75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் அரசியல் தீர்வுக்கான முன்மொழிவு வைக்கப்படவேண்டும்- சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி
அடுத்த வருடம் நடைபெறவுள்ள 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னர் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முன்மொழிவுகள் வைக்கப்படவேண்டுமென ஜனாதிபதி விக்கிரமசிங்க செவ்வாயன்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் பேசும்போது ஜனாதிபதி விக்கிரமசிங்க காலக்கெடுவொன்றை முன்வைத்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கத்துடன் ஜனவரியில் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவைச் சந்த்தித்து இதுபற்றி உரையாடவிருப்பதாகவும் இச் சந்திப்பின்போது ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“அது இனப்பிரச்சினை என்றோ என்னவென்றோ அழைக்கப்படட்டும் அது முக்கியமல்ல அது இந்நாட்டின் பிரச்சினை. அதைத் தீர்ப்பதற்கு நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கென்றே இன்று அனைத்துக் கட்சிகளும் இன்று பாராளுமன்றத்தில் கூடியிருக்கிறீர்கள். இந் நோக்கத்திற்காகவே அனைத்துக் கட்சித் தலைவர்களாகிய நீங்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்” என செவ்வாயன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சித் தலைவர்களின் சந்திப்பின்போது ஜனாதிபதி தெரிவித்தார்.
“வடக்கின் பிரதிநிதிகள் இன்று நாட்டின் தேசியப் பிரச்சினை குறித்துப் பேசியிருந்தார்கள். இப் பிரச்சினை இரண்டு பகுதிகளாக உரையாடப்பட வேண்டும். முதலாவது, காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதும் அவர்களது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதும். இரண்டாவது அதிகாரப் பகிர்வுக்கான சட்ட உருவாக்கத்துக்கான ஒழுங்குகளைச் செய்வது. பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம், காணி விடுவிப்பு போன்று இதர பிரச்சினைகளும் இருக்கின்றன. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்றியும், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் இணைந்து ஒரு விசேட திட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். முதலில் காணாமற் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் பற்றிய அறிக்கைகளை வெளியிடவும் அதன் பிறகு அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசவும் நாம் தீர்மானித்துள்ளோம்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
“வடக்கில் காணிகள் விடுவிப்பு பற்றிப் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. காணி அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு திணைக்கள அலுவலர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஒரு முடிவை எய்துவதற்குத் தயாராகிறார்கள். இதற்காகவே இம் மாநாடு கூட்டப்பட்டது. இவ்விடயத்தில் நாம் ஒரு முடிவை எட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.
இதே வேளை வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி பேசுகையில், “ஜெனிவா மனித உரிமைகள் சபை, சுவிட்சர்லாந்து மற்றும் இதர சர்வதேச அரங்குகளில் நடைபெற்ற சந்திப்புகளில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம், நீதிபது உடலகம ஆணையம், நீதிபதி பரணகம ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இவ்வறிக்கைகளில் எல்லாம் நாட்டில் நடைபெற்ற சம்பவங்களுக்கான் தீர்வுகளை உள்ளகப் பொறிமுறை ஒன்றினாலேயே பெறப்படவேண்டுமெனவும் வெளிநாடுகள் இதில் தலையிடமுடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவை எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நீதிபதி நவாஸ் ஆணையமும் முற்ஊரப்பட்ட ஆணையங்களின் அறிக்கைகளின் பிரகாரமே தீர்வை முன்மொழிந்திருந்தது. எனவே இந்த பொறிமுறையை நடைமுறப்படுத்துவது எமது பொறுப்பாகிறது” எனத் தெரிவித்தார்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் உள்ளகப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதில் பாதுகாப்பு படைகளும் இணக்கம் தெரிவிப்பதாகவும் சில படைப்பிரிவுகள் ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள முடியாது இருப்பது வருந்தத்தக்க செயல் எனவும் படையினர் மத்தியில் அபிப்பிராயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. தென்னாபிரிக்க முறையிலான உணமை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை நிறுவ பாதுகாப்பு படையினர் சம்மதம் தெரிவித்துள்ளனரெனவும் கூறப்படுகிறது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் முன்னாள் தூதுவர் ஒருவர் இக் குழுவிற்குத் தலைதாங்கலாமெனெவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வேளை, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இனக்களுக்கிடையேயான ஒற்றுமை முக்கியமெனவும் சாதி, மத வேறுபாடுகள் அரசியலிலிருந்து நீக்கப்பட்டு சகல மக்களும் சமத்துவத்தோடு வாழவேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இம்மாநாட்டில் பேசும்போது குறிப்பிட்டார்.
