பிரச்சினை. கொண்டாடா விட்டால் ராஜபக்ச கோஷ்டி அவையளின்ர லவுட் ஸ்பீக்கர்கள் விமல் வீரவன்ச, சரத் வீரசேகர ஆக்களைக் கொண்டு ‘எங்கட படையள’ ரணில் அவமதிச்சுப் போட்டுது எனக் கத்த வைத்திடுவாங்கள். அதுக்காகப் படையள ஒருக்கா மேடையில ஏத்தி இறக்கோணும் தானே”
“அது சரிதான். அதைச் சின்ன மேடையாப் போட்டுச் செய்யலாம் தானே”
“என்னைப் பொறுத்தவரை நாங்க நினைக்கிற மாதிரி ரணிலின்ர கட்டுப்பாட்டில அரசாங்கம் இருக்கிறமாதிரி தெரியேல்ல. அவருக்கு உள்ளயும் வெளியிலயும் எதிரிகள் கூட. எங்க எப்ப தன்னைக் கவிழ்க்க ராஜபக்ச கோஷ்டி புத்த பிக்குமாரின்ர உதவியோட சதி செய்வாங்கள் எண்டதையும் அந்தாள் கவனிக்க வேணும். அதே வேளை இந்த ஐ.எம்.எஃப். கடன் கிடைக்கும் மட்டும் மேற்கோடயும் டான்ஸ் ஆடவேணும். தமிழ்ப் பிரச்சினையும் அதுக்குள்ள ஒரு துரும்பு. ஆள் இப்ப கத்தியில நடக்கிறார். எனக்கொரு சந்தேகம். அந்தாள் தான் விரும்பித்தான் இந்தப் பதவிய எடுத்ததா அல்லது மேற்கு அவரை அக்கதிரையில இருத்தினதா எண்டு. கோதாபயவுக்கு வெருட்டின வெருட்டிலை அந்தாள் விட்டிட்டு ஓடிட்டுது. அந்தக் கதிரையில இவரைக் கொண்ணந்து இருத்தியிருக்கிறாங்கள்”
“அப்ப ஏனிந்தப் பொடி வசந்த முதலிகேயைப் பிடிச்சு வைத்திருக்கேக்க இந்த மனித உரிமைகள் பேசிற மேற்கு அவரை விடுதலை செய்ய அழுத்தம் குடுக்கேல்ல?”
“என்ன இருந்தாலும் அவர் சிவப்பு சேட்டுக்காரர். ரணிலை அவரின்ர பதவிக்காலம் முடியிற வரைக்கும் வைச்சிருக்கிறது அவங்கட விருப்பம். அதனால் இந்த இடதுசாரியளை அவங்கள் எழும்ப விடமாட்டாங்கள். என்ன இருந்தாலும் முதலிகே ஒரு வேடுவ சமூகத்தைச் சேர்ந்தவர். அவரையும் சஜித்தையும் ரணில் ஒரு தட்டிலை வைக்கக்கூடிய மனநிலையக் கொண்டவர். இவங்களுக்காக சனம் திரளாது எண்டு ரணிலுக்குத் தெரியும்.”
“வடக்கு கிழக்கில தமிழரை ஊர்வலம் வைக்க விடுகுது ஆனா கொழும்பில சிங்களவரை விடுகிதில்லை. இதை நீ எப்பிடிப் பார்க்கிற?”
“13 ஆவதைக் குடுக்கும்படி ரணிலுக்கு ஞாயமான அழுத்தம் இந்தியாவிட்ட இருந்தும் மேற்கிட்ட இருந்தும் வருகுது. காணி , பொலிஸ் அதிகாரங்களை வடக்கு கிழக்குக்கு மட்டுமில்லை மற்ற மாகாணங்களுக்கும் குடுக்கிறதால இந்தியாவின்ர அதானிகளும் மேற்கின்ர முதலைகளும் இஞ்ச தங்கட தொழிற்சாலைகளையும், விவசாயங்களையும் போடுறது இலகுவாக்கப்படும். இப்பவே மட்டக்களப்பில வியாழேந்திரன் 500 ஏக்கர் காணியில தொழிற்பேட்டை எண்ட பேரில இந்திய நிறுவனம் ஒண்டுக்கு இடம் குடுக்க முயற்சிக்குது. இதில இருந்து வாற கழிவெல்லாம் கடலுக்குள்ள விடுகிற பிளான். அமெரிகாவின்ர மிலேனியம் சலெஞ் ஃபுண்ட் எண்டு 500 மில்லியனைத் தானமாகக் குடுக்கிறதின் பின்னால இப்பிடிக் காணிச் சுவீகரிப்பு நடக்குமெண்டு சொல்லுகினம். மாகாணசபைகளில வியாழேந்திரன் மாதிரி முதலமைச்சர்கள் வந்தா நிலமை எப்பிடியிருக்கும்”
“அப்ப அதிகாரப் பகிர்வை நீ எதிர்க்கிறயோ?”
“இல்லல் வடிவேலர் இந்த் தென் சூடானைப் பாருங்கோ. மேற்கு நாடுகள் எல்லாம் சேர்ந்து தங்கட நலனுக்காக சூடானைப் பிரிச்சாங்கள். இப்ப அங்க சனம் மாறி மாறி அடிச்சுக் கொல்லுது. எனக்கு இப்ப இருக்கிற அரசியல்வாதிகளில நம்பிக்கை இல்லை. யாழ்ப்பாண மாநகரசபையையே ஒழுங்கா நடத்த ஏலாத ஆக்கள் என்னெண்டு மாகாண சபையை நடத்துவினம்? கிளிநொச்சி இரணமடுத் தண்ணியை யாழ்ப்பாணத்துக்குக் குடுக்கக்கூடாது எண்டு சொல்லிற ஆக்கள் இருக்கேக்க மாகாணம் எப்பிடி பரந்த நலனோட வேலை செய்யலாம்?”
