73 ஆவது வயதில் முடிசூடும் மூன்றாம் சார்ள்ஸ் அரசர்

சிறு வரலாற்றுக் குறிப்பு

நேற்று (செப்டம்பர் 10, 2022) இங்கிலாந்தின் அரசராக மூன்றாவது சார்ள்ஸ், அவரது 73 ஆவது வயதில், உத்தியோகபூர்வமாக பக்கிங்ஹாம் அரண்மனையினால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறார். அவருடைய மனைவி கமிலாவுக்கு பட்டத்து ராணி எனப்பட்டம் சூட்டப்படவில்லையாயினும் ராணி-துணை ( queen consort) என்ற பதவியுடன் அவரும் அரண்மனைக்குள் நுழைகிறார்.

சார்ள்ஸ் அரசரின் முதல் மனைவி டயானா வாகன விபத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவர் கமிலா பார்க்கர் என்பவரை மணந்துகொண்டதாகக் கூறப்படினும், அவர் சார்ள்ஸ் இளவரசராக இருந்த காலத்தில், 1970 இல் போலோ விளையாட்டு ஒன்றின்போது தனது தற்போதய துணையைச் சந்தித்து காதலில் வீழ்ந்தார் எனக் கூறப்படுகிறது. பின்னர் இளவரசர் தனது அரச கடமைக்காக கடற்படையில் சேவகம் செய்யவென வெளிநாடு போனதால் இருவரிடையேயும் பிரிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கமிலா, 1973 இல், ஆன்ட்றூ பார்க்கர் பெளல்ஸ் என்பவரைத் திருமணம் செய்துகொள்ள இளவரசர் சார்ள்ஸ் 1971 இல் டயானாவைத் திருமணம் செய்துகொண்டார். இதனால் டயானா இளவரசி டயானாவாகினார்.

ஆனாலும், சார்ள்ஸ் அரசரின் சுயசரிதைப்படி, 1986 இல் சார்ள்ஸ்-கமிலா விடையே காதல் மீண்டும் மலர்ந்தது எனவும் 1992 இல் இவர்கள் இருவருக்குமிடையேயான தொலைபேசி உரையாடல்கள் பகிரங்கப்படுத்தப்பட அவ்வருடம் அப்போதைய பிரித்தானிய பிரதமர் ஜோன் மேஜர் இருவரிடையேயுள்ள உறவை உறுதிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து அவ்வருடம் இளவரசி டயானா இளவரசர் சார்ள்ஸிடமிருந்து பிரிந்து வாழத் தொடங்கினார். 1996 இல் இவர்கள் முறைப்படி விவாகரத்தைப் பெற்றுக்கொண்டனர். 1997 இல் இளவரசி டயானா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸும் கமிலாவும் தமது உறவைப் பகிரங்கமாக்கிக் கொண்டனர். 2005 இல் மஹாராணியாரின் சம்மதத்துடன் இளவரசர் கமிலாவைத் திருமணம் செய்துகொண்டார். 17 வருடங்களுக்குப் பிறகு, மஹாராணியாரின் மறைவினால் மூன்றாம் சார்ள்ஸ் அரசர் எனப் பட்டம் சூட்டப்பட்டதும் கமிலாவுக்கு “ராணி துணை” எனப் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சார்ள்ஸ் அரசருக்கு சார்ள்ஸ், பிலிப், ஆர்தர், ஜோர்ஜ் என்று நான்கு பெயர்கள் உண்டு. அதில் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்கலாம் என்பது விதி. இதற்கு முன்னர் இரண்டு அரசர்கள் சார்ள்ஸ் என்ற பெயரில் இருந்தமையால் அவர் சார்ள்ஸ் III என்ற பெயரைத் தன்க்குச் சூட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. முதலாம் சார்ள்ஸ் அரசர் 1600 இல் ஸ்கொட்லாந்தில் பிறந்தவர். 1625 இல் அவரது தந்தையார் ஜேம்ஸ் அரசர் இறந்தவுடன் சார்ள்ஸ் I அரசர் முடிசூட்டப்பட்டார். 1649 இல் முதல்காம் சார்ள்ஸ் அரசர் கொல்லப்பட 18 வயதுள்ள அவரது மகனுக்கு முடி கைமாறியது. ஆனாலும் அவருக்கு 30 வயது ஆகியபோதுதான் சார்ள்ஸ் II என்ற பெயர் அவருக்கு வழங்கப்பட்டது.

சார்ள்ஸ் III இன் மனைவி என்ற வகையில் கமிலாவுக்கு ராணி-துணை என்ற பட்டம் சட்டப்படி கிடைக்குமென்றாலும் அப்பட்டத்தை கமிலா ஏற்றுக்கொள்வாரெனத் தான் மனப்பூர்வமாக விரும்புவதாக எலிசபெத் மஹாராணியார் கூறியிருந்ததார் எனக் கூறப்படுகிறது.