பிவித்துறு ஹெல உறுமைய கட்சித் தலைவர் உதய கம்மன்பில பேசும்போது சமஷ்டியோ அல்லது அது தொடர்பான உரையாடல்கள் எதுவுமோ நாட்டின் அமைதியையும் ஒழுங்கையும் பாதிக்கும் எனவும் அது தற்போது முன்னேறி வரும் பொருளாதார மீட்சிக்கு ஆபத்தாக முடியலாம் எனவும் அவர் எச்சரித்தார்.
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச பேசுகையில், “போர் காரணமாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 11,000 மக்கள் தமது பிறப்புச் சாட்சிப் பத்திரங்கள் மற்றும் அடையாள அட்டைகளை இழந்துள்ளனர். அவற்றை வழங்க நாங்கள் ஒழுங்குகளைச் செய்துள்ளோம். வடக்கின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டவுடன் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இங்கு முதலீடுகளைச் செய்வதற்கு ஊக்கப்படுத்தப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட பா.உ. சீ.வி.விக்னேஸ்வரன் பேசுகையில் “தமிழ் மக்கள் பக்கமிருந்து பார்க்கையில் எமக்கு மூன்று பிரச்சினைகள் இருக்கின்றன. காணிகள், காணாமற் போனவர்கள், தேவைக்கதிகமான இரானுவத்தினரின் பிரசன்னம். பல்வேறு திணைக்களங்கள் தமது தேவைகளுக்கென மக்களின் காணிகளை சுவீகரிக்கின்றன. எமது மக்களைப் பொறுத்தவரை இதுவே முதலாவதாகவும் முக்கியமானதாகவும் கவனிக்கப்படவேண்டும். இரண்டாவதாக மாகாண சபைகள். சட்ட அதிகாரங்கள் இல்லாமையால் தான் இதர பிரச்சினைகளும் தோன்றுகின்றன. எனவே வட கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும். இறுதியாக வட-கிழக்கு மக்கள் தொடர்பானது. 3000 வருட வரலாறு எமக்குண்டு. எமக்கென்று நிலம், மொழி, கலாச்சாரம் ஆகியன இருந்தன. 1833 இல் தான் நிர்வாக அனுகூலத்திற்காக பிரித்தானியா இரு நாடுகளை ஒன்றாக்கியது. இன்று வடக்கு கிழக்கு மக்கள் இராணுவத்தின் பாதணிகளின் கீழ் கிடக்கிறார்கள். இவையெல்லாம் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும். இதை மதிக்கும் அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும்” எனத் தெரிவித்தார்.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவுஃப் ஹக்கிம் பா.உ. பேசுகையில் ஜனாதிபதியின் இம் முயற்சியை வரவேற்பதாகவும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தீர்வாக அமையும் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட பா.உ. டக்ளஸ் தேவாநந்தா பேசுகையில் முழுமையான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் இவ்விடயத்தில் தனது சகபாடிகளான சித்தார்த்தன் பா.உ., செல்வம் அடைக்கலநாதன் பா.உ. ஆகியோரும் உடன்படுகிறார்கள் எனவும் தெரிவித்தார். அதே வேளை புதிய அரசியலமைப்பு என ஒன்றிற்காக நாம் செல்வோமானால் அது மூன்றில் இரண்டு பங்கு ஆதரவையும் பொதுசன் வாக்கெடுப்பை எதிர்கொள்ளவும் வேண்டும். அதைத் தவிர்த்து 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பல பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் தேவாநந்தா தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட பா.உ. மனோ கணேசன் பேசுகையில் இனங்களுக்கிடையேயான் நல்லிணக்கம் வெர்றிபெறவேண்டுமானால் 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட பா.உ. எம்.ஏ.சுமந்திரன் பேசுகையில், எமது ஐந்து கட்சி சந்திப்பின்போது நாம் முக்கிய பிரச்சைனைகளாக அடையாளம் கண்டவை காணி, கைதிகள் விடுவிப்பு, காணாமற் போனவர்களுக்கான பொறிமுறை ஆகியன. புதிய அரசியலமைப்போ அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியதுபோல் 13 + எதுவானாலும் உடனடியாகவோ அல்லது சமாந்தரமாகவோ நடைமூறைப்படுத்தப்படலாம். நீங்கள் முன்வைத்த கால அவகாசத்திற்கு முன்னரே இவை நடைமுறைப்படுத்தப்படலாம் எனத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி இன்றே நாம் பேச்சை ஆரம்பிக்கலாம் நேரம் போதாவிடில் நாம் ஜனவரியில் அதைப்பற்றிப் பேசுவோம் எனக் கூறினார்.
ஜே.வி.பி. தலைவர்கள் எவரும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
இம்மாநாட்டைக் கூட்டியதற்காக அரசாங்க தரப்பு உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.