“அப்ப 13 ஐக் குடுத்துவிட்டா தமிழர் தங்களுக்குள்ள சண்டைபிடிச்சுக் கொள்ளுவாங்கள் எண்டு ரணில் நினைக்குதோ?”
“அப்பிடியேண்டு மட்டும் சொல்ல ஏலாது. இப்ப இலங்கை ஒரு நெளிஞ்ச பால் பேணி மாதிரி. இதை நிமித்தி எடுக்கிறதெண்டா அது வடக்கு கிழக்கால தான் ஏலும். சிங்களவர் பெரும்பாலும் இன்னும் 50 வருசத்துக்கு வயல்களிலதான் கிடக்கப் போறாங்கள். தொழிற்சாலைகளில வேலை செய்யிறவங்கள் பெரும்பாலும் வறுமையில தான் இருப்பாங்கள். அரசியல்வாதிகள் முழுக்க ஊழல் பெருச்சாளிகள். அரசாங்க வேலையும் பென்சனும் நாட்டின்ர 90 வீதமான வருமானத்தைத் தின்கிறது. இதைத் தீர்க்க வடக்கினாலும் கிழக்கினாலும் மட்டுமே முடியும் எண்டு ரணில் தீர்மானிச்சிட்டுது. அதுமட்டுமில்லை பிரிட்டிஷ் காலத்தில நாடு நல்லா இருந்ததுக்கு விசுவாசமான தமிழரும் ஒரு காரணம். வடக்கு கிழக்கில இந்தியாவும் , அமெரிக்காவும் முதலீடுகளைச் செய்தால் அது வெற்றியளிக்கும் எண்டு அவங்கள் நினைக்கிறாங்கள்.இதைச் சாதிக்க ரணிலாலதான் முடியுமெண்டு அவங்கள் நினைக்கலாம். 13 A ஒரு கல்லிலை பல மாங்காய்கள்”
“அப்ப் இந்த புத்த பிக்குகள் 13 ஐக் குடுக்கக்கூடாது எண்டு கத்தினது?”
” கோதாவுக்கு மாதிரி அவையளுக்கும் ஒண்டு எலும்புத் துண்டு அல்லது வெருட்டு குடுக்கப்படும் எண்டுதான் நினைக்கிறன்”
“உள்ளூராட்சித் தேர்தல்கள் நடக்குமெண்டு நினைக்கிறியோ?”
“எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவு அதிகமாக இருந்தால் தேர்தல்களைப் பின்போடக்கூடிய சாத்தியம் இருக்குது. அதுக்கான சட்ட வழிகளை அந்தாள் ஆராய்ந்து வைச்சிருக்கும். சஞ்சாய் ராஜரத்தினம் போல பொம்மை ஒண்டு சட்டமா அதிபராக இருக்குமட்டும் எந்தச் சட்டத்தையும் அந்தாள் வளைச்சுப் போடும். SLPP-UNP கூட்டமைப்புக்கு ஆதரவு இருந்தால் தேர்தல்கள் நடக்கும்”
“13A வருமெண்டா தமிழ்க் கட்சிகள் சுதந்திர தினத்தைப் பகிஷ்கரிக்கிறது நல்லாதா?”
“எதிர்ப்பு எப்போதும் இருந்துகொண்டிருக்க வேணும். ரணில் எதையாவது தருவதற்கு காரணமாக இவ்வெதிர்ப்புகளைத் தான் காட்டும். சுதந்திர தினப் பேச்சில அந்தாள் வடக்கு கிழக்குக்கு அரசியல் தீர்வைக் குடுக்காம நாட்டை மீட்க முடியாது எண்டதுபோலப் பேசியிருக்குது. இரண்டு அரசியல் கைதிகளை விடுவித்திருக்குது. 120 ஏக்கர காணியளை விடுவிச்சிருக்குது. இதெல்லாம் சுதந்திர தினம் எண்ட பேரில தான் நடந்திருக்குது. கிடைக்கிறதைப் பெற்றுக்கொண்டு போராட்டத்தையும் தொடரவேணும் எண்டுதான் நான் நினைக்கிறன். ஐம்பதுகளில சத்தியாக்கிரகத்தைப் பாத்து உணர்ச்சிவசப்பட்ட ஆட்களின்ர பிள்ளையள்தான் இப்ப அரசியல்வாதிகள். எதிர்கால சந்ததிக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவாவது இந்த ஊர்வலங்கள் தேவை”
“இதுக்குல்ள தமிழர் தங்களுக்குள்ள அடிபட்டுச் செத்துப்போகாமல் இருந்தால் சரி”
“அதுக்கு கடவுளே வந்தாலும் கரண்டி பண்ண ஏலாது. அது எங்கட ‘மரபுரிமை'”
“எதுக்கும் ஒரு அர்ச்சனையைச் செய்வம். மெசி வெல்லவேண்டுமெண்டு நம்ம வெளிநாட்டு சனக்கள் அர்ச்சனை செய்து வெல்ல வைச்சிட்டாங்கள். நாம இங்க செய்து 13 ஐ எடுக்கப் பாப்பம் கிருசு” வடிவேலர் அடுத்த சுருட்டை மூட்டிக்கொண்டு நெஞ்சை நிமித்திக்கொண்டு சைக்கிளில் கிளம்பினார்